May 15, 2016

புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - - _ அசதா

 புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - அசதா

    
    இலக்கியத்துக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த கொடையான சிறுகதை, இலக்கிய வடிவங்களுள் மிகுந்த சவால்மிக்க வடிவமாக இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நீடிக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்க மாப்பஸானையும், செக்காவையும், புதுமைப்பித்தனையும் நமக்குத் தந்தவை சிறுகதைகள் என்றுகூடச் சொல்லலாம். அடக்கம், வடிவம், மொழி இவற்றில் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்தபடி வந்திருக்கும் சிறுகதை மேற்சொன்னவற்றில் எண்ணற்ற சாத்தியப்பாடுகளையும் கண்டிருக்கிறது. சிறுகதை வாசகத் துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு உகந்ததொரு அளவில் (பக்க எண்ணிக்கை) இருந்தது அதன் பிரபல்யத்துக்கு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு சாத்தியங்களை, புதுமைகளை நிகழ்த்தவும் ஏதுவாயிருந்திருக்க வேண்டும். ஆனாலும் சுந்தர ராமசாமியின் உவமை ஒன்றைக் கடன்பெற்றுச் சொல்வதாயிருந்தால் சிறுகதை எழுதுவது திமிங்கிலத்தை நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கச் செய்வது போல. இதனாலேயே சிறுகதை சவாலான விஷயமாக இருக்கிறது.

     எனினும் மனித உணர்வுச் சிக்கல்களை, அரிதான அகதரிசனங்களை, மாபெரும் ஆனந்தமாகவும் துக்கமாகவும் அபத்தமாகவும் நிகழும் மானுட வாழ்வினை- பல நேரம் அவ்வாழ்வின் ஒரு விள்ளலை அல்லது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை- தமக்குள் நிகழ்த்தி பெரும் வெற்றி கண்டவை சிறுகதைகள். தமிழ்ச் சிறுகதை தனக்கான பாரம்பரியத்தைக் கொண்டிருந்தபோதும் மேலைச் சிறுகதைகளிலிருந்தும் அது கடன் பெற்றிருக்கிறது, அல்லது உலகின் ஏனைய மொழி இலக்கியங்களில் போல மேலைச் சிறுகதைப் போக்குகளை அவதானித்து  தனக்கான சிறுகதையை அது உருவாக்கிக் கொண்டது என்றும் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதையின் நெடிய வரலாற்றைப் பேசாமல் தொண்ணூறுகளின் தமிழ்ச் சிறுகதைப் போக்குகளிலிருந்து தொடங்கலாம்.

          தொண்ணூறுகளில் யதார்த்த சிறுகதை வழக்கொழிந்துவிட்டதென்ற களிகூடிய ஒரு ரகசியப் பெருமிதம் பல தீவிர தமிழ்ச் சிறுபத்திரிக்கையாளர்களிடையே சுற்றி வந்தது. புதிய நூற்றாண்டு தொடங்கிய சில காலத்தில் யதார்த்த சிறுகதையைப் புதைத்த இடத்தில் புல் முளைத்துவிடும் என்றும் நம்பப்பட்டது. ‘யதார்த்த சிறுகதை மரணித்துவிட்டது என்ற ஒரு பிரகடனம் மட்டுமே குறையாயிருந்தது. அதேநேரம் எண்பதுகளும் தொண்னூறுகளும் தமிழ்ச்சிறுகதையில் மிகத் தீவிரமான ஆண்டுகளைக் கொண்டிருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது. மேலைச் சிறுகதைகளிலிருந்து விலகி லத்தீனமெரிக்க இலக்கியங்களின் பக்கம் நம் கவனம் குவிந்திருந்த காலகட்டம் அது. அப்போதுதான் தமிழில் மிகு புனைவுக் கதைகள் தீவிரமாக எழுதப்பட்டன. அவருக்கும் முன்பும் பிறகுமாக பல்வேறு ஆளுமைகள் இந்த மிகுபுனைவு காலகட்டத்தில் இயங்கினாலும் எஸ். ராமகிருஷ்ணனையும் அவரது ‘தாவரங்களின் உரையாடல் கதைத்தொகுப்பையும் இக்காலகட்டத்தின் துலக்கமான ஒரு அடையாளமாகக் காண விரும்புகிறேன். மிகு புனைவுக் கதைகளின் கதவுகளைத் திறந்து விட்டதில் இக்கதைத் தொகுப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

            பிறகு வந்த வருடங்களில் யதார்த்த சிறுகதையின் பிடரியைப் பற்றி அதன்மேலேறி நின்ற மிகுபுனைவுக் கதை மெல்லக் கீழிறங்கி ஒதுங்கி நின்றது. ‘கிளர்ச்சியுற்ற சிறுவர்கள் என ஜெயமோகன் லத்தீனமெரிக்க புனைகதையாளர்களைக் குறிப்பிட்டது நிஜம்தானோவென்ற ஐயம் ஏற்பட்டது. கு.ப.ரா, புதுமைப் பித்தன், வண்ணநிலவன் கதைகளெல்லாம் ஏன் வசீகரம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கின்றன என்ற கேள்வி வந்தது. மிகுபுனைவுக் கதைகள் பரீட்சார்த்தமானவை மட்டுமே என்பதான பிம்பம்  வலுவூன்றி இருந்தாலும்  இந்தக் காலகட்டத்தில் மிகுபுனைவுக் கதைகள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் ஒருவிதமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மிகுபுனைவு சிறுகதைகள் பரீட்சார்த்த எல்லையைத் தாண்டியவை என வாசகத் தளத்தில் நிரூபிக்க இன்னமும்  பிரயத்தனம் நடந்தபடிதான் இருக்கிறது.  மிகுபுனைவுக் கதைகள் மீதான இந்த அவநம்பிக்கையை மிகுபுனைவு எழுதுபவர்கள்தான் போக்க முடியும்.  

         பொதுவாவே சமகாலத் தமிழ்ச் சிறுகதை வெளி சோபையற்றுப் போய் புனைவெழுத்து என்பது நாவல்கள் மட்டுமே என்றாகியிருக்கிறது. இரண்டு சிறுகதைகள் எழுதிய எழுத்தாளரையும் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது என பதிப்பாளர்கள் கேட்கையில் சிறுகதைக்கான சந்தை மதிப்பை நாம் அறிய முடிகிறது. போனால் போகிறதென்று இடையிடையே சிறுகதைகளும் எழுதும் நாவலாசிரியர்களாலும் சந்தைமதிப்பு போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்காத சிறுகதை எழுத்தாளர்களாலும்  சிறுகதைகள் வழக்கற்றுப் போகாமல் இருந்து வருகின்றன. மிகுபுனைவைப் பொருத்தவரை இன்று சிறுகதைகள் குறைவாகவே எழுதும் தீவிர புனைவெழுத்தாளரான கோணங்கி, மிகுபுனைவு நுட்பங்களை கைக்கொண்டு கதைகளைப் படைக்கும் சுரேஷ்குமார இந்திரஜித், மாய யதார்த்த கூறுகளைத் திறம்படத் தன் கதைகளில் கையாளும் பா.வெங்கடேசன் எனச் சிலரே அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.

     தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் மிகுபுனைவுக் கதைகள் பெற்றிருக்கும் இடத்தினை மனதிற்கொண்டு அதிகமும் மிகுபுனைவு வகையைச் சார்ந்த கதைகளை உடைய ‘அஜயன்பாலா கதைகள் சிறுகதைத் தொகுப்பை நாம் அணுகலாம். பத்து  கதைகள் கொண்ட இத்தொகுப்பில் சில கதைகள் மட்டுமே யதார்த்த வகையைச் சேர்ந்தவை. மீதமிருக்கும் கதைகளில் மிகுபுனைவு தரும் கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் அஜயன்பாலா அனேக கதைகளைத் தம்மளவில் வடிவநிறைவு கொண்ட, தேர்ச்சிமிக்க  மொழியுடன்கூடிய, வாசிப்பு சுவாரஸ்யம் குன்றாத கதைகளாகத் தந்துள்ளார் என்பதை இத்தொகுப்பின் பலமாகக் கூறவேண்டும். கதை வடிவமும் கூறுமுறையும் இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. வாழ்வின் நெருக்கடிகள் உந்தித் தள்ள விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இளைஞனொருவன், சுயபச்சாதாபம் கொண்டு தனிமையில் உழல்பவன், காதலியிடம் காதலைச் சொல்ல இயலாதவன் என்பதான ஒரு பாத்திரம் இக்கதைகளில் தூலமாகத் தோன்றுகிறது. இந்த எதிர்மறைகள் சூழ வாழும்போதும் இயற்கையோடு தன்னை அடையாளம் காண்பவனாகவும், கடந்துபோகையில் வசீகரிக்கும் ஒரு யுவதியின் முகத்தை ரசிக்கத் தயங்காதவனாகவும் அவன் இருக்கிறான்.

     தன் காதலியின் பிறந்தநாளுக்காக நண்பன் வாங்கிய கைக்குட்டை ஓர் இரவு இவனிடம் தங்கிவிடுகிறது, மறுநாள் பூங்காவில் சூழ்நிலை கருதி நண்பனின் காதலிக்கு இவன் காதலனாக சற்று நேரம் நடிக்கிறான். இறுதியில் நண்பன் வந்துவிட, இவனை விட்டு அவர்கள் அந்த தினத்தைக் கொண்டாடக் கிளம்புகிறார்கள். இவன் தன் மழைக்கோட்டோடு அங்கு நிற்கிறான். அது மழைபொழியும் வேளையாக இருந்தும் அந்த மூவரில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்திருக்கிறான். சொல்லப்போனால் அன்று இந்த உலகில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்தவனாக இருக்கிறான். ‘அந்த நிமிடமும் என் உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாமல் மழைக் கோட்டிற்குள் நின்றுகொண்டிருந்தேன் எனும்போது மழைக்கோட்டு மனதின் முக்காடாக மாறுகிறது, அவனை விடவும் மழைக்கோட்டு அங்கு முக்கியமானதாகிறது. கதையின் இறுதியில் அவன் கொள்ளும் துக்கம் அல்லது ஏமாற்றத்தை அது பரிபூரணமாக்குகிறது. ஒருவன் வாங்கும் மழைக்கோட்டு உலகியல் பயன்பாட்டில் மழையினூடாக அவனது தடையற்ற இயக்கத்தை சாத்தியமாக்குவது, ஆனால் சூக்குமமான ஒரு அகநோக்கில் அது மழை என்ற அற்புதத்தையும் மனிதனையும் பிரித்து வைப்பது. இந்த அடிப்படை புரியும்போது ‘மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’ கதை இன்னொரு பரிமாணத்தை அடைகிறது.

    ‘முருகேசன்  இத்தொகுப்பின் முக்கியமான கதை. சமகால சமூக-அரசியல் இயங்கு நிலைகளில் நுட்பமான உபாயங்கள் மற்றும் தந்திரங்கள்வழி வெகுமக்கள் மனதில் கருத்துக்களை கட்டமைத்து அவர்தம் சிந்தனையை புறவயமாகக் கட்டுப்படுத்தும் நுண் அரசியலை பகடியுடன் விவரிக்கிறது கதை. உதாரணமாக ஊரில் பித்தளைப் பாத்திரம் காணாமல் போனால் அது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுவது.  பெரும் மூடர் கூட்டத்தில் நுண்ணுர்வும், சுய சிந்தனையும் கொண்டவன் தனித்து ஒதுக்கப்படும் அவலமும் இத்தகு சமூக-அரசியல் கட்டமைப்பில் எதிர்ப்பு என்பதுகூட முறைப்படுத்தப்பட்ட ஒரு ஏமாற்றுத் தந்திரமாக இருப்பதும் இக்கதையில் பதிவு செய்யப்படுகிறது. யுவான் ருல்ஃபோவின் அனாக்ளீட்டோ மோரோனஸ் கதையை வாசித்தவர்கள்  ‘முருகேசன் கதையை இன்னும் சிறப்பாக உள்வாங்கமுடியும்.

     இத்தொகுப்பில் எனக்கு மிகவும் உவப்பான கதையாக ‘சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ...கதையைச் சொல்வேன். சின்ன முதலாளி, உயரமான சார் ஒருவர், ஒல்லி வாத்தியார் என வழக்கமாக நாம் காணும் பொதுக் குறியீட்டுப் பெயர்களைக் கொண்டவர்கள் இதில் வருகிறார்கள். இப்பெயர்கள் இந்தக் கதையை குறிப்பிட்ட விசேஷங்கள் ஏதுமற்ற கதையாகக் காட்டுகின்றன ஆனால் உண்மையில் அது அப்படியல்ல ஒரு கார்ட்டூன் கதை போல முயல்வேட்டைக்கு வரும் சின்ன முதலாளியுடன் தொடங்கும் இக்கதை பச்சை நிலவைப் பள்ளிக்கூடப் பையில் வைத்து சிறுவன் பள்ளிக்குச் செல்வதாகத் தொடர்கிறது. பிரகாசமாகத் தெரியும் பந்தைப் பார்த்து  அது நிலாவைத் தொட்டுவிடாதே எனச் சின்ன முதலாளி கேட்குமிடம் கவனிக்கத் தக்கது. இறுதியில் சிறுவன் ஏமாற்றத்துடன் நிற்க நிலவு வானுக்கே சென்றுவிடுகிறது. முள்ளங்கித் தோட்டத்துக்குக் கடல் வந்து போயிருந்தது போன்ற வரிகளைக் கொண்டு பெரும் புனைவாக விரியும் இக்கதையில்பசிக்குது என வயிற்றைத் தடவிக் காண்பிக்கும் சிறுமி வரும் வரி வாசகனை விழுத்தாட்டி விடுவது. அர்த்தங்கள் மற்றும் குறியீடுகளுக்கப்பால்  நிற்கும் இக்கதை வியப்பையும் மனவிகசிப்பையும் ஒருங்கே தோற்றுவிக்கும் பாங்கில் ஒரு நவீன தேவதைக் கதையாகவும் இருக்கிறது.

     தமிழ் நவீன இலக்கியவாதிகள் கூட்டமாக சந்தித்து அளவளாவும் பொழுதுகள் எப்படிப்பட்டவை என அறிய விரும்பும் ஒரு வெளியாளுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களை வழங்குவது கடவுளர் சபை. கடவுளர் சபை என்ற தலைப்பின் மரியாதை நிஜமானதா அல்லது பகடியின்பாற்பட்டதா என்பது இக்கதையை வாசிக்கும் எழுத்தாளர்களின் சுயஅனுபவம் சார்ந்த ஊகத்துக்கு விடப்படுகிறது.

      ரயிலின் முகமான எஞ்சினைக்கூடப் பார்க்கமுடியாத கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டியில் கார்டாகப் பணிபுரியும் ஒருவன், தனிமையும் கழிவிரக்கமும் கொண்டவனாக துருவேறிய இரும்பாலான அந்தக் கடைசிப் பெட்டியின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறான். பச்சை போர்த்திய வயல்கள் ஜன்னல் வழியே தெரியும்போது மனம் விகசிப்பவன். ஆடுமேய்க்கும் பெண்ணிடம் அவன் கொடுக்க முடியாத அந்த ரொட்டித் துண்டு தனிமையாலும் இறுக்கத்தாலும் அவன் ஆழ்மனதில் இறுகிக் கிடக்கும் விண்டு தரமுடியாத அன்புதான் என நாம் அறிகிறோம். கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி என்பது இதுவரையான தமிழ்ச் சிறுகதைகளில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளில் அலாதியான ஒரு குறியீடு என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
       தார்கோவெஸ்கியின்சேக்ரிஃபைஸ்படத்தின் நாயகன் போரின் அழிவிலிருந்து இந்த உலகைக் காப்பாற்றிவிட்டால் என் வீட்டை எரித்துவிடுகிறேன் என பிரதிக்ஞை கொள்வது போல ‘இரண்டாம் வெளிகதையில் அபத்தமான இந்த உலகியல் சூழலில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு அபத்தமான செயலைச் செய்ய வேண்டுமென முடிவெடுக்கிறார்கள் நாயகனும் அவனது நண்பர் ஒருவரும்.ஆனால் நாயகனின் இந்த முடிவுக்குப் பின்னால் இருப்பது  ஒரு சுயநலமே என்பதை நாம் அறிகிறோம். ஒரு பழம் நினைவை மீட்டெடுக்க முனையும் அவனது பயணம் வெறுமையை எதிர்கொள்வதில் முடிகிறது. இக்கதையில் பின்னோக்கிச் சொல்லப்படும் கதை ஈர்ப்பற்ற தன்மையாலும் முடிவின் செயற்கைத்தன்மையாலும் வசீகரம் குன்றிவிடுகிறது. வழக்கமாக ஈயடிக்கும் மியூசிக் அகாடமியில் செவ்வியல் இசைகேட்க கைகளில் பாப்கார்னும் ஐஸ்கிரீமுமாக முண்டியடிக்கும் கூட்டத்தைப் பாரத்துவிட்டு நண்பர்கள் மேற்சொன்ன அபத்த செயலுக்கான முடிவையெடுக்கும் இடம் ரசிப்புக்குரியது. 

        மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’கதையில் போல ஈடேறாக் காதல்களே தொகுப்பின் பிற காதல் கதைகளிலும் காணக்கிடைக்கின்றன. ‘மூன்றாவது அறை நண்பனின் காதல் கதையில் காதலில் நிராகரிக்கப்பட்டவன் தன் உயிரைவிட்ட பின்னரே தான் விரும்பிய பெண் காதலிக்கத் துவங்கியிருப்பதை அறிகிறான். ‘ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம் கதையிலும் சூசையை அதுவரை உதாசீனம் செய்துவந்த ரோஸ்லின் அவன் தற்கொலை செய்துகொண்டபின்பே அவன்மீதான காதலால் துக்கித்து அழுகிறாள். ‘மலை வீட்டின் பாதை, கதையில் பெண்களால் கதைநாயகனுக்குள் காதல் போன்ற ஒன்று உருவாகி அது ருசுப்படும் முன்பே தீர்மானமாக அழிக்கவும்படுகிறது. ஆகவே காதலின் பாலையிலேயே தன் கதை மாந்தர்களை திரிய வைக்கிறார் ஆசிரியர்.

   தாண்டவராயன்கதையிலும் இருள் ஒரு குறியீட்டுப் பின்புலமாக இருக்கிறது. தாண்டவராயன் தெருவில் மட்டும் சூரியன் உதிக்காத நிகழ்வு அத்தெருவாசிகளை பீதிக்குள்ளாக்குகிறது. இந்த இருளும் அறியாமையாகத்தான் இருக்கிறது. இக்கதையின் நிரந்தர இருள் என்ற அதீதம் தரும் புனைவு சாத்தியங்கள் சரியாக கைக்கொள்ளப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்படிக்கு கதை செயற்கையான ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது. இருளைப் போக்கும் மின்சாரத்தை விசையை இயக்கி அளிப்பவனான பண்டாரத்திடம் சட்டென்று அதிகாரம் வந்துவிடுகிறது. அவனைப் பயந்து மரியாதையுடன் அனைவரும் தள்ளி நிற்க ஒருவன் மட்டும் அருகில் செல்கிறான், அது பண்டாரத்தின் பொருத்தாமல் விட்ட சட்டைப் பித்தான்களைப் பொருத்திவிடத்தான் எனும்போது தேவைகளை முன்வைத்த மனிதரின் நைச்சியமான நடத்தை குறித்த காட்சி அங்கு கிடைக்கிறது.

      அஜயன்பாலாவின் கதைகளில் வரும் பெண்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மூன்றாவது அறை நண்பனின் காதலியாக வரும் பெண் ‘என் முன் மண்டியிட்ட தூய ஆன்மாவை அதன் கம்பீரமிழந்த தன்மை காரணமாகவே மறுதலிக்க வேண்டியதாகிப்போனதுஎனும்போது தூய ஆன்மாவை விடவும் கம்பீரத்தை விரும்புகிற பெண்ணாக இருக்கிறாள்.  தனது அக்காவின் கணவனுடன் கனவில் சல்லாபிப்பது பற்றிய குற்றவுணர்வற்றவளாக இருக்கும் ரோஸலின் அதைக் கனவளவிலேயே நிறுத்திக் கொண்டவளாய் கனவில் அந்த இடத்தை நிரப்பக்கூடிய வேறொருவனைத் தேடவும் செய்கிறாள். இவ்வாறு இருவருமே தமது தெரிவுகள் பற்றிய தெளிவு கொண்ட நவீன யுகத்துப் பெண்களாக இருக்கிறார்கள்

       தேர்ந்த கதைசொல்லிக்குரிய லாவகமான மொழியும் காட்சிகளை நுட்பத்துடன் விவரிக்கும் பாங்கும் அஜயன்பாலாவை வசீகரமானதொரு கதை சொல்லியாக்கியிருக்கின்றன. புனைவு தரும் சவால்களை அவர் அதற்கான தளத்திலிருந்து எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதற்கு இக் கதைத்தொகுதி சான்று. புனைவின் சுவாரஸ்யம் மட்டும் இலக்காக அன்றி மானுட வாழ்வைப் பேசும் பிரதிகளாகவும் தன் கதைகளை படைக்க முயன்றிருக்கிறார். கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் அகத்தோற்றத்தை, அவர்தம் உளச்சார்புகளை, சம்சயங்களை மொழியில் லாவகமாக வெளிப்படுத்துகிறார். பல கதைகள் குறியீடுகளாகவும் குறியீடுகளை தமக்குள் கொண்டனவாகவும் நிகழ்கின்றன. சில கதைகள் போகிற போக்கில் மாய யதார்த்தக் கூறுகளைத் தொட்டுச் செல்கின்றன.

     சம்பவங்களை புறவயமாகச் சித்தரித்து நின்றுவிடும் கதைகளிலும்கூட நுட்பமான அங்கதத்துடன் சமூக விமர்சனம் ஒளிந்திருப்பதைக் காண முடிகிறது. நுண்ணிய காட்சி விவரணைகள் கதைகளுக்கு வலுசேர்ப்பனவாக இருக்கின்றன. அதீதங்களைப் பேசும் கதைகளில் இத்தகு நுட்ப அவதானிப்புகள் அக்கதைக்குள்ளான நம்பகத்தன்மையை சாத்தியமாக்குகின்றன.

‘        ஜீன்ஸ் அணிந்த பறவைகள் கதையில் வெற்றிலை போட்டு மென்றபடியிருக்கும் ஒரு பாலியல் தொழிலாளியிடம் குடும்பத்துப் பெண் ஒருவர் தன் குறைகளைக் கூறி அழும் இடத்தினை, பாலியில் தொழிலாளியான மக்தலேனாவை கல்லடியிலிருந்து இயேசு காப்பாற்றும் சம்பவத்தின் மாற்று-எதிர் நிகழ்வாக ஒருவர் பார்க்க முடியும். தம் போக்கிலான இதுபோன்ற அற்புதங்கள் அஜயன்பாலாவின் ப் பத்துக் கதைகளுக்குள்ளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. மொத்தமாகக் இக்கதைகளை வாசிப்பது அஜயன்பாலாவின் புனைவுலகின் பிரத்யேக வாசனையும் ருசியும் நமக்குத் தரும் அனுபவமும் ஒரு மொழியில் விரியும் அதிபுனைவின் அற்புதத்துக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடியது.

      1. முத்துக்கள் பத்து’ என்ற தொகுப்பில் இந்தப் பத்துக்  கதைகளை வெளியிடும் அம்ருதா பதிப்பகத்துக்கும்  அஜயன் பாலாவுக்கும் வாழ்த்துக்கள்.

-அசதா. 

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...