ஒரு படத்தில் சிறந்த இயக்கத்தின் கூறுகளை எப்படியாக வரையறுப்பது என்பது விமர்சன உலகின் சிக்கலான புதிர்?
இந்த குழப்பத்துக்காகத்தான் பல சமயங்களில் சிறந்த படம் எடுப்பவர்களையே சிறந்த இயக்குனர்களாகவும் திரைப்பட விழாக்களில் அறிவித்து விருதுகளை தந்து விடுவர்கள்.
உண்மையில் சிறந்த படம் என்பதும் சிறந்த இயக்கம் இரண்டும் வேறு வேறு
அப்படியானால் சிறந்த இயக்குனர் என்பவர் யார் அவரது பணி என்ன ?
இந்த கேள்விகளின் பதிலாகத்தான் பிரான்சில் இயக்குனரின் வேலையை ரியலைசேஷன் , (realization மிஸான் சேன் (mise en scene )என இரண்டாக பிரித்துக்கொண்டார்கள் .
நடிப்பு மற்றும் காட்சியமைப்பை உருவாக்குவது ரியலைசேஷன் பணி . சினிமாவுக்கு உயிர் கொடுப்பவர்கள் இவர்கள்தான். .அதே சமயம் கதைக்கேற்ற காட்சிமொழியை தீர்மானித்து காமிராவிற்கு முன்பிருக்கும் உடை அரங்கம் ஒளியமைப்பு பொன்ற தொழில் நுட்ப வகைமைகளை ஒருங்கிணைத்து சினிமா அனுபவமாக மாற்றுவது மிஸான் சேன் – பணி . சுருக்கமாக சொன்னால் சினிமாவுக்கு உருவம் கொடுக்கும் வேலை
உயிர் ப்ளஸ் உருவம் என இந்த இருவேறு திறமைகள் ஒன்றிணைந்ததுதான் சினிமாவில் இயக்குனர் எனும் படைப்பு பணி. பொதுவாக இயக்குனர்கள் தஙகளது இயல்பின் அடிப்படையில் இதில் ஏதாவது ஒன்றில் தூக்கலாக பிரகாசிப்பார்கள் .
பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்றவர்கள் சினிமாவாக செதுக்கும் மிஸான் சேனில் அபரிதமான வல்லுனர்கள். கதையாடலைக்காட்டிலும் காட்சி அனுபவத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள்
இவர்களில் பாலுமகேந்திரா மகேந்திரன் போன்றோர் சத்யஜித்ராயின் வழியான ஐரோப்பிய காட்சி மொழியின் வகையினர். பாரதிராஜாவின் மொழி மண் வாசனை கொண்ட தனித்துவமானது. தன்னியல்பானது. பெரும்பாலும் பாத்திரத்தின் மன ஓட்டத்தை அடிப்படையாக கொண்டது. இதனால் படத்தொகுப்பின் பங்கு அதிக இடம்பிடித்துவிடுகிறது
இவை இரண்டுமற்ற அமெரிக்க மிகை கட்டுமானமும் ஐரோப்பிய கவித்துவ மொழியும் இணைந்த புதிய காட்சி மொழி மணிரத்னத்தினுடையது.
மற்ற மூன்று இயக்குனர்களும் எதார்த்த சினிமாவின் கூறுகளான் eye level எனப்படும் கண்களால் பார்க்கும் அனுபவத்தையொட்டி காமிரா கோணங்களை தீர்மானித்த போது எதார்த்தத்தை மீறி அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விதிகளை உடைத்துக்கொண்ட காமிரா கோணங்கள் மூலம் தனக்கென புதிய பாணியை வகுத்துக்கொண்டவர் மணிரத்னம். எக்ஸ்ட்ரீம் டாப் ஆங்கிள். எக்ஸ்ட்ரீம் க்ளோசப்புகள், மிகை ஒளியூட்டல், நுணுக்கமான் அரங்க அமைப்பு , வெட்டப்பட்ட துண்டு வார்த்தைகளுடான வசனம். கீழ் ஸ்தாயி பாசாங்கான வசன உச்சரிப்பு ஆகியவற்றுடன் கைகோர்த்து தனக்கான புதிய பாணி(STYLE) யை அவர் கண்டெடுத்தார். இந்த தனித்த பாணிதான் இந்திய அளவில் அவர் மீதான வசீகரத்தை கட்டமைத்து தந்தது. .
இந்த பாணியை அவர் உடனே அடைந்துவிடவில்லை தொடர்ந்து தீவிர பயிற்சியின் மூலம் நான்கு படங்களுக்கு பிறகு ஐந்தாவது படமான மவுனராகத்தில் தான் கண்டடைந்தார். அதே போல வணிகரீதியாக வரிசையாக நான்கு தோல்வி பட்ங்களுக்கு பிறகு ஐந்தாவது ஒரே பட வெற்றியின் மூலம் மிகப்பெரிய இயக்குனராக அறியப்பட்டவர் இந்திய சினிமாவில் மணிரத்தினம் ஒருவர் மட்டுமே
வாழ்க்கையை மிகவும் தூர நின்று வேடிக்கை பார்ப்பவை இயக்குனர் மணிரத்னத்தின் படங்கள். அதனாலேயே அவருடைய திரைப்படங்கள் உண்மையை காட்டிலும் அழகை அபரிதமாக கொண்டாடுகின்றன. .அந்த அழகியலும் கூட இயல்பை புறக்கணித்த அல்லது இயற்கையின் மேல் கற்பனாதிக்கம் செலுத்துக்கூடியவை.. இதனாலேயே காட்சியமைப்பிலும் உரையாடலிலும் பாசாங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போய் அதுவே அவரது திரைக்கதை பணியாகவும் பரிணமித்தது. அவரது இந்த மிகை அழகியல் காரணமாக இயல்பாகவே அவரது பாத்திரங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து துண்டுபட்டவர்களாக காணப்படுகின்ற்னர்
நகரம் சார்ந்த அவரது படத்தின் நாயகர்கள் துணிச்சலானவர்கள்... பொது இடத்தில் காதலியை மாட்டவிடும் விதமாக அவளது அப்பாவை பெயர் சொல்லி கூப்பிட்டு அசத்துவார்கள்., (அக்னி நட்சத்திரம்) பட்டமளிப்பு விழாவில் வயதான் பெண் துணைவேந்தரிடம் கறுப்பு கவுன் அணிந்து கொண்டே சிகரட் புகையை அவர் முகத்தில் ஊதி ஐ லவ் யூசொல்பவர்கள் (இத்யத்தை திருடாதே) அதே போல நாயகிகளும் வயது வித்தியாசம் இல்லாமல் ஓடிப்போலாமா என பெரிசுகளை கூப்பிடுவார்கள் (இதயத்தை திருடாதே). இப்படி ஒரு நம்ப முடியாத் வாழ்க்கையின் சந்தோஷத்தை சில அதிர்ச்சிகளின் மூலம் திரையில் காண்பிப்பதில் வல்லவராக இருந்தார். அவரது படங்களின் இளமை ஒருகையில் வயதானவர்களை கேலி செய்வதாக எண்பதுகளின் படங்களில் இருந்தது . (பிற்பாடு 90 களில் தேச பக்தி அரசியல் படங்களில் அது காணாமால் போனது) இன்னும் எத்தனை நாளைக்கு ஒழுக்கம் அறம் பற்றியே சினிமாவில் வகுப்பெடுப்பீர்கள் என்ற மறைமுக கேள்வி அவரது படங்கள் அனைத்திலும் காணப்பட்டது. அவரது பாத்திரங்களின் அதீத செயல்பாடுகள் 25 வருடங்களாக இன்றும் கூட தமிழர்களை ஆச்சர்யபடுத்துகின்ற்ன . ரோஜா படத்தை இன்று பார்க்கும் ஒரு சென்னை யோ யோ பாய்க்கு கூட அம்மாவின் முன் அனாயசமாக சிகரட் பற்ற வைக்கும் அரவிந்த் சாமி ஆச்சர்யபடுத்துபவராகவே இருப்பார்.
உணரு ,பகல் நிலவு நாய்கன் ஆகிய திரைப்படங்கள் தவிர அவரது படங்களில் சராசரி மனிதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த்ன . நாயகன் ஒரு திரைப்படம் தவிர விளிம்பு நிலை மனிதர்கள் அவரது படங்களில் அனுமதிக்கப்படவில்லை. எளிய மனிதர்களுக்கு வசப்படாத ஒரு கனவு வாழ்க்கையை அவர் தன் சினிமாவில் காண்பித்துக்கொண்டிருந்தார். வெறும் நகர மனிதர்களில் அதிலும் 30 சதவித உயர் வகுப்பு மனிதர்களின் வாழ்க்கையை அவர் ஒட்டுமொத்த தமிழ்கத்துக்கும் தன் படங்களின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது நாம் கவனிக்க வேண்டியது.
ஆனாலும் தமிழ் மக்கள் அவர் படங்களை மிகவும் ரசித்தார்கள் கொண்டாடினார்கள் .அவர் காண்பித்த புதுமைகளில் மயங்கினார்கள் பாரதிராஜாவுக்கு பிறகு வணிக ரீதியாக அதிகம் பேரால் வியந்தோதப்ப்ட்ட தமிழ் இயக்குனர் அவர். இந்த முரண் அவருக்கு சாத்தியமானதற்கு காரணம் அவர் தன் படங்களை தன் அறிவிற்கு உண்மையாக அணுகினார்
அவரிடமிருந்த வசீகரமான கதையாடல் கனவுத்தன்மையான் காட்சிகள் ஆகியவை அவரது வெற்றிக்கு பெரிதும் உதவின அவை உயர்ந்த ரசனையின் வெளிப்படாக இருந்தன. அவருக்கு முன் தமிழ் சினிமாக்களில் நடிகர்களின் முகங்களே பிராதானம் அவர்களின் அசைவுகளே காமிராவின் அசைவுகளை தீர்மானிக்கும் . ஆனால் மணிரத்னம் நடிகர்களை பார்வையாளனுக்கு தன் பாத்திரங்களை நேரடியாக பார்க்க அனுமதிக்கவில்லை. மிகை வெளிச்சத்தினூடே அல்லது பாதி வெளிச்சத்தினூடே தன் பாத்திரங்களை பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தினார். அது பார்வையாளனை வசீகரித்தது. பாத்திரங்களை தாழ்ந்த குரலில் புரிந்தும் புரியாமலுமாக பேச வைத்தார் பார்வையாளனை அது பரவசப்படுத்தியது அவருக்கென்ற தனித்த பாணியை முழுமையாக உள்வாங்கி வெளியான ம்வுன்ராகம் தன் அவரது இந்த பாணியின் முதல் படம்
முந்தைய படங்களில் அவரிடம் நிலக்காட்சி தொடர்பான ஒரு முயற்சி இருந்தது. வேற்று மொழிகளில் வெளியான அவரது முதல் இரண்டு படங்களான பல்லவி அனு பல்லவி, உணரு ஆகியவற்றை தவிர்த்து பார்த்தால் அடுத்த இரண்டு தமிழ் படங்களான பகல் நிலவு திரைப்படத்திலும் இதய கோயில் திரைப்படத்திலும் சில பாடல்களில் அவர் பிரம்மாண்ட நிலக்காட்சிகளை உருவாக்க முயன்றிருப்பார் . ஆனால் அப்படங்கள் பெரிய மரங்களின் இடையே ஓடும் ஆற்றுவெளி நிலப்பரப்புகளையும் நிழல் கோபுரங்களின் வெளிச்ச வாசல்களையும் காண்பிப்பதை மட்டுமே அவருக்கு அனுமதித்தன இதற்கு காரணம் அதன் மிக சாதாரணமான கதைக்களன்கள். ரோமியோ ஜூலியட்டின் கதை வடிவத்தை வேறு மாதிரியாக சொன்ன பகல் நிலவில் சத்யராஜின் வித்யாசமான தோற்றம் தவிர வேறு சொல்லிக்கொள்கிறார் போல் இல்லை ஆனாலும் இந்த படங்களில் தான் இளையாரஜா வின் மிகசிறந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றன. பகல் நிலவின் பூமாலையே , வாராயோ வான் மதி, வைதேகி ராமன் , மற்றும் இதய கோயிலின் அனைத்து பாட்ல்களும் இன்று வரை இளையராஜாவின் மோஸ்ட் வாண்ட்ட் ஆல்பங்கள்.
இந்த இரு படங்களுக்கு பிறகு எதார்த்த பாணி நிலக்காட்சி அழகியல் தன்னுடையதல்ல என்பதை முழுமையாக உணர்ந்த போது அவரை போன்ற எதார்த்தத்தை வெறுக்கும் பி சி ஸ்ரீராம் எனும் காமிரா கலைஞரும் கைகோர்த்திருந்தார்.
மவுன ராகம் தமிழ் சினிமாவின் சிறந்த பத்து படங்களுக்குள் வகைப்படுத்தக்கூடியது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருந்த மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே விற்கும் மவுன ராகத்திற்கும் நிறைய்ய ஒற்றுமைகள் கதை அமைப்பு பாத்திர படைப்பு ஆகியவற்றில் காண்ப்பட்டாலும் சினிமாவாக இரண்டும் வெவ்வேறு அற்புதங்கள்
சினிமாவில் பின்புல அரங்க அமைப்பு தயாரிப்பு வேலைகள் ஒருங்கிணைப்பவரை கலை இயக்குனர் என தமிழ் சினிமாவில் அழைப்பார்கள் . இது நாடகத்திலிருந்து உருவான பதம் . ஆனால் அந்த கலை என்ற வார்த்தை அதன் அர்த்த்த்தோடு முழுமையாக உயிர்பெற்றது தமிழ் சினிமாவில் மவுனராகம் படத்திலிலிருந்துதான். அதற்கு முன்பு வரை பிரம்மாண்ட செட்டு போடும் கார்பெண்டர் தொழிலாக மட்டுமே இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் தோட்டா தரணியின் மூலமாக மவுனராகத்தில் உயிர்பெற்று நாயகன் மூலமாக பிரம்மாண்டமாக வலுப்பெற்றது.
தமிழ் சினிமா வரலாற்றில் பதினாறு வயதினிலே எதார்த்த சினிமாவின் திருப்புமுனை படம் என்றால் தொழில் நுட்பத்தில் திருப்புமுனை உண்டாக்கிய படம் மவுன ராகம். பிற்பாடு திரைப்ப்ட கல்லூரி மாண்வர்கள் வெளி வருவத்ற்கும். ஷ்ங்கர் போன்ற தொழில் நுட்ப பிரம்மாண்டங்கள் உருவாகி இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கவும் காரண்மாக் அமைந்த்து.
கலை மட்டுமல்லாமல் உடையும் இப் படத்தில் மிக முக்கிய பங்காற்றியது கார்த்திக்கின் பேகி பேண்டும் மோகனின் சின்ன காலர் சட்டைகளும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம. இவற்றோடு பாத்திரங்களின் முக பாவங்கள் வார்த்தைகள் கடந்த அல்லது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உள்ளுணர்வை நமக்குள் சுலபமாக கட்த்தின (80 துகளின் படங்களில் இது போன்ற உள்ளுணர்வில் அதிர்வை கட்த்தும் க்ளோசப்புகள் அதிகமிருந்த்ன )..
இவையெல்லாவற்றுக்கும் உச்சமாக படத்தின் அனைத்து கூறுகளையும் ஒன்றிணைக்கும் இளையராஜாவின் இசை மேற்கத்திய செவ்வியல் இசையின் ஒரு சாதனை என்று கூட சொல்லலாம்
இதனையடுத்து வெளியான நாயகன் மிகபெரிய கமர்ஷியல் வெற்றியை பெறாவிட்டாலும் தொழில்நுட்ப ரீதியாக சினிமா துறையில் இந்தியா முழுக்க மிகபெரிய பாதிப்பை உண்டாக்கிய திரைப்படம் நாயகன் இப்போதும் இந்திய இயக்குனர்களுக்கு கைகள் மீறிய அற்புதம் . இந்தியாவின் மிகச்சிறந்த பத்து படங்கள என இந்தியாவின் எந்த மொழி இயக்குனர் பட்டியல் போட்டாலும் அதில் தவிர்க்க முடியாமல் இடம்பெறும் படம் நாயகன். துண்டு துண்டான வெவ்வேறு கால இடைவெளியான திரைக்கதை வடிவம் படத்தின் புதுத்தன்மைக்கு வழி உருவாக்கியது. ஒவ்வொரு கால மாற்றங்களையும் படைப்பில் துல்லியமாக பிரதிபலிக்க இயக்குனர் எத்தனிக்க முயல அதுவே படத்துக்கு ஒரு அசாதரணமான கலைத்தன்மையை உருவாக்கி கொடுத்தது.
ஒவ்வொரு காலமாற்றத்திற்கும் இயக்குனர் மேற்கொண்ட படைப்பூக்கம் நிறைந்த தொழில் நுட்ப கூறுகள் அனைவரையும் வியக்க வைத்த்து
குறிப்பாக் தோட்டாதரணியின் கலை நேர்த்தி தயாரிப்பு வடிவமைப்பு அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது இவ்வளவு விஸ்தாரனமான முனைப்புடன் கட்டமைவுடன் பின் புலங்களுடன் நாயகனுக்கு முன்பும் சரி பின்பும் சரி இன்னொரு ப்டம் வரவில்லை
இப்படியான நாயகனின் மிகச்சிறந்த தன்மைக்கு வலுவான காரணங்கள் நான் முன் சொன்ன இயக்குனரின் மிக முக்கிய இருபணிகளான ரியலைசேஷன் மற்றும் மிஸான் சென். இந்த இருபணிகளும் ஆக சிறப்பாக ஒன்றை ஒன்று இறுக்கமாக கட்டித்தழுவிய நிலையில் உருவாக்கம் பெற்றதுதான் படைப்பாக்க் ரீதியாக மகத்தான வெற்றியை அவருக்கு உருவாக்கி தந்தன.
படத்தின் மிகச்சிறந்த் அம்சம் எது திரைக்கதையா வசனமா ஒளிப்பதிவா, பட்த்தொகுப்பா இசையா ஒலி அமைப்பா நடிப்பா கலை இயக்கமா உடையா ஒப்ப்னையா எது என அனைவரையும் திண்ற வைக்க கூடிய படைப்பாக அது வெளியாகியிருந்த்து
மேலும் படத்தில் இடம்பெற்ற வலுவான சில காட்சி அமைப்புகள் அசாத்தியமான ஒரு உயரத்தை பார்வையாளனுக்கு உருவாக்கி தந்த்து
முத்லாவதாக கமல் விப்ச்சார விடுதியில் சரண்யாவை முதன்முதலாக சந்திக்கும் கவித்துவமான காட்சி அமைப்பு இரண்டாவது மகள் கார்த்திகா ஜனகராஜை அடிக்கும் போது கமல் தன் வாழ்க்கைக்கான தர்க்கத்தை பேசும் காட்சியில் கமலின் தேர்ந்த உடல் பாவம் வசன உச்சரிப்பு . மூன்றாவது நாசரை தேடி வந்து மகளையும் பேரனையும் பார்த்து கமல் தடுமாறும் காட்சி. நான்கு பேரன் தாத்தாவிடம் நீங்க நல்லவரா கெட்டவ்ரா என கேட்கும் திரைக்கதையின் அக விசாரணை . நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்ல என்ற நாயகனின் கருத்தே படத்தின் கருத்தாகிவிடும் நாயக வழிபாட்டிலிருந்து இயக்குனர் விலகி தன் படைப்பு நேர்மையை காப்பாற்றிக்கொள்ளும் இடம் இது
மேற் சொன்ன நான்கு தருணங்களும் இல்லாவிட்டால் இப்படம் காட்பாதர் திரைப்படத்தின் தழுவல் என சாதரணமாக் புறந்தள்ளிவிட்டு நகரமுடியும்
ஆனால் மேற் சொன்ன நான்கு காட்சிகளும் திரைக்கதைக்கு ஒரு தகுதியையும் அழகையும் காவியத் தன்மையையும் உருவாக்கி இந்தியாவின் மதிப்பு மிக்க திரைப்படமாக மாற்றிவிடுகின்ற்ன
நாயகனுக்கு பிறகு அக்னி நட்சத்திரம், இதயத்தை திருடாதே ஆகிய இரு படங்கள் அவருக்கென் இளைஞர்களிடம் உருவாகியிருந்த வணிக சந்தையை விஸ்தரித்துக்கொடுத்தன
அக்னி நட்சத்திரத்திரம் எனும் த்லைப்புகேற்ப கோபக்கார நாயகனை லோ ஆங்கிளில் தலைக்கு பின்னால் சூரியன் தகிக்க க்ளோசப்பில் காண்பிப்பதில் துவங்கி ப்டம் முழுக்க க்ளொசப்பில் கவித்துவ காட்சிகள் . குறிப்பாக நாயகி நீரோவ்ஷா ஒரு பாட்ல் காட்சியில் கடல் அலைகளின் முன் கூலிங்கிளாஸ் மற்றும் கன்னத்தில் ஒட்டிய மணல் துகளுடன் புரண்டு படுக்கும் ஹை ஸ்பீட் ஷாட் சினிமா அழகியலுக்கு புதிய விளக்கம் என்றே சொல்லாம் .ராஜா ராஜாதிராஜா பாடலுக்கு கார்த்தி அண்ட் கோ நடமாடிக்கொண்டே ரயில் பெட்டிகளை தாண்டும் லோ ஆங்கிள் ஷாட்டிற்கு பட்டி தொட்டி தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தனர். பிரபுவும் கார்த்திக்கும் மோதிக்கொள்ள நெருங்கும் காட்சிகளில் பாத்திரங்களுக்கு ஈடாக தலைக்கு பின்னால் வெளிச்ச நெருப்பை கொட்டி காமிரா கோணங்களும் பார்வையாளனை மிகபெரிய அனுபவத்தில் ஆழ்த்தி அதிரவைத்த்ன
பாலு மகேந்திராவுக்கு பிறகு ஒளிப்பதிவுக்காக தமிழர்களை கைதட்ட வைத்த பெருமை பி சி ஸ்ரீராம் அவர்களுக்கு இப்பட்த்தில் கிட்டியது. அதே சம்யம் இதே மிகை வெளிச்சம் டிப்யூஷன் பில்டரின் அதீத பயன்பாடு பார்வையாளர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் எரிச்சலூட்டியதும் உண்மை. இருட்டில் படமெடுப்ப்வர் டார்ச் லைட்டை உடன் கொண்டு போ என அனைவரும் சொல்லத்துவங்கியதும் இப்படத்திலிருந்துதான்.
.எரிக் செகலின் லவ் ஸ்டோரி யில் வரும் சாகப்போகும் நாயகியின் சாயலை அதிகம் கொண்டிருந்த்து இதயத்தை திருடாவில் வரும் அஞ்சலியின் துரு துரு. அதே போல ஊட்டியில் ஒரு வீட்டின் கதவை திறந்த்தும் பனி புகை பாம்பை போல ஊடுருவுவது போன்ற விஷூவல் மேஜிக்குகள் பார்வயாளர்களை ரசிக்க வைத்த்ன.
இந்த இரண்டு ப்டங்களும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை குவித்தது . அக்காலத்தின் இளைஞர்களின் ஐகானாக மணிரத்னம் அவதார மெடுத்தார். வணிக ரீதியாக பெரு மதிப்பீடும் அவருக்கு உருவாகியது மணி ரத்னத்தின் அடுத்தபடம் என்ன என்பதை அறிந்து கொள்ள தமிழ் நாடே காத்திருந்த்து.
அஞ்சலி படம் பொறித்த டீஷர்ட்டுகள் அச்சடிப்பதாக இருந்தால் முறையாக அனுமதி வாங்கி பணம் கட்டியபிறகே பயன்படுத்த முடியும் என அறிவித்தது. ஜி வி. ப்ட நிறுவனம் .இப்படியாக பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அஞ்சலி ஒரு தோல்விபடமாக அமைந்த போது திரையுலகில் பெரும் மவுனம்
தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளனாக மணிரத்னத்தின் திரைப்படங்களில் என்னை மிகவும் பாதித்த திரைப்படம் அஞ்சலிதான். மகளின் பாசத்துக்காக ஏங்கும் தாயின் உள்ளத்தை துல்லியமாக பிரதிபலித்த படம் அது. மன நிலை சரியில்லாத குழ்ந்தையிடம் அம்மா என்ற வார்த்தைக்காக ஏங்கும் தாயின் பரிதவிப்பு அவர் படங்களில் வெறெங்கும் நிகழாத அதிசயம் படத்தின் மையம் குழ்நதைக்ளுக்கிடையிலான உணர்வு பூர்வமான் உலகம். ஆனால் அது அவர்களின் கொண்டாட்டத்தை கமர்ஷியலுக்காக் முன்னிருத்த அதுவே அப்படத்தின் பலகீனமாகிப்போனது.
மேலும் அனைவரும் பரிதாபத்துடன் ஏக்கத்துடன் பார்க்கவேண்டிய அஞ்சலி பாப்பாவை நிழலுருவமாக புகைமூட்ட்த்துடன் தலைவிரி கோலமாக பார்க்க நேர்ந்த போது குழந்தைக்ளே அஞ்சலியை கொண்டாட பயந்து விலகினர்.
உண்மையில் உலக இயக்குனராக அறியப்பட அனைத்து தகுதிகளும் கொண்டிருந்தார். சீன இயக்குனர் ஷாங்யீமுக்கு இணையாக அவரிடம் மிஸான் சேனீல் மேதமை இருந்த்து . ஆனால் ரியலைசேஷனில் தனக்கிருந்த போதாமையை அவர் உணரவில்லை.
காட் பாதரை இயக்கிய பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லா ஒரு பேட்டியில் அவருடைய தொடர் வெற்றிக்கு காரணம் கேட்கப்பட்டபொது அவர் சொன்ன பதில் நான் எனது படங்களுக்கான கதைகளை நானே யோசிப்பதில்லை .அப்படி உருவாக்கினால் அது பொய்யாகத்தான் இருக்கும் .அதனால் அசலான் கதைகளை ஏற்கனவே எழுதப்பட்ட நாவ்ல்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறேன். .அதில் உணர்ச்சிகளும் பின்புலங்களும் எல்லாம் இயல்பாக இருப்பதால் நான் என் தனித்தன்மைக்கு பெரிதாக் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை என்றார்.
(இக்கட்டுரை 80 பதுகளில் வெளியான ப்டங்களை பற்றி மட்டுமே முன் வைத்து எழுதப்பட்டதால் அவருடைய 90 களின் அரசியல், சமூக, காதல் படங்களின் பின்னால் செல்ல முடியாமல் தயங்கி இங்கேயே முற்று பெறுகிறது.. )
- -.
அஜயன் பாலா
நன்றி :
பொங்கல் விழா மலர்
தி இந்து தமிழ் நாளேடு
No comments:
Post a Comment