September 11, 2024

சொற்கள் தானே எழுதிக்கொண்ட உள் வெளிச் சித்திரங்கள் - சீனு ராமசாமி வழி - அஜயன் பாலா பாஸ்கரன்

- ஆங்கிலக்கவி வில்லியம் ப்ளேக் கவிதை பற்றி இப்படிச் சொல்கிறார் ”அது உள்ளங்கையில் எல்லைகளற்ற வெளியையும் ஒரு கணத்தில் முடிவற்ற காலத்தையும் பெயர் தெரியாத மலர் ஒன்றின் வழி பரந்த ஆகாயத்தையும் பூமியையும் உணர்த்துவதாக இருக்கவேண்டும் என்கிறார் ” உண்மைதான் மூவாயிரம் ஆண்டுகளில் இந்த தமிழ் நிலத்தில் பல சக்ரவர்த்திகள் பல சமராஜ்யங்கள் பல கோடி மனிதர்கள் கடந்து இன்னமும் நம்மோடு உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருப்பது கவிதைகள் மட்டுமே எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே …. தீதும் நன்றும் .. யாயும் யாயும் . பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மேற் சொன்ன சொற் சேர்க்கைகள் மிக எளிமையானவையே ஆனால் இவையே காலங்களை ஊடுருவும் மகத்தான ஆற்றலை தம்முள் கொண்டு சமூகத்தை வழி நடத்தியபடி இன்னும் பல தலைமுறைகளை கடக்க வல்லதாக் இருக்கின்றன இப்படிபட்ட பேராற்றல் மிக்க நெடிய தொடர்ச்சி கொண்ட தமிழ் என்னும் பெரு நதியின் படித்துறையில் இக்கவிதைத்தொகுப்புடன் நண்பரும் இயக்குனருமான சினு ராமாசாமியும் கால் நனைத்து iஇத் தொகுப்பின் மூலம் உடலில் ஈரம் பரப்பிக்கொண்டார் என்பது, ஒரு ஆச்சரயமான நிகழ்வு. மொத்தம் ---- கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கவிதைகளை நிலக்காட்சிக் கவிதைகள் , அகக்காட்சிக் கவிதைகள் என இரண்டாகப் பிரிக்க முடியும் நிலக்காட்சிக் கவிதைகளில் , காட்சி செதில்கள் ,வாழ்வின் துய்ப்புகள், .குணச்சித்தரிப்புகள் எனவும் அகக்காட்சி கவிதைகளில் . காம விகற்பங்கள் ,,மெய்மையின் தீண்டல்கள் எனவுமாக கலவையாக இக்கவிதைத் தொகுப்பு தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது என்ற போதும் . ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது ஒரு மயிலிறகு நம் முகத்தை வருடிச்செல்வதை உணர முடிகிறது தொகுப்பின் இரண்டாவது கவிதையான “அவர்கள்” கவிதையை வாசிக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட கணத்தில் சத்தமெழுப்பாத .. சிறு சலனம் கூட காட்டாத மனிதர்கள் பற்றி வியந்து பின் அவர்கள் பார்வையற்றோர் என காண்பிக்கும் அக்கவிதையின் காட்சிப் படிமம் நம்மை திடுக்கிட வைக்கிறது அது போல “அருள்” கவிதையில் அகாலத்தில் மரணமடைந்த மகனின் வெற்று உடலுக்கு அவன் அப்பாவும் அம்மாவும் தலைவழியே கண்ணீருடன் கலந்து தண்ணீர் ஊற்றும்போது கல்லூரி நாட்களின் போது காதல் தோல்வியில் செத்துப்போன பக்கத்து வீட்டு நண்பனின் மரணம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை பெரும்பாலான கவிதைகளில் தான் வாழ்ந்த மதுரையை ஒட்டிய புறநகரின் நிலக்காட்சிகளும் வெம்மை போர்த்திய மனிதர்களும் அவர்களது வாழ்வியலும் உறைந்துகிடைக்கின்றன தலைப்புகவிதையான மாசி வீதியின் கல் சந்துகள் வாசிக்கும் போது சந்தை கடக்கும் சிறுவனாக நாமே மாறிப்போவது விந்தைதான் . அதில் எதிர்கொள்ளும் மனிதர்களின் வியர்வை வாசம் அவர்கள் நிழல்;களுடன் நம்மை நம் மனதில் கடப்பது விந்தை . “அடிகுழாயில்” எனத்துவங்கும் “வெயில் தாய்” எனத்தலைபிட்ட கவிதையில் கவிஞர் பொன்னாங்கன்னி கீரைக்கட்டுகளை விற்கும் வயதான பெண் அந்த கீரைக்கட்டுகளை அடிக்குழாயில் அடித்த தண்ணீர் மூலம் கீரைக்கட்டுகளில் தண்ணீர் தெளிப்பதை காண்பிக்கிறார். அப்போது அந்த வயதான தாய்க்கு பருவத்தில் தன் தந்தை தன் தலைக்கு நீரூற்றிய காட்சி நொடிப்பொழுதில் வந்து போகிறது . இதை திரை மொழியில் “இண்டர்கட் ஷாட்” என்பார்கள் . அந்த ஒரு கணம் இக்கவிதைக்குள் பல கதைகளை நம் முன் காட்டிவிட்டுச் செல்கிறது. தொடர்ந்து இக்கவிதையின் கடைசி வரியில் செருப்பு அணியாத் பாதங்களுடன் நடந்துசெல்லும் பொன்னாங்கன்னி கீரை விற்கும் அந்த தாய் கீரையை கூவி விற்பனை செய்துகொண்டு செல்வதாக காட்டும் சித்திரம் ,ஓர் காவியச்சித்திரம் என்றால் மிகையில்லை நற்றிணையில் “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,” எனத்துவங்கும் சங்கப் பாடல் ஒன்றில் புன்னை மரத்தை ஒரு தலைவி தன் தங்கை என விவரித்து தலைவனுக்கு சொல்லும் ஒரு கவிதையைபோல இதில் வயதான பெண் தன் பருவமெய்தி தன் தந்தை தன் தலையில் ஊற்றிய காலத்தை நினைத்துப் பார்க்கிறார் ஒரு கவிதை வாசகனுக்குள் எவ்விதமான அகப்பயணத்தை தூண்டவேண்டும் என்பதற்கு இக்கவிதை ஒரு சிறந்த சான்று இது போல இத்தொகுப்பு முழுக்க பல கவிதைகள் எளிய மக்களின் பாடுகளை வார்தைகளை வலிகளை நோயை விவரித்து ஆங்காங்கே அதிர்வலைகளை உண்டாக்குக்கிறது. இப்படியெல்லாம் யோசிக்கும் ஒருவன் நான் பார்த்து பழகிய நண்பன் சீனு ராமசாமிக்குள் எங்கே இருந்தான் என யோசிக்க வைக்கும் அளவுக்கு பல இடங்களில் சமூகத்தின் மீதான கோபம் கூரான வார்த்தைகளுடன் கவிதையாக தெறிக்கிறது . இது போன்ற பாடு பொருள் பிரதானமாகவும் உருவகம், உத்தி ஆகியவை இரண்டாம் நிலையிலும் கொண்அ பிலேயின் பொயட்ரி வகை சார்ந்த கவிதைகள் இத் தொகுப்பில் அதிகம் இருந்தாலும் உருவகம் உல்லுறை இறைச்சி படிமம் ஆகியகூறுகளைக் கொண்ட அடர்த்தியான கவிதைகளும் கவிஞரின் கவிச் செழுமைக்கு சான்றாக இருக்கின்றன.. அவற்றுள் கடபாரையை உருவகமாக் பயன்படுத்தி அவர் எழுதியிருக்கும் கூலி ஆள் எனும் கவிதை கன்க்கச்சிதம் . கேலிச்சுத்திரம் போல உருவாக்கப்பட்டிருக்கும் இக்கவிதை கவிஞர் கண்டராதித்தனின் கால் மேல் கால் போட்டு கடந்து போனான் என முடியும் சிறந்த கவிதை ஒன்றின் வரியை ஞாபகப்படுத்தி நம்முள் நகைப்பை உருவாக்க்வதில் கவிஞர் முழு வெற்றி பெற்றுவிடுகிறார் அதே போல சீனுராமசாமியை சிறந்த கவிஞன் என உரக்க சொல்லி அழைக்கும் கவிதைகளில் ஒன்று புகைப்படம் .இதில் நாம் எடுக்கும் எந்த புகைப்படம் நம் அஞ்சலிக்கு தேர்வாகும் எனற கேள்வி சட்டென ஒரு மின்னலை உருவாக்கி விட்டு நம்மை அந்தகாரத்தில் ஆழ்த்திவிடுகிறது . இப்படி எடுத்துச்சொல்லி ஆச்சரயப்டும் படி பல கவிதைகள் மிக சிறப்பாக வடிவம் கொண்டிருக்கின்றன தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக வெயில் தாய் , புகைப்படம் கூலி ஆள் போன்ற கவிதைகள் என் தேர்வில் இருந்தாலும்” உண்மை” எனும் தலைப்பில் சீனு ராமசாமி எழுதியிருக்கும் ஒரு கவிதையை என்னால் அத்தனை சுலபத்தில் கடக்க முடியவில்லை பட்டினத்தார் பாணியில் உற்றவர் கை விடுதல் அல்ல எனத்துவங்கி வரிசையாக கை விடுதல் அல்ல வற்றை பட்டியலிட்டுக்கொண்டே வருபவர் இறுதி வரியில் ஏழையின் உடலை அவன் உறுப்புகள் கைவிடுதல் மகா துயரம். என முடிக்கும் போது மிகபெரிய வலி நம் இதயத்தை கவ்விக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை அகிராகுரோசாவின் “ரெட் பியர்ட்” படத்தில் நோயுற்ற உடல்கள் வாதையில் புலம்பும் அந்த மரண ஓலங்கள் சட்டென கண் முன் தோன்றுகின்ரன இந்த மொத்த தொகுப்புமே இந்த ஒரு கவிதைக்குத்தானோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு இக்கவிதையின் வழி நம்மை மனித அவலத்தை உணர்த்தி பெரும் தியானத்துள் அழைத்துச்செல்கிறார் மொழியின் பயணத்தில் இந்தக் கவிதைகள் என்ன இடம் கொள்ளும் என என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் வாசிப்பவன் மனதில் இத்தொகுப்பு பெரும் வெளிச்சத்தையும் உயர்வையும் மேன்மையையும் கற்றுத்தந்து ஒரு அங்குலமேனும் அவனை உயர்த்தி நவீன உலகத்துக்கு அவசியம் தேவைப்படும் புதிய மனிதனாக மாற்றும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை இத்தொகுப்பு இல்க்கிய வாதிகளை விடவும் கவிஞர்களை விடவும் இன்னபிற சமூகத்தை இயக்கும் முக்கிய கர்த்தாக்களை விடவும் , நம் காலத்தின் புதிய தலைமுறையினரின் கைகளில் தவழவேண்டும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இக் கவிதைகளை வாசிக்க வேண்டும் சக மனிதன் மீதும் சக உயிரின் மீதும் அன்பையும், நேசத்தையும் இக்கவிதைகள் விதைக்கட்டும் அதுவே நம் காலத்தின் தேவையும் கூட 23-02-2024 ஞாயிறு காலை 10. மணி சாலிக்கிராமம் சென்னை

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...