January 20, 2010

தொடுவானம் : சிறுகதை ..... அஜயன் பாலா


கடலுக்கப்பால் தொலைவில் தெரிந்த தொடுவானத்தின் விளிம்பை விரல்களால்
தடவியபடி வெறுமனே வேடிக்கை பார்ப்பவளாக அவள் அந்த நிழற்குடையில் நின்றுகொண்டிருந்தாள். எதிரே நீலக்கடல் வெளியின் மேல் வீசிய காற்று,
சுற்றி கரையாக எழுப்பப்பட்ட கற்சுவர்களின்மீது
சிறு அலைகளை மோதச் செய்து தளும்பிக்கொண்டிருந்தது.

கடலின்மீது பிரதிபலித்த சூரிய வெள்ளிச்சம் கரையெங்கும் ஒரு பாதரசப் பிரகாசத்தை உருவாக்கி அனைவரது கண்களையும் கூசச்செய்தது. அவளோடு இன்னும் சிலரும் அங்கே நிழற்குடையில் கையில் பைல்களுடன் தத்தமது பயணத்திற்காக காத்திருந்தனர்.அவர்கள் யாரும் ஒருவரோடொருவர் பேச விருப்பமற்றவர்களாக மணிக்கட்டைத் திருப்பி அவ்வப்போது நேரம் சரிப்பார்ததவாறு நின்று கொண்டிருந்தனர். இவள் மெளனமாய் தன் அகக்கண்களால் எல்லோரையும் கண்காணித்தவாறே அவனுக்காகக் காத்திருந்தாள்.ஆனால் அவனது வருகை ஒரு நிச்சயமற்ற நிகழ்வு.இருப்பினும் அதைத்தன் உள்ளுணர்வால் முன்கூட்டி அறிந்தவள் போல அவள் தன் விரல் நகத்தால் இன்னொரு நகத்தை துழாவியபடி அந்த நிழற்குடையில் நின்றுகொண்டிருந்தாள். வானத்தின் பேரமைதி அவளை உற்றுக் கவனிப்பதாகவே அவளுக்குத் தோன்றிற்று.



இன்றைக்கென்னவோ அந்த நிழற்குடையில் காத்திருக்கும் அனைவரது முகமும் மிகுந்த பொலிவுடன் இருப்பதாகத் தோன்றியது. தினம் தினம் இந்த நிழற்குடையில் அவள் அவர்களைப் பார்ப்பதுண்டு. அவர்களைத் தவிர வேறு எவரும் அந்த நிறுவனத்தில் அந்த நேரத்தில் வருவதில்லை. இன்றைக்கென்னவோ அவர்கள் அனைவரும் ஒளிமிகுந்த ஆபரணங்களுடன் பள பளக்கும் வஸ்திரங்களுடனும் வெவ்வேறு திக்கில் பார்த்தவாறு மெலிதாய் சிரித்துக் கொண்டிருந்தார்கள் . யாரும் அவளுடன் இது வரையிலும் பேசியிருக்காவிட்டாலும் அவளுக்கென்னவோ அவர்களின் பால் ஈரம் கசிந்திருந்தது.அவளாக அவர்களுடன் பேச நினைத்தாலும் உடைந்துவிடுவோமோ என்கிற பயத்தின் காரணமாய் பேசாதிருக்கிறாள்.

நிழற்குடையின் காரணமாக கவிழ்ந்திருந்த நிழல் அவர்களின் மேல் சிகப்பும் மஞ்சளுமான நிறத்தைப்போர்த்தியிருந்தது.அவர்களனைவரும் காத்திருக்கும் வாகனம் இன்னும் வரவில்லை.எதிரே நீலக்கடல் சலனமற்று தொடுவானம் வரை வளர்ந்திருந்தது. அதன் நீல அமைதி மனதில் ஏற்படுத்திய குளுமையின் காரணமாக அவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் இமைகளை மூடித்திறந்துத் தங்களுக்குப் போதும் என்பதாக சமிக்ஞை செய்தனர்.கடலின் கரையாக நீலத்தைப் பிரித்த அந்த குட்டைச் சுவரில் நீர் ததும்பியபோது அவர்களது ஆடையில் சிதறியது.”க்ளுக்”கென் மெல்லிய சப்தமிட்டு குட்டைச் சுவரின் வழி தரையில் தளுப்பி வழிந்தது நீர் அவற்றினூடே சிறு சிறு வெள்ளைப் பூச்சிகள் ஈரம் சொட்ட தரையில் இறங்கி புற்களிடையே மறைந்து கொண்டிருந்தன.

அவள் அதனையே உற்றுப் பார்த்தாள் அவற்றின் ஒழுங்கு ஆச்சர்யமூட்டுவதாய் இருந்தது.பின் அவள் தன்னைச் சுற்றியிருக்கும் விநோத சூழலை ஒருமுறை நோட்டமிட்டாள்.அவளுக்குப் பின்னிருந்த விரிந்த புல்வெளி அவளறியாமல் மெளனமாய் வளர்ந்துகொண்டிருந்தது.விரிந்து கிடந்த வெள்ளை வானத்தின் அடியிலிருந்து வித்விதமான தோற்றங்களில் விலை உயர்ந்த ஆடைகளில் தொலைவில் திரிந்து கொண்டிருந்தத புராதன மனிதர்களிடையே அவள் அவனை பார்வையில் துழாவினாள்.கிட்டத்தட்ட அவனை வருமே அவனாக இருப்பதையே அவள் உணர்ந்தாள்.மெல்ல அன்னைவரும் அவளை நோக்கி திரும்பி அவளது பஞ்சுப் போன்ற வயிற்றைத் தடவிப்பார்க்க முயல வெட்கம் தாளாமல் தலைகவிழ்ந்தாள்.
சில சமயங்களில் இவளுக்கு நினைவு தப்பிவிடுகிறது.தான் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறோம்.இவையனைத்தும் ஒரு கனவா?அல்லது முற்றிலும் முழுமை பெறாத யாரோ ஒருவரின் கற்பனைப் பிரதேசமா?அல்லது எழுதப்படாத இசைக்குறிப்புகளுக்கான காட்சிப்படிமங்களின் மறுதோற்றங்களா?எதையும் அவளால் தீர்மானிக்க முடியவில்லை.அவளால் அங்கிருக்கும் எதையும் தன் விரல்களால் தீண்ட முடிகிறது எனும் ஆச்சர்யத்தின் காரணமாகவே அவள் அவ்வப்போது இதுபோலான கேள்விகளின் படிக்கட்டுகளில் ஏறிச்சென்றாள்.

அவன் கிட்டாததன் பொருட்டு மரணித்து போனவள்தானோ என்றும் சட்டென ஓர் எண்ணம் தோன்றும்.நினைவுகளில் வழிதப்பும் ஆடு துள்ளிக்குதித்து மீண்டும் வந்த வழியில் வயலட் பூக்கல் நிறைந்த தோட்டத்துக்கு திரும்பிச் செல்லும். வெகுதூரத்தில் மலை.அவளது வீடு.குழப்பம் நிறைந்த வீதிகளில் திரியும் கிராமத்து மக்கள். யாரோ தபதபவென ஓடிவரும் சப்தம் .பேசித்தீராத வீட்டின் ஞாபகங்கள்.சீராக விரிந்த சீட்டுக்கட்டில் இடம் மாற்றப்படும் ராணி. கிணற்றிலிருந்து வெளியேற்றப்படும் உடல் .. ஆட்களற்ற பந்தல் வீட்டுக்குள் கழுவி விடப்பட்ட நீரின் திட்டுகளில் பிரதிபலித்த தந்தையின் முகம்.குளித்து முடித்து தோளில் ஈரத்துடன் படியேறும் அண்ணன்.புகைப்படத்தில் அவள் கண்களில் பிரதிபலிக்கும் விளக்கின் அசையும் சுடர்.குதித்தபோது கிணற்றினடியில் பாதத்தில் குத்தியகல்

கடைசியாக அவன் தந்த முத்தம் .கிணற்றில் விலகிய அவன் விரல்கள்...

அவள் மீண்டும் நினைவிற்குள் வந்தபோது,அவளோடு நிழற்குடையில் பயணத்திற்காக காத்திருந்த அனைவரும் இடம் மாறி, நின்றிருந்தனர்.ஒருசிலர் வாகனம் கிடைத்து புறப்பட்டுச் சென்றுவிட்டிருந்தனர்.

ஒருவேளை அனைவருக்கும் வண்டி வந்திருக்கும்.அவன் கடைசிவரை வராது போனதால் துக்கித்துப் போனது அவள் நெஞ்சு.மெளனமாய் வளரும் புற்களிடையே தவழ்ந்து பனிக்காற்று அவள் கண்களைத் திறந்து கொண்டாள் என்பதை தெரிந்துகொண்டபின் அவளது கேசத்தைக் கலைத்து கழுத்தில் படர்ந்து ஈரமாய் ஸ்பரிசித்தது. யாருமற்ற தனிமையில் அவளது சோகங்கள் மேலும் அதிகப்படுத்த,பிரிந்த உதடுகளின் வழி மெலிதான பாடல் கிளம்பியது.வார்த்தைகளற்ற இசையில் அவளது உதட்டிலிருந்து சின்ன மேகங்கள் வெளிப்பட்டன.அலைகடலின் மேல் மிதந்தபடி வானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.அவள் விழிகளின் ஓரத்திலிருந்து கசிந்த நீர்த்துளி காற்றில் சிதறி பட்டாம்பூச்சிகளாக வரிசையாகப் பறந்து சென்றன.
அவள் துயரம் அதிகமாக அதிகமாக அவ்ளுக்குபின்னால் மலைவரை விரிந்திருந்த புற்களும் மனஜ்சள் நிறத்தில் தகதகப்புடன் வேகமாய் வளரத்துவங்கின .

வெகுதூரத்தில் அவன் மூன்று நட்சத்திரங்களை இடுப்பில் கச்சையாக அணிந்துகொண்டு நடந்து வருவதைப் பார்த்தாள். சட்டென அந்தக் காட்சி அவளுக்குள் ஒரு மயக்கத்தின் காரணமாகத் தன் தந்தையைப் போலவும் இருந்தது. அது யார் என ஆச்சர்யத்துடன் அருகில் வரக் காத்திருந்தாள்.

வானத்தில் பச்சையாகப் புற்கள் ஆங்காங்கே முளைவிடத் துவங்கின.வெகு தொலைவில் அவன் அதோ கடலின்மேல் நடந்து வந்து கொண்டிருந்தான்.

புதிய பார்வை (ஆகஸ்ட் – 1 2006 )

12 comments:

tharshayene said...

//அவன் கிட்டாததன் பொருட்டு மரணித்து போனவள்தானோ என்றும் சட்டென ஓர் எண்ணம் தோன்றும்//

நல்லாயிருக்கு அஜயன் ஸார் ....

ajayan bala baskaran said...

பரவாயில்லையே பாம்போட கழுத்தை புடிச்சிட்டீங்க கிரேட் தார்ஷாயினி

எங்கடா புரியலை அதுன்னு சொல்லப்பொறாங்கன்னு நெனச்சேன்

முத கமெண்ட்டே அசத்தல்

நன்றி தார்ஷாயினி

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப ரசிச்சு படிச்சேன் சார்

//தான் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறோம்.இவையனைத்தும் ஒரு கனவா?அல்லது முற்றிலும் முழுமை பெறாத யாரோ ஒருவரின் கற்பனைப் பிரதேசமா?அல்லது எழுதப்படாத இசைக்குறிப்புகளுக்கான காட்சிப்படிமங்களின் மறுதோற்றங்களா?எதையும் அவளால் தீர்மானிக்க முடியவில்லை.//

பொதுவா இதுமாதிரி எனக்கும் தோணுறது உண்டு நிறைய நேரங்களில் கனவுதான்னு நினைக்கும் பொழுது நிஜம் வந்து கட்டுடைத்துவிடுகிறது வேறொரு கனவோட வழியினூடே....

ajayan bala baskaran said...

எவற்றின் நடமாடு நிழல்கள் நாம்னு நகுலன் சொன்னதை போல ...

நாம் வாழ்வது கூட யாரோ ஒருவருடைய கனவாக கூட இருக்கலாம்.

மயூ மனோ (Mayoo Mano) said...

அருமை... அனுபவித்துப் படித்தேன், நானும் தொலைந்து, மீண்டு திரும்பவும் கதையிலிருந்து வெளி வந்தேன்.

Raju said...

\\கடலுக்கப்பால் தொலைவில் தெரிந்த தொடுவானத்தின் விளிம்பை விரல்களால்
தடவியபடி வெறுமனே வேடிக்கை பார்ப்பவளாக அவள் அந்த நிழற்குடையில் நின்றுகொண்டிருந்தாள்.\\

ஆரம்பமே அதகளம் பாஸ்.
அருமையான் வாசிப்பணுபவம்.
நன்றி.

ajayan bala baskaran said...

நன்றி நதியானவள் அவர்களே

ajayan bala baskaran said...

தேங்க்ஸ் பாஸு ...கமெண்டிலேயே கலக்கறீங்க

Ravikumar Tirupur said...

நல்லாருக்குங்க சார்!
உங்க கற்பனையை என் கண்ணில் காட்சியாக ஓடவிட்டு பார்த்ததில் கண்ணை நம்ப முடியவில்லை!

ajayan bala baskaran said...

நன்றிரவி...இன்னும் சமயம் கிடைத்த்பாடில்லை ..நானும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன் காலதமத்த்திற்குமன்னிக்கவும்

ajayan bala baskaran said...
This comment has been removed by the author.
hemikrish said...

யாரோ தபதபவென ஓடிவரும் சப்தம் .பேசித்தீராத வீட்டின் ஞாபகங்கள்.சீராக விரிந்த சீட்டுக்கட்டில் இடம் மாற்றப்படும் ராணி. கிணற்றிலிருந்து வெளியேற்றப்படும் உடல் .. ஆட்களற்ற பந்தல் வீட்டுக்குள் கழுவி விடப்பட்ட நீரின் திட்டுகளில் பிரதிபலித்த தந்தையின் முகம்.குளித்து முடித்து தோளில் ஈரத்துடன் படியேறும் அண்ணன்.புகைப்படத்தில் அவள் கண்களில் பிரதிபலிக்கும் விளக்கின் அசையும் சுடர்.குதித்தபோது கிணற்றினடியில் பாதத்தில் குத்தியகல் //

interesting ...:-)

ஆழமான கதை அஜயன்..வாழ்த்துக்கள்

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...