அஜயன் பாலா
சென்ற 'உயிர் எழுத்து' இதழில், மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் "தமிழ் ஈன்ற தவப்புதல்வர்கள்" என்ற அஞ்சலிக் கட்டுரையை எழுதும்போது நினைத்தேன்—காலம் இனி யாருக்கும் அஞ்சலிக் கட்டுரைகள் எழுத வைக்காமல் இருக்கட்டும் என்று. ஆனால், அடுத்த இதழிலேயே என் ஆருயிர் நண்பன் செழியனுக்கு இப்படி ஒரு அஞ்சலிக் கட்டுரையை எழுதுவேன் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி இப்படி ஒரு துயரச் செய்தியைச் சுமந்திருக்க வேண்டாம். அன்று காலை எதையோ எழுதிக்கொண்டிருந்த எனக்கு, தொலைக்காட்சியின் செய்திகள் காதுவழியே சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன். செழியனின் புகைப்படத்துடன் அவன் மருத்துவமனையில் இறந்துபோன செய்தியை அது அவசரச் செய்தியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
தொடர்ந்து நண்பர்களிடம் தொடர்புகொண்டு செய்தியை உறுதிசெய்துகொண்டு, சென்னை வளசரவாக்கத்தில் இருந்த 'நாம் தமிழர்' அலுவலகம் நோக்கி விரைந்தேன். அப்படி ஒன்று நடந்திருக்கக் கூடாது, எல்லாமே பொய் வதந்தியாக ஏன் இருக்கக் கூடாது என எனக்குள் ஆயிரம் எண்ணங்கள். மூளைக்குள் புற்று ஈசல்கள் அங்குமிங்குமாகப் பறக்க, ஹெல்மெட்டினூடே வழியும் கண்ணீரைத் துடைக்க முடியாமல் இருசக்கர வாகனத்தில் விரைந்துகொண்டிருந்தேன்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான, நான் இயக்கிய "மைலாஞ்சி" திரைப்படம்தான் அவன் ஒளிப்பதிவு செய்து வெளியான இறுதித் திரைப்படம். கடைசியில் இந்தப் பெருமையா எனக்குச் சேர வேண்டும்? மனம் கொந்தளித்தது. படப்பிடிப்பினூடே நானும் அவனும் உரையாடிய சம்பவங்கள், கடந்த கால கதைகளைப் பேசிச் சிரித்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்து என்னை உலுக்கி எடுக்கின்றன.
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ பேர் எத்தனையோ சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் செய்யாத சாதனையைச் செய்தவன் செழியன். தன் "டூலெட்" (To Let) படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியவன். உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்று, உரிய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு படம் என்ற சாதனை இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் நிகழ்ந்ததில்லை.
அவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு இந்தத் தமிழ் சினிமா தனியே விழா எடுத்துப் பாராட்டியிருக்க வேண்டாமா? யாரும் செய்யவில்லை. இன்று தமிழின் நவீன சினிமாக்களில் ஒன்றாகப் போற்றப்படும் "வீடு" படம் எடுத்தபோது கூட பாலுமகேந்திராவுக்கும் இதே நிலைதான். தமிழில் எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், சினிமா மட்டும் கொச்சைத் தன்மைக்கும் மலினமான ரசனைக்குமே பீடமும் நாற்காலியும் போட்டு, அந்த மாதிரியான கலைஞர்களைக் கொண்டாடுகிறது.
இதே செழியன் ஒரு கேரளியாகவோ அல்லது வங்காளியாகவோ பிறந்திருந்தால் அவனை உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார்கள். இந்த நுண்ணுணர்வற்ற, கெட்டுப்போன ரசனைதான் இன்று செழியனைக் கொன்று கண்ணாடிப் பெட்டியில் படுக்க வைத்துவிட்டது. இத்தனைக்கும் பரதேசி, தென்மேற்கு பருவக்காற்று, ஜோக்கர் போன்ற பெரிய வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அவன், பெரிய நட்சத்திரங்களை வைத்து ஒரு வணிகப் படம் இயக்கியிருந்தால் உண்மையில் அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
நாம் தமிழர் அலுவலகத்தில் செழியனின் உடல் வைக்கப்பட்டிருக்க, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான், கட்சியின் தோழர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சிலர் செழியன் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையருகே நிற்க, ஒவ்வொருவராக இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர். எனக்குப் பெட்டியின் அருகே சென்று முகத்தைப் பார்க்கும் அளவுக்கு இதயத்தில் வலுவில்லை. அனைவரும் மாலை கொண்டு வந்து பெட்டியின் மீது வைத்து மரியாதையைச் செலுத்தி வந்தனர். நான் வெறுமனே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்துவிட்டேன்.
நினைவுகள் முழுக்க, கடந்த 26 ஆண்டுகளில் எனக்கும் அவனுக்குமான நிகழ்வுகளை அசைபோடத் தொடங்கின.
அபிபுல்லா சாலையும்... ஒரு ரூபாய் அட்வான்ஸும்!
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற முகவரிகளில் ஒன்று '72, அபிபுல்லா சாலை'. அண்ணன் அறிவுமதியின் இந்த அலுவலக முகவரி பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடித் திறமையுடன் அலையும் தம்பிகளுக்கு அண்ணனின் இந்த முகவரிதான் அடைக்கலம். அங்கு வைத்துதான் செழியனை முதன்முதலாகச் சந்தித்தேன். மறைந்த கவிஞனும் என் நெருங்கிய நண்பனுமான நா. முத்துக்குமார்தான் செழியனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
அப்போது முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பு, அண்ணன் அறிவுமதியின் 'சாரல் வெளியீடு' மூலமாக உருவாகிக்கொண்டிருந்த காலம். அட்டைப்படப் புகைப்படத்திற்காக அண்ணன் அறிவுமதியின் அழைப்பின் பேரில் செழியன், முத்துக்குமாரை வள்ளுவர் கோட்டம் அழைத்துப்போய் வித்தியாசமாகப் புகைப்படம் எடுத்திருந்தான். அதை பிரின்ட் போட்டு எடுத்துவந்த செழியனைப் பார்க்கத்தான் முத்துக்குமார் என்னை அங்கு அழைத்துப் போயிருந்தான்.
புகைப்படங்கள் சிறப்பாக வந்திருந்தன. அப்போதுதான் செழியனும் நானும் அறிமுகமானோம். அத்தோடு செழியனின் இதர புகைப்படங்களையும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அனைத்தும் சிறப்பாக இருப்பதைப் பார்த்து நான், "பேசாமல் பி.சி. ஸ்ரீராம் கிட்ட ட்ரை பண்ணுங்க" எனக் கூற, "அவர்கிட்ட சேர்ந்துட்டேன்" என மௌனமாக, எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சொன்னான் செழியன்.
அப்போது பி.சி. ஸ்ரீராமிடம் சேருவது அத்தனை சாதாரண விஷயமில்லை. ஆனால், இதைச் சாதாரணமான விஷயம் போலச் சொல்கிறானே என முதல் சந்திப்பிலேயே என்னை வியக்க வைத்தான் செழியன்.
அச்சமயம் என்னுடைய 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைக்கதை மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியிருந்த சமயம். அதை ஊரிலேயே வைத்துப் படித்ததாகச் சொன்னான். அதன்பிறகு இருவரும் அடிக்கடி அண்ணன் அறிவுமதி அலுவலகத்தில் சந்திக்கத் தொடங்கினோம். இக்காலகட்டத்தில் எனது நெருங்கிய நண்பன் அய்யப்ப மாதவனும் செழியனும் சிவகங்கையிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதால், எங்கள் நட்பு மேலும் நெருக்கமாக மாறக்கூடுதல் வசதி கிடைத்தது.
செழியனும் அய்யப்ப மாதவனும் சேர்ந்து அப்போது உஸ்மான் ரோட்டில் 'போர்ட்ஃபோலியோ ஸ்டூடியோ' ஒன்றை திறந்திருந்தார்கள். விசேஷமாகப் புகைப்படங்கள் எடுக்கும் சிறப்பு ஸ்டூடியோ அது. அப்போது நான் தீவிரமாக இலக்கிய உலகில் எழுதுவது, இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது என இயங்கிக்கொண்டிருந்த நேரம். பெரும்பாலும் மதிய நேரங்களில் ஸ்டூடியோவுக்குப் போய்விட்டால், அய்யப்பன் தயவில் உணவுப் பிரச்சினை தீரும். இதற்கு நன்றிக்கடனாக எனக்குத் தெரிந்த நடிகர்களையெல்லாம் ஆசி வார்த்தை கூறி ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து புகைப்படம் எடுக்க வைத்து, அவர்களுக்கு பிசினஸ் செய்து கொடுப்பேன்.
அப்போது நானும் மறைந்த டேனியல் பாலாஜியும் அறை நண்பர்கள். அப்போதுதான் 'சித்தி' சீரியல் மூலம் அவன் பிரபலமாகியிருந்த நேரம். அவனை அழைத்து வந்து புகைப்படம் எடுக்க வைத்தேன்.
அந்த ஸ்டூடியோவில் இருந்த சிறு ஹாலைப் பயன்படுத்தி, நான் அவ்வப்போது சில இலக்கியக் கூட்டங்களைச் சனிக்கிழமை மாலைகளில் நடத்தி வந்தேன். பெண்கவிஞர்கள் அன்று புதியதாக அதிகம் எழுதத் தொடங்கியிருந்தனர். அனைவரையும் ஒருங்கிணைத்து முதன்முதலாக ஒரு கூட்டம் ஏற்பாடானது. குட்டி ரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கிணி ஆகியோர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஞானக்கூத்தனும் வந்திருந்தார்.
அச்சமயம் 'இந்தியா டுடே' நாளிதழ் 'புது வெள்ளம்' எனும் தலைப்பில் ஓர் இலக்கிய மலரைத் தொகுத்து வெளியிட்டிருந்தது. புதிதாக எழுத வந்த இளைஞர்களின் சிறுகதைகள், கவிதைகளைத் தாங்கி வந்த தொகுப்பு அது. அதில் நான் எழுதிய "மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்" என்ற சிறுகதை வெளியாகி பரவலாகக் கவனம் ஈர்த்திருந்தது.
நான் அக்கதையின் தொடக்கத்திலேயே வாசகர்களுக்கு, "உண்மைச் சம்பவமான இக்கதையில் என் கற்பனையையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, கதையின் இறுதிக்காட்சியில் 'நாயகனான என் கையை நண்பனின் காதலி பற்றி அழுத்தியதாக' ஒரு பொய் கலந்து எழுதியிருப்பேன். முன்கூட்டியே இதை நான் கதையில் சொல்லியிருந்தாலும், வாசகர்கள் அந்த இறுதிக்காட்சி வரும்போது கதையின் சுவாரசியத்தில் அதையும் நம்பி ஏமாந்து கதையை விட்டு வெளியேறுவார்கள். ஓர் எழுத்தாளனாக வாசகனை முழுமையாக என் கற்பனை உலகுக்குள் வைக்கும் சிறு வித்தை அது. கதையை வாசித்த பலரும் இறுதிப் பகுதியில் நாயகனின் உணர்ச்சியோடு கலந்து "அருமை" எனச் சொன்னார்கள். ஆனால் யாரும் நான் கதையின் துவக்கத்தில் சொன்ன வரிகளை நினைவில் கொள்ளவில்லை.
ஆனால், அக்கதையை வாசித்த உடனே செழியன் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே:
"ஏன்யா... உன் கதையைப் படிக்கிறவனை முட்டாளாக்குற?"
எனக்குச் செழியன் மீது அபாரமான பிரியம் உண்டான தருணம் இது!
அதன் பிறகு தினசரி செழியனும் நானும் ஸ்டூடியோ வேலைகள் முடிந்த பிறகு, சென்னையில் அவனுக்கு வேலையிருந்த இடங்களுக்கு நானும், எனக்கு வேலையிருந்த இடங்களுக்கு அவனுமாக ஒன்றாகத் திரியத் தொடங்கினோம். அக்காலங்களில் இருவருக்கும் வாகனங்கள் இல்லை; மாநகரப் பேருந்துகள்தான். முதுகுப்பக்கமாக இரு தோள்களிலும் கயிறுகள் மூலம் மாட்டக்கூடிய கறுப்பு நிற ரெக்சின் பை ஒன்றைச் சுமந்து வருவான். அதில் பெரும்பாலும் ஒரு நோட்டு, படிக்கும் புத்தகம்... இவற்றோடு கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்கள் மட்டுமே இருக்கும். அப்போது நான் டீ, சிகரெட் அடிக்கடி பயன்படுத்துபவனாக இருந்தேன். ஆனால் செழியனுக்கோ எந்தப் பழக்கமும் இல்லை. மேலும் வெளியிடங்களில் குடிக்கும் நீர் மற்றும் உணவுப் பொருட்களில் அவன் மிகுந்த கவனத்துடன் இருப்பான்.
செழியனுக்கு நிறம் ஒரு பிளஸ்; மிகவும் வசீகரமான தோற்றம், மென்மையான சுபாவம். ஒருவரைப் பிடிக்காவிட்டால் விலகிவிடுவான்; ஆனால் கோபப்பட்டுப் பார்த்ததேயில்லை. ஆனால் நானோ அனைத்து அம்சங்களிலும் நேர் எதிர்! அதனாலோ என்னவோ இருவருக்கும் உடனே ஒத்துப்போனது.
ஒருமுறை செழியன் ஸ்டூடியோவுக்கு நான் ஒருவரைப் படமெடுக்க அழைத்து வந்தேன். அவருக்குத் தலையில் முடி இல்லை; வழுக்கை. அதனால் ஆசையுடன் புதிதாக விக் வாங்கியிருந்தார். ஆனால் அதை அணியவே கூடாது என அவர் மனைவி கட்டளையிட்டுவிட்டார். விக் வாங்கி வீணாகிவிட்டதே என அவர் கவலைப்பட, "வாருங்கள்... அதை வீணாக்காமல் புகைப்படம் எடுப்போம்" எனப் பேசிச் செழியன் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு வருமானம் செய்து கொடுத்தேன்.
அதற்காக அய்யப்பன் என்னை அதே பிலிம் ரோலில் சில புகைப்படங்கள் எடுத்தான். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த செழியன், "அஜயன்... உங்களுக்குள் ஒரு நடிகன் இருக்கிறான், அவனை வீணாக்க வேண்டாம்" எனச் சொல்லி, கையோடு, "பி.சி. அடுத்து 'வானம் வசப்படும்' என ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். வாருங்கள்... உங்களை நடிக்க வைக்க அறிமுகப்படுத்துகிறேன்" என்று சொன்னான். கூடவே, "நீங்கள் எழுதிய பைசைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை மொழிபெயர்ப்பு நூலைக் கொண்டு வாருங்கள்" எனச் சொல்லி, மறுநாள் என்னை பி.சி.யிடம் அறிமுகம் செய்தான். பி.சி.யும் அப்போது செழியன் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார்.
செழியன் மூலமாக எனக்கு அப்படத்தில் 'காசி' எனும் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது. பிற்பாடு செழியன் அப்படத்திலிருந்து பாதியில் வேறு சில பணி நிமித்தம் விலகவேண்டியதாகிப்போனது. தொடர்ந்து எனக்குத் தங்கர் பச்சான் இயக்கத்தில் 'சொல்ல மறந்த கதை' படத்தில் சிறு பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியது. 'சொல்ல மறந்த கதை' முதலில் வெளியானதால், அதுவே நடிகனாக எனக்கு முதல் படமும் ஆனது.
இக்காலங்களில் செழியனும் நானும் குறும்படங்கள் எடுப்பதிலும் ஆவணப்படம் எடுப்பதிலும் ஆர்வமாக இருந்தோம். செழியன், அருள் எழிலன் இயக்கத்தில் 'மான்சோ'வின் குறும்படம் ஒன்றுக்கு ஒளிப்பதிவு செய்ய, அது பரவலான கவனத்தைப் பெற்றிருந்தது. பின் அவனே சிவகங்கை அருகே நடந்த, எருமைகளைப் பலியிடும் பழங்குடியினரின் திருவிழா ஒன்றை இயக்கி வந்துகாண்பித்தான். அப்போது நானும் 'டி ஆர்ட்' (DRT) எனும் அயலகத் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக, ஆட்டோ டிரைவர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் சிவதாணுவின் ஒருநாள் வாழ்க்கை, யுனெஸ்கோ விருது பெற்ற புகைப்படக் கலைஞர் கிருஷ்ணப்ரியா பற்றிய ஆவணம் என சில வாழ்வியல் ஆவணப் படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன்.
இக்காலங்களில்தான் கையடக்கக் கேமராக்கள் சென்னைக்குப் புதிதாக வந்து கொண்டிருந்த காரணத்தால், குறும்படம் அப்போது புதிய பேசுபொருளாக இருந்தது.
இதன் காரணமாகத் தமிழில் 'முதல் குறும்பட விழா' ஒன்றை நடத்த நான் தீவிரமாக முனைந்துகொண்டிருந்தேன். மூன்று நாட்கள் அந்த விழா 'சிலம்பு உலகத் தமிழ் குறும்பட விழா' என்ற பெயரில் சென்னை எக்மோர் டான் பாஸ்கோ பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்டது. அருண்மொழி, வேடியப்பன், செல்லையா, பூங்காற்று செந்தில நாதன் ஆகியோரின் உதவியுடன் விழாவை நடத்தத் தீவிரமாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தேன்.
அவ்விழாவின் பொருட்டு ஓர் இலச்சினை (Logo) தயார் செய்ய ஓவியர் சந்திரூ அவர்களைச் சந்திக்க சென்னை ஓவியக் கல்லூரிக்கு அடிக்கடி சென்றுவந்தேன். ஒருசமயம் நானும் செழியனும் அப்படிச் சென்றுவிட்டு அவசர வேலையாக ஆட்டோவில் சாலிகிராமம் நோக்கி வந்துகொண்டிருந்தோம். முந்தின நாள் நான் 'இன் ஜூலை' (In July) என்ற ஜெர்மன் படத்தை 'பிலிம் சேம்பர்' திரையரங்கில் பார்த்திருந்தேன். அதற்குச் செழியன் வரவில்லை. அதனால் அந்தக் கதையை நான் உல்டா செய்து, நானே சொந்தமாக யோசிப்பது போல ஒரு கதையை ஆட்டோ பயணத்தினூடே சொன்னேன்.
குமரன் காலனியில் இறங்கும் இடம் வந்தவுடன், கதையின் இறுதிக்காட்சி முடியாமல் இருவரும் பேசிக்கொண்டிருக்க, ஆட்டோகாரன் டென்ஷனாகி, "முதல்ல இறங்கி காசைக் கொடுத்துட்டு பேசுங்க சார்!" எனக் கேட்கத் தொடங்கினான்.
செழியன் உடனே அப்போது அவனுக்குக் காசு கொடுத்தது போக மிச்சமிருந்த சில்லறையில் ஒரு ரூபாயை எடுத்து என் கையில் தந்தான்.
"நீ சொன்ன கதைக்கு இது அட்வான்ஸ்! யாருக்கும் சொல்லாதே... நான் இக்கதையை இயக்குகிறேன்!" என்றான்.
எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி! அதுவரையிலான என் சினிமா போராட்ட வாழ்வில் யாரும் எனக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. அதுவும் அட்வான்ஸ்! நான் ஓர் எழுத்தாளனாக வாங்கிய முதல் அட்வான்ஸ் அது.
இது நடந்த சில வாரங்கள் கழித்து, எங்கள் இருவருக்கும் நண்பரான பாண்டிராஜன் இயக்கத்தில் செழியன் ஒரு குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தான். அதன் திரையிடல் சென்னை அலையான்ஸ் பிரான்சே அரங்கத்தில் நடந்தது. படத்தில் செழியனின் ஒளிப்பதிவு ஹைலைட்.
திரையிடல் முடிந்து அனைவரும் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் செழியன் அருகே சென்று என் பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அவன் கையில் திணித்தேன்.
"செழியா... இது என் அட்வான்ஸ்! நான் எப்போது இயங்கினாலும் நீயே எனக்கு ஒளிப்பதிவாளர்!"
இருபது வருடங்கள் கழித்து இது 'மைலாஞ்சி' படம் வழியாக நடந்தேறியது! 'மைலாஞ்சி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நானும் செழியனும் இதைப்பேசிய போது அரங்கத்திலிருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அந்த இருபது வருட நட்பு இன்று இல்லை என்னும்போது மனம் துக்கித்துக் கனக்கிறது. இன்னும் இதுபோல எங்கள் வாழ்வில் எத்தனையோ நினைவுகள், எத்தனையோ சம்பவங்கள்...
செழியன் எனும் நண்பனைப் பற்றி இக்கட்டுரையில் பேசுவதை விட, செழியன் எனும் கலைஞனைப் பற்றிப் பேச வேண்டும் என்றுதான் நினைக்கத் தொடங்கினேன். ஆனால் எழுதத் தொடங்கியபின் சரமாரியாகக் கொட்டும் நினைவுகளை என்னால் தடுக்க முடியவில்லை.
இளையராஜாவும்... அந்த மறக்க முடியாத கணையாழி கட்டுரையும்!
இப்படிப் பல சுவாரசியமான நிகழ்வுகளினூடே தொடர்ந்துகொண்டிருந்த எனக்கும் செழியனுக்குமான நட்பில், இளையராஜா தொடர்பான சம்பவம் மறக்க முடியாத ஒன்று!
ஒருமுறை செழியன் 'கணையாழி' இதழில் இளையராஜாவின் இசை குறித்து மிகத் தீவிரமாக ஓர் ஆழமான கட்டுரை எழுதியிருந்தான். இக்காலகட்டத்தில் நான் இளையராஜாவை அடிக்கடி சந்தித்து வந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றவிருந்த ஒரு பட வாய்ப்புத் தவறிப்போனாலும், தொடர்ந்து நான் அவரைச் சந்தித்து வந்தேன்.
இச்சமயத்தில் 'கணையாழி' கட்டுரை வந்தவுடன் நான் உற்சாகமாக, "வா செழியா... இளையராஜாவை அறிமுகப்படுத்துகிறேன், உன் கட்டுரையைப் படித்துவிட்டுப் பாராட்டுவார்" என மகிழ்ச்சியுடன், நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் அழைத்துச் சென்றிருந்தேன்.
பிரசாத் ஸ்டூடியோவுக்குக் கையோடு இருவரும் சென்றோம். அப்போது ஏதோ படப்பிடிப்பு மறுபதிவின் (Re-recording) வெளியே காத்திருந்தோம். இளையராஜா வந்தார். "என்ன?" எனக் கேட்டார்.
நான் உடனே ஓடிச்சென்று, செழியன் எழுதிய கட்டுரை கொண்ட கணையாழியின் பக்கங்களைப் புரட்டி, "உங்களைப் பற்றிக் கட்டுரை என் நண்பர் செழியன் எழுதியிருக்கிறார், வாசிக்க வேண்டும்" எனப் பெருமையுடன் சொன்னேன். அவரும் வாங்கிப் புரட்டிப்பார்த்துவிட்டு என் கையில் புத்தகத்தைக் கொடுத்தார். செழியனைப் பார்த்தார். செழியனும் ஆவலோடு பார்த்தான்.
"இசையைக் கேளு... ஆராயாதே!"
—என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்!
எனக்கோ 'சப்' என்றாகிவிட்டது. நண்பனை இப்படித் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டோமே என வருந்தினேன்.
பிற்பாடு இளையராஜாவும் செழியனும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர். இளையராஜா தயாரித்த வரலாற்று ஆவணப்படத்திற்குச் செழியன்தான் ஒளிப்பதிவாளர்—அந்த அளவுக்கு நெருக்கம்! 'மைலாஞ்சி' திரைப்படத்தில் எனக்கு மீண்டும் இளையராஜாவிடம் சென்று அறிமுகம் செய்ததே செழியன்தான்! அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாகிவிட்டனர்.
இப்படித்
தொடக்கக்காலங்களில் மிக நெருக்கமாக இருந்த எங்கள் நட்பு, பின் இருவரும் அவரவர் பணிகளின்
தீவிரத்தின் காரணமாகச் சற்றுப் பிரிந்து, வேறு வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கியது.
செழியன் 'ஆனந்த விகடன்' இதழில் "வந்த நாள்
முதல்" எனும் கவிதைத் தொடர் ஒன்றை எழுதத்
தொடங்கினான். அதுவரை செழியனுக்குள் இப்படி ஒரு கவிதை
முகம் இருப்பதே எனக்குத் தெரியாது. அத்தொடரின் வெற்றிக்குப் பின், அவன் விகடனில் எழுதிய உலக சினிமா கட்டுரைகள்தான் எங்களுக்கு
மட்டுமே தெரிந்த செழியனைத் தமிழகம் முழுமைக்கும் கொண்டு சென்றன!
வாராவாரம் அந்த
உலக சினிமா கட்டுரைகள் வெளியாக வெளியாக, தமிழ் சினிமாவின் ரசனையும், தமிழ் ரசிகர்களின் ரசனையும் ஒருசேர உயரத் தொடங்கியது. அதற்கு முன்பே அவன் ஒளிப்பதிவாளராகக்
கால் பதித்துவிட்டான். பாலாஜி சக்திவேல்
இயக்கத்தில் வெளியான 'கல்லூரி' திரைப்படம் ஒளிப்பதிவாளராக அவனுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் வாங்கித்
தந்தது.
அதே காலகட்டத்தில், நானும் 'சித்திரம் பேசுதடி' மூலம் நடிகராக
முழு வீச்சில் இயங்கத் தொடங்கியிருந்தேன். அத்தோடு, 'மார்லன் பிராண்டோ', 'உலக சினிமா வரலாறு' கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் விகடனில் வெளியான 'நாயகன்' தொடர் ஆகியவற்றின் மூலமாக எழுத்துத் துறையிலும் திடமாக என் காலடிகளைப் பதித்திருந்தேன்.
'தென்மேற்கு பருவக்காற்று' சந்திப்பும்... ரா. கண்ணன் அவர்களின்
ஆசியும்!
சில வருட
இடைவெளிக்குப் பிறகு, இருவரும் 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் மூலமாக மீண்டும் திரையில் இணைந்தோம். செழியன் அப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற, நான் அப்படத்தில் விஜய் சேதுபதியின்
அப்பாவாக நடித்திருந்தேன்.
தேனியில்
படப்பிடிப்பு இடைவேளையின்போது ஒரு மாலையில், எங்கள் இருவரின் வளர்ச்சியிலும் மிக முக்கியப்
பங்காற்றியவரும், ஆனந்த விகடனின் அன்றைய
பொறுப்பாசிரியருமான ரா. கண்ணன் அவர்களின் வீட்டிற்குச் சென்று, அவரது தாய்-தந்தையரைச் சந்தித்து ஆசி
பெற்று வந்தோம்.
அதன்ப பிறகு
செழியனின் வளர்ச்சி 'பரதேசி', 'ஜோக்கர்' என மிகப்பெரிய
மாபெரும் வெற்றிகளை உள்ளடக்கியதாக மாறியது.
இவை அனைத்தையும்
விட, செழியன் இயக்கத்தில் உருவான "டூலெட்" (To Let) திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தையே
தொடங்கி வைத்தது!
உலகின் மூலை
முடுக்கெல்லாம் சென்று, சிறந்த திரைப்படத்திற்கான
அங்கீகாரத்தையும், சிறந்த இயக்குநருக்கான கௌரவத்தையும்
தமிழ் சினிமாவிற்குப் பெற்றுத்தந்த அவனது உயரம், இதுவரை தமிழ் திரையுலகில் வேறு யாரும் எட்ட முடியாத ஓர் உச்சத்திற்குச்
சென்றது.
அப்போது நான்
தொடங்கியிருந்த 'பாலுமகேந்திரா நூலகம்' மூலமாகச் செழியனுக்கும் அவனது குழுவினருக்கும் ஒரு சிறிய பாராட்டு விழாவை
நடத்தினோம். "பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படத்திற்குப் பிறகு, அதன் உன்னதமான அழகியல் தொடர்ச்சியாகத்
தமிழில் மாற்றுச் சினிமாவை முன்னெடுத்தமைக்காக" பாராட்டுச் சான்றிதழ் ஒன்றை பாலுமகேந்திரா நூலகத்தின்
சார்பாக அவனுக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினேன்.
அதன்பின், 2020-ஆம் ஆண்டில் நான் எழுதிய 'தமிழ் சினிமா வரலாறு' (முதல் பாகம்: 1916-1940) நூலுக்குச் சென்னை சர். பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் ஒரு
மிகப்பெரிய வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தேன். அதில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமைகள் பலரையும்
அழைத்திருந்தேன். நடிகர் சிவகுமார், இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன், நடிகர் ராஜேஷ், நடிகர் நாசர், 'அறம்' இயக்குநர் கோபி நயினார், கவிஞரும் இயக்குநருமான குட்டி ரேவதி ஆகியோர் கலந்துகொண்ட
அந்தப் பெருவிழாவில், எனது நண்பனாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளியாகச்
செழியனையும் அழைத்திருந்தேன். செழியன் அன்று எனது எழுத்துகளையும் எனது திரை பங்களிப்பையும் குறித்து மிகவும்
பாராட்டிப் பேசினான்.
கோடம்பாக்கம்
வீதிகளில் நண்பர்களாகப் பேசித்திரிந்த நாங்கள், இன்று காலச்சுழற்சியில் வெவ்வேறு திசையில் தமிழ்
சினிமாவிற்குப் பங்காற்றிக் கொண்டிருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டேன்.
காலக்கெடுதியாகக்
கொரானாவும் வந்தது. அந்த கொரானா
கொடுங்காலம் குறித்துச் செழியன் எழுதிய கட்டுரை ஒன்று, 'காலப்பெட்டகம்' என்று சொல்லும் அளவுக்குப் பலராலும்
பாராட்டிப் பேசப்பட்டது.
செழியன் எப்போதும்
சமூகப் பிரச்சினைகள் குறித்துச் சிந்திப்பவன்; அதேசமயம் அதைத் தன் கலைப்படைப்பாக வெளிப்படுத்துவானே ஒழிய, சமூக வலைதளங்களில் சத்தமாகக் குரல்
கொடுப்பவன் அல்ல. ஆனால், தன் வழமைக்கு மாறாகக் கொரானா கொடுங்காலம் குறித்து அவன்
எழுதிய விழிப்புணர்வுக் கட்டுரை பலராலும் இன்றும் நினைவுகூரப்படுகிறது.
இதையடுத்து 2023 வாக்கில் நான் "மைலாஞ்சி" திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்த சமயம், பல வாழ்த்துச் செய்திகளும் அழைப்புகளும்
வந்துகொண்டிருந்தன. செழியனிடமிருந்தும்
அழைப்பு வந்தது. நானும் அப்போதைக்கு அது ஒரு சாதாரண
வாழ்த்துச் செய்தியாக மட்டுமே இருக்கும் என நினைத்திருந்தேன்.
ஆனால், அவன் எடுத்தவுடனேயே, "என்ன அஜயன்... அந்த ஒரு ரூபாய்க்கு உயிர்
இருக்கா?" எனக் கேட்டான்!
எனக்கு
அதிர்ச்சியாக இருந்தது! இருபது
வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வுக்குக் காலம் மீண்டும் உயிர்
கொடுக்கிறது!
நான் உடனே பதில்
சொன்னேன்:
"நண்பா, இன்னும் உயிர் இருக்கு... ஆனால் நீ
முன்பு போல சாதாரண ஒளிப்பதிவாளன் இல்லை; பல வெற்றிப் படங்களைக் கொடுத்து உன் துறையில் உச்சத்தில்
இருப்பவன். ஆனால் இது எனக்கு முதல் படம், சிறிய பட்ஜெட் படம். உன் சம்பளத்திற்கு இந்தப் படம்
கட்டுப்படி ஆகாதே!"
உடனே அவன், "எனக்கு மனசு இருக்கு... உனக்கு
விருப்பமிருந்தா சொல், உன்
பட்ஜெட்டுக்குள் நான் வேலை செய்கிறேன்" என்றான்.
என்றபோதும்
என்னால் அதை உடனடியாக ஏற்க முடியவில்லை. அவன் சொன்னதை நாம் சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என நினைத்தேன். உடனே எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பன்
அய்யப்ப மாதவனை அழைத்து, "அய்யப்பா, செழியன் இப்படிக் கேட்கிறான். ஆனால்
தயாரிப்பாளர் கொடுத்த பட்ஜெட்டில் ஒளிப்பதிவாளருக்கு இவ்வளவுதான் ஒதுக்க
முடியும்" என ஒரு குறைந்த
தொகையைச் சொல்லி, "அதற்கு அவன் சம்மதிக்கிறானா எனக்
கேள்" என்று சொன்னேன்.
பிறகு அய்யப்பன்
அதைக் கேட்டபோது, "அஜயனுக்காகச் செய்யறேண்டா!" எனச் செழியன் சொன்ன தகவல் என் காதுக்கு
இன்பத்தேனாக வந்து பாய்ந்தது!
அப்படிச்
சொன்னதோடு மட்டுமல்லாமல், 'மைலாஞ்சி' திரைப்படத்தில் சிறப்பான பங்களிப்பையும் செய்து கொடுத்தான். படப்பிடிப்பு எங்கள் பழைய நாட்களை
மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்தது. அந்த அளவுக்கு நாங்கள் படப்பிடிப்பின் இடைவேளைகளில் பழைய நட்பின் கதைகளைப்
பேசிச் சிரித்தோம்.
உறைந்த நினைவுகளும்... துயரத்தின் உச்சமும்!
அப்படியெல்லாம்
இருந்த செழியன், இன்று நம்மிடையே இல்லாமல் வெறும்
சடலமாகக் கண்ணாடிப் பெட்டிக்குள் உறங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்குள்
ஆற்றாமை பெருகெடுத்தது. இறுதி ஊர்வலத்தில்
அவன் உடலோடு நடந்துசெல்லும் துர்பாக்கியம் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருந்தது.
நமக்கே இப்படி
இருக்கும்போது, அவன் மனைவியும் மகளும் அவன் இல்லாத
நாட்களை எப்படி எதிர்கொள்வார்கள் என நினைக்கும்போது வேதனை நெஞ்சை அடைத்தது.
மறுநாள் முழுக்கப்
பலரும் முகநூலில் அவனைப் பற்றிய குறிப்புகளை எழுதியதை வாசித்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தமிழில் எதையும் எழுதத்
தோன்றவில்லை. ஆங்கிலத்தில் என் உணர்வுகளை ஒரு கவிதையாக
எழுதினேன்:
Together we
walked.
Together we
ran.
Together we
climbed.
You reached the
peak before me
and called me
to hurry.
But suddenly,
you leapt into
the unknown.
Now I see—
the peak is
nothing but darkness.
My fear touched
the peak.

No comments:
Post a Comment