November 2, 2010

டி என் ஏ ஒன்று, உருவம் இரண்டு: சச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு


நதிவழிச்சாலை:5
சச்சின் டெண்டுல்கர், ஏர்.ரஹ்மான் ..
இந்தி சினிமாவின் பத்திரிக்கைகளான பிலிம் பேர்.. ஸ்க்ரீன் போன்றவற்றில் வரும் சில கட்டுரைகளின் எழுத்து நடை காமெடியாக யிருக்கும் . கவர்ச்சியாக எழுதுவதாக எண்ணிக்கொண்டு சில அபத்தமான ஒப்புமைகளைதருவர். உதாரணத்துக்கு "மணிரத்னைத்தை ஹாலிவுட்டின் ஸ்பீல்பெர்க்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும்,.. "ஆமீர்கானை ஹாலிவுட்டின் டாம்குரூஸூக்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும் "நடிகை யாரேனும் கால்மேல் கால்போட்டு அமர்ந்து போஸ் கொடுத்தால் அவரை ஷ்ரன்ஸ்டோனுக்கு பதிலடி" என்றும் கைக்கூசாமல் எழுத ஆரம்பித்துவிடுவர்!

ஆனால் அதேசமயம் நம் ஊரில் நம் காலத்தில் நம் கண்முன்னிருக்கும் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கிடையில் அநியாயத்துக்கு காணப்படும் அபரிதமான ஒற்றுமைகளை யாரும் இதுவரை கவனிக்காமல் போனதேஆச்சரியமான ஒன்று.

நான் சொல்லும் இரண்டு பேரும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்து சென்றதில் குறிப்பிடத்தக்கவர்கள்.வெற்றிகளின் உயரத்துக்கு அசாத்திய வெற்றி அல்லது இமாலயவெற்றி என்ற வார்த்தைகளுக்கு பதிலாக இவர்களின் பெயரையே குறிப்பிடும் அளவிற்கு தகுதி வாய்ந்தவர்கள்
நான் சொல்வது : சச்சின் டெண்டுல்கர்....... ஏ.ஆர் ரகுமான் என்கிற இருவர் தான்.

இருவருக்குமிடையிலான டி.என்.ஏவை ஒரு பயோகெமிஸ்ட்டை வைத்து ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியவரும் போல ..அந்த அளவுக்குஇருவரது உயரம் தோற்றம் சுபாவம் ஆகியவற்றில் ஆச்சரியபடும் ஒற்றுமைகள்

உண்மையில் துவக்ககாலங்களில் நான் இவர்கள் இருவரையுமே அவ்வளவாக ரசித்தவனில்லை அதற்கு காரணம் இன்னும் இருவர் ..

முதலாவதாக கிரிக்கெட்டில் துவக்க காலங்களில் சச்சின் எனக்கு பிடிக்காமல் இருந்ததற்குகாரணம் . முன்னால் கேப்டன் அசாருதீன்

அப்போது நான் அசாருதீனின் பரம விசிறி.. விளையாட்டை ஒரு கலையாக பாவித்து அதன் மரபை பூரணமாக உள்வாங்கி ஆட்ட ஒழுங்கின் அழகை கலையாக மாற்றுவதில் எனக்கு பிடித்தமான சில பேட்ஸ் மேன்கள் உண்டு. அதில் இலங்கையின் அரவிந்த் டிசில்வா மற்றும் வெஸ்ட் இண்டீசின் வில்லியம்சுக்கு பிறகு அசாருதீன் எனக்கு பிடித்தமானவராக இருந்தார் அலட்டிக்கொள்ளாமல் பேட் பிடிக்க வரும் அவரது ஸ்டைல் எனக்கு மிகவும்பிடிக்கும். வரிசையாக முன்று விக்கட்டுகள் சாய்த்திருக்கும் அடுத்துஎன்னவாகப்போகிறதோ என்ற பதட்டம் பார்வையாளர்களுக்கும் சக ஆட்டக்காரர்களுக்கும் இருக்கும்.அந்த சமயத்தில் துளி பதட்டமில்லாமல் அனாயசமாக சூயிங்கமைமென்றபடியே மட்டையுடன் வந்து.. காலரை இழுத்துவிட்டுக்கொண்டு மணிக்கட்டை ஆட்டிவிட்டு மட்டை செண்டர் ஸ்டெம்புக்கு வைத்து அம்பயரிடம் லைன் கேட்பார் .. அந்த முகத்தில் அனைவரிடமும் காணப்படும் திக்...திக்... துளியும் இருக்காது. அதே போல் சொல்லிவைத்தார் போல டீமை தன் கையில் தாங்குவார் ( நினைவுப்படுத்துகிறேன்:நான் சொல்வது அந்தகாலம்) ஒரு கேப்டன் எப்படி இருக்கவேண்டும்.அவர் ஆடுகளத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு அவர் ஒரு சரியான உதாரணம். மன உறுதிதளராமல் சக வீரர்களை அரவணைத்து அதே சமயத்தில் இக்கட்டான தருணங்களில் தன் ஆட்டத்தின் மூலம் டீமை காப்பாற்றி என இப்படியான விடயங்களில் அவர் எனக்கு பிடித்தமானவராக இருந்தார்.
மேலும் அசாரின் சிக்சர் பாணி எனக்குமிகவும் பிடிக்கும்

அப்போது நான் மற்றும் உதவி இயக்குனர்கள் பலரும் இராமேஸ்வரம் பட இயக்குனர் செல்வம் அறையில் கூடுவோம் . பெரியார் சாலை பேருந்து நிலையத்துக்கு பின்புறம் இருந்த ஒரு தெருவில் அவரது அறை இருந்தது.
முத்துராமலிங்கம்(சினிமா பி.ஆர.ஓ வாக இப்போது பணிபுரிந்து வருபவர் ) வைரக்கண்ணு( உதவி இயக்குனராக இருந்து மாரடைபால் பிற்பாடு உயர்நிலை எய்தியவர்)இன்னும் பலரும் அங்கு கிரிக்கெட் பார்க்க கூடுவோம். அவர்களில் பலரும் அப்போது சச்சின் ஆதரவளர்கள். கேப்டனாக இருந்த அசாரை பார்த்தாலே திட்டத்துவங்குவார்கள் . அதன் காரணமாகவே நான் சச்சினுக்கு எதிரானவனாக மாறவேண்டி வந்தது.
சிலவருடகாலம் அப்படித்தான் இருந்தேன்
.
.ஆனால் ஒருமுறை சிக்ஸர் சித்து துபாயிலிருந்து பாதி டூரில் திடீரெனதிரும்பியபோது விமான நிலையத்திலேயே அழுதுகொண்டே டிவிக்கு
பேட்டிதந்தார் அதில் அசார் தன்னை வேண்டுமென்றெ ஆடவிடாமல் சதிசெய்து தன்னை தகுதியற்றவனாகசித்தரித்துவிட்டார்யென பொருமி தள்ளினார் . ஒரு ஆண் இப்படி பப்ளீக்காக அழுமளவிற்கு பாலிடிக்ஸ் செய்யும் கேப்டன் ஒருக்காலும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது என அப்போதைய அறிவுக்கு அரைகுறையாக முடிவெடுத்து அசார் கட்சிக்கு மானசீகமாக ராஜினாமா கடிதம் எழுதினேன்.

அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து நானும் சச்சினுக்கு மெதுவாக கைதட்ட ஆரம்பித்தேன் . அதற்கேற்றார் போல் அசாருதீன் டவுசர் கிழியும் சத்தம் மெல்ல கேட்க துவங்கியது. ஆட்டம் சரியில்லை. சக ஆட்டகாரர்களின் புகார். என அசார் வெளுக்க துவங்கினார்..நல்ல வேளையாக அவர் மீது ஊழல் குற்றசாட்டு வருவதற்கு முன்பே நான் முழுவதுமாக மாறியிருந்தேன்.சச்சின் கேப்டனாக இருந்த போதுகூட அவர் மீது ஈர்ப்பு வரவில்லை. டீமில் கங்குலி கை ஓங்க ஓங்க நான் முழுவதும் சச்சினிடம் சரண்டர் ஆனேன் .காரணம் கங்குலியை எனக்கு பிடிக்காது.
ஏன் பிடிக்காது என யாரும் கேட்காதீர்கள் அதற்கு காரணமே தேவையில்லை.( கங்குலி ரசிகர்கள் மன்னிக்கவும்). பிறகு சச்சினின் அந்த தன்னடக்கம் பொறுமை நிதானம் எல்லாம் இப்போதுதான் முழுசாக கண்ணில் பட்டது.. அடடா திறமை ஒருபக்கம் இருக்கட்டும் என்ன பாந்தம் என்ன உறுதி.பிறகு அவரது ஒரு பிறந்த நாளின் போது மனைவியை காலரியில் அமரவைத்து செஞ்சுரி அடித்து அவருக்கு அர்ப்பணித்த அந்த ஆட்டம் அவரை நாயகனாகவே மனசுக்குள் உட்காரவைத்து மாலையிட்டது. அதன் பிறகும் அவரிடம் பசை போல ஒட்டவைத்துக்கொண்டது .

அதேபோல ஏ.ஆர் ரகுமான்

சச்சினுக்கு அசார் போல ஏ.ஆர் ரகுமான் எனக்கு நெடுநாட்களாக ஈர்க்காமல் போனதற்கு இளையராஜா ஒரு பெரிய காரணம்.
இளையராஜா என் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருந்த காலத்தில் திரையுலகில் சட்டென அவரது புகழுக்கு பங்கம் .. ஒரு நிழல் அவரது மாஉருவை சிறிதே மறைத்தது. தன் துல்லியமான நவீன ஒலிப்பதிவு தரத்துடன் ஏ.ஆர் ரகுமான் எனும் ஒரு இளைஞனின் து(உ)ருவம் தான் அது. சின்ன சின்ன ஆசையை விட புது வெள்ளைமழை துவக்க இசை ஈர்த்தது. ஆனாலும் மனசு ஏற்க வில்லை.பிறகு ஜெண்டில்மென் சிக்குபுக்கு வந்ததும் முடிவெடுத்தேன் இல்லை இது சமூகத்துக்கு ஆரோக்கியாமான சத்தம் இல்லை என நண்பர்களிடம் உளறினேன்.

அக்காலத்தில் நகரம் முழுக்க வீடியோ கேம்ஸ். அந்த கடைகளை தாண்டும் போதெல்லாம் ஒரு வினோத சப்தம் . இளைஞர்கள் பலர் அதிகமாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்து வந்தனர். எப்போதெல்லாம் அந்தகடையை தாண்டுகிறோனோ உலகம் அழிவின் சப்தமிது ..என எண்ணத்துவங்கினேன். ரகுமானின் பாடல்களின் துவக்ககால இசையொலிகள் இப்படியாக இருப்பதாகநண்பர்களிடம் கூறி இவர் நிக்கமாட்டார் என பொருமினேன்.

பின் கிழக்குசீமையிலே படம் வந்தது .. அதன் வினோத இசை பாடல்கள் மெல்ல ஈர்க்க துவங்கியது. திருடா திருடாவில் வரும் ராசாத்தி பாட்டைபெரும்குரலெடுத்து ஆள் இல்லாத மொட்டை மாடியில் உச்சச்சதியில்பாடி மகிழ்ந்தேன் .ரகுமான் உணர்வுகளை சொல்லக்கூடியவர் மனசு மறுத்தாலும் அறிவு அங்கீகரித்தது. . மெல்ல மெல்ல ஏஆர் ரகுமான் ஈர்க்க துவங்கினார்.

அதே சமயம் அசாரை வெறுத்தார் போல நான் இளையராஜாவை வெறுக்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவில்லை ..இன்று இந்த நிமிடம் வரை .. ஷாஜி போன்றவர்கள் கட்டுரை படிக்கும் போது அவர்களது கலாச்சார புரிதலின்மையும் கலைஞனது இயல்புக்கூறுகள் குறித்த அறிவு போதாமையும்தான் என்னுள் எழுந்ததே தவிர இளையராஜாவின் மீதான என் பார்வை எள்ளளவும் மாறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதன்பிறகுதான் இளையராஜாவின் ஆழத்தையும் பலத்தையும்தேடி இன்னும் என்னால் ஆழமாக சஞ்சரிக்க முடிந்தது.

அதேசமயம் ஏ.ஆர் ரகுமான்மீதும் அவரது இசையின் மீதும் எனக்கு ஈர்ப்பு அதிகரிக்க துவங்கியது . ஜில்லுனு ஒரு காதல்கதையின் ' 'முன்பே வா' வை திரும்ப திரும்ப கேட்டு தொலைந்து போன-மறைந்து போன-கைவிட்டு போன காதலிகளின் முகத்தை நினைத்து கண்ணீர் மல்கியிருந்திருக்கிறேன் அதிலும் குறிப்பாக அவரது இந்திபட பாடல்களை நான் மிகவும் ரசித்தேன்
சொல்லப்போனால் அவருக்கு கர்நாடகத்தை விட ஹிந்துஸ்தானிதான் அட்டகாசமாக வருகிறது என்றும் கூட சொல்வேன்.
ரங்கீலா துவங்கி அவர் இசையமைத்த இந்திபாடல்கள் தமிழ் பாடல்களைவிடவும் முழுமையான வெற்றியடைந்தவை தால்,லகான் ,ரங் தே பசந்தி, தேசம், ஜோதாஅக்பர், டெல்லி 6, ஸ்லம்டாக் மில்லியனர் என அவரது பாட்ல்களை இப்போதும் ஆவலுடன்
கணிணியில் கேட்டுவருகிறேன். .
குறிப்பாக ஆஸ்கார் விழாவின் போது அவர் உச்சரித்த தமிழ் சொற்கள் தமிழனாக என்னை அவர் மேல் மிகவும் பெருமைகொள்ளச்செய்தன. இப்படியாகத்தான் இந்த மேதைகள் இருவராலும் நான் ஈர்க்கப்பட்டேன்.
ஒருவகையில் இந்த இருவர் மீதும் ஒரு பொறாமையும் கூட எனக்கு உண்டு. .. இத்தனை புகழ் அடைந்த பின்பும் அதுகுறித்த அலட்டலில்லாத அவர்கள்தன்மை என்னை சில சமயங்களில் வெட்கபடவைக்கின்றன
இவர்கள் இருவரிடமும் காணப்படும் அதிசய ஒற்றுமைகளை பட்டியல் போட்டால் அடுக்கிக்கொண்டே போகலாம்.
உயரத்திலும் உருவத்திலும் இருவரையும் ஒப்பிட்டு பாருங்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை அபரிதமானது என்பது உங்களுக்கு தெரியவரும் . இருவருமே வார்த்தைகளை நம்பாமல் செயல்களால் உலகத்தோடு உரையாடுபவர்கள் . இருவரும் இதுவரை மீடியாக்களில் பேசிய வார்த்தைகளை ஐந்து நிமிடத்தில் எண்ணிவிடலாம். மட்டுமல்லாமல் இருவரையும் ஒருசேர வைத்துபார்த்தால் பலவகைகளில் இருவருக்கும் அபரிதமான ஒற்றுமை இருப்பது தெரியவரும்.

ஏறக்குறைய ஒரே காலத்தில் ஓரிரு வருட இடைவெளியில் அறிமுகம். சச்சின் 89 ரஹ்மான் 91 என நினைக்கிறேன். அறிமுகமாகி தோன்றி ஒரே சமயங்களில் 94 வாக்கில் உச்சத்துக்கு சென்றவர்கள் .இன்று வரை நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருப்பவர்கள் . தொடர்ந்து மெகா மெகாஸ்டார்களாக இந்தியவானிலும் உலக வானிலும் ஜொலிப்பவர்கள்

இருவரது உடல் பாவத்தையும் கொஞ்சம் கவனித்து பாருங்கள் இருவருக்குமிடையே பொருத்தம் அத்தனை கனக்கச்சிதம். உயரம் பொறுமையான நடை , சின்ன கண்கள் உதடு ஒட்டியபடி சிரிக்கும் சிரிப்பு, பதில் சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பாத கேள்விகளுக்கு தோளைகுலுக்கிக்கொள்ளும் பாங்கு என அடுக்கிக்கொண்டே போகலாம் அவர்களது ஒற்றுமைகளை.

உலகம் அறிந்த இந்தியாவின் மிகபெரிய இரண்டு நட்சத்திரங்கள் என்று சொன்னாலும் இவர்கள் இருவர் மட்டுமே நிற்பார்கள்.
அதே போல இருவருமே திறமைகளை வெளிப்படுத்துவதில் எவரும் அருகில் நெருங்க முடியாத உச்சநிலை வெளிப்பாட்டுத்திறன் பெற்றவர்கள்

இந்தியாவின் அனைத்து பகுதி மக்களாலும் நேசிக்கப்படுபவர்கள்
வாழ்க்கை எனும் பெரும்பரப்பில் மனித பண்புகளிலிலும் துருவ நட்சத்திரமாக பிரகாசிக்கும் இவர்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் குறித்து யாரவாது தீவிரமாக ஆராய்ச்சி செய்து நூல் ஒன்றை எழுதினால் அது பலருக்கும் புகழ்வானுக்கு பயணிக்கும் வழித்துணையாக அமையும்


நாம் ஓடவேண்டியது எவ்வளவோ தொலைவு
ஆனால் அதற்குமுன் கற்கவேண்டியது எத்தனையோ மைல்கள்
--

October 20, 2010

உலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் 24:சினிமாவுக்கு தேவை ஒரு இளம்பெண் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி



பிரான்சின் புதிய அலை பகுதி ; மூன்று

பெர்லின் திரைப்படவிழாவில் தங்கக்கரடி வாங்கிய கையோடு இயக்குனர் கோதார்த் மற்றும் படத்தில் நாயகனாக நடித்த ழீன் பால் மண்டோ ஆகியோர் ஒரே இரவில் உலக நட்சத்திரங்களாக பிரகாசிக்க துவங்கினார். ப்ரெத்லஸ் படத்தின் வெற்றி அதுவரையிலான் பிரெஞ்சு சினிமா சரித்திரத்தை தலைகீழாக மாற்றியது புதிய அலை முழுமையாக உலகசினிமாவில் வீசதுவங்கியது பத்திரிக்கைகள் விமர்சகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறி தாங்கள் சொல்லியதுபோல செய்துகாட்டிய புதிய இளைஞர்களை கொண்டாடதுவங்கின .

ப்ரெத்லஸ் தந்த வெற்றியை தொடர்ந்து த்ரூபோ, கொதார்த் இருவரும் அமெரிக்க க்ரைம்நவால்களுக்குள் தீவிரமாக தங்களது தேடல்களை துவங்கினர். கதை எங்களுக்கு அவசியமில்லை. அது பார்வையாளனாய் தனக்குள் மூழ்கடித்துவிடும் . அத்ற்கு புத்தகம் போதும். இது சினிமா பார்வையாளனாய் கடைசிவரை இருக்கையில் உட்கார்த்திவைத்திருக்க எங்களுக்கு ஒரு தந்திரம் தேவைப்படுகிறது. ஒரு துப்பாக்கி ஒரு இளம் பெண் இருந்தால் போதும் சினிமாவுக்கு தேவையான மூலப்பொருள் இவ்வளவே..இதைவைத்துக்கொண்டு இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளை கட்டமைப்பதில்தான் எங்கள் சினிமா உறங்கிகிடக்கிறது என கோதார்த் வெளீப்படையாக அறிவித்தார். த்ரூபோவுக்கும் இதே பார்வைதான் என்றாலும் கோதார்த் அள்வுக்கு தொழில்நுட்ப பரிசோத்னை முயற்சிகளில் முழுமையாக அவர் இறங்க விரும்பவில்ல்லை.
கோதார்த்தை போல முழுக்க காட்சி அனுபவத்தை கொண்டிருத்தல் மற்றும் மரபுகளை உடைத்து புதிய வற்றை உருவாக்குதல் போன்றவற்றோடு சுவாரசியமான கதைகள் மற்றும் கதாபத்திரங்களையும் த்ரூபோ நம்பினார். காரணம் அவர் தயாரிப்பாளராகாவும் இருந்தார். அவரே தயாரித்த அவரதுஇரண்டாவது படமான ஷூட் தி பியானிஸ்ட் பிளேயர் 1960 படத்தின் தோல்விக்கு பிறகுதான் த்ரூபோ இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. . அதனால க்ரைம் திரில்லர் ஆகியவற்றுடன் சிறந்த கதைகளையும் உள்வாங்கி அவற்றை தன் காமிராவின் மூலம் மீண்டும் எழுதினார். அதன்படி பிரெஞ்சு நாவல் ஒன்றை ஒட்டி எடுத்த ஜூல்ஸ் அட் ஜிம் 1962 வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை ஈட்டியது. தொடர்ந்து டூ இங்கிலீஷ் வுமன்,1971 தி மேன் ஹூ லவ்டு வுமன்1977, க்ரீன் ரூம் ,1978வுமன் இன் நெக்ஸ்ட் டோர் ,1981 .. போன்ற காலத்தின் மகத்தான படைப்புகளை அவர் உருவாக்கினார். த்ரூபொவின் துவக்ககால திரைப்படங்கள் பெரிதும் அவரது சுய வரலாற்றை ஒட்டியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அவரது திரைப்படங்களில் தன்னியல்புத்த்ன்மையே வரது த்னைத்தன்மை ..அவரது கதாபத்திரங்கள் அடுத்து என்ன செய்யும் என்பதை எவரும் ஊகிக்க முடியாது. திரைக்கதையின் இந்த அவரது தன்னியல்புதன்மை காட்சிக்கொணாங்கள் ,படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுடபகூறுகளிலும் விரவி அசாத்திய உயிர்த்தன்மையை அவரது படங்களுக்கு வழங்கியது.
அவரது திரைப்படங்களில் வுமன் இன் நெக்ஸ்ட் டோர் அவரது பாணியிலிருந்து முழுமையான விலகிய படைப்பாகும். அழுத்த்மான உணர்வெழுச்சிகள் நிரம்பிய அப்படைப்பு புதிய அலைக்கு எதிரானதாக மரபான சினிமகாளை மீண்டும் கொண்டாடுவதாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கடுமையாக தாக்கினர்.

த்ரூபோவின் திரைப்படங்களின் கலாபூர்வ வெற்றிக்கு அவரது பெரும்பானமை திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ரிய நேஸ்டர் அல்மான்ரஸுக்கும் பெரும்பங்கு உண்டு .வெறுமனே இயக்குனராக அல்லாமல் ஒரு இயக்கத்தை முன்னெடுத்து செல்பவராகவும் அத்ன் சகலகூறுகளையும் முழுமையாக உணர்ந்து உலக சினிமாவின் வளர்ச்சிக்கு த்ன்னை அர்ப்பணித்துக்கொள்பவராகவும் செயல்பட்டதுதான் த்ரூபோவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் . மேலும் வெறுமனெ வணிக திரைப்பட இயக்குனர் என்றுமட்டுமே உலகசினிமா விமர்சகர்களால் முத்திரை குத்தப்ப்ட்ட ஹாலிவுட் இயக்குனரை தன் நண்பர் சாப்ரோலுடன் நேரில் சந்தித்து நீண்ட பேட்டி எடுத்து அதனை நூலாக வெளியிட்டார் . அந்த நூல் வெளியான பிறகுதான் ஹிட்சாக்கின் திரைப்படங்களின் மீதான் பார்வை விமர்சகர்களிடத்தில் முழுமையாக மாற்றம் கண்டது.அழ்ந்த மனைத நேயப்பற்றும் வாழ்க்கையின் மீதான் தீராத கவர்ச்சியும் உறவுகளின் போலித்த்னமையும், சம்பிராதயங்களின் மீதான் கேள்விகளும்,பால்யத்தின் பதட்டமும்,அளவற்ற காதலும் ,,கட்டற்ர காமமுமாக காண்ப்படும் த்ரூபோவின் படங்கள் மனித மனத்தின் ஆவணகாப்பகங்களாக படைப்பு நேர்த்தியுடன் உலகசினிமாவின் அணிகலன்களாக இன்றும் விளங்குக்கின்றன.

அதேசமயம் கோதார்த் த்ரூபோவிடமிருந்து முழுமையாக தன்னை விளக்கி கொண்டவர் .கோதார்த்தின் திரைப்படங்கள் அரசியல்பேசுபவை. துவக்ககாலங்களில் தீவிரமான மார்க்சியராக விளங்கிய கோதார்த் பின் மாவோ வின் சீன கம்யுனசிககருத்துக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார். அவரது திரைப்படத்தின் மீதான் ஆரவம் கூட ஒரு அரசியல் நடவடிக்கையே என அரசியலை கலையையும் பிரிக்கமுடியாத கூறுகளாக பாவித்தார்.பிற்பாடு த்ரூபோ வின் திரைப்படங்கள் வணிகவெற்றியை நோக்கி உந்திசென்றபோது தனக்கு முதல படவாய்ப்பு வாங்கி கொடுத்த நண்பர் என்றும் பாராமல் த்ரூபொவை பூர்ஷூவாவாக மாறிப்போன கம்யூனிஸ்ட் என பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

அமெரிக்க இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கிய எக்ஸ்போ 58 எனும் ஆவ்ணப்படத்தை பார்ததபோது தனக்கான சினிமாவின் விழிப்புணர்வை அடையப்பெற்ற கோதார்த் தனது ப்ரெத்லஸ் முதல் படத்திலேயே வழக்கமான சினிமாமொழியை முழுமையாக உடைத்து ஜம்ப்கட் எனும் புதிய உத்திமூலம் உலகசினிமாவை தன்பக்கம்திசை திருப்பிக்கொண்டார். அத்னாலதான் முதல்படத்தின் பிரம்மாணட வெற்றிக்கு பிறகு அவர் த்ரூபோவைபோல முழ்நீள படம் எடுப்பதை தவிர்த்து அல்ஜீரிய போர பற்றிய திரைப்படத்தை எடுப்பதில் முனைப்பு காட்டினார். தொடர்ந்து Woman Is a Woman (1961), Vivre sa vie (1962), Les Carabiniers (1963) மேற்சொன்ன மூன்று திரைப்படங்களும் அவரது ப்ரெத்லஸ் பொல பெரிய வெற்றியை ஈட்டவில்லை ஆனால் அடுத்து வந்த அவரது Le Mépris (1963),வணிக ரீதியாக பெரும் வெற்றியை அவருக்கு ஈட்டித்தந்தது.

கோதார்த் எந்த சமரசத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாதவர் .நான் இவ்வுலகில் தொடர்ந்து எவரும் பார்த்திராத புதிய காட்சிகளை காமிராவின் மூலம் தேடுகிறேன்.அவற்றை எனக்குள்ளான அரசியல்மூலமாக தொகுத்து திரைப்படம் எனும் வடிவத்தில் செதுக்க முயல்கிறேன் இதுவே என் சினிமா என அறிவித்துக்கொண்ட கோதார்த் பார்வையாளனை எந்த தருணத்திலும் பொருட்டாக கருதியதில்லை. அவரது திரைப்படங்கள் கோர்வையாக இல்லை. புரியவில்லை .குழ்ப்பமாக இருக்கின்றன என தொடர்ந்து குற்றசாட்டுகள் வசையாக அவர் மீது விழுந்தவண்னமிருந்தன. ஆனால் அவற்றை சட்டைமீது விழும் இலையை விரல்களால் ஒதுக்குவதுபோல உதாசீனப்படுத்திவிட்டு தன்னுடைய படங்களில் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.பார்வையாளனை அந்நியப்படுத்தி அவனது நுகர்ச்சிதனமையிலிருந்து விலகி அவனுக்கு உணர்ச்சிகளை தூண்டும் திட்டமில்லாத அதேசமயம் அவனது சிந்த்னையை துண்டக்கூடிய காட்சிகளில்புதிய அனுபவத்தை உண்டாக்க கூடியபடைப்புகளை உருவ்வாக்குவதில் முனைப்பாக இருந்தார். புகழ்பெற்ற நாடக இயக்குனர் பெத்ரோல்ட் பிரெக்தின் நாடகங்களின் பால் ஈர்ப்புகொண்டிருந்த கோதார்த் அவரது நாடகத்தின் சில கூறுகளை தன் திரைப்படத்தில் பயன்படுத்தி பார்வையாளனின் இரண்டாவது வாசிப்புக்கு அல்லது இரண்டாவது பரிணமாத்துக்கு தன் திரைப்படங்களில் வழி சமைத்து கொடுத்தார்.பிற்காலத்தில் டிசிகாவெர்தோவ் எனும் ரஷ்ய இயக்குனர் பெயரில் உருவான குழுவில் இணைந்து திரைப்படங்களை இயக்க்கி வெளியிட்டுள்ளர். எண்ணற்ற முழ்நீள திரைப்பட்ங்களுடன் குறும்படங்கள் ஆவணப்படங்கள் என மாற்று சினிமா முயற்சிகளின் மூலம் வணிக சினிமாபோக்கு எதிராக செயல்பட்டவர் . ஆனாலும் கோதார்த் உலகின் த்லைசிறந்த இயக்குனர்கள் பலரால் இப்போதும் குருவாக மதித்து போற்றபடுபவர். Quentin Tarantino,Martin Scorsese, Bernardo Bertolucci, Arthur Penn, Richard Linklater, Gregg Araki, John Woo, Mike Figgis, Robert Altman, Steven Soderbergh, Richard Lester, Jim Jarmusch,Rainer Werner Fassbinder, Brian De Palma, Wim Wenders, Oliver Stone என அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டுசெல்கிறது. அவரது திரைப்படவாழ்வின் முழுமையான வெற்றிக்கு இதுவே தக்க சான்று . தன் எண்பதாவது வயதிலும் மறைந்த தன் புதிய அலை சகா எரிக் ரோமர் பற்றிய ஆவணப்படத்தை இயக்கி அவர் வெளியிட்டிருப்பது சினிமாவின் மீதான அவரது பற்றை நமக்கு நிரூபிக்கிறது

(அடுத்த இதழில் பிரெஞ்சு சினிமா அலை ..இறுதி பாகம் சாப்ரோல் ..எரிக் ரோமர் ழாக் ரிவெத் )












க்ளாத் சாப்ரோல் (24 June 1930 – 12 September 2010)
( claude chabrol photo)


சென்ற செப்டம்பர் 12ம் நாள் பிரெஞ்சு புதிய அலை சினிமாவின்மற்றுமொரு பிதாமகன் காளாத் சாப்ரோல் தன் எண்பதாவது வயதில் சினிமாவை விட்டு உயிர்பிரிந்தார். அவரது திரைப்படங்கள் மற்ரும் வாழ்க்கை குறிப்பு இத்தொடரின் அடுத்த பகுதியில் இடம் பெற உள்ளது.

அந்த உலகசினிமா மேதைக்கு புத்தகம் பேசுது சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

- அஜயன்பாலா








.

September 18, 2010

பைட் கிளப் :

நதி வழிச்சாலை: 3 படிச்சு முடிச்சுட்டு சினிமா கனவோட சென்னைக்கு வந்த புதுசுல இரண்டு விஷயம் என்னை ரொம்பவே பயமுறுத்துச்சி. ஒண்ணு இங்கிலீஷ் அப்ப நான் வேலை செஞ்ச ஒரு டூவீலர் கம்பெனிக்காக ஒவ்வொரு ஆபீசா ஏறி மேனேஜரை கரக்ட் பண்ணி மொத்தமா பத்து பதினைஞ்சு வண்டியை அவங்க தலையில கட்டணும் .என்னோட வேலை இதுதான் . கொஞ்சம் சிரமமான வேலை ஏற்கனவே நம்ம இங்கிலீஷ் அரைகுறை . பெரிசா அப்பியரண்சும் இல்லை. ஆனாலும் தெரிஞ்வர் ரெக்கமண்டேஷ்ன் காரணமா வேலையில சேத்துக்கிட்டாங்க .மொதல்ல இந்த கார்ப்பரேட் ஆபிசுக்குள்ள போறதுன்னாலே கைகால் உதறும். ஜெய்சங்கர் படத்துல வர்ற பாஸ் ஏரியா மாதிரி கும்மிருட்டு.. குண்டு குண்டு பல்பு.அதை மீறி அங்க உக்காந்துருக்க ரிசப்ஷனிஸ்ட் .அவ பேசற இங்கில்லீஷ் . நாம ஏதாவது துணிச்சலோட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சா உடனே பர்டன்னு ஒருவார்த்தை வரும் .. ஆண் பெண் யார்கிட்ட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சாலும் .. உடனே ..பர்டன் .. . அது என்னவோ தெரியலை .இந்த வார்த்தைய கேட்டாலெ எனக்கு மூளை ஸ்டாப் ஆயிடும் அப்புறம் ஒரு வார்த்தையும் வாயிலர்ந்து வராது . எனக்கு ரொம்ப நாளைக்கு இந்த பர்டனுக்கு என்ன அர்த்தம்னே தெரியலை. யார்கிட்டயாவது அர்த்தம் கேக்க்லாம்னு பாத்தாலும் சின்னதயக்கம் . ம்ம் இது கூட தெரியலையா நீயெல்லாம் மெட்றாசுக்கு வந்து குப்பையை கொட்டி ன்னு கேவலப்படுத்திடு வாங்களோன்னு ஒரு சின்ன பயம். சமீபத்துல கூட ஒரு படத்துல இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஒரு கதாநாயகன் அவஸ்தை படறதை பார்த்தப்ப எனக்கு என்னோட அந்த காலத்து நெலமைதான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல வேளையா ரெண்டேமாசத்துல அந்த வேலையை விட்டு பத்திரிக்கைக்கு ஓடினது தனிக்கதை. இரண்டாவதா என்னை பயமுறுத்துன விஷயம் .. எழுத்தாளர்கள் அதுக்குமுன்னாடி வரைக்கும் எனக்கு எழுதுறவங்க மென்மையானவங்க.. புழு பூச்சிக்கு கூட தீங்கு நினைக்கமாட்டாங்க கடவுளுக்கு நிகரானவங்க.. நம்ம கிட்ட ஆட்சியை குடுத்தா எழுத்தாள்ர்கள் அனைவருக்கும் ஆயுசுக்கும் கஷ்டப்படாம இருக்க வீடுவசதி எல்லம் செஞ்சிகுடுத்து அவங்கள தொடர்ந்து எழுதவைக்கணும்ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். அப்ப கோபால புரத்துல காதி கிராமாத்யோக பவன்ல முன்றில் ஏற்பாட்டுல எண்பதுகளில் கலை இலக்கியம்னு ஒரு கருத்தரங்கு நடந்துகிட்டிருந்தது அதுக்குமுன்னாடி வரைக்கும் நான் ஒரு எழுத்தாளரையும் நேர்ல பாத்ததில்லை. அப்ப அதி தீவிர வாசகனா இருந்த நான் எழுத்தாள்ர்களை பாக்கறதை ஒரு தெய்வ காட்சியா நெனச்சிக்கிட்டிருந்தேன். அந்த கூட்டத்துக்கு போனா எல்லாரையும் பாக்கலாம்ன்னு சொல்லி நண்பன் ஒருத்தன் கூட்டிட்டு போனான். . ஆனா அங்க எல்லாமே தலைகீழ் . எந்த எழுத்தாளர் கிட்ட பேச போனாலும் அவனை விடக்கூடாது அவனை வெட்டணும் இவனை குத்தணும்னு ஒரே ஆளாளுக்கு கும்பல் கும்பலா நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க இரண்டாவது நாள் மேடையில ஒரு வயசானவர் நாவல் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதே கீழேருந்து குண்டா ஒருத்தர் எழுந்து ”நீ வாட வெளிய ஒண்ணை உதைக்கிறேண்டான் ‘’னு சவால் விட்றார்.. மேடையில பேசிக்கிட்டிருந்த வயசானவர் ஞானின்னும் கீழே பேசனவர் சாரு நிவேதிதான்னும் அப்புறமா தெரிஞ்சிக்கிட்டேன். இவங்களா இப்படி எனக்கு செம அதிர்ச்சி. இவ்வளவு கேவலமா சாதரண மனுஷங்க மாதிரி சண்டையை போட்டுக்கிறாங்கன்னு அன்னைக்கு நான் யோசிச்சேன். அதுக்கப்புறம் காலம் என்னை புரட்டி புரட்டி எடுத்துச்சி.கோணங்கி எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாரும் என் அறைக்கே வர ஆரம்பிச்சாங்க . நானும் குட்டயில விழுந்தேன். அன்னைக்கு நடந்த சண்டைய இப்ப யோசிக்கும் போது அந்த சண்டை எனக்கு இப்ப வேற ஒண்ணா தெரியுது. அது இரண்டு எழுத்தாளர்கள் பிரச்னை யில்லை இரண்டு தத்துவங்களோட ப்ரச்னைன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது நவீனத்துவத்தை அடிச்சுட்டு பின் நவீனத்துவம் மேலெழுந்த காலம் அது சாரு மட்டும் இல்லாம அன்னைக்கு அங்க கூடியிருந்த நாகார்ஜுனன், ரமேஷ் -பிரேம் மாலதி மைத்ரி.. (அக்கா அப்பல்லாம் எழுத ஆரம்பிக்கலை ..ஆனாலும் செம பைட் குடுத்தாங்க) ராஜன் குறை, பாண்டிச்சேரி .ரவிக்குமார் டி ,கண்ணன் இவங்களுக்ககெல்லாம் தலைவரா இருந்த தமிழவன் இவங்க எல்லாருமே யாரையாவது அடிக்கணும் ஒதைக்கணூம்ங்கிற வேகத்தோடதான் திரிஞ்சாங்க இந்தமாதிரி சண்டைகள்தான் சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் வலுசேர்க்குது . எங்க கருத்துசண்டை அதிகமா இருக்கோ அங்க காலத்துக்கும் சமூகத்துக்கும் சண்டை நடந்துகிட்டிருக்குன்னு அர்த்தம் . இந்த மாதிரி எழுத்தாளர்கள் சண்டை உலகம் முழுக்க பிரசித்தம். பிரான்ஸில் குருவும் சிஷ்யணுமா இருந்த ஆல்பர்காம்யு ..சார்த்தர் சண்டை உலக பிரசித்தம் ..அது மனித நேயத்துக்கும் , எதேச்சதிகார அரசியலுக்கு எதிரான கலகத்துக்கும் நடந்த யுத்தம் இன்னைக்கும் அந்த சண்டைகள் குறித்துவிவாதம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு . அவங்களாவது பரவாயில்லை ..ஆனா அவங்களை விட பெருசுங்களா உலகமே அண்ணாந்து பாக்குற ஒரே காலத்தில் வாழ்ந்த ரஷ்யாவின் உலகபுகழ்பெற்ற மேதைகள் டால்ஸ்டாய் தஸ்தாயேவெஸ்கி துர்கனேவுக்கிடையிலேயே நடந்த சண்டைகள் ரொம்ப ஆச்சரயபடவைக்குது டால்ஸ்டாயும் துர்கனேவும் கிட்டதட்ட பதினேழு வருஷம் ரெண்டு பேரும் காத்திரமா அடிச்சுகிட்டாங்க இத்தனைக்கும் நம்ம ஊர் காந்திக்கே அஹிம்சைய போதிச்சவர் டால்ஸ்டாய் அப்படிப்பட்ட டால்ஸ்டாயே சக எழுத்தாள்ர் இவான் துர்கனேவை .. ஒருமுறை உனக்கு தில் இருந்தா வாடா ஒண்டிக்கு ஒண்டி மோதிபாப்போம்னு பகிரங்கமா சவால் விட்டார் . இந்த ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு அவங்க சொல்ற பேர் டூயல் DUEL ஒத்தைக்கு ஒத்தியா நின்னு வாள் சண்டை போடற இந்த DUEL ரஷ்யாவில ஒரு கலாச்சாரம் . வீரனுக்கு அழகு நம்ம ஊர்ல பாறாங்கல்லை தூக்குறா மாதிரி அங்க இந்த DUEL. ஒரே பொண்ணுக்கு ரெண்டுபேர் ஆசைப்பட்டா ஆளுக்கு ஒருபக்கம் கத்தியை உருவிக்கிட்டு நிப்பாங்க ..சண்டை ஆரம்பிச்சிட்டா யாரவது ஒருத்தர் குத்துபட்டு சாவறது வரைக்கும் கடைசி வரைக்கும் நிறுத்தக்கூடாது .. இது தான் இந்த DUEL.லோட விதி உலக புகழ் பெற்ற ரஷ்ய கவிஞர் புஷ்கின் ஒருகாதலுக்காக இது மாதிரி நடந்த சண்டையிலதான் சின்ன வயசுலயே இறந்தாரு அப்படிப்பட்ட ஒண்டிஒண்டி சண்டைக்கு சக எழுத்தாளனை புத்துயிர்ப்பு மாதிரி காலத்தால் அழியாத நாவலை எழுதுன டால்ஸ்டாயே கூப்பிட்டிருக்கார்னா பாத்துக்குங்க எழுத்தாளனோட கொபத்தை.அதுக்கப்புறம் டால்ஸ்டாய் இதுக்காக துர்கனேவ் கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டார்ங்கிறது தனிக்கதை. அதேபோல தஸ்தாயேவெஸ்கிக்கும் துர்கனேவுக்கும் கூட ரொம்ப ப்ரச்னை. தன்னோட The Devils நாவல்ல கர்மசோனிவ்ங்கீற ஒரு மோசமான எழுத்தாளன் பாத்திரத்துல அச்சு அசலா துர்கனேவையே அவர் சித்தரிச்சிருந்தார். கடைசியில் 1880ல் புஷ்கின் சமாதியில நடந்த ஒரு கூட்டத்துல உன்னோட படைப்புகள் உன்னதமானவை எனக்கூறி தஸ்தாவெஸ்கி கண்ணீரோட போய் துர்கனெவை கட்டியணைச்சிகிட்டது தனிக்கதை

September 14, 2010

நாயகன் பெரியார் குறித்த எனது நேர்காணல்


கலைஞர் தொலைக்காட்சியில் நாளைகாலை 8 மணிக்கு
சந்தித்த வேளை நிகழ்சியில் பெரியார் குறித்த எனது நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது.

September 10, 2010

சினிமா என்பது கணத்திற்கு இருபத்தி நான்கு சட்டகங்களாக சரியும் உண்மைகள்


உலக சினிமா வரலாறு 23
பிரான்சின் புதிய அலை பகுதி ; இரண்டு


தனது சினிமா குறித்த புதிய கோட்பாடுகளை உலகிற்கு அறிவிக்கும்விதமாக 1951ல் “கையேது சினிமா” Cahiers du Cinema எனும் இதழை துவக்கிய அதன் ஆசிரியர் ஆந்த்ரே பஸின் ... இளைய எழுத்தாளர்களை ஆரம்ப இதழ்களில் உள்ளே அனுமதிக்க தயங்கினார். அவர்களிடம் காணப்பட்ட அபரிதமான துடிப்பும் வேகமும் தான் இதற்கு காரணம் . அவர்களது விமர்சனங்கள் காரசாரமாக இருந்தன .. ஆனாலும் எரிக் ரோமர்,கோடார்ட், ரிவெட் , க்ளாத் சாப்ரோல் மற்றும் த்ருபோ போன்ற இளம்படைப்பாளிகள் இதழூக்கான மற்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். .. திரைப்பட இயக்குனர்களை பேட்டி காண்பது .. திரைப்பட விழாக்கள் பற்றி குறிப்பெழுதுவது போன்ற சிறு அள்வில் அவர்களது எழுத்துக்கள் பிரசுரமாகின. ஆனாலும் அதற்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடிக்கொண்டே இருந்தது. ஆந்த்ரே பஸின் ஒரு தந்தையை போல அவர்களை வழி நடத்தினார். குறிப்பாக த்ரூபோ ஆந்த்ரே பஸினின் செல்லபிள்ளையாகவே வளர்ந்தார். ஒருமுறை த்ரூபோ இளம் குற்ற வாளிகளுக்கான சிறையில் காவலர்களால் பிடிபட ஆந்த்ரேபஸின் தான் அவரை அங்கிருந்து மீட்டு வந்து தன்னோடு தங்க வைத்துக்கொண்டார்.
முதன்முதலாக் 1953ல் த்ரூபோ எழுதிய "A Certain Tendency of the French Cinema எனும் கடுமையான விமர்சனம் தாங்கிய கட்டுரையை ஆந்த்ரே பஸின் துணிந்து பிரசுரித்தார் . அக்கட்டுரை எதிர்பாராத விதமாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது . ஒரு பக்கம் பிரெஞ்சு சினிமாவின் அக்காலத்திய இயக்குனர்கள் கொதித்தெழ இன்னொருபக்கம் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு . இக்கட்டுரைக்கு கிடைத்தவரவேற்பை தொடர்ந்து பஸின் கோடார்ட், சாப்ரோல் ,எரிக் ரோமர் என அனைவரையும் எழுதவைத்தார்.. இதழை இளைஞர்களின் எண்ணங்கள் முழுவதுமாக ஆகரமித்தன. சினிமா பற்றிய புதியகருத்துருவாக்கங்கள் உதித்தன. வெறுமனே நாவலில் இருப்பதை அச்சு பிறழாமல் ஸ்டூடியோவில் படம்பிடிக்கும் முறைமையை இவர்கள் கடுமையாக சாடினர்.விதிகளை உடையுங்கள் இவைதான் அவர்களின் கோஷம் சினிமா இயக்குனரின் ஊடகம் அங்கு தயாரிப்பாளனுக்கோ கதாசிரியனுக்கோ நடிகனுக்கோ முக்கியத்துவமில்லை. இயக்குனர் சர்வ சுதந்திரமாக தான் நினைத்ததை காமிராமூலமாக எழுதுகிற போதுதான் சினிமா எனும் கலை உயிர்பெறுகிறது என்பது போன்ற தங்களது கலைகோட்பாடுகளால் பிரெஞ்சு சினிமாவை அதிரவைத்த்னர்.

உலகசினிமாகளை தலைகிழாக புரட்டி தாங்கள் இயக்குனராக அங்கீகரிப்பவரது பட்டியலை வெளியிட்டனர். அமெரிக்காவின் கிரிபித், D.W. Griffith, விகட்ர் ஸ்ட்ரோஜம் ,Victor Sjostrom,பஸ்டர் கீட்டன் , Buster Keaton, சார்லி சாப்ளின்,Charlie Chaplin, எரிக் வான் ஸ்ட்ரோஹிம் Erich von Stroheim போன்றவர்களையும் பிற்காலத்தைய இயக்குனர்களில் ஆல்பிரட் ஹிட்ச்காக் Alfred Hitchcock , ஜான் போர்ட் john ford ஹாவர்ட் ஹாக்ஸ் Howard Hawks ஆர்சன் வெல்ஸ் Orson Welles ஜெர்மனியில் எர்னஸ்ட் லூபிட்ச் , Ernst Lubitsch, ப்ரிட்ஸ் லாங் Fritz Lang முர்னோ . Murnau இத்தாலியின் ரோபர்ட்டோ ரோஸலினி மற்றும் விட்டோரியா டிசிகா ஆகியோர் கொண்ட பட்டியலைமட்டுமே தாங்கள் அங்கீகரிக்கும் முழுமையான இயக்குனர்களாக அறிவித்தனர் . மற்ற்வர்கள் கதை சொல்லிகள் .அவர்கள் ஒருகதைக்குள் மக்களின் ஞாபகங்களை மூழ்கடித்தனர் . ஆனால் இவர்கள் மட்டும சினிமாவின் கலையை கதைகளையும் ரசிகணையும் கடந்து அழைத்து சென்றவர்கள் என அறிக்கை விட்ட்னர் .

எத்த்னை நாள்தான் விமர்சனம் எழுதுவது நமக்கான சினிமாவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக களத்தில் இறங்கினர் .அக்காலத்தில் இயக்குனராவதற்கான வழி முதலில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளர்களாக சேருவது பின் குறும்படம் எடுத்து அதன் மூலம் பெரிய தயாரிப்பாளர்களை பிடிப்பது. இதுதான் . ஏற்கனவே இவர்கள் மேல் அக்கால இயக்குனர்கள் கடுங் கோபத்தில் இருந்த காரணங்களால் அவர்கள் உதவி இயக்குனராக சேருவது அத்தனை எளிதான காரியமாக இல்லை . ஆளுக்கு வெவ்வேறான துறைகளின்மூலமாகவும் உதவி இயகுனர்களாக தாங்கள் அங்கீகரித்த இயக்குனர்களிடமும் முதலில் சினிமா தொழிலுக்குள் நுழைந்தனர். அத்ன்படி களாவுத் சாப்ரொல் 20 தி செஞ்சுரி பாக்ஸில் நிர்வாக பிரிவிலும் .கோடார்ட் ஒரு திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவிலும் நுழைய த்ரூபோ ரோபர்டோ ரோஸலினியிடம் ரிவெட் ரெனுவாரிடமும் உதவி இயக்குனர்களாக துறைக்குள் நுழைந்தனர் . சிலகாலம் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் சொந்தமாக தங்களது கைபணத்தை போட்டு படம் எடுக்க துவங்கினர் . அக்காலத்தில் அரசாங்கம குறும்படங்களுக்காக பொருளுதவி செய்தது ஆனால் அத்தகைய படங்களில் இயக்குனரின் வேலை ஸ்டார்ட் கட் சொல்வதாக மட்டுமே இருந்து வந்தது இதனால் தாங்களே சொந்த கம்பெனி துவக்கி படம் எடுத்த்னர். ஒருவருடைய படங்களில் மற்ற்வர்கள் உதவி இயக்குனராக சம்பளம் இல்லாமல் வேலை செய்தனர். அதன்படி முதலில் எரிக் ரோமர் ,மற்றும் ரிவட் ஆகியோர் படமெடுக்க கோதார்த், சாப்ரோல் ஆகியோர் திரைக்கதை எழுதினர். கோதார்த் ஸ்விட்சர்லாந்தில் இருந்த அணைக்கட்டு ஒன்றை ஆவணப்படாமாக முதலில் எடுக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் காசில்லாமல் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அத்ற்கு தெவையான மீத பணத்துக்காக அதே அணைக்கூட்டிலேயே கூலியாளாக வேலை செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு படத்தை முடித்தார் கோதார்த்.. இடைக்காலத்தில் த்ரூபோவுக்கு திருமணம் ஆகியிருந்தது . அவரது மனைவியின் தந்தை சற்று வசதிமிக்கவராக இருந்த காரணத்தால் சொந்தமாக கம்பெனி துவக்கசெய்து அவரது பணத்தின் மூலம த்ரூபோ குறும்படமெடுக்க துவங்கினார். முதல் திரைப்படம் Les Mistons . தொடர்ந்து இரண்டாவதாக அப்போது பிரான்சில் பெய்த அடைமழையை வைத்து மற்றுமொரு குறும்படம் எடுக்க துவங்கினார். ஒருகட்டத்தில் த்ரூபோவுக்கு அப்படத்தை எடுப்பது சிரமமாக இருக்க கோதார்த்திடம் காமிராவை ஒப்படைத்தார். அப்படத்தை தொடர்ந்து இயக்கிய கோதார்த் த்ரூபோவின் திரைக்கதையை பின் தொடராமல் தன்னிச்சையான படமாக எடுத்து படத்தை முடித்தார் . நியூவேவ் எனப்படும் புதிய அலையின் முதல் படமாக வரலாற்று ஆய்வாளர்கள் இப்படத்தையே குறிப்பிடுகின்றனர்.

இச்சூழலில் அரசாங்கத்தின் சில புதிய சட்டங்களின் மூலமாக வும் புதிய தொழில் நுட்பங்களின் மூலமாக சினிமா எடுக்கும் செலவு குறைய்ய துவங்க ஆந்த்ரே பஸின் தலைமையிலான அந்த புதிய இளைஞர் படைக்கு கதவுகளை திறந்து வழிவிட்டார் போலானது. அதுவரை பிரான்சுக்குள் மட்டுமே வீசிய புதிய அலை கரைகள் உடைத்து உலக நாடுகளெங்கும் வீச துவங்கிய காலமும் வந்தது.

புதிய அலை >
அதுவரையிலான விதிகளை உடைத்தெழுந்த புதிய அலை சினிமாக்களின் காலத்தை துவக்கியவர் ரோஜர் வாதிம் .. 28 வயது இளைஞர் அவரது And God Created Woman) (1956) என்ற படம்தான் அந்த பெருமைக்குரிய திரைப்படம் . தொடர்ந்து மெல்வில்,லூயி மால் , சாப்ரோல் போன்றவர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை பிரான்சில் மட்டுமே அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டிருந்தன. இது குறித்து 1957ல் பிரான்சில் வெளியான நாளிதழ் ஒன்றில் புதிய இளைஞர்கலின் சினிமா பற்றி ஒருகட்டுரை பிரசுரமானது. The New Wave: Portrait of Today’s Youth எனும் தலைப்பிட்ட கட்டுரையில்தான் முதன் முறையாக நியூ வேவ் புதிய அலை எனும் பதம் பயன்படுத்தப்பட்டது . ஆனாலும் கட்டுரை புதிய இளைஞர்கள் பெரிதாக எதுவும் சாத்தித்து விடவில்லை என்றே எழுதியிருந்தது . இந்நிலையில்தான் 1959ல் பிராங்கோய்ஸ் த்ரூபோவின் (The 400 Blows) (1959).எனும் படம் வெளியானது . பெற்றோர்களின் பொறுப்பின்மையால் சிறுவர்கள் படும் அவதியும் அத்னால திசை மாறும் அவர்களது வாழ்வையும் பற்ரிய இப்படம் காட்சி அமைப்பிலும் படத்தொகுப்பிலும் அதுவரையில்லாத புதிய் அணுகுமுறை கண்டு பார்வையாளர்கலும் விமர்சகர்களும் வியந்தனர். அவ்வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்த்னர் . சிலர் இதுதான் சினிமா என உற்சாகத்தில் இரைந்த்னர் . இது உண்மையை பேசுகிறது.இதுவரை பார்க்காத புது அனுபவத்தை உண்டாக்குகிறது என பரவசமடைந்தனர் . விழாவுக்கு வந்திருந்த் வெளிநாட்டு இயக்குனர்கள் மத்தியில் ஒரே இரவில் த்ரூபொ நாயகனாக மாறி உலக சினிமாவின் புதிய நட்சத்திரமாக பிரகாசித்தார் . இத்த்னைக்கும் அவர் எழுதிய ஒரு விமர்சனத்திற்காக முந்தைய வருட விழாவுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது . அதே கேனஸ் திரைப்படவிழா இந்த வருடம் அவரை சிறந்த இயக்குனராக அறிவித்து பெருமை தேடிக்கொண்டது .. உலகசினிமா அரங்குகளில் எழுதியது பொல் படமெடுத்து நிரூபித்துகாட்டிய இளஞனை பற்றிய தகவல் பரபரப்பாக பேசப்பட்டது .

படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்போது த்ரூபோவிடம் அடுத்த படத்திற்காக அணுக த்ரூபோ இம்முறை தான் இயக்குவதை விட த்ன் நண்பன் இயக்குவது வரலாற்றிற்கு பெருமை சேர்க்கும் செயல் என்றார்

த்ரூபோ சொன்ன இயக்குனர் ழான் லூக் கோதார்த்
அவர் எடுத்த படம் (Breathless) (1960). அந்தபடமும் அடுத்த வருட பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளிக்க்கரடி விருதை வாங்க நியூவேவ் என பிரெஞ்சு நியூவேவ் என விமர்சகர்கள் ஒருமனதாக அழைக்க துவக்கினர் .
கோதார்த்தின் படங்கள் அனைத்து சம்பிரதாயங்களையும் உடைத்தது. இத்த்னைக்கும் அது வழக்கமான ஹாலிவுட் பி மூவி சஸ்பென்ஸ் வகைப்ப்டம்தான் ..ஆனாலும் காமிரா உயிரோட்ட்மாக அசைந்தது . படத்தொகுப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. சினிமா என்பது வெறும் கதை சொல்வது மட்டுமல்ல அதை தாண்டியது என்பதை அனைவரும் ஏற்க துவங்கினர்
(தொடரும் )

September 5, 2010

எனது வணக்கத்துக்குரிய ஆசான்



இன்று ஆசிரியர்தினம். சின்ன வயசில் பள்ளிக்கூட காலங்களில் இது மற்றுமொரு விடுமுறை நாள் அவ்வளவே ஆனால் இன்று இந்ததினத்தில் என்னை வழிநடத்திய என் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்த போது இந்த நாளின் விசேஷத்தை உணர முடிந்தது.
.


பில்லா இந்த பேரை கேட்டதுமே பலருக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஞாபகம் வரும். ஆனால் எனக்கோ என் பள்ளிக்கூட வாத்தியார் பால்ராஜ் மாஸ்டர்தான் நினைவுக்குவருவார். காரணம் நான் சந்தித்த முதல் இண்டலெக்சுவல் அவர்தான். திருக்கழுக்குன்றத்தில் புன்னமை தியாகராச .வன்னியர்சங்க நடுநிலைப்பள்ளி ..இதுதான் என் பால்யங்களை தொகுத்த இடம். வீட்டிலிருந்து பள்ளிக்கு இரண்டுகி.மீ நடக்க வேண்டும் அந்த நடை எங்களுக்கு போராடிக்காது காரணம் வழியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்கள்

எனது பள்ளிகாலங்களில் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிய திரைப்படம் பில்லா. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த அப்படத்தின் விளம்பரம் . தினத்தந்தியில் அப்போதெல்லாம் முழு பக்கத்துக்கு படத்தின் விளம்பரம் வரும். பள்ளி செல்லும் வழியில் ஒரூ முடிதிருத்தும் கடை. அக்கடையில் பள்ளிவிட்டு வரும் வழியில் தினமும் குறைந்தது அரை மணிநேரமாவது அந்த நைந்த பக்கங்களை புரட்டிக்கொண்டிருப்போம். கன்னித்தீவு மற்றும் கிரிக்கட் செய்திகளும் எங்கள் ஆர்வத்துக்கு உபரி காரணம் என்றாலும் பக்கம் பக்கமாக வரும் சினிமா விளம்பரங்கள்தான் எங்களது கனவுகளை தீர்மானித்தன. ஒரு முழு பக்க சினிமா விளம்பரத்தை பார்க்கிற போது உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி கரைபுரளும் இதற்கெல்லாம் காரணமே இல்லை. அதிலும் ரஜினி படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படித்தான் பில்லா திரைப்படம் எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. நானும் படம் எப்படா நம்ம ஊருக்கு வரும் எப்ப அதை பார்க்க போகிறோம் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்துகிடந்தேன். இச்சமயத்தில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் பால்ராஜ் அந்த படத்தை யாரும் பார்கக கூடாது என பள்ளியில் கட்டளை இட்டார். காரணம் அப்போது பில்லா ரங்கா என்ற இரு கொலைகாரார்கள் ஒரு சிறுவனை கடத்தி கொடூரமாக கொன்றிருந்தனர். இது அக்காலத்தில் பெரும் பரபரப்பான சேதியாக இருந்தது. வியாபராத்துக்காக சினிமா தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இந்த பெயரை பயன் படுத்துகிறார்கள் . அந்த குழந்தையின் தாய்தந்தை எவ்வளவு வேத்னைப்படுவார்கள். அதனால் இந்த படத்தை யாரும் பார்க்க கூடாது என வேண்டுக்ள் விடுத்தார் அன்றைய சிறுவயது மூளைக்கு அது எட்டவில்லை. ஆனால் அவர் சொன்னது மட்டும் ஞாபகத்தில் ஒட்டிக்கொண்டது. காரணம் அது பில்லா பற்றியதகவலாக இருந்ததாலோ என்னவோ...

இப்போது இரண்டாவதுமுறையாக பில்லா வந்தபோது அப் பெயருக்கு இருந்த மதிப்பும் மக்களின் அங்கீகாரமும் அப்பெயர்காரணமே தெரியாத தலைமுறையினாரிடம் காணப்பட்ட கொண்டாட்டத்தையும் பார்த்தவுடன் பால்ராஜ் சார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பெயர் ப்ரச்னையை இன்று வரை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.



என்னை முதன் முதலாக நடிகனாக மேடையேற்றியதும் அந்த பாலராஜ் ஆசிரியர்தான். என்னை மட்டுமல்ல என்னை போல திறமையான மாண்வர்களை பார்த்தும் அவராகவே தீவிரமாய் த்ன் ஈடுபாட்டை காண்பித்து அவர்களுக்கான வழி சமைத்து தருவார் .அதேபோல பள்ளி விவகாரம்தாண்டி எங்கு கிரிக்கட் மேட்சுகள் நடந்தாலும் ஓரமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்து வேடிக்கை பார்ப்பார். யாராவது போங்கு ஆட்டம் ஆடினால் உடனே அம்பயராக அங்கேயே இருந்தபடி விரலால் தீர்ப்பை சொலவார். பால்ராஜ் மாஸ்டருக்குமேல் முறையீடுகள் இல்லை.

வகுப்பில் நான் வழக்கமாக மூன்றாம் ரேங்க். முதல் ரேங்கில் கண்ணன். ( அவன் தங்கை சங்கரி பேரழகி. அந்த வயதிலேயே அவளுக்கு நான் கலர் மிட்டாய் வாங்கி தருவது போல கனவுகள் எல்லாம் வந்ததுண்டு ) எனும் பிராமண பையன் இரண்டாம் ரேங்கில் குமரகுருபரன். கண்ணன் படிப்பில்தான் முதல் ரேங்கே தவிர குணத்தில் அவன் கடைசி ரேங்க். யாரும் அவனை தொட்டுவிடாமல் பார்த்துக்கொள்வான். கொஞ்சம் ஏழையான அழுக்கு உடை பசங்களை கண்டால் அருவருப்பான பூச்சியை கண்டதுபோல முகத்தை சுளிப்பான். இதனாலேயே எனக்கு அவனை பிடிக்காது . இருவருமே பேசிக்கொள்ளமாட்டோம். இதர வகுப்பு நண்பர்கள் உணவு இடைவேளைகளில் இருவரையும் பிடித்து தள்ளி பேச வைக்க கடும் முயற்சி செய்தனர் .ஆனாலும் அவனை எனக்கு கடைசி வரை பிடிக்கவில்லை ... அதேசமயம் பால்ராஜ் மாஸ்டர் கண்ணனிடம் மட்டும் சற்று கூடுதலாக அக்கறைகாட்டுவார். இத்தனைக்கும் அவர் கிறித்துவர்.ஆனாலும் கண்ணன் முதல்மார்க் வாங்குகிற காரணத்தால் அவனிடம் கூடுதல் அக்கறை. சட்டென எதையும் புரிந்துகொள்கிற அவனது அறிவுத்திறனுக்கு இது போன்ற போட்டிகள் சரியான வடிகால என நினைத்தார். பேச்சு போட்டி கட்டுரை போட்டி என்றால் அவனுக்குதான் எழுதிகொடுப்பார். அவனும் அதை பேசி முதல் பரிசு வாங்கிவருவான். ஒருநாள் ஒரு போட்டிக்கு மாஸ்டர் எழுதி கொடுத்தும் அவன் போட்டியில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருந்துவிட்டான் மறுநாள் அவன் பள்ளி வந்ததும் பால்ராஜ் மாஸ்டர் கோபத்தில் அவனை கடுமையாக திட்டிதீர்த்தார். இனி உனக்காக இந்த பால்ராஜ் எதற்கும் எழுதிதரமாட்டான் என கோபத்துடன் கூறினார்.

ஆனாலும் அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிகள் சார்பாக பேச்சு போட்டிக்கு அழைப்பு வந்த போது பால்ராஜ் மாஸ்டர் அவனையே அழைத்து போட்டிக்கு எழுதிக்கொடுத்து அனுப்பிவைத்தார். அவர் அன்று அந்த காரியத்தை செய்த போது எங்களுக்குள் கடும் புகைச்சல் இருந்தது. நான் கூட பால்ராஜ் மாஸ்ட்ரை வெறுத்தேன்.ஆனால் அவர் ஒரு ஆசிரியராக எந்த பாரபட்சமும் இலாமல். துவேஷம் இல்லாமல் நடந்து கொண்ட விதம் இன்றும் அவர் பிம்பம் என் மனதில் நிழலாட காரணமாக இருக்கிறது. அவர் குறித்து கட்டுரை எழுதவும் அதுவே காரணமாக இருக்கிறது.

பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்

காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம்                                               - அஜயன் பாலா பாப்லோ நெரூடா ( Pablo Neruda, 1904–1...