August 15, 2010

என் சமீபத்திய கவிதைகள் மூன்று

1.சுட்டுக்கொல்லுங்கள் ஜேம்ஸ் டீனை-

ஜேம்ஸ் டீன்
என பெயர் கொண்டவனை
சுட்டுக்கொல்லுங்கள் காரணமே வேண்டாம்
அவன்நல்லவனல்ல
உண்மையில்
ஊழியின் முதல் ஓநாய்க்கு இரவில்
பிறந்தவன் குடிபோதையில்
மோட்டர்சாகசம்
சுட்டுக்கொல்லுங்கள் ஜேம்ஸ் டீனை
என்ன டா ...த்தா...ப்ர்ர்ர்ர்ருப்பு
நுரைகள் நிரம்பிய
பீர் கோப்பைகளை சுவற்றில் வீசி
கிடார் மீட்டும் பெண்ணை வம்படிக்கு
முத்தமிட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென
பைக்கில் பறந்த சடக்கென
ம்ழைதுறலில் சக்கரம் மட்டும் தனியேசுழல
கருப்பு சாலையில் பிணமாக கிடந்த ஜேம்ஸ் டீனை
சுட்டுக்கொல்லுங்கள் அவனை
அமெரிக்க லும்பனை
இரண்டாம் முறையும் சாகட்டும்
அந்த ஜெர்கினுக்கு பிறந்தவன்
24வயதில் அவனவனுக்கு வாழ்க்கை
ஆசன் வாயில் நெருப்பை திணிக்கிற போது
பரவாயில்லை நீ
செத்துப்போடா ஜேம்ஸ் டீனே
50 வருடத்துக்கப்புறமும் உன் ஆட்டம்
ரொம்பத்தான் என்னை அலைக்கழிக்கிறது

2.வெட்கங்கெட்டவர்களாகிய நாம்

ஒரு கவலையுமில்லாத நான்
ஒருகவலையுமில்லாத அத்திப்பூவை பார்க்கிறேன்
ஒருகவலையுமில்லாத அத்திப்பூ
ஒருகவலையுமில்லாத நிலாவை வெறிக்கிறது
ஒருகவலையுமில்லாத நிலா
சதைபிய்ந்து உயிர்தவிக்கும் வீரனை பார்க்கிறது
ஒருகவலையுமில்லாத வானம்
அவனது அம்மணத்தை ரசிக்கிறது
ஒருகவலையுமில்லாத நாம்
இந்த கவிதையை வாசிக்கிறோம்

3.குழந்தையின் அதிகாரம்

என்னதான் குழந்தையென்றாலும்
உன் அதிகாரம் அதிகமானது
நொடிக்கொருதரம் என் தலையை
திருகுகிறாய்
காலை முறுக்குக்கிறய்
தோட்டத்தில் வீசுகிறாய்
கவ்விவரச்சொல்லி உன் வீட்டு
நாயைஏவுகிறாய்
அடுத்தவர் பிடுங்கினால்
அள்ளிக்கொள்கிறாய்
முத்தம் கொடுக்கிறாய்
விருப்பட்ட நேரத்தில் தட்டி கொடுக்கிறாய்
சாக்லெட் கிடைக்காத் கோபத்தில்
எட்டி உதைக்கிறாய்
பொட்டு வைக்கிறாய் பூச்சூடி அழகு பார்க்கிறாய்
புதிய பொம்மை வந்ததும் உதாசீனபடுத்துகிறாய்
அடுத்து என்ன செய்வாயோ பயமாய் இருக்கிறது
கதவை நெருங்கி வருகிறது உன் காலடிசத்தம்
தனிமை அறையில் நான்

August 7, 2010

நதியை தேடி நடந்த கடல் : வெர்ஜீனியா உல்ப்



நதிவழிச்சாலை :1
அஜயன்பாலா


சென்றவாரம் பார்சன் காம்பள்க்ஸில் வழக்கமாக சினிமா டிவிடிக்களை வாங்கும் கடையில் ஒவ்வொருபடமாக விரல் தேடிக்கொண்டிருந்த போது ஒருபடம் கண்ணில்பட்டு பரவசத்தை உண்டாக்கியது .படத்தின் பெயர் Who i s afraid of virjinia woolf 1966ல் ஹாலிவுட்டில் வெளியான படம் .

வெர்ஜீனியா உல்பை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது. புகழ்பெற்ற ஆங்கில பெண் எழுத்தாளினி. எண்ணற்ற சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் மற்றும் கடிதங்களாக எழுதிக்குவித்தவர். ஆங்கில நவீன இலக்கியத்தை கட்டமைத்த டி.எஸ் எலியட். மற்றும் ஜேம்ஸ் ஜாய்சுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்கிறது விமர்சன வட்டாரம். ஆனால் என்ன வென்றால் எல்லா உயர்ந்த எழுத்தாள்ர்களையும் தாக்கும் ஏதாவது நோய் வர்ஜீனியாவுக்கு பை- போலர் டிஸ் ஆர்டர எனும் மன நோய் உருவில் வாய்த்தது. நன்றாகவே வாட்டி வதைத்தது. இந்த நோயில் இருப்பவர்களுக்கு தான் ஒருமனநோயாளி என்பது தெரியும் ஆனால் ஒன்றும் செய்யமுடியாது.தன்னிடம் வருபவர்களிடமும் இப்படியே அவர் புலம்பிதள்ளியிருக்கிறார். ஆனால் அவரது படைப்பு எழுச்சிக்கும் அதுவேஅடிப்படையாக இருந்தது. துயரமான வாழ்க்கைக்குள் சவாலாக நீச்சலடித்தார். அதனாலேயே மிஸஸ் டாலவே , ஆர்லோண்டோ ,போன்ற நாவல்களை அவரால் படைக்க முடிந்தது. ஒரு யூத்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.திருமண்ம் ஆகும் போது கண்வன் கையில் நயாபைசா கூட இல்லை என நன்கு தெரிந்தே திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் இறுதிவரை அவருக்குமனைவியாக வாழ்வத்ன் மூலம் தான் மிகுந்த ம்கிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவே அவர் பதிவு செய்துள்ளார். இரண்டாம் உலக்போரின் போது லண்டனில் நாஜிக்கள் போட்ட குண்டு அவரது வீட்டை தரை மட்டமாக்கியது. இது அவரை தீவிர மனநோய்க்குள் விழ வைத்தது. நோய். கடுமையாக தக்கதுவங்கியிருந்தகாலத்தில் ஒருநாள் 1941ல் தனது கோட் பாக்கெட் முழுக்க கற்களை நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஓஸ் ஆற்றை நோக்கி மெதுவே நடந்துசென்றார். மரணத்தை நோக்கிய நிதான நடை அது. அவர் தற்கொலை செய்வதற்கு நதியை தேர்ந்தெடுத்தால் அந்த ஓஸ் நதி இலக்கிய வரலாற்றில் த்ன்னை பதியவைத்துக்கொண்டது. அவரது தற்கொலை அக்காலத்தில் ஆங்கில இலக்கிய உலகை பெரும் அதிர்ச்சியில் தள்ளியது .

மிகவும் சோகம் ததும்பிய அவரது இந்த வாழ்க்கையை எதிர்பார்த்துதான் நான் அன்று வாங்கிய டிவிடியை போட்டேன்.. குறிப்பாக அவர் ஆற்றை நோக்கி ம்ரணத்தை முன்னிட்டு நடந்து செல்லும் அந்த இறுதிக்காட்சி.. இயக்குனர் அதை எப்படி கையாண்டிருப்பார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் படம் ஓட த்துவங்கியதும் அதிர்ச்சி..மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எலிசபத் டெய்லரும் ,ரிச்சர்பர்ட்டனும் நடித்தபடம் அது .



படத்தின் கதைக்கும் வெர்ஜீனியா உல்ஃபுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒருகுடும்ப கதை போல வெறுமனே அதிர்ச்சிக்காக அவரது பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனைக்கும்
உல்ப் கணவனுடன் நிறைவான மணவாழ்க்கை வாழ்ந்துமுடித்தவர். ஆனால் படமோ மண்வாழ்க்கையின் தோல்வியை பற்றிய படம் . படத்தில் நடித்த ஜோடிக்கு வேண்டுமானால் இக்கதை பொருந்தும். டைவர்ஸுக்கு பேர்போன ஜோடி . சேர்ந்து பிரிந்து மீண்டும் சேர்ந்து பிரிந்து என இரண்டுமுறை டைவரஸ் ஆன ஒரே ஜோடிகள். வேறு எந்த காரணத்திற்காக இப்படத்திற்கு வெர்ஜீனியா உல்பின் பெயரை பயன்படுத்தினார்களோ தெரியவில்லை பத்தாக வாங்கிய அவசரம் காரணமாக பின் குறிப்புகளை திருப்பி பார்க்காமல் போன தவறுக்காக நொந்துகொண்டேன் .

உல்ப் பற்றி நான் தேட காரணமாக இருந்தது அவர் எழுதவரும் பெண்களுக்காக சொன்ன புகழ்பெற்ற வாசகம் .. இதுதான்

எழுத்துறைக்கு வரும் பெண்கள் அதற்கு முன் தனக்கென தனி அறையும் கொஞ்சம் பொருளும் சேர்த்துக்கொண்டு இதில் நுழைவது அவர்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தரும்”


. – நன்றி
’சூரியக்கதிர்” இதழ்

August 1, 2010

பிரான்சின் புதிய அலை : ஒரு செலுலாய்ட் புரட்சியின் கதை


>


பிரான்சின் புதிய அலை


உங்களின் சினிமாக்கள் அயோக்கியத்தனம் அது மக்களை ஒரு தந்திரவலைக்குள் வீழ்த்தும் குப்பை ,அங்கு மனதை கட்டிப்போடும் மாய்மாலம் மட்டுமே எஞ்சுகிறது...இது கலை இல்லை...உண்மையான கலை இந்த வேலையை செய்யாது ...அது மக்களை ஏமாற்றாது மாறாக தனக்குள் ஒரு அழகையும் வடிவத்தையும் உருவாக்கிக்கொண்டு மக்களையும் ரசிக்க வைக்கும்


இதெல்லாம் ....அக்காலத்தில் 1959 க்கு முன்பு வரையிலான உலகசினிமாக்களின் மீதான விமர்சனங்கள்

விமர்சித்தவர்கள் யார் ?

துடிப்பான இருபது முதல் முப்பது வயதுக்குட்பட்ட நான்கைந்து இளைஞர்கள்

கையேது சினிமா என அவர்கள் நடத்திய பத்திரிக்கையில்தான் அவர்கள் இப்படி அக்கால திரைப்படங்களை தங்களது கூர் விமர்சனங்களால் கிழித்து தொங்க விட்டனர்.

இவர்களுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும் ..வெறும் எழுதிவிட்டால் போச்சா வந்து ஒரு படத்தை எடுத்து பார்க்கட்டும் அப்புறம் தெரியும் ..

என இயக்குனர்களும் பதிலுக்கு இவர்களை தூற்றினர்

காலம் கனிந்தது .. ஒரு நாள் அவர்கள் சொன்னது போலவே அந்த விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறினர். தங்களை புதிய அலை என அவர்களாகவே அழைத்துக்கொண்டனர். படம் எடுக்க துவங்கினர்.
படம் வெளியான போது அந்த விமர்சகர்களின் படங்கள் அதுவரையிலான உலகசினிமாவையே புரட்டி போட்டது . உலகமெங்கும் அவர்களின் சினிமாக்களுக்கு அரங்கம் எழுந்து கைதட்டியது. ஒரு சாதராண திரைப்பட சங்கத்தில் துவங்கிய அந்த இளைஞர்களின் வாழ்க்கை பத்திரிக்கையாளராக மாறி பின் படங்களை விமர்சித்து பின் உலக சினிமாக்களுக்கே வழிகாட்டியாக மாறியது தனிக்கதை
அன்று அவர்கள் தோற்றுவித்த நியூ வேவ் எனும் புதிய அலை இயக்கம் இன்று உலகசினிமா வரலாற்றின் மகத்தான திருப்பு முனையாக காலத்தால் அழுந்த பதியப்பட்டுள்ளது

ப்ராங்கோய்ஸ் ட்ரூபோ, Francois Truffaut, ழான் லுக் கொதார்த். Jean-Luc Godard, கிளாத் சாப்ரோல், Claude Chabrol, எரிக் ரோமர்Eric Rohmer.
இவரகள்தான் அந்த இளம் இயக்குனர்கள் ..அதுவரையிலான இலக்கணங்களை உடைத்து சினிமாவுக்கு புது இலக்கணம் எழுதிய உலகசினிமாவின் சிற்பிகள்


இவர்கள் எப்படி ஒன்றிணைந்தார்கள் … இவர்களின் பிதாமகன் யார்... இவர்கள் இதற்காக பட்ட சிரமங்கள்... என்ன?



புதிய அலைக்குமுன் பிரான்ஸ்

இரண்டாம் உலகப்போரில் பிரான்சை நாஜிக்கள் தன் கைக்குள் வைத்திருந்த நேரம் அதன் ஜன்னல்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததகாலம் அது. கலையின் மீதும் சுதந்திரத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்ட பிரான்ஸ் தேசத்தவரை இந்த தடைகள் ரொம்பவே சங்கடப்படுத்தியது.. அதிலும் குறிப்பாக 1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட பிரான்சில் கலைச்செழுமையான காலத்தில் வாழ்ந்த ஆந்த்ரே பாஸின் , அலைன் ரெனாய்சிஸ் ,ஆஸ்ட்ரெக் ஆகிய கலைஞர்களுக்கு இது பெரும் நெருக்கடியை தோற்றுவித்தது. இதிலிருந்து தங்களை விடுவித்து கலையின் புதிய வெளிகளுக்கு தாவும் மனோ நிலையில் அவர்கள் உந்தி தள்ளப்பட்டபோது அவர்கள் அதற்கு வழியில்லாமல் அல்லலுற்றனர். போர் முடிந்தது நாஜிப்படைகள் பிரான்சிலிருந்து அகற்றப்பட்டன .. ஜன்னல்கள் திறக்கப்பட்டன புதிய காற்று புதிய வெளிச்சம் புதிய சிந்தனைகள் ...பிரான்சின் அறிவுலகத்துள் பெரும் பாய்ச்சலோடு புகுந்தது. கலைகளின்பாலும் தத்துவங்களின் பாலும் அதிக ஈடுபாடு கொண்ட ஆந்த்ரே பாஸினுக்கு சினிமாவின் மீது பார்வை குவிந்தது. இடது சாரி பார்வை கொண்ட பாஸின் அமெரிக்க படங்களின் முதலாளித்துவதன்மைகளையும் அதன் போலித்தனங்களையும் அவதானித்தார். இதில் உயிரோட்டம் இல்லை.. இவர்கள் சொல்வதில் பொய் இருக்கிறது .. ஆழ் மனங்களின் உள்ளுணர்வுகள் படைப்பாக இல்லை. ஏற்கனவே யாரோ ஒருவர் தீர்மானித்து எழுதப்பட்ட கதையை கேமரா மற்றும் படத்தொகுப்பினால் உருவாக்குவது மட்டுமே இயக்குனர் வேலை இல்லை என்றும் பத்திரிக்கைகளில் சாடினார். பாஸினுடன் அலெக்ஸாண்டர் ஆஸ்ட்ரெக் எனும் அறிஞரும் சேர்ந்தார். அவர்தான் பிற்பாடு எழவிருந்த புதிய அலை எனும் இயக்கத்துக்கு அடிநாதமாக இருந்த ”கேமரா ஒரு பேனாவை” போல எனும் முக்கியமான கருத்தாக்கத்தை வெளியிட்டவர்.



எழுத்தாளனுக்கு எப்படி பேனாவோ அது போல இயக்குனருக்கு கேமார செயல்படவேண்டும் . தன் சுயசிந்தனையுடன் தன்னியல்பாக எழுதுவது போல கேமராவால் ஒரு இயக்குனர் யாருடைய (குறிப்பாக தயரிப்பாளர்களின் ).
அதிகாரத்துக்கும் கட்டுபடாமல் உருவாக்கும் போதுதான் சினிமாவில் அசலான படைப்புத்தன்மைகள் வெளிவரும் எனக்கூறினார். உடன் ஹாலிவுட் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்வர்களான பிரிட்ஸ் லாங், டி டபிள்யூ கிரிபித் , ஜான் போர்ட்.. ஆகியோர் பற்றியும் அவர்களில் ஒளிந்துகொண்டிருந்த நவீன சினிமாவுக்கானகூறுகளையும் குறிப்பிட்டு ”சினிமா தி ஆர்ட் ஆப் ஸ்பேஸ்” எனும் கட்டுரை ஒன்றை எழுதினார் .

மிகச்சிறிய வட்டத்தாரால மட்டுமே படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் நாளடைவில் சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் புதுமை விரும்பிகளிடத்தும் புதிய வரவேற்பை பெற்றது. பிரான்சில் பல இடங்களில் சினிமா சங்கங்கள் எனப்படும் சிறு சிறு குழுக்கள் உருவாக்கம் பெற்றன.ஐம்பதுக்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட இக்குழுக்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் நல்ல சினிமாக்களை இங்கு திரையிட்டு அதன் தரம் குறித்து காரசாரமாக விவாதித்தானர் . இப்படியான குழுக்களில் ஒன்று சினிமாத்தொக் பிரான்ஸ் Cinematheque Française, எனப்படும் குழு . ஹென்றி லாங் லோயிஸ் எனப்படுபவரால் நடத்தப்பட்டு வந்தது. இக்குழுவில் ஐம்பதுக்கும் குறைவானோர் தீவிரமான உறுப்பினர்கள் . அவர்கள் பெரும்பாலும் மவுனமொழி படங்களையே அதிகம் பார்த்தனர்.அதிகமான சினிமாவை பார்ப்பதன் மூலமாக மட்டுமே சினிமாவில் பயிற்சி பெற முடியும் எனபதை இக்குழு உறுதியாக நம்பியது . கூடுமானவரை வெளிமொழி படங்களை சப் டைட்டில் எனப்படும் மொழிமாற்ற எழுத்துருக்கள் இல்லாமல பார்த்து அதன் மூலம் இன்னும் கூடுதலாக காட்சி மொழிக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டனர் .

இந்த குழுவுக்குள் முதன்முதலாக ஒரு சிறுவன் ..16 வயதேயான சிறுவன் ஒருவன்வந்தான் . மிகவும் துறுதுறுப்பாகவும் மற்றவர்களைக்காட்டிலும் சினிமாக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவனாகவும் காணப்பட்ட அவன் தான் பிற்பாடு பிரெஞ்சு சினிமாவின் முகவரியாக மாறிப்போனான் .. அவன் பெயர் பிரான்ஸ்வா த்ரூபோ ...புதிய அலை இயக்கத்தின் மிக முக்கிய முதன்மை இயக்குனராக இன்றளவும் உலகசினிமாவால் அறியப்பட்டவன். அக்காலத்தில் சிறுவயதில் தந்தையின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் விதமாக சினிமா பார்க்க வந்த த்ரூபாவுக்கு அதுவே உணவாகவும் வேதமாகவும் வாழ்க்கையாகவும் மாறிப்போனது .

த்ரூபாவை போலவே சினிமாத்தொக் குழுவுக்கு ஒரு நாள் இன்னொரு இளைஞனும் வந்து சேர்ந்தான் . பிற்பாடு உலகசினிமாவில் தனித்தன்மை மிகுந்த இயக்குனராகவும் பல இயக்குனர்களின் மானசிக ஆசானாகவும் உருவானவன் .அவன் பெயர் கோதார்த். ழான் லூக் கோதார்த் என்பது முழுப்பெயர் . தனது தீவிரமான அரசியல் பார்வைகளாலும் மிகச்சிறந்த காட்சி கட்டமைபுக்களாலும் உலகசினிமாவுக்குள் அதிர்வலைகளை நிகழ்த்தியவன்(ர்).. சினிமா என்பது ஒரு ஒருவழிப்பதையானால் அது முடிவுறும் இடத்தில் நிற்பவர் கொதார்த். இவரது படங்களை வேதமாக கருதுபவர்களும் உண்டு ஆனால் அன்று சினிமாதொக் சங்கத்தினுள் நுழைந்த போதோ மிக சாதராணமான இளைஞன் ..இவரும் துவக்கத்தில் தந்தையாரது கொடுமையால் பாதிப்புக்கள்ளானவர். இதன் காரணமாகவே சினிமா சங்கங்களுக்கு சென்று சினிமா பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை பற்றி பின்னாளில் குறிப்பிடும் போது அக்காலங்களில் சினிமா திரையானது வீட்டு பிரச்சனைகளிலிருந்து தப்பித்து வேறு உலகங்களுக்கு செல்லும் சுவராக இருந்தது எனக்கூறியுள்ளார்.

இவர்களோடு அப்போது எரிக்ரோமர் Eric Rohmer. களவுத் சாப்ரோல் Claude Chabrol, போன்றவர்களும் தீவிரமாக இச்சங்கங்களில் ஈடுபட்டனர். இவர்கள் வெறுமனே திரைப்படங்களை பார்ப்பதோடுமட்டுமில்லாமல் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளை சேகரிப்பது.. மேலும் தங்களுக்கு பிடித்த இயக்குனர்களை பட்டியலிடுவது ,அவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர்.

இவரை போலவே இச்சங்கங்களில் அக்காலத்தில் ஈடுபட்ட அலைன் ரெனாய்ஸ், Alain Resnais, ழாக் ரிவெட், Jacques Rivette, , ரோஜர் வாதிம் Roger Vadim, போன்றவர்களும் பிற்பாடு குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

ஆனாலும் இவர்களுக்கும் முன் சொன்ன நால்வருக்கும் என்ன வேறுபாடு என்றால் முன்னவர்கள் இவர்களைக்காட்டிலும் கூடுதல் திறமை கொண்டவர்கள் என்பது மட்டுமில்லாமல் அடிப்படையில் எழுத்தாளர்கள்,... அதனால் இவர்கள் அக்காலத்தில் புதிய சினிமா மற்றும் கலை இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதின ஆந்த்ரே பசினுடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் . உடன் தங்களது விமர்சனங்களை அவ்வப்போது வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளாகவும் எழுதி சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கினர். துவக்கத்தில் இக்கட்டுரைகளுக்கு ஆங்காங்கு வரவேற்பு கிட்டவே நமக்கென்று ஒரு இதழ் இருந்தால் இன்னும் கூடுதலாக எழுதிகுவிக்கலாமே என்ற எண்ணம் இவர்களுக்குள் தோன்றியது... இதே சமயம் இவர்களது தத்துவ குருவான பாஸினுக்கு இதற்குமுன் அவர் தொடர்ந்து எழுதிவந்த இதழ் நின்று போக ..அனைவரது ஒத்துழைப்புடன் பாஸின் அடுத்த சில நாட்களிலேயே ஒரு புதிய இதழை துவக்கினார். கையேது சினிமா . Les Cahiers du Cinema.. சினிமா வரலாற்றில் சினிமாவளர்ச்சியில் ஏதேனும் ஒரு இதழுக்கு சிறுபங்களிப்பு இருக்குமானால் அது இந்த இதழுக்கு மட்டுமே இருக்கும்.

1951 ல் இந்த இதழின் முதல் பிரதி வெளியான போது அடுத்த சில வருடங்களில் இந்த இதழ் மகத்தானசசாதனைகளை செய்யப்போகிறது என யாரும் எதிர்பார்க்கவில்லை.
(பிரான்சின் புதிய அலை.... .11தொடர்ச்சி .. அடுத்த இதழில்)
நன்றி : புத்தகம் பேசுது ஆகஸ்ட் மாத இதழ்

July 19, 2010

ஒரு இலையின் வாழ்வு

ஒரு இலையின் வாழ்வு

ராதாராஜ் எனும் ஒரு மனிதன் அல்லது பிரபலங்களை உருவாக்கும் இயந்திரம் ஒன்றின் மரணம்

இலைகள் இல்லாமல் பூக்கள் இல்லை ...ஆனால் பூக்களை ரசிக்கும் நாம் இலைகளை பற்றி கவலைப்படுவதில்லை.அப்படிப்பட்ட மறக்கப்படும் இலைகள் தான் ஒரு பத்திரிக்கையாளனின் வாழ்வு. இந்த உலகில் பிறக்கும்போதே பிரபலங்கள் உருவாகிவிடுவதில்லை.அப்படியாக திறமை கொண்ட ஒருவர் மக்களிடையே பேரும் புகழும் அடைவதற்கு காரணமாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர்கள் முக்கியத்துவம் பெறாமல் பூக்களை பளிச்சென பார்வையில் படவைக்கும் இலைகளாகவே வாழ்ந்து மறைகிறார்கள். பத்திரிக்கை என்றாலே நமக்கு தெரிந்தது விகடன் குமுதம் குங்கும் கல்கி பொன்ற இதழ்கள்தான் இல்லாவிட்டால் தினசரி நாளேடுகள் ..ஆனால் நான் சொல்லவரும் இலைகள் இவர்கள் மட்டுமே அல்லர் .. இவர்களல்லாத நிரந்தரமற்ற சினிமா அரசியல் மற்றும் இதர பத்திரிக்கைகளில் வாழ்பவர்கள் நூற்றுகணக்கானவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களும்கூடத்தான். அவர்களீல் ஒரு இலை சில நாட்களுக்குமுன் உதிர்ந்தது அவர்பெயர் ராதாராஜ். திரைத்துறை பத்திரிக்கையாளர்.குறள் தொலைக்காட்சி நிருபர்... அவர்மறைந்து இருபது நாட்கள் ஆகியிருக்கும் ஆனால் இப்போது அப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்ற அடையாளம் எதுவுமில்லை. ஒரு படைப்பாளி இறந்தால் குறைந்தபட்சம் ஒரு படைப்புமட்டுமாவது மிஞ்சும்.ஆனால் வாழ்க்கைமுழுக்க மற்ற மனிதர்களின் பதிவுகளுக்கா வாழ்ந்து மறையும் இவர்கள் கடைசிவரை பதிவாகாமலே போவது வாழ்வின் முரண் நகை. இலைகளுக்கு கூட வாழ்ந்து மறைந்த வடு இருக்கும். ஆனால் இவர்களுக்கோ அது கூட இல்லை .இது ராதாரஜ் எனும் என் நண்பரின் சமீபத்திய மரணம் பற்றிய பதிவு .

காற்றில் அலைக்கழியும் ஒருபுத்தகத்தின் தாள்கள் போல இதை எழுதும் போது மனம் முன்னும் பின்னுமாக அலைக்கழிகிறது. சில நாட்களுக்கு முன் கோவையில் இணையதளமாநாட்டில் பங்கேற்றபோது ஒரு குறுஞ்செய்தி மனதை கனக்க செய்தது . குறள் தொலைக்காட்சி நிருபர் மற்றும் பத்திரிக்கையாளர் ராதாராஜ் எதிர்பாரா மரணம் என எங்களுக்கு பொதுவான நண்பர் ரூபன் அனுப்பியிருந்தார். சட்டென அவரது மனைவி குழந்தை இவர்களின் ஞாபகம்தான் மனதில் நிழலாடியது. ..அடுத்ததாக நானும் அவரும் இன்னும் இருவரும் பதினைந்து வருடங்களுக்குமுன் ஒரு துப்புறியும் வார இதழில் ஒன்றாக பணிபுரிந்த போது கேராளாவுக்கு உற்சாகாமாய் சுற்றுலாசென்ற ஞாபகங்கள். அதுவும் திருச்சூர் பேருந்துநிலையத்தில் இரவு நேரத்தில் கடைசி பேருந்தை பிடிக்க இருவரும் மரணவேகத்தில் ஓடி அதில் தொற்றிய காட்சி இவைதான் ஞாபகத்துக்கு வருகின்றன.


ராதாராஜ் ..நல்லசிவந்த முகம் ..த்லையில் முன்பக்கம் வழுக்கை .அதைமறைக்க அடிக்கடி அவர் முன்னுச்சிமயிரை சிறு சீப்பால் வாரிக்கொண்டே இருப்பார். இப்போது வயது ஒரு நாற்பது நாற்பத்திரண்டுதானிருக்கும். மக்கள் பிராணிகளாய் நகரும் சென்னைமாநாகரத்தில் அவர் சினிமா பத்திரிக்கையாளர். உதிரி பத்திரிக்கையாளர்... உதிரி என்றால் மாதசம்பளம் நிரந்தரமில்லாத வருமானம் .எப்போது வேண்டுமானாலும் வேலை போகும். பெரும்பாலும் தன்மான உணர்ச்சி அதிகமிருப்பவர்கள் தாங்களாக இதுதான் தங்களுக்கு ப்ருந்தும் என தேர்ந்தெடுத்துக் கொள்வர். அதே போல்

சம்பளம் என்பது அவ்வளவாக உறுதிப்பாட்டில் இல்லை. பெருமாபாலும் இது போன்ற நிருபர்கள் சினிமாகனவுகளுடன் வந்தவர்களாகவே இருப்பர் .. லட்சியத்துக்கும் நனவுலகத்துக்கும் இடப்பட்ட புள்ளியில் இரண்டையும் விட மனதில்லாமல் அலையும் இவர்கள் வாழ்வில் தவிர்க்கவே முடியாமல் மது உற்ற நண்பனாகிவிடுகிறான். இப்பொதாவது பராவயில்லை பத்துவருடங்களுக்கு முன் இந்த பத்திரிக்கைகளில் வேலை செய்வது கம்பி மேல் நடப்பது போல.

நான் சென்னைக்கு முதன் முதலாக சினிமாகனவுகளுடன் வந்திறங்கியபோது என்னையும் இதுப்ன்ற பத்திரிக்கை வேலைதான் வாரி அணைத்துக்ண்டது. காரணம் என்னை போன்ற கனவுலகவாசிகள் தான் அதற்கு ஒத்துவருவான் .சம்பளம் இல்லாவிட்டாலும் சினிமாவொடு தொடர்பில் இருக்க இயக்குனர் நடிகர்களை பார்க்க இது சரியான வாய்ப்பை உருவாக்கும் அல்லவா அதன் பொருட்டுதான்.இப்படியாக துவக்கத்தில் தளபதி எனும் அரசியல் புலனாய்வு பத்திரிகையில் ஆறுமாதங்கள் குப்பையை கொட்ட்டிவிட்டு அந்த இதழுக்கு கடைசி கணக்கு எழுதப்பட்டபின் வேறு வேலை தேடி அலைந்தேன். அப்படி அலைக்கழிந்தபோது நண்பரும் எழுத்தாளருமான கவுதமசித்தார்த்த்னை சந்திக்க போலீஸ் செய்தி எனும் கூவம் நதிக்கரை யோரம் இருந்த அதன் அலுவலகத்துக்கு பசி மிகுந்த மதிய நேரத்தில் சென்றேன். அங்குதான் கவுதம சித்தார்த்தன் ( உன்னதம்) எனக்கு ராதாராஜை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அன்றே வேலையில் சேர்ந்தேன். நிருபர் வேலை . சிலநாட்களில் ஊருக்குபோன கவுதம சித்தார்த்தான் திரும்பி வராமல் போக காலியாக இருந்த உதவி ஆசிரியர் பதவியில் நானே அமரநேர்ந்தது.

பத்திரிக்கை உலகில் ஒருவரது எழுத்தை இன்னொருவர் மனமாரபாராட்டுவது என்பது பனைமரத்தை ஒடித்து பல் துலக்கும் காரியம். என முந்தைய பத்திரிக்கையில் இதுபோல மோசமான அனுபவங்கள் நடந்திருக்கிறது.. அப்படிபட்ட மனிதர்கள் நிறை ந்த பத்திரிக்கை சூழலில்தான் ராதாராஜை சந்தித்தேன் . அவருடன் அந்த புதிய வேலையில் நான் எழுதிய முதல்கட்டுரையை படிததும் அவர் கண்களில் மின்னல் வெட்டு .. ...அது தீபாவாளி அன்று ஜெயில்கைதிகளின் மனோநிலைபற்றிய கட்டுரை த்லைப்பை கொடுத்து எழுத சொன்னதும் ராதாராஜ்தான்..தூரத்து வானில் மத்தாப்பூ சிதறுவதை விடியற்காலை சிறு தூறல் பொழியும் ஜன்னல் வழியாக ஒருகைதி ஏக்கத்துடன் பார்ப்பதாக துவக்கியிருந்தேன்...கைகளை பற்றி பாராட்டுதல் தெரிவித்தார். ஒருநாள் ஒரு இரவு பணியின்போது இருவரும் அந்த பத்திரிக்கையின் மொட்டைமாடியில் நின்று நட்சத்திரங்களை பார்த்தபடி காதல்கதைகளை பேசிக்கொண்டிருந்தோம் . சட்டென முகம் மாறிய அவர் மிகவும் வருததுடன் தன் காதல்கதையை சொல்லத்துவங்கினார். . பள்ளிபருவம் முடிந்த காலத்தில் பத்து வருடங்களுக்கு முன் தினமும் தன் வீதி வழி குனிந்த தலை நிமிராமல் பள்ளிசெல்லும் ஒருபெண்ணை தீவிரமாக அவர் காதலிததாகவும் பலமாதங்கள் கழிந்தபின் ஒருநாள் துணிந்து துரத்திசென்று காதல் கடிதம் தர அந்த பெண் பயந்து அத்னை வீட்டில் சொல்ல இருவீட்டுக்கும் பெரும் மோதல்வந்துவிட்ட்தாகவும் அத்ன்பிறகு தான் சென்னை வந்த கதையைய்யும் சொன்ன அவர் இது நடந்து எட்டு வருடமாகிவிட்டது. என்னால் இன்னும் அந்த பெண்ணைமறக்க முடியவில்லை இத்தனைக்கும் அவளிடம் ஒருவார்த்தையும்ம் பேசினது கூட இல்லை என்றும் விசனப்பட்டு கண்கலங்கினார். இயல்பில் சற்று முரட்டுசுபாவம் கொண்ட ராதாராஜுக்குள் இப்படி இரு மென்மையான பக்கத்தை கண்ட நான் மிகவும் ஆச்சர்யபட்டேன் .

ஆனால் அடுத்த சில மாதங்களில் அவர் காதலித்த அந்த பெண்ணிடமிருந்து வந்த கடிதத்துடன் மகிழ்ச்சியில் கண்கள் பனிக உணர்ச்சிவசப்பட்டவராக என்னிடம் வந்தார் .எந்த பெண் அவரதுகடித்தை வாங்காமல் வீட்டில் சொல்லி சண்டை வர காரணமாக இருந்தாரோ அதே பெண்ணிடமிருந்து தன் அனபை தெரிவித்து முதன்முதலாக அலௌவலக முகவரிகு ஒரு க டிதம். ராதாராஜின் நண்பரதுமனைவியும் அந்த பெண்ணும் ஒரே கான்வெண்டில் டீச்சர் வேலை செய்ய்போய் அத்ன் வழியாக அப்பேண்ணுக்குள் அதுவரை இருந்த குற்ற வுணர்ச்சி காதலாகா மாறியிருக்கிறது விளைவு இக்கடிதம் .வாழ்வில் திருமண்ம் செய்தால் நீங்கள் தான் என் கணவ்ர் என கடிதம் எழுதிய அப்பெண் கையோடு ராதாரஜை ஊருக்குவரவழைத்து அவருடன் முதல்சந்திப்பே திருமணம் என்ற நிலை. இப்படியாக பலத்த எதிர்ப்புக்கிடையில் தன் மனைவியை காதல்மணத்துடன் கைபிடித்தார்.

அவ்வமயம் அவரை அடிககடிடசந்திக்க அவரும் திருவேங்கி மலை சரவணன் தற்போது குமுதம் குழுமத்தில் ப்ணி புரிபவர் ...மிகச்சிறிய வயதில் ஆசிரிய பொறுப்பிற்கு வந்துவிட்டீர்கள் என ஆச்சர்யப்படுவார் .. சரவணன் ராதராஜை அழைத்துக்கொண்டு ஒரு முக்கிய விஐபி யை அறிமுகம் செய்வதாக் அழைத்துசென்றார் .ராதாராஜ் என்னையும் நீங்களும் வாங்க என என்னையும் அழைத்துக்க்ண்டார் . அந்த விஐபி ஹாக்கி கேப்டன் பாஸ்கர். முதன் முதலாக ஒரு பிரபலத்தை அப்போதுதான் நெருங்கி பார்க்கிறேன் .என்னை ஒரு சகோதர பாங்கில் அவர் அன்று என்னை அவர் நடத்தியவிதம் இன்று வரை எனக்குள் ஆழமாக பதிய காரணமாக இருகிறது.


அதன்பிறகு இருவரும் ஒரு பத்திரிகை வழக்கு நிமித்தம் ஜெவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு கவுரவ சிறைக்கைஅதிகளாக பத்னைந்து நாட்கள் வாசம் செய்தோம் . முதல் குழந்தை பிறந்தபொது ஒரு மனஸ்தாபத்தில் பத்திரிக்கை அலுவலகத்துக்கு வ்ராமல் இருந்தார் அவருக்கான் மருத்துவா செலவுக்கன பணத்தை முதலாளியிடமிருந்து நான் வாங்கிசென்று கொடுத்தேன் ..அத்ன் பிறகு எனது பாதை திசை திரும்பியது அவருக்கும் குடும்பம் குழந்தை என்று வந்தபின்சினிமா கனவை துறந்து சினிமா பத்திரிக்கையாளராக மாறினார் .


எப்போதாவது வழியில் சந்திப்போம்...அல்லது ஏதேனும் சினிமா ப்ரீவியூவில் .. நலமா என விசாரிப்போம் .வழக்கம் போல பாக்கெட்டில் இருக்கும் சீப்பை எடுத்து பைக் கண்னாடியில் முகம் பார்த்தவாறே வழக்கமான கேலியும் கிண்டலுமாக பேசுவார். எனது வளர்ச்சிகளை ஆர்வத்துடன் விசாரிப்பார். நாயகன் தொடர் விகடனில் எழுத துவங்கி அது வரவேற்பை பெற்ற போது என் முன்னமே பலரிடமும் அஜயன் பாலாவுக்கு நான் ஆசிரியாரா இருந்தேன் அப்பவே அட்டகாசாமா எழுதுவார் எனக்கூறி நான் கூட மறந்த செய்தி ஒன்றை நான் எழுதியவிதம் குறித்து வியந்து பேசுவார்.

படபடவென உணர்ச்சி வசப்படுவார். கோபம் வந்தால் அவரது முகம் சட்டென சிவந்து விடும். கோபமாக பேசிவிட்டு பின் வருத்தப்படுவார் இத்னால் பல நண்பர்களை இழந்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் கூட சித்திரம் பேசுதடி வெளியான சமயத்தில் ஒரு மனக்கசப்பு நேர்ந்தது. அப்போது ஒரு படப்ரீவியூ ஷோவில் என்னிடம் மூர்க்காமாக நடந்துகொண்டார் .வழக்கமாக அவர் முன் சிரித்து மழுப்பி நகர்ந்துவிடும் நான் தொலைபேசியில் அவரை அழைத்து கடுமையாக பேசிவிட்டேன் . மறுநாள் காலை எனக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருந்தார் . நான் எடுக்கவே இல்லை. அத்ன் பிறகு வேறு எண்ணிலிருந்து அழைத்த ராதாராஜ் தன் அப்படி நடந்தமைக்காக குழந்தைபோல் மன்னிப்பு கேட்டார் .

அவருக்கும் எனக்குமான நட்பு அத்த்னை பிற்பாடான் எனது நட்பு வட்டத்தோடு ஒப்பிடும் போது அத்த்னை பரந்து பட்ட்தாக இல்லாவிட்டாலும் சென்னைக்கு வந்த பதட்டம் நிறைந்ததுவக்க காலங்களில் அவர் எனக்கு நல்ல ஆலோசகராகவும் நண்பனாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.இதையெல்லாம் நான் இங்கே இப்ப்து நினைவு கூர காரணம் என்ன என உங்களுக்குள் கேள்வி எழலாம் .

சென்னையில் சினிமா கனவுகளுடன் வந்து நிரந்தரமில்லாத பத்திரிக்கைகளீல் வாழ்க்கையை துவங்கி பிற்பாடு கடைசிவரை ஒரு நிலையான அங்கீகாரத்திற்கு தவிக்கும் எத்த்னையோ பத்திரிக்கை நிருபர்களீல் அவரும் ஒருவர். குறைந்தபட்சம் அவர் பெயர் இத்ன் காரணமாகவாவது பதிவாகட்டுமே என்பதுதன் நான் இதனை எழுத காரணம் . மேலும் எனக்கு தெரிந்த ஒருவன் இந்த உலகில் கனவுகளுடன் வாழ்ந்தான் மறைந்தான் என்பதற்கான பதிவே இல்லாமல் அவன் வாழ்ந்த தடம் சுத்த்மாக இல்லாமல் மறைந்து போவது எனக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது ... குறைந்தபடசம் இந்த பதிவு அந்த குறையை பொக்கும் என்ற நம்பிக்கை காரணமாக இதை எழுதுகிறேன் .அவரை போன்றவர்களின் வாழ்க்கை சீரழிவதற்கு பிரபலங்கள் அனைவரும் குறிப்பாக திரைத்துறையினர் அனைவரும்கூட ஒருவகையில் குற்றவாளிகள்தான். தொடர்ந்து தங்களை பிரபலபடுத்திக்கொள்வதற்காக இது போன்ற பத்திரிக்கையாளர்களை பயன்படுத்தி அவர்களை தினக்குடியர்களாக மாற்றுபவர்கள் அவர்கள் வீடு போய்சேர்வதுகுறித்து இம்மியளவும் கவலைப்படுவதில்லை. இதற்காக இது போன்ற பத்திரிக்கையாளர்களுக்காக இந்த திரையுலகம் (பெப்சி) உடனடியாக ஒரு பத்திரிக்கையாளர் மறு சீரமைப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் அல்லது பெப்சியில் சினிமாபத்திரிக்கையாளர் சங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் இதுதான் இதுபோன்ற துர்மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதிலிருந்து தடுக்க ஒரே வழி

அவரது மனைவி குழந்தைகள் இன்று அனாதைகளாக விடப்பட்டுள்ளனர்.... சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் அதற்குமுன் ஒருவார்த்தை கூட பேசியிராத காதலனுக்காக வீட்டைவிட்டு வெளியில் வந்து எனது நண்பனை கரம்பிடித்த அநத சகோதரி இன்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தனைத்துவிடப்பட்டுள்ளார். அவரது மனம் என்ன துயரப்படும் என்பதை நினைத்து பார்த்தால் வேத்னையாக இருக்கிறது.

சில பத்திரிக்கை நண்பர்கள் முயற்சியின் பேரில் அவர்களுக்கான நல நிதி திரட்டியிருக்கின்றனர். நடிகர்கள் விவேக் கஞ்சாகருப்பு உள்ளிட்ட திரைத்துறை சார்ந்தவர்கள் சிலர் இதற்கு நிதி உதவி அளித்துள்ளனர். இக்காரியத்தில் ஈடுபட்டதன் மூலம் கசடுகள் நிறைந்த இப்பெரு நகரத்தில் மனிதம் உயிர்த்திருக்கிறது என்பதை சில பத்திரிகை நண்பர்கள் நிரூபிக்கசெய்துள்ள்னர் . அவர்கள் அனைவரும் மனிதனாக பிறந்தமைக்கான பேற்றை இச்செயல் மூலம் அடைந்துவிட்டதாக உணர்கிறேன்

July 3, 2010

உலக சினிமா வரலாறு : ராபர்ட் பேசும் மவுனத்தின் மொழி ;Robert Bresson(1901-1999)











நீங்கள் ஆழ்நிலை தியானம் செய்தது உண்டா. இல்லை என்றால் கவலை வேண்டாம் . ப்ரெஸ்ஸான் திரைப்படங்களை பாருங்கள் படம் அத்தகைய அனுபவங்களுக்குள் தானாக உங்களை இழுத்துச்சென்றுவிடும் .

ராபர்ட் ப்ரெஸ்ஸான்.

இத்த்தாலியின் கவித்துவ ஆளுமைகளான பெலினி ஆண்டோனியோனி ஆகியோருக்கு இணையான பிரான்ஸ் தேசத்தின் காட்சிக்கவிஞர். கவித்துவங்களுக்கும், தத்துவங்களுக்கும் இலக்கியங்களுக்கும் தனது படைப்புகளில் முக்கியத்துவம் கொடுத்தவர். அதன் வழியாக தனித்த இடததை உலக சினிமாவில் தேடிக்கொண்டவர்.

உலகசினிமாவரலாற்றில் அளப்பரிய சாத்னைகளை நிகழ்த்திய ப்ரான்சில் எழுந்த புதிய அலை சினிமாவுக்கு சற்று முன் வந்தவர் ராபர்ட் ப்ரெஸ்ஸான். இன்னும் சொல்லப்போனால் புதிய அலை உருவாக வழி செய்தவர் அல்லது அத்ற்குகட்டியம் கூறியவர் என்றும் கூட ப்ரெஸ்ஸானை கருதலாம். ஆனால் அக்காலத்தில் அவர் ஒருதிரைப்பட இயக்குனராக உலக அரங்கில் பெயர் வாங்க காத்திருந்த சமயத்தில் சற்று முன்பாக சட்டென எழுந்துவிட்ட புதிய அலைக்கு கிடைத்த வரவேற்பு இவரது புகழை ஒளிமங்க செய்துவிட்ட்து.கிட்ட்தட்ட புதிய அலை முழுவதுமாக ஓய்ந்த பின்தான் சினிமா விமர்சகர்களால் ராபர்ட்ப்ரெஸ்ஸான் உயிர்ப்பிக்கப்ப்ட்டார்.ஆனால் அப்பொழுது அவரது உச்சநிலைகள் அனைத்தும் இழந்து படைப்பு திறன் சமநிலைக்கு வந்திருந்தன.

கிட்டத்ட்ட 98 வயது வ்ரை வாழ்ந்த் ப்ரெஸ்ஸான் தன் வாழ்நாளில் மொத்தமாக எடுத்த படங்களின் எண்ணீக்கை வெறும் பதிமூணு மட்டுமே வெறும் பதின்மூன்றே படங்களில் தன் தனித்த்ன்மையை அவர் அழுத்தமாக நிறுவியமைக்கு ஒரே காரணம் அவர் கேமராவை தன் மனதைப்போல உணர்வுகளை நேரடியாக பிரதிபலிக்கும் ஊடகமாக பயனபடுத்தியிருந்த விதம்தான்.மவுனமான காட்சி நகர்வுகளினூடே அவர் பார்வையாளர்களின் மனதுக்குள் சிம்பொனியின் இசையை உணரவைத்தார்.
மேலும் அவரை வளர்த்த கத்தோலிக்கமனதின் சாரமானது அவரது உள்ளத்தில் ஊறியிருந்த காரணத்தால் அவரது காமராக்கள் காணும் பொருள்களில் யாவும் கடவுளைத்தேடவைத்தது. அவரது திரைப்படங்களில் காமிரா கதாபாத்திரங்களையும் கடந்து எப்போதும் சதா ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருப்பதை நம்மால் உணரமுடியும். இயற்கையின் ரகசியங்கள் குறித்த அந்த தேடல் தான் அவரது திரைப்படங்களிந்தனித்துவத்துக்கு முக்கியகாரணமாக விளங்குக்கிறது.


1901ல் பாரீசில் பிறந்த ப்ரெஸ்ஸானின் பால்யகாலம் கத்தோலிக்க மதத்தில் முழுமையாக ஊறியிருந்தது.மிகவும் கண்டிப்பான குடும்பத்தில் வளர்ந்ததால் பெலினி ஆண்டோனியோனி போலவெ மவுனமும் பயமும் அவரிடம் இயல்பாக குடிகொண்டன. பதின் வயதில் செவ்வியலையும் தத்துவத்தையும் படித்தார்.இதன் காரணமாகவோ என்னவோ பிற்காலத்தில் தன் உதவியாளர்களிடம் பேசும்போது கூட இயக்குனராக வேண்டுமானால் திரைப்பட கல்லூரியில் படிப்பதைக்காட்டிலும் தத்துவம் அழகு, கலை இலக்கியம் ஆகியவற்றை படிக்குமாறு வலியுறுத்தினார்.வாழ்வில் மிகச்சிறந்த ஓவியனாகவேண்டும் என லட்சியத்தை கொண்டிருந்தவர் வாழ்வின் விபத்து காரணமாக அருங்காட்சியக புகைப்படக்காராராக பணிசெய்ய நேர்ந்தது .

1934ல் தன் முதல் குறும்படமான public affairs படத்தை இயக்கினார் தொடர்ந்து இரண்டாம் உலக போர் பிரான்சை சுற்றிவளைத்தபோது போர்க்கால கைதியாக முகாமகளில் சிறைபிடிக்கப்பட்டார் .இந்த அனுபவங்கள் தான் அவரது இரண்டாவது படமான எ மேன் எஸ்கேப்டு 1956ல் வர காரணமக இருந்தன. இப்படம் அவருக்கு சுமாரன வெற்றியையும் அங்கீகாரத்தையும் உருவாக்கிக்கொடுதது .ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கிய முதல் திரைப்படம் அவருக்கு பெரும் தோல்வி .1951ல் எடுத்த அந்த திரைப்படம் Diary of a Country Priest
.அந்த தோல்வி அவருக்குள் பெரும் தோல்வியை உணரவைதது. உண்மையில் அவர் அப்படத்தின் மூலம் தான் புதிய கதையாடலை சினிமாவுக்கு தந்திருப்பதாக நினைத்தார். ஆனால் அப்படம் தோல்விக்கு பலகாரணங்கள் இருந்தன. மூன்றாவது திரைப்படம் 1959ல் வெளியானPickpocket . ப்ரெஸ்ஸானின் இப்படம் வெளியானபோது பிரான்சில் புதிய அலையிந்தாக்கம் அதிகமாக இருந்தது. ட்ரூபோவும் கோடார்த்தும் பிரான்சில் கடவுள்களாக மாறிவிட்டிருந்தனர். அந்த வெளிச்சத்தில் ப்ரெஸ்ஸான் திறமை உலக அரங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.
அதன் பிறகு 1962ல் The Trial of Joan of Arc 1966ல் Au hasard Balthazar
போன்றபடங்கள் இன்றளவும் உலகசினிமா அரங்குகளில் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் தன் தனித்தன்மையை பறைசாற்றுகின்றன.இவற்றுள் பல்தாஸர் படம் ஒருகழுதைக்கும் இளம் பெண்னுக்குமான் உறவை பேசும் திரைப்படம். இதில் படம் முழுக்க கேமாரா கழுதையின் பார்வையில்
கதாபாத்திரங்களை அவதானிப்பதாக படம் பிடிக்கப்பட்டிருந்தது சிறப்பு.


பிற்பாடு வெங்கட்சாமிநாதன் திரைக்கதையில் ஜான் ஆப்ரஹாம் எடுத்த அகரஹாரத்தில் கழுதை எடுப்பதற்கு இத்திரைப்படம் ஒரு அகத்தூண்டலாக இருந்திருக்கிறது எனபதை இருபடத்தையும் பார்பவர்களால் சுலபமாக உணரமுடியும்.



ப்ரஸ்ஸான் கண்கள் பாசாங்கற்றவை அவை வெறும் குழந்தையின் கண்களோடு காமிரா மூலம் காட்சிகளை தரிசிக்கின்றன. அவர் ஒருபோதும் பாத்திரங்களை பார்வையாளனின் இச்சைக்காகவோஅல்லது கதையை விவரிப்பதற்காகவோ பயன்படுத்துவதில்லை. காட்சிகளும் கதையீன் சரடை தாங்குவதில்லை.கிடதட்ட எல்லாமே தற்செயலாய் அவரது திரைப்படத்தில் நிகழ்கின்றன. ஒவ்வொருஷாட்டும் கூட முந்தின ஷாட்டின் தொடர்ச்சியை பிந்தொடர்வதில்லை.அவற்றைபற்றிகவலைப்படுவதுமில்லை.தன்னையல்பாக துண்டுதுண்டாக இயக்கம் கொள்கின்றன. அவர் நடிகரை பயன்படுத்துகிறபோதும் இதே பாணியையே பின்பற்றுகிறார். நடைகர்கள் என்ன கதாபத்திரம் என்பதை பற்ரி முழு ஓர்மையுடன் இயங்குவதில்லை. சாலையில் நடந்து செல்லும் ஒருவன் எத்த்னை வித்மான எண்ணக்களுடன் நடந்து செல்கிறானோ அதுபோலவே அவர்களும் வந்துசெல்கிறார்கள் . ஆனால் அவரது படத்தை பார்க்கும் ஒருவன் தன்னியல்பாக மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல பிந்தொடர்கிறான்அவர் இயக்கத்தில் வெளியான் நான்க்காவது திரைப்படமான பிக்பாக்கேட்டில் பிக்பாகெட் திருடனாக நடித்த நாயகன் நம்மை கவர்வதற்காக எந்த சாகசமும் செய்வதில்லை. ஆனால் தன்னியல்பாக அவனது உளவியல் நமக்குள் இயக்கம் கொள்ள நாமும் இன்னொரு திருடனாக் அல்லது அவன்மேல் பரிதாபம் கொண்டவனாக அவனை பின்பற்றி நடக்கிறோம். அதுபோல அவர்படங்களில் நடிக்கும் பாத்திரங்கள் அரிதாகத்தான் நம்மை நோக்கி திரும்புகின்றன. அவை இன்னும் சொல்லப்போனால் கேமாரவை நெரடியாக பார்ப்பதுமில்லை. அவரை பொறுத்தவரி நடிகன் ஒருகருவி அவ்வளவே.

இதன் காரணமாகவே ப்ரெஸ்சான் முறையாக பயின்ற நடிகர்களை தன் திரைப்படங்களுக்கு பயன்படுத்துவதில்லை. அவன் நடிக்கவேண்டியவிஷ்யங்களை சத்தம் மவுனம் கேமராகோணங்கள் மற்றும் நகர்வுக்கு பகிர்ந்து தந்து அவற்றின் மூலம் தன் கலையம்சத்தை மீள் செய்வார்.

பிரஸ்ஸோனின் திரைப்படங்கள் இத்தாலியின் நியோரியலிசம், மற்றும் பிரான்சின் புதிய அலை இரண்டுக்கும் இடைப்பட்ட படங்களை அவற்றின் கூறுகளை உள்வாங்கியவையாக உலகசினிமாவில் த இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றன.


ப்ரஸ்ஸானை ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்க அணுகினார். என் கடைசி படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா என ப்ரெஸ்ஸான் கேட்க பார்த்துவிட்டேன் என அவர் பதில் கூற உடனெ ப்ரஸ்ஸான் அதற்கு பிறகு நாம் பேச என்ன இருக்கிறது ஒருவிடயமும் இல்லை என கூறியபடி விலகிசென்றிருக்கிறார். ப்ரஸ்ஸானை அவரது திரைப்படங்களை இங்கிருந்துதான் நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்
( அடுத்த இதழில் பிரான்சில் எழுந்தது புதிய அலை) .

June 29, 2010

"மயக்கும் மாலை பொழுதே நீ போ,போ --விந்தன் : நினைவு தினம் இன்று (ஜூன் 30)




பிறப்பு: 22-09-1916

தமிழ் சிறுகதை உலகில் ஜெயகாந்தனுக்கு முன்னோடி,புதுமைப்பித்தனுக்கு பிறகு எளிய மக்களை கதாபாத்திரங்களாக தன் கதைக்குள் உலவவிட்டவர். எழுத்தாளர் கல்கியால் கண்டெடுக்க பட்டவர். இவரது கதைகளில் வரும் பாத்திரங்கள் படும் சிரமத்துக்கெல்லாம் தானும் ஒரு காரணமோ என கல்கியை தன் கதைகள் மூலம் புலம்ப வைத்தவர். நாவல் நாடகம் திரைப்படம் வாழ்க்கை வரலாறு என எழுத்தின் பல்வேறு பரிணாமங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்.

விந்தன்

செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் எனும் சிற்றூரை சேர்ந்தவர்.தந்தை வேதாசலம்,தாயார் ஜானகியம்மாள்.பெற்றோர் இவருக்கு இட்டபெயர் கோவிந்தன்.எழுத்துக்காக தன் பெயரிலிருந்த கோ வை நீக்கிவிட்டு வெறும் விந்தன் ஆனார்.வறுமை காரணமாக எட்டாம் வகுப்பை தாண்டி படிக்க இயலாத சூழல்.தந்தையோடு கருமான் பட்டறைக்கு சென்றார்.அங்கு சம்மட்டியை துக்கி அடிக்க இவரது பூஞ்சை உடம்பு ஒத்துழைக்கவில்லை.பின் இரவுபள்ளியில் படித்து கல்வி அறிவை பெருக்கிக்கொண்டார்.உடன் ஓவிய கல்லூரியில் பயிலும் எண்ணம் இருந்தாலும் குடும்ப சூழல் இவரது கனவுகளை கலைத்தது.

பின் டி இராஜாபாதர் எனும் நண்பர் மூலம் மாநில அரசின் தமிழரசு அச்சகத்தில் அச்சுகோர்ப்பவராக சேர்ந்தார்.அப்போது அவருடன் அங்கு பணீயாற்றியவர்கள் பிற்காலத்தில் அமைச்சர் என்.வி.என் நடராசன் என்றும்,ம.பொ.சி,என்றும், நாட்டிய கலைஞர் நட்ராஜ் என்றும் அழைக்கப்பட்டனர்.ஆனால் அந்தசமயத்தில் அவர்களோ அல்லது தானோ சமூகத்தின் முக்கிய நபர்களாக மாறபோகிறோம் என்பது விந்தனுக்கு தெரியவில்லை..

பிறகு ஆனந்த போதினி,தாருல் இஸ்லாம், மற்றூம் ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் பணிபுரிந்து வந்தவருக்கு கலகி இதழில் சேர்ந்ததும் வாழ்க்கை சற்று மாற துவங்கியது. அங்கு அவர் சாதாரண அச்சுக்கோர்க்கும் தொழிலாளி. அச்சு கோர்த்தபின் பலமுறை மாற்றி எழுதும் பழக்கமுள்ள கல்கியின் கதைகளை விந்தனும் சலிப்பே இல்லாமல் மீண்டும் மீண்டும் அச்சு கோர்த்து தருவார். ஒவ்வொருமுறையும் சலிக்காமல் தன் எழத்துக்களை அச்சுகோர்க்கும் அந்த இளைஞன் மீது கல்கிக்கு கிட்டதட்ட காதலே வந்தது. யார் அப்படிப்பட்ட ஆர்வம் கொண்ட உழைப்பாளி அவனி நான் பார்க்க வேண்டுமே என நிர்வாகிகளிடம் கூற விந்தன் அழைத்து வரப்பட்டார் கலகி முன் . இனி நீ என்னோடு உதவி ஆசிரியராக இரு என கல்கி கூற அன்றே விந்தன் வாழ்வில் மாறுதல் உண்டானது அதுவரை அச்சு மையால் ஈரமான அவரது விரல்கள் பேனா மையால் நனைய துவங்கியது.

அதன் பிறகு சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலைகள், அவர்கள் படும் சிரமங்கள் துயரங்கள் விந்தனின் பேனாவுக்குள் இறங்கி அவை நல்ல சிறுகதைகளாக மாற்றம் கொண்டன.தொடர்ந்து விந்தனின் இருப்பத்தைந்து கதைகள் 'முல்லைக்கொடியாள்'' எனும் தலைப்பில் முதல் நூலாக வெளியாகியது.

இந்த "முல்லைக்கொடியாள்" தொகுப்பிற்கு தமிழ்வளர்ச்சிக்கழகம் முதல் பரிசு கொடுத்தது. விந்தனின் முதல் நாவல், "பாலும் பாவையும்". இந்நாவல் கல்கியில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கண் திறக்குமா,அன்பு அலறுகிறது ,காதலும் கல்யாணமும்,மனிதன் மாறவில்லை,சுயம் வரம் போன்ற நாவல்களை எழுதினார்.மட்டுமல்லாமல் எம்.கே.டி பாகவதர்,எம்.ஆர் ராதா ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை பின்னாளில் தினமணீயில் தொடராக எழுதினார்.

இக்காலங்களில் அவரது நெருங்கிய சகாக்களாக கவிஞர் தமிழ் ஒளியும் ,எழுத்தாளர் ஜெயகாந்தனும் இருந்த்னர். பொழுது போகாத நேரங்களில் மூவரும் சென்னை நகர வீதிகளில் உலகை வெல்லும் கனவுகளுடன் இலக்கியம் பேசிதிரிந்தனர்.மூவருக்குள்ளும் கடும் பகையும் கடும் நேசமும் ஒன்றுடன் ஒன்றாக பிரிக்க முடியாமல் பின்னிக்கிடந்த்ன

கல்கி வேலைக்கு பிறகு விந்தன் பத்தாண்டுகள் திரைப்படத்துறையிலும் பங்கேற்றார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமான "கூண்டுக்கிளி"க்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் விந்தனே . இதைத்தவிர, "அன்பு", "குழந்தைகள் கண்ட குடியரசு" மணமாலை,பார்த்திபன் கனவு போன்ற படங்களிலும் கதை திரைக்கதை வசனம் என பலவாறாக பங்களித்துள்ளார். . "மயக்கும் மாலை பொழுதே நீ போ,போ -- இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா" மற்றும் "இதயவானில் உதய நிலவே! எங்கே போகிறாய் -- நீ, எங்கே போகிறாய்?" போன்ற காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் விந்தன் எழுதியவை.

இறப்பு:30-06-1975

குறிப்பு:
ஆப்ரா மீடியா நெட்வொர்க்ஸ் மூலம் அண்மையில் தமிழ் ஆங்கிலம் என இருமொழி நூலில் வெளியான எனது செம்மொழிசிற்பிகள் எனும் நூற்று பதினைந்து தமிழ் அறிஞர்கள் பற்றிய தொகுப்பு ஆவணத்திலிருந்து இக்கட்டுரை எடுத்தாளப்ப்ட்டுள்ளது

May 27, 2010

கொலைக்கு பின் சில தத்துவகாரணங்கள்-சிறுகதை

அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன்.மிகவும் சிறியவன் அவன் .தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான் பெருந்துக்கம் அவனை மிகவும் அலைக்கழித்திருந்தது.கொலைக்கு அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம் என நான் நண்பனிடம் கூறினேன்.நண்பன் மறுத்தான் இல்லை இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதுதான் . வீட்டுநாயை கொல்பவன் மனிதனேஅல்ல.அவனை நண்பனாக பெற்றமைகாக வெட்கப்படுகிறேன் என்றான். தேவையில்லாமல் நீஅவனுக்கு காம்யூவின் அந்நியன் முகச்சாயல் தரவேண்டாம். இதோபோலீசார் அவனைத்தேடிக்கொண்டிருப்பதாக செய்திதாள்கள் பேசுவதைபார். அவன் பிடிபட்டுவிடுவான். எல்லாகொலைகளுக்குபின்னாலூம் தத்துவகாராணங்கள் இருக்கத்தான் செய்யும் .நியாயங்களை கூறாதே எனக்கூறி நண்பன் என் வாயை அடைத்தான்.

இருவரும் அந்தவீட்டின் வெளிப்புறத்தில் தோட்ட்டத்துக்குவந்திருந்தோம். கொலைநடந்தவீடுபோல தெரியவில்லை. உள்ளே அவ்வப்போது யாரோ சிரித்துக்கொண்டிருக்கும் சப்தம் வேறு கேட்டது.நண்பனது மனைவியின் தங்கை வெளியேவந்து எங்களை பார்த்தாள்.சுமாரன அழகு .அவளை அருகேவரச்சொல்லி அழைத்தேன். ஒருபழைய சினிமாபாடல்போல நடந்துவந்தாள். அவ்ள்முகத்தில் மவுனம் . அவள் சொன்னதகவல் என் நண்பனுக்கு ஏற்புடையதாக இல்லை.

நான் எனது நண்பனுக்காக பரிதாப்பட்டேன்.கல்லூரிக்காலத்தில் கால்பந்தாடத்தில் அசுரன் அவன். நாங்கள் மூவரும் இதரகல்லூரிகளில்நடக்கும் போட்டிகளுக்கு செல்லும்போதெல்லாம் அந்தபுதியநகரத்தின் மாலப்பொழுதை உற்சாகாமாக முத்தமிட்டு மகிழ்வோம். ஒருமுறை அப்படி இளம் நகரத்துக்குசென்றபோதுதான் சாலையின் எதிர்கொண்ட பெண்ணின் ஒரே புன்னகையில் தன் எதிர்காலவாழ்வைதீர்மானித்துக்கொண்டான். அவளும் நறுவிசான பெண்தான். அவளது புன்னகைவிலைமதிப்பற்றது. தேனிலவுக்கு சென்ற போது ஒருமுறை அவள் சற்று அள்வுமிகுதியுடன் புன்னகைக்கபோய் படகுமுன் அனேக பறவைகள் கூடிவிட்டதாக நண்பன் பெருமை பேசினான். உண்மையில் அவளிடம் அத்தகையதொரு மந்திரச்க்தி குடிகொண்டிருந்தது. ஆனாலும் அவ்ளுக்குஎன்னவோ மருமகளாக வந்ததிலிருந்து வீட்டின் வளர்ப்புநாயை பிடிக்கவில்லை.உடன் நாய்க்கும் அவளை பிடிக்காமல் போய்விட்டது. நண்பனின் தாய்க்கு அவ்வப்போது மருமகள் பூசும் நறுமண திரவியங்கள் எரிச்சலைதந்திருக்கின்றன. ஆனால் அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் நாயை மருமகளின் முன் அடிக்கடி உச்சி முகர்வதும் கொஞ்சிகுலவுவதுமாக இருந்திருக்கிறாள் .இதனாலேயே நண்அனின் மனைவிக்கு நாயின் மேல் தீராதவெறுப்பு. ஒரு நாள் நண்பனின் தாய் புற்றுநோய் அவதிதாளாமல் இறந்துபோக தனது தாயின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தநண்பன். நிம்மதி யற்றவனாக உழன்றுகொண்டிருந்தான். வீட்டுவாசலில் தனிமையில் கிடந்த நாய்வேறு அவனது துக்கத்தை அதிகபடுத்திக்கொண்டே இருந்தது. இதுதான் நாயை கொலைசெய்ய காரணம் என அந்த மனைவியின் தங்கையும் கூறினாள் .இரவுகளில் நாயின் ஊளை அதிகமாக இருந்ததாகவும் அதுதான் அதன் மரணத்தை நண்பனின் மூலம் தீர்மானிதது என்றும் அவள் கூறினாள்.

ஆனாலும் உடன் வந்த நண்பனுக்கு இந்த பதிலில் திருப்தியில்லை.இருவரும் வெளியே புறப்பட இருந்தசமயம் போலிசால் தேடப்பட்ட நாயை கொலைசெய்த நண்பன் அவசரமாக உள்ளே வந்தான். அவனி போலிஸ் எப்படி விட்டது என நண்பன் என்னிடம் கேட்டான். அவன் எங்களை பார்த்தும் பார்காதவனாக வேகமாக மனைவியைதேடி வீட்டிற்குள் ஓடினான். நாங்கள் மவுனமாக அங்கிருந்து வெளியேறினோம்.அங்கே நாய் கட்டிவைக்கப்பட்டிருந்த சங்கிலி மறுமுனையில் வெற்று வளையத்துடன் அனாதையாக கிடந்தது.

இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ - உலக இலக்கியச் சாளரம்

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...