நினைவில்
தொலைந்த ஞாபகமொன்று பறவையாகி வானத்தினூடே சிறகசைக்காமல் தாழ்ந்து வந்து தெருக்கோடி
மரத்திலமர்ந்து மெல்ல தரையிறங்கி தத்தித் தத்திச் சட்டென ஒரு பெண்ணாக மாறி ஜீன்ஸ் பேண்ட்
ஷர்ட் சகிதம், தன்னை நோக்கி நடந்துவருவதாக அவளை அந்தக் கூட்டத்தினூடே நடைபாதையில்
கண்டமாத்திரம் அறிந்துணர்ந்தான்.
ஞாபகங்களை
சிறகிடுக்களில் ஒளித்து வைத்தவாறு வெளியினூடாக காலங்களை கடந்துவரும் தன்மை
பறவைகளுக்கு மட்டுமே உண்டு என் எண்ணம் கொண்டிருப்பவன்.
பிரபஞ்சத்தின்
தொலைந்துபோன அனைத்து ஞாபங்களும் ஒரு பறவையின் அசைவற்றுக் கிடக்கும் அதன்
கருவிழியில் உறைந்து கிடப்பதாகவும் தேவை கிளைக்கிறபோது தனக்கிஷ்டப்பட்ட காலங்களில்
இஷ்டப்பட்ட ரூபம் தரித்து மனிதர்களை சஞ்சலமுறச் செய்கின்றன. என்பதாகவும்
தனக்குத்தானே கற்பனை செய்து கொள்வான். இல்லாவிடடால் ஒரு அதிசயம் போல திடுமென அவளை
அங்கே காணநேர்ந்த நிகழ்வு சாத்தியமற்றதென்பதே அவன் தீர்மானம்.
ஒருவேளை தான்
கனவில் கண்டபடி (இரவுகளில்) தன் பூர்த்தியடையாத கவிதைகளை பொறுக்கி எடுத்துச்
செல்லும் பெண் இவளாக இருப்பாளோ; தன்னை தேடியும் விதமாகத்தான் இங்கே வந்து பின்
தன்னை இவன்தான் என அடையாளம் காண முடியாமல் தத்தளிக்கிறாளோ! சட்டென தன்னுள் ஒரு
பதட்டம் கூட சற்றுமுன் கடந்து சென்ற அவளின் திசைநோக்கி திரும்பினான்.
கூட்டத்தினூடே
அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளைக் கூக்குரலிட்டு அழைத்து பேச முடிவுசெய்து
வேகமாக பின் சென்றவன் வழக்கமாக தன்னை பார்க்கும் அந்த போலீசார் இருவரையும்
எதிர்கண்டதும் தன் முடிவை மாற்றிக்கொண்டபடி மீண்டும் தன் பழைய இடத்தில் வந்து
நின்று கிரில் கம்பிகளில் சாய்ந்து கொண்டான்.
அது ஒரு
கடற்கரைச் சாலையின் நடைபாதை தினமும் சாயங்காலங்களில் கவிதை எழுதும் நிமித்தமாக
அவன் அங்கே வருவது வழக்கம்.
மரபும்
நுட்பமும் மிகைந்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் கட்டிடங்களைக் கொண்ட அந்த கடற்கரைச்
சாலையின் கட்டிடங்களுக்குக் கீழே நடைபாதையின் பாதுகாப்பு கிரில் கம்பிகளில்
சாய்ந்தபடி, மாலைநேர கடற்கரை வாசிகளைக் காணவும் பர்முடாஸ் செய்து கொள்ளவும்,
குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் பலூன் வியாபாரிகளின் முகச் சுருக்கங்களையும், உடன்
அவர்களது இடுங்கிய கண்களுக்கப்பால் தெரியும் போர்வை போர்த்தியபடி மறையும்
கடவுளரின் நிழலுருவம் குறித்தும் தானறிந்த ஒரே காரியமான கவிதையின் மூலமாக ஆய்வு செய்யும்
பொருட்டாக மாலை நேரங்களில் தினமும் அவன் இங்கே வருவது வழக்கம்.
நடைபாதை
வியாபாரிகளின் கூச்சல்களுக்கும் கடலலைகளின் பேரிரைச்சல்களுக்குமிடையே அவன் அங்கே
கவிதை எழுத முயற்சி செய்வதுண்டு. இதுவரை அவன் எழுதியதனைத்தும் பூர்த்தியடையாத
கவிதைகள். அவன் அங்கே கசக்கி எறியும் அந்தக் கவிதைத் துண்டுகளை யாரோ எடுத்துச்
செல்வதாக நினைத்துக் கொள்வான். அந்தப் பெண் சிண்ட்ரல்லாபோல் தன் கொடுமைக்கார
சித்திக்கு பயந்து ட்ரங்கு பெட்டியில் இவனது கசங்கிய அந்தக் கவிதைத் துண்டுகளை
ஒளித்து வைத்திருப்பதாக ஒரு நாள் கனவில் கண்டான்.
அப்படிப்பட்ட
பெண்ணை தான் எப்போதேனும் நேரில் சந்திக்க வாய்ப்பு நேருமானன் தான் மிக மோசமானவனாக
தன்னை அவளுக்கு அடையாளம் காட்டிக் கொள்ள நேரிடும் என் தன்னைக் குறித்து மிக நன்கு
அறிந்தவனாக தனக்குள்ளே பெருமிதமும் பூரிப்பும் பொங்க சித்துக் கொண்டான்.
இப்படியாக அவன்
ஒரு மாலை வேளையில் ஆவிடத்தே வழக்கம் போல் நின்று கொண்டிருந்ததுபோது ஒரு முறை
இரண்டு போலீசார் அவனருகே வந்தனர். அங்கிருக்கும் சில வியாபாரிகளின் வேலையாகத் தானிருக்கும்
என்பதை ஊகித்தறிந்து கொண்டான்.
ஒரு வியாபாரியாக
அல்லாமல் தினசரி அவன் இந்த இடத்தில் நடைபாதையை ஆக்கிரமித்துக் கொள்வதில் ஒரு
சிலருக்கு இவன் மேல் கோபமிருந்தது. சிறிய டப்பிகளில் ஆண்மைக்குறைவு லேகியம்
விற்கும் வயதான கிழவரொருவர் எப்போதும் மாலைவேளைகளில் காலதாமதமாக வந்து, இவன் இங்கே
நிற்பதால் முகம் சுணக்கமுற்று சக வியாபாரிகளிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு.
இவனது தோரணைகளை
விபரீதமாக கண்டதாலோ அல்லது மிகையான பாவனைகளின் காரணமாகவோ யாரும் இவனிடம் பேச
நெருங்கியதில்லை. தங்களிடமிருந்த இவன் மீதான வன்மத்தைத் தீர்க்க நெடுநாளாக காத்திருந்த
வியாபாரிகளிதான் கடைசியாக போலிசாரை அணுகியிருக்கின்றனர் என்பதையும் புரிந்து
கொண்டான்.
நல்லவேளையாக
சிறுவயதிலிருந்தே இவன் பள்ளிக்கூடக் காலங்களில் சைக்கிளில் எதிர்ப்படும்
போலீசாருக்கு முகமன் கூறுவதை வழ்க்கமாக்கிக் கொண்டிருந்தான். அந்த பழக்கத்தின்
காரணமாக இந்தப் போலீசார் இருவரையும் தேனீர் கடையில் முன்னெப்போதோ பார்த்தபோது
முகமன் கூறியிருந்தான். அது இப்போது வசதியாக இருந்தது. இவனைக் கண்டதுமே அவர்களது
முகத்தில் தெரிந்த ஒருவித ஏமாற்றத்தை வைத்தி இவன் இதனை ஊகித்தறிந்து கொண்டான்.
”தினசரி இங்கே நீ என்ன செய்கிறாய்?
எதற்காக வருகிறாய்?”
கவிதை எழுதுகிறேன் அல்லது
எழுதுவதற்காக முயற்சி செய்கிறேன்.
இந்த பதிலைக்
கேட்டதுமே தங்களது தொப்பிகளில் காற்றில் பறந்து செல்வதை போல அவர்கள்
திடுக்கிட்டனர். ஒரு கவிதை எழுதுபவன் முன் தாங்கள் எப்படியான தோரணையை
மேற்கொள்வதெனத் தெரியாமல் ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டனர். பின் மீண்டும் தங்களை போலீசாக்கிக் கொண்ட அவர்கள் அவன் கையில்
வைத்திருந்த கவிதைத் தாள்களைப் பிடுங்கி அதனை திருப்பித் திருப்பி பார்த்தவாறே
ஜேப்பியில் நுழைத்துக்கொண்டு, இனி இங்க வந்து கவிதை எழுதாதே இது வியாபாரிகளுக்கு
மிகவும் தொந்தரவளிக்கிறது என எச்சரித்தனர். தெரிந்த முகமாக இருப்பதால் உன்னை
எச்சரிப்பதோடு நிற்கிறோம் என்று கூறிய போலிசாரிடம் இவன். கவிதை எழுதாமல் வெறுமனே
நான் வந்துபோக அனுமதியுண்டா எனக் கேட்க, அதற்கு ஒருவரும் தடைசொல்ல முடியாது. ஆனால்
கவிதையை நீ எங்கு சென்று எழுதினாலும் நாங்கள் அங்கு வருவோம் என்று கையில் கொண்டு
வந்திருந்த இரும்பு விலங்கைக் காட்டி எச்சரித்து கவிதைகள் வியாபாரிகளையும் அரசு
உத்தியோகஸ்தர்களையும் மிகவும் தொந்தரவு செய்கின்றன எனக் கூறி அங்கிருந்து
நகர்ந்தனர். மெய்மையற்றுப் போன அவர்களது இருப்புதான் இதற்கு காரணம், சுதந்திரமான
மனவெளியில் சங்குபோல கவிதை தானே முகிழ்வதையாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்
அவர்களிடம் சொல்ல நினைத்து பின் தனக்குத்தானே அவன் தலையசைத்துக் கொண்டான். அதன்
பிறகும் மாலைநேரங்களில் தொடர்ந்து வரும் இவன் போலீசாரை ஏமாற்றும் விதமாக
எவருக்கும் தெரியாமல் தன் மனதுள் கவிதைகளை இயற்றி இருவரும் பாராத சமயங்களில் அதனை
ஒரு பேப்பரில் கிறுக்கி கீழே எறிந்துவிடுவன். அவன் கீழே எறியும் அவனது
பூர்த்தியடையாத கவிதைத் துண்டுகளை ஒரு போதும் அவன் மறுநாள் பார்த்ததில்லை.
இப்படியாக அவன்
கவிதைகளை அன்றும் ரகசியமாக மனதுள் தைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் திடுமென
அவளின் முகத்தைக் கண்டு பேரதிசயம் கண்ணுற்றவனாக தடுமாறிப் போனான்.
இரவில் சரியும்
எரிநட்சத்திரத்தின் வேகத்தோடும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் இளம்பெண் வீதிக்கு
வரும்போது காணப்படும் பதட்டத்தோடும் அவசரமாக அவள் வந்து கொண்டிருந்தாள். சட்டென
அவனால் அவள் குறித்த ஞாபங்களை தன்னுள் மீட்டெடுக்க முடியவில்லை. பதட்டதில் அவளது
பெயர்கூட தொலைந்து போனதை எண்ணி வேதனை மிகுந்தாலும் தன்னைக் கண்டதும் உயிர்ப்புறும்
அவளது கருவிழியில் ஒளிமிகுந்து தன்னை அவளோடு பழகிய காலவெளிகளுக்கு மீண்டுமொருமுறை
அழைத்துச் செல்லும் என்றும் தானும் அவளிடம் மறந்து போய் விட்டதை வெளிக்காட்டாமல்
பாவனைகள் செய்து அந்தச்சுவடுகளை மீட்டுகொள்லாமல் என்றும் தன் அதிமேதாவித் தனமான
கர்வத்தோடு காத்திருந்தவனுக்கு அவள் கண்டும் காணாதவளைப் போல் நகர்ந்து சென்றது
பெரும் அதிர்ச்சியைத் தந்தது. உதாசீனம் கொடியது, விஷத்தைக் காட்டிலும் பன்மடங்கு
வேலை செய்யக்கூடியது, நிலநடுக்கத்தைப் போல பேரழிவுகளை உள்ளடக்கியது என்பதை அவன்
அந்த நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டான். யார் அவள், எதற்காக இங்கு அவள் வரவேண்டும்
எதன் பொருட்டு அவள் தன்னை உதாசீனப்படுத்த வேண்டும் அவளைக் கண்டதும் சரம் சரமாக தன்
உயிரில் எதனால் தீப்பற்றி எரிய வேண்டும் என பலவிதமாக தன்னுள் கேள்விகளை எழுப்பிக்
கொண்டவன் தன்னுள்ளிருந்த அவளது பெயரைக்கூட அகழ்ந்தெடுக்கயியலாத தன் நிலைக்காக
மிகவும் விசனம் கொண்டான்.
நான்கு பரிச்சயமான
அவளது கருவிழிகளும் விசித்திரமான அவளது கூந்தலின் நறுமனம் சட்டென தன்னுள்
வெகுநாட்களாக பழகியிருந்த அவளது உணர்வின் மிச்சமாக தங்களை அடையாளம்
கண்டுகொண்டதுதான் அவனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இன்னமும் அதிர்வலைகளை எழுப்பிக்
கொண்டிருந்தது. ஒளிரும் அவளது விழிகளுக்கப்பால் ஈசல் ஓராயிரம் படபடக்கும் ஈரமான
ரகசியஸ்தலங்களில் தனது இருப்பை கண்டுகொண்டவன் அந்த நினைவு அணுக்களின்
மூலக்கூறுகளில் ஏதோ ஒரு புள்ளி இப்போது முழுவதுமாக தன் வசத்தில் சுண்டி இழுப்பதை
உணர்ந்தான். அதன் வெளிப்பாடுதான் அவனுள் ஏற்படும் இதனை பதட்டமும் படபடப்பும்.
ஆடைகளைப்
படபடக்கச் செய்யும் கடற்கரையின் மாலைக்காற்றும், கார் ஜன்னல்கள் வழியே வேகமாய்
உதறிச் செல்லும் சிந்தஸைஸரின் மிச்சங்களும், சற்று முன்னரே பூத்துவிட்ட கடற்கரை
சாலையின் வரிசையான மஞ்சள் விளக்குகளும், சிறுவர்களின் காரணமற்ற கூக்குரக்களுக்கு
பின்புலமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தன.
இவை எதுவுமே
நிகழாதவாறு இவன் மட்டும் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். வெகுநேரமாகுயும்
அவள் வராத காரணத்தால் மீண்டும் பறவையாகி பறந்து சென்றிருப்பாளோ என
எண்ணிக்கொண்டான். வேவு பார்த்துக்கொண்டிருந்த போலீசார் இருவரும் தேனீர் அருந்தச்
சென்றிருந்ததால் இவன் மெல்ல அவள் சென்ற திசை நோக்கி வீதியின் முடிவு வரை நடந்து
சென்றன். அவன் எதிர்பார்த்தது போல அங்கே சில பறவைகள் கூட்டமாக நின்று
கொண்டிருந்தன். என்ன ஆச்சரியம் இவன் அவற்றினூடாக நடந்து சென்றபோது ஒரு பறவையும்
அசையவில்லை. நினைவில் மறைந்த பிறகு எல்லா பெண்களும் பறவைகளாகத்தான்
மாறிவிடுகின்றனர். திடீரென தியேட்டர் வாசலில் முற்றிலும் அந்நியமானதொரு நபருடன்
எதிர்ப்படுகின்றனர். அல்லது தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகத் தோன்றி உலக
நியதிகள் குறித்து விசனம் கொள்கின்றனர்.
இவன் அந்த
பறவைகளின் அருகே நின்று ஒரு நிமிடம் எல்லா பறவைகளையும் கூர்ந்து கவனித்தான்.
இவற்றில் ஏதோ ஒன்றாகத்தான் அவளிருக்க வேண்டும். அவள் பெயர் ஞாபகத்திலிருந்தால்
இங்கே அழைத்து பறவைகளினூடே அடையாளம் கண்டு பிடிக்கலம்.
சோர்வுற்றவனாக
அவன் மீண்டும் தன் பழைய இடம் நோக்கி திரும்ப எத்தனித்தபோது சூழல்
இருட்டிலிருந்தது. சற்று மறைவாக காணப்பட்ட இடமொன்றில் வேசிகளும் பிச்சைகாரர்களும்
ஒன்றாகக் கூடி எதையோ தீவிரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். (யாரோ ஒரு உயர்ந்த
நபரிடம் தங்களுக்கான கட்டளைகளைச் செவி மடுத்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில்
திருடர்களும் ஒருவரும் அறியாதவாறு தங்களை முக்காடிட்டு மறைத்தபடி உன்னிப்பாக
கேட்டுக்கொண்டிருந்தனர்) சற்று விலகி நின்று கொண்டிருந்த ஒரு தடிமனான வேசியிடம்
ஒரு குடும்பத்துப் பெண்மணி தன் குறைகளைக் கூறி அழுது கொண்டிருந்தாள். வாயில்
வெற்றிலை மென்றுகொண்டிருந்த வேசி அவ்வழியாக சென்ற இவனை அழைத்து பால்யத்தில் நீ
தவறவிட்ட காதலன் இவனா பார்த்து சொல் என அந்த குடும்பப் பெண்மணியிடம் கேட்க, அவள்
கலங்கிய விழிகளுடன் இவனைப் பார்த்து பின் மறுதலித்தவளாக மீண்டும் வேசி முன்
தலைகுனிந்தாள். வழியில் ஒருவன் இவனிடம் அந்த இடத்தின் பெயரை கேட்க அப்போது தான்
அவனுக்கு தனக்கே அந்த இடத்தின் பெயர் மறந்துபோனது தெரியவந்தது. ஒரு கதைக்காக தான்
அடையாளங்களற்று படைக்கப்படிருப்பது ஒரு மின்னலைப் போல அவனுக்குள் பளிச்சிட்டு
மறைந்தது. அதில் தீவிர கவனம் குவிப்பது பவம் என்பது போல அதிலிருந்து விடுபட்டவனாக
வெறுமனே அந்த இடத்தின் பெயரைக் குறித்து யோசித்தான் எதுவுமில்லாமல் தனியாக வரும்
ஒருவரிடம் பேசுவதன் மூலம் இந்த இடம்குறித்த தனது ஞாபகங்களை மீட்டுக்கொள்ளலாம்.
என்று நம்பியவன் அந்தத் தனியாளுக்காகக் காத்திருந்தான். நடைபாதையில் கண்ணாடிகளை
சுவர்களாகக் கொண்ட ஒரு கேக் கடைமுன் தனது பிம்பங்களோடு கேக்குகளையும் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் இவன் எதிர்பார்த்த தன்மையுடன் காணப்படவே அவனிடம்
சென்று நட்புறவு கொண்டவனாக இந்த இடம்குறித்து ஞாபகங்களைச் சேகரிக்க முயல, அவனோ
தனக்கே வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டான். இரண்டு நாட்களாக பசியோடிருப்பதாகவும்
வீடு திரும்ப முடியாத தன் சோகத்தையும் சொன்ன அவன் கேக்குகள் உள்ளே போனதும்
இவனுக்குத் தேவையான ஞாபங்களனைத்தும் தானாக வெளிப்படும் என உறுதியளித்தான். ஆனால்
அதற்கு அவசியமற்றுப் போனது இருவரும் கேக்குகளை பிய்த்து உண்டவாறு கடையிலிருந்து
வெளிப்பட்ட போது அவன் எதிர்பார்த்தது போல அவள் திரும்பி வருவதை இவன்
பார்த்துவிட்டான்.
நொடிப்பொழுதும்
தாமதிக்காமல் சட்டென அவள் முன் ஓடிச்சென்று இவன் குறுக்காக நிற்க, அவளோ எதிர்பாராத
இந்த நிகழ்வினால் அதிச்சியுற்றவளாக திகைத்து நின்றாள். இவன் சாய்ந்து கொண்டிருந்த
அதே காரில் கம்பிகளில் இப்போது அந்த சிறுவன் சாய்ந்து கொண்டிருக்க இவன் அவனிடம்
சற்றுமுன் அவள் தன்னை கடந்து சென்றபோது தன்னுள் நிகழ்ந்த பதட்டங்களையும் தொடர்ந்த
நிகழ்வுகளைக் கூறி அவளிடம் மிச்சமிருக்கும் தனது ஞாபகங்களைத் தந்து தன்
மனப்பிரயாசையைத் தீர்த்து வைக்குமாறு கேட்டு நின்றன்.
ஒரு நிமிடம்
நிதானமாக அவனது விழிகளை உற்று நோக்கிய அவள் பின் தலைகுனிந்தவாறு இவன் கூறியதைப்போல
இரவுகளில் வந்து இவனது கவிதைகளை பொறுக்கிச் செல்பவள் தான்தான் என்றும்,
பூர்வஜென்மத்தில் தொலைத்த தன் காதலன் தனக்கு அனுப்பும் ரகசிய செய்திகளாக அவற்றைச்
சேகரித்து வருவதாகவும் கூறிய அவள் தனது ஜீன்ஸ் பேண்டிலிருந்து இரண்டொரு கவிதைத்
துண்டுகளை வெளியில் எடுத்தாள். கடைசியில், இது தான் எதிர்பார்த்தது தான்
என்றெண்ணியவன் உற்சாகமிகுதியால் கூக்குரலிட்டான். சிண்ட்ரல்லா போல நீ ஒரு
ஏழைச்சிறுமி என்றல்லவா கற்பனை செய்திருந்தேன் என அவளிடம் அவன் உரக்கக் கூறிய போது
அவனது குரலின் கர்வம் சர்ப்பத்தின் வாலைப் போலச் சுழன்றது.
அவள் அதுகுறித்து
சற்றும் கவலைப்படாதவளாக கவிஞர்களின் இயல்பு குறித்து முன்பே அறிந்தவளாய் இந்தக்
கவிதைகள் எழுதுகிரவனை தான் முகவும் நேசிப்பதாகவும் ஆனால் அது இவன்தான் என்பதற்கு
ஆதாரமாக தன்முன் ஒரே ஒரு கவிதை எழிதினால் போதும் என்று கூர, உடனே இவன் சற்று
தூரத்தில் கேக்கை சாப்பிட்டபடி நின்ற சிறுவனிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக
கையசைத்தபடி, தான் எப்போதும் தயாராக வைத்திருக்கும் காகிதத் துண்டுகளை எடுத்து
கவிதை எழுதத் துவங்க, சற்று தூரத்தில் இதற்கெனவே நின்றிருந்தாற்போல் அந்த இரண்டு
போலீசாரும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவன் அவர்களையும் அவர்களது கையில்
கனமாக தொங்கும் இரும்புக் கைவிலங்களையும் பார்த்து அதைப்பற்றி சிறிதும் சட்டை
செய்யாதவனாக தன் கவிதைக்கான கடைசி வரியை எதிரே நிற்கும் இவளது விழிகளில் வாசித்தபடி
நின்று கொண்டிருந்தான். பின் அவளுக்காக வெகுநேரம் காத்திருந்த பறவைகளை அங்கிருந்த
வியாபாரிகளின் விரட்டிக் கொண்டிருந்தனர்.
நன்றி குமுதம் தீராநதி