(இக் கட்டுரை இலங்கையில் 9ம் 10ம் வகுப்பு பாடங்களில் இலக்கி நயம் பகுதியில் பாட்த்திட்டமாக தேர்வு செய்யப் பட்ட கட்டுரை இது )
(இக் கட்டுரை இலங்கையில் 9ம் 10ம் வகுப்பு பாடங்களில் இலக்கி நயம் பகுதியில் பாட்த்திட்டமாக தேர்வு செய்யப் பட்ட கட்டுரை இது )
அவரை முதன்முதலாக பார்த்த சமயத்தில் நான் பள்ளிச்சிறுவன் பள்ளி செல்லும் சாலையில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அகலமான விளம்பரப் பலகையில் காமிராவும் தொப்பியுமாக ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அது ஒரு பீடிக்கான விளம்பரம் என்று நினைக்கிறேன் . நான் அப்போது வசித்து வந்த செங்கல்பட்டு நகரின் முக்கியமான இடத்தில் அந்த விளம்பர பலகை அனைவரையும் வசீகரிக்கும் விதமாக இருந்தது. அப்போது நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். சிறு கூட்டம் அதை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க நானும் ஒருவராக சிலநிமிடங்கள் நின்றுகொண்டிருந்தேன். .. இப்போது யோசிக்கும்போது ஒரு இயக்குனர் அல்லது ஒளிப்பதிவாளர் விளம்பரத்தில் நாயகனாக நடித்தது அதுவே முதல் முறை.. அடுத்த சில நாளில் நண்பன் வீட்டுக்கு தொப்பி அணிந்துகொண்டு சைக்கிளில் சென்று இறங்கினேன். என் நண்பனின் அக்கா இங்க பாருடா பாலுமகேந்திரா சைக்கிள்ள வந்து இறங்கிறாரு என கிண்டல் செய்தாள். அந்த அக்கா கொஞ்சம் அழகாக இருந்த காரணத்தால் அன்றே என் சைக்கிள் மீண்டும் அந்த விளம்பரத்தை பார்க்க விரைந்து உருண்டது. என் தொப்பியை கழற்றி ஒரு சலாம் செய்தேன். முப்பது வருடங்களுக்குப் பின் மின் மயானத்தில் சலனமற்ற உடல் கிடத்தப்பட்டிருக்க அருகே கதறியழுதபடி இயக்குனர் குழாம் நிறைந்திருக்க அசந்தர்ப்பமாக அத்தருணத்தில் அவர் தலைமாட்டருகே அமர வாய்ப்பு கிடைத்தது. நான் சிறுவயதில் பார்த்து வியந்த அதே தொப்பியை தொப்பியுடன் கூடிய பூ உடம்பை என் இரு கரங்களாலும் தாங்கி மின் தகனமேடையில் வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
ஒரு கலைஞனின் முழுமையான இறப்பு பாலுமகேந்திரா சாருக்கு வாய்த்துள்ளது . அவரது ஆதர்சமான அழகு அவரது இறப்பிலும் தலை மாட்டில் குத்து விளக்காக வந்து நின்றுகொண்டுவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து ஒரு கலைஞனாக கனவுகளை முழுமையாக நிறைவேற்றியவனது பயணம் அவருடையது. விஜயா மருத்துவ மனையில் அவர் உடல் நலக்குறைவாக இருப்பதை அறிந்த மறுகணமே அங்கு சென்றிருந்தேன். இதற்குமுன் ஒருமுறை இப்படியான சம்பவம் நேர அப்போதும் இது போல சென்றிருந்தேன். அன்றிருந்த அதே போலதொரு சிறு கூட்டம் வாசலில் இருந்தது. பாலா சுரேஷ் கண்ணன் , ராம் சீனுராமசாமி எதிர் நீச்சல் செந்தில் உள்ளிட்ட சில இயக்குனர்களும் அவர்களது உதவியாளர்களுமான சினிமா பட்டறை மாணவர்களுமாக பத்து பதினைந்து பேருக்கான சிறு கூட்டம். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. சென்ற முறை போலவே இம்முறையும் நலமாக வீடு திரும்பிவிடுவார் என காத்திருந்த போதுதான் அதிர்ச்சியூட்டும் சேதி வந்த்து. வராந்தாவில் நின்றிருந்த எங்களை சுற்றி கனத்த மவுனம் மெல்ல ஈரத்துடன் பரவியது.யாரும் பெரிதாக அழவில்லை. ஆனாலும் கண்ணிலிருந்து லேசாக நீர் எட்டி பார்த்துக்கொண்டிருந்த்து.. அடுத்த சில நொடிகளில் சினிமா பட்டறை க்கு சென்ற போது மெல்ல கூட்டம் அணி திரண்டது. இயக்குனர் சங்க தலைவர் செயலாளர் விக்ரமன் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் வருகையை தொடர்ந்து பலரும் வந்து குவிந்தவண்னம் இருந்தனர். பார்வை யளார்க்கு உடலை எங்கு வைக்கலாம் எப்படி வைக்கலாம் என எதுவும் தெரியாமல் மாணவர்களும் இயக்குனர்களும் தடுமாறிக்கொண்டிருந்த்னர். மையமாக இருந்து அனைத்து காரியங்களையும் துவக்கத்தில் செய்ய ஆளில்லை. மகன் ஷங்கியோ பெங்களூரில் அப்போதுதான் சட்டென உறைத்தது. . அவர் கடைசிவரை அவருடைய வேலைகள் அனைத்தையும் தனி ஒருவராகவே செய்திருக்கிறார். பாலுமகேந்திரா சினிமா பட்டறை, திரைப்ப்ட தயாரிப்பு ,இயக்கம் இவற்றோடு விழாக்களில் பங்கெடுப்பது வெளிவிவகாரங்கள் இவை எவற்றுக்கும் அவர் யாரையும் அடுத்த நிலையில் பிரதான மாக வைத்துக் கொண்டதில்லை. இதற்கு நம்பிக்கை ஒரு காரணம் அல்ல . மாறாக அவர் தன் காரியங்களை தானே நேரடியாக செய்யவிரும்புவார். தன் தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் தனக்கு நேரடியான தொடர்பு இருக்கவேண்டும் என விரும்புபவர்.
பாலுமகேந்திரா சினிமா பட்டறைக்கு கூட அவர் நடிப்பு தவிர்த்து இதர வகுப்புகளுக்கு கூட வேறு ஆசிர்யர்களை நியமிக்கவில்லை. கிட்டதட்ட தனி மனிதனாகவே அவர் தன்னையும் தன் சார்ந்த செயல்பாடுகளையும் நிர்வகித்துக்கொண்டார்..
74 வயதில் ஒருவர் அப்படி நடந்து கொண்டது அக் காரியங்களுக்குள் அவர் கொண்டிருந்த ஈடுபாடு பிடிப்பு இவற்றை தாண்டி அக்காரியங்கள் அவர் தனது இறுதி நாளுக்கு முன்பாக தான் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ற உணர்வோடு செயல்பட்டமைதான் அதற்கு காரணமாக இருந்து வந்திருக்கிறது.
குரசேவாவின் இகிரு படத்தின் நாயகன் போலத்தான் அவருடைய தீவிரம் இருந்து வந்தது. . அப் படத்தில் நாயகன் வாட்டனபே. வயது முதிர்ந்த நகராட்சி அதிகாரி. இறப்பு நெருங்கிவிட்டதொரு தருணத்தில் இது வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாக்கிவிடும் மனபிரயாசையுடன் அவர் உழன்று கொண்டிருப்பார். இறுதியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா ஒன்றை நிர்மானித்து விடுவதென முடிவெடுத்து அக்காரியத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்வார்.
கிட்தட்ட இறுதி நாட்களில் பாலுமகேந்திரா அவர்களின் முகம் இகிருவின் வாட்டனபேவினுடையதை போலவே இருந்தது. சினிமா பட்டறை துவங்கிய பின்பும் கூட அவர் முகம் தீவிரத்தை தேடியது அந்த தீவிரம் என்னவாக இருக்கும் மனிதர் இந்த வயதில் எதற்காக பிரயாசை படுகிறார் என்ற கேள்விகள் அடிக்கடி எழும். நானும் கூட இரண்டு மாதங்களுக்கு முன் சிட்டி சென்டரில் நடந்த திரைப்படவிழாவில் விஐபி க்கான லவுஞ்சில் நிதானமாக அவருடன் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது அவரது இன்னும் நிறைவேற்ற முடியாத கனவாக சிலவற்றை சொன்னார். அதில் ஒன்று நூறு பேரிடம் 50,000ம் ரூபாய் வாங்கி கூட்டுறவு முறையில் நல்ல படம் எடுப்பது. எந்த சமரசமும் இல்லாத அவரவர் விருப்பத்தோடு கூடிய சுதந்திர சினிமாவாக இருக்கவேண்டும் .. உன்னை போன்றவர்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். ஆனால் அடுத்த சில நாட்கள் கழித்து தலைமுறைகள் வெளியானபோது அவர் கனவு வெறும் சினிமா சார்ந்தது மட்டுமல்ல சமூகம் சார்ந்ததும் கூட என்பதை அறிந்து கொண்டேன்
இகிருவில் நாயகன் வாட்டனபே .இறுதியில் அப்படி ஒரு பூங்காவை உண்டாக்கி பனிகொட்டும் நள்ளிரவில் அந்த ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் ஆடியபடி திறப்பு விழாவுக்கு முந்தின நாள் நிம்மதியாக இறந்து போவான்.
பாலு மகேந்திரா அவர்களின் கடைசி சுவாசமும் கூட அப்படியாகத்தான் பிரிந்தது. கிட்டதட்ட வாட்டனபேவினுடையதைபோல அமைந்தது. அவர் சினிமாபட்டறயில் உடல் கிடத்தப்பட்டிருக்க அங்கு பயிலும் மாணவர்கள் அவரது உடலை சுற்றி பாதுகாப்பு சங்கிலியாக கைகோர்த்து நின்ற காட்சி அவரது கிட்டத்தட்ட அவரது லட்சிய கனவின் உருவகம் போலவே இருந்தது
அவரது இறுதி ஊர்வலமும் அவர் மயானமேடையில் சாம்பலாகிய பின்னும் அகலமறுத்த கூட்டமும் அதற்கு சான்று. அனைவருமே அவரோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கப்படிருந்தனர். எது எல்லோருக்குள்ளும் அவரை நோக்கி ஈர்க்க வைத்தது என்று யோசித்த போது தமிழ் தலைமுறைக்கு அவர் துவக்கி காட்சி வழி பாதையும் காட்சியியல் தொடர்பான மெனக்கெடலும் சிந்தனையும்..ஆரோக்கிய்மான கலை சூழலுக்கான சமரசமில்லாத மிடுக்கான வாழ்வும் சினிமாகார்ர்களீன் சொகுசையும் பவைசையும் பணத்தையும் அனாயசமாக விரலால ஒதுக்கிய திமிரும் தான் என்பதை உணர முடிந்தது.
70 பதுகளின் இறுதியில் தமிழ் சூழல் கொஞ்சம் முகத்துக்கு சோப்பு போட்டு கழுவிக்கொண்டு கண்ணாடி பார்த்து தன்னை திருத்திக்கொண்டபோது பாலு மகேந்திரா புதிய சட்டகங்களின் மூலமாக அசையும் பிம்பங்களுக்குள் ஒரு கவித்துவத்தை நிகழ்த்தினார். முன்னதாக தேவ்ராஜ் மோகன் பாரதிராஜா போன்றோருடைய படிநிலைமாற்றங்கள் தமிழரின் ரசனையை முழுவதுமாக மாற்றிக்கொண்டிருந்த உன்னதமான தருணம் அது. சினிமா பாணியில் சொன்னால் தமிழ் சினிமாவுக்கு ஒரு சன்ரைஸ் ஷாட். நிகழ்ந்து கொண்டிருந்த நிமிடங்கள். அதுவரை வசனங்களையும் கதாபத்திரங்களையும் மட்டுமே நம்பிய தமிழ் சினிமா பின் புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்.
இத்தனைக்கும் நிவாஸ் போன்றவர்கள் பதினாறு வயதினிலே கிழக்கே போகும் ரயில் போன்ற பாரதிராஜாவின் படங்கள் மூலமாக செறிவான கட்டமைவை காமிரா கோணக்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தாலும்.. இயறகையின் நுண்மையை சூரிய பிரபையில் பிரதிபலிக்கும் மனிதர்களை கடந்த இதர உயிரிகளின் அழகை அதன் இயல்போடு மிகைபடாமல் சட்டகத்தினுள் உயிர்ப்பூட்டிய கலைஞன் பாலு மகேந்திரா ஒருவரே. அழியாத கோலங்களின் பூவண்ணம் போல நெஞ்சம் பாடலில் ஷோபா பிரதாப் போத்தன் நடந்து வரும் காட்சிகளில் அவர்களை காட்டிலும் உற்சாகமாக காற்றுக்கு தலையாட்டும் ஆற்றோர வளர்ந்த நாணல்களின் நெஞ்சை அள்ளும் அழகு தமிழ் சினிமாவின் கவித்துவங்களுக்கு துவக்க புள்ளி.. மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்ற ஓடை வயல்வெளி மணற்பரப்பு பாலம் மரங்கள் நாணல் புதர்கள் ஆகியவையும் பாத்திரங்களாக மாறி தமிழின் நிலப்பரப்புக்கான சினிமாவாக அழியாத கோலங்கள் உயிர் பெற்றிருந்தது.
ஒளிப்பதிவில் பேக் லைட் எனப்படும் பின் பக்க வெளிச்ச உத்தியை இதுவரை இவரைப்போல இயற்கை ஒளியில் வெகுசிறப்பாக கையாண்டவர்கள் வேறு எவரும் இல்லை. இவருக்கு அடுத்தபடியாக அதில் கைதேர்ந்த்வராக அசோக்குமார் தனிச்சிறப்பு கொண்டவராக இருந்தாலும் முதன் முதலாக பொன்னிற கேசங்களை இயற்கையான பின் ஒளியில் நிகழ்த்தி காட்டிய சினிமா கவித்துவம் அவருடையது. அவருக்கு பிறகு வந்தவர்களில் இயற்கை ஒளியை செறிவாக திரை சட்டகத்தில் உள்வாங்கிக் கொண்டவர்களுள் அசோக் குமார் , ராஜீவ் மேனன் மது அம்பாட் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த உயரங்களை கண்டிருப்பினும் அவர் காண்பித்த பச்சை நிறத்தை வேறு எவரும் காண்பிக்க வில்லை. இதற்காக வண்ணகலவை செய்யும் கிரேடிங்கில் அக்காலத்தில் எந்த கம்ப்யூட்டர் உபகரணங்களும் இல்லாமல் கைகளால் ஒவ்வொரு காட்சியாக சரி செய்து வந்த காலங்களில் ஆங்கிலத்தில் லில்லி எனப்படும் புதிய உத்தியை இதற்காக அவர் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதை அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
மேலும் அவர் படங்களில் பாத்திரங்களின் உடலில் காணப்படும் மவுனம் வேறு எவருக்கும் சித்திக்கவில்லை.. அவர் வெறும் ஒளிப்பதிவாளர் என்பதை கடந்து இயக்குனராகவும் தொழில் நுட்ப மேதமையை கடந்த ஒரு அகதரிசனம் அவருக்குள் இருந்ததுவும் ஒரு காரணம். இதே போல சில் ஹவுட் ஷாட்டுக்கு முதன் முதலாக கைதட்டல் வாங்கியதும் அவரது ஒளிப்பதிவு மூலமாகத்தான் .. இதற்கு முன் கருப்பு வெள்ளையில் சில் ஹவுட் ஷாட்டுகள் இடம்பெற்றிருப்பினும் அவரது படங்கள் மூலம்தான் அவை அழகியலின் கூறுகளுடன் பாமர ரசிகனும் கைதட்டுமளவிற்கு ரசனையை மேம்படுத்திருக்கிறார்.
நாயகன் என்றாலே அவன் சிவப்பாக இருக்கவேண்டும் கறுப்பாக இருந்தால் வசீகரமாக அல்லது எல்லோரையும் ஈர்க்கும் தன்மை கொடவனாக இருக்கவேண்டும் என்பதையெல்லாம் பிரதாப் போத்தனின் சோடாபுட்டி கண்ணாடி மூலமாக உடைத்தவர். அழியாத கோலங்களில் கோமாளி பொன்ற பிரதாப்பின் தோற்றம் துவக்கத்தில் அனைவருக்கும் புதிராகத்தான் இருந்திருக்கூடும்.. ஆனால் அதே தோற்றம் மூடுபனி திரைப்படத்தில் கொலைகாரனாக மாறிய தருணத்தில் அனைவரும் அதிர்ந்து போனதும் உண்மை.உண்மையில் பாலுமகேந்திரா என்ற பெயர் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்த்தற்கு மூடுபனிதான் ஒரு முக்கிய காரணம். திரில்லர் என்பதை தாண்டி தமிழில் அசலான பிலிம் நோயர் வகைபடமாக அது வெளிப்பட்டிருந்தது.
படத்தில் பாத்திரத்தின் பார்வை கோணத்தில் காமிரா ஒவ்வொரு அறையாக தேடி பார்க்கும் அந்த குறிப்பிட்ட ஷாட் ஆங்கிலத்தில் கோஸ்ட் எபக்ட் என்பார்கள் ஸ்ட்டி காம் கண்டுபிடிப்பட்டபிறகு பலரும் எடுக்க துவங்கிவிட்டாலும் அக்காலத்தில் இந்த ஷாட் தமிழ் சினிமாவின் ரசனையை ஒரு அங்குலத்துக்கு உயர்த்தியது என்றால் மிகையில்லை. மேலும் இது போன்ற தொழில்நுடபம் காரண்மாக பாலுமகேந்திரா என்ற நவீன தொழில்நுட்ப கலைஞனை மக்கள் மத்தியில் அத்திரைப்படம் உயர்ந்த இடத்துக்கு அழைத்து சென்றது.
மேற் சொன்ன படங்களில் பாடல் காட்சிகளின் படமாக்கப்பட்ட விதமும் அவரது தனித்த அடையாளம். அதுவரை இசைக்கேற்ப அதன் தாளத்திற்கேற்ப காமிரா முன் நடிக நடிகையர் நடனம் ஆடிக்கொண்டிருந்ததை அபத்தமாக ஒதுக்கி தள்ளி சாதாரணமாக நடந்து வருவது .நாயகி நாயகன் சிரிப்பது பாடல் வரிகளை பாடாமல் அல்லது வரிகளுக்கு தொடர்பில்லாமல் காதலின் மகிழ்வூட்டும் தருணத்தில் லயித்து கிடப்பது பொன்ற காட்சிகளை தொகுத்து கொடுப்பது ஆகியவையும் அவரது காட்சியியல் தனித்துவங்கள்.
அதே போல அவரது படங்களுக்கென அவரது கதா பாத்திரங்களுக்கென பிரத்யேக உடைகளை அவர் வரித்துகொண்டார். தலையை விரித்து போட்ட நிலையில் நாயகியை திரையில் காண்பிப்பது அபசகுனமாக கருதப்பட்ட காலத்தில் முதன் முதலாக தலையை பின்னாமல் அல்லது ஜோடனை எதுவும் இல்லமால் ஷோபாவை ஒரு புடவை ஒரு குங்குமபொட்டு ஆகியவற்றின் மூலம் தமிழ் அடையாளம் சார்ந்த அழகியலைகண்டு பிடித்தவர்.. மூன்றாம் பிறை திரைப்படத்தில் பொன் மேனி உருகுதே பாடல் காட்சியில் இருவருக்குமான உடை தேர்வு இன்று வரை அப்பாடலை தமிழின் சிறந்த சினிமா பதிவாக காப்பாற்றி தந்துள்ளது என்றால் மிகையில்லை.
எந்த தருணத்திலும் கதையின் வேகத்தை கூட்டுவதற்காக அவர் கதை நிகழும் இடத்தை காண்பிக்காமல் விட்டதில்லை .. அது ஒரு அலுவலகமாக இருந்தால் அதன் முகப்பு அல்லது பெயர் பலகை காண்பிக்கபடும். வீடாக இருந்தால் வாசல் கதவு இதெல்லாம் காண்பிக்கப்பட்டபின் தான் வீட்டுக்குள் நுழைவார். படம் பார்ப்பவனுக்குள் கதையின் நிகழ்வு முழுமையாக இருக்க வேண்டுமானால் அவனுக்குள் நிலவியல் ரீதியான் புரிதல்கள் அவசியம் வேண்டும் என்பார். அவர் படைப்பின் ஒழுங்குக்கு இவைகள் மிக முக்கியமாக பங்காற்றி வந்துள்ளன.
அவரது அனைத்து திரைக்கதைகளின் முடிவும் அவரது இன்னொரு தனித்துவம் .அவர் ஒரு போதும் இறுதி காட்சியில் கதாபாத்திரங்களை பேச விட்டதில்லை. இரண்டு முரண்களை காண்பித்து பார்வையாளனின் மனதில் ஆழமான பாதிப்பை உருவாக்குவதில் மட்டுமே அவர் தீவிர கவனம் செலுத்துவார்..
அழியாத கோலங்களின் இறுதிகாட்சி போல நம்மை பெரும் துக்கத்தில் வீழ்த்தும் காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. நான் பலமுறை அந்த இறுதி காட்சியை திரும்ப திரும்ப பார்த்து வரும்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் அது என்னுள் பெரும் பாறாங்கல்லை கயிற்றில் கட்டி மெல்ல இறக்கி நெஞ்சடைக்க செய்வதாய் இருந்துள்ளது. மூன்றாம்பிறை மறுபடியும் , யாத்ரா (மலையாளம்) வீடு சந்தியாராகம் என அவரது திரைக்கதைகளின் முடிவு பெரும் காவியத்தன்மைக்குள் நம்மை நகர்த்தி செல்வதாகவே இருந்து வந்துள்ளது. காட்சி ரீதியான பெரும் அழகியல் தன்மை கொண்ட யாத்ரா வின் இறுதிகாட்சி அவரது மேத்மையின் உச்சம் என சொல்லலாம்.உண்மையில் நீங்கள்கேட்டவை அவருக்கான வகைமாதிரியான படம் அல்ல என்றாலும் அதன் மூலம் பானுசந்தர் அர்ச்சனா என இரண்டு நட்சத்திரங்களின் உதயத்திற்கு அத்திரைப்படம் தன் கடமையை நிறைவேற்றியிருகிறது.
ஓ வசந்த ராஜா பாடல் காட்சி மூலம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை காமிரா மூலம் இரண்டாவது முறையாக கட்டியமைத்து ராஜேந்திர சோழன் அவர். கருத்த அழகியை தமிழ் முதன் முதலாக பார்த்து ஆச்சர்யபட்ட்து. வெள்ளை தோல்தான் அழகு என்ற தமிழரின் பொதுப்புத்தியில் கரடுதட்டிபோன ரசனையை தடம் மாற்றி கருத்த பெண்களின் கவர்ச்சியான அழகை மாற்றி நிறுவியவர்.
திரைப்படத்துறையின் இத்தகையை சாதனைகள் மட்டுமே அவரது புகழுக்கு காரணமில்லை. மாறாக அவர் திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரை பண்புகள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம். வணிக சினிமாவுக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். புகழின் உச்சத்தில் இருந்த போதும் அவர் சாதராண மனிதருக்கான வாழ்க்கையையே வாழ்ந்தார். சாதாரண அம்பாசடர் கார்மட்டுமே வெகுநாட்களாக வைத்திருந்தார் அதுவும் கூட இல்லாமல் பல சமயங்களில் ஆட்டோவில் செல்பவராக இருந்து வந்தவர் அவரது வளர்ப்பு மகனான இயக்குனர் பாலாவின் நிர்பந்ததின் பேரில் அவர் வாங்கி கொடுத்த உயந்த ரக காரை பயன்படுத்த துவங்கினார்.
தாஜ் ஹோட்டலில் நடந்த மறுபடியும் வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா உங்களை போல எந்த சமரசமுத்துக்கும் ஆட்படாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்வது என்னை வெட்கம் கொள்ள வைக்கிறது என வெளிப்படையாக பாராட்டியிருந்தார்.
அவரது அலுவலகம் சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகிலிருந்த போது எனது பை சைக்கிள் தீவ்ஸ் நூலின் முன்னுரைகாக அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என்னுடைய நண்பர் ஞான சம்பந்தன் அப்போது அங்கு உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தான் முன்னுரைக்காக முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தார். அச் சமத்தில் அவர் ஹாலில் வாசலை நோக்கினார் போல் நேரடியாக மேசையை போட்டு அமர்ந்திருப்பார். நான் ஒருமுறை அவரிடம் இது குறித்து கேட்டேன் .தனியாக அறையில் இருந்தால் கொஞ்சம் பிரைவசி கிடைக்குமே என்று அதற்கு அவர் சொன்ன பதில் தான் அவரது உயரங்களுக்
கெல்லாம் மூல அடிப்படை. என்னை தேடி வருபவர்களை நான் நேரடியாக் பார்ப்பது மூலம் நான் அவர்களை விட்டு விலகாமல்; இருக்கிறேன்.. ஒரு வேளை என்னை பார்க்க வந்து வாசலிலேயே அவர்கள் தயங்கி சென்று விடும் பட்சத்தில் ஒரு மனித உறவு என்னை விட்டு விலகி போகிறது என்றார். அவரது இந்த மனித நேயமும் சக மனிதனோடு எப்போதும் பிணைத்திருக்க விரும்பும் அவரது அவாவும் தான் இயக்குனர் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைகளை கடந்து ஒரு சமாந்திரனாக காலத்தின் அடையாளமாக அவரை உயர்த்தி காட்டியுள்ளது.
சிறுபத்திரிக்கை சார்ந்தோ அல்லது தீவிர சினிமா சார்ந்தோ நடத்தப்பட்ட எந்த கூட்டத்துக்கும் அவர் மறுப்பு சொன்னதில்லை. எவ்வளவு சிறியவராக இருந்தாலும் எவ்வளவு புதியவராக இருந்தாலும் தட்டாமல் அக்கூட்டங்களுக்கு சென்று கலந்துகொண்டு வாழ்த்தி பேசுவதோடு அல்லாமல் அதை கடமையாக உணர்ந்து செய்தவர் நான் அவரது உதவியாளனாக பணி புரியாவிட்டாலும் அவருக்கு மனதளவில் நெருக்கமானவனாக இருந்து வந்திருக்கிறேன். ஒருமுறை இந்தியா டுடே பேட்டியில் அவர் எதிர்பார்க்கும் வருங்கால இயக்குனர்களீல் அவரது உதவியாளர்கள் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருந்த்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகவே கருதுகிறேன்.. அவரோடு நெருங்கி நிற்கும்போது எனது அறிவுணர்ச்சி கனம் கூடிக்கிடப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன்.
சித்தர்கள் அல்லது யோகிகளுக்கு மட்டுமே அருகில் நிற்பவர்களை ஆற்றலாக உணரவைக்கும் தன்மை இருபதாக பல நூல்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் அதை பாலுமகேந்திரா அவர்களிடம் உணர்ந்திருக்கிறேன். அவரது இறுதி நாளில் சினிமா பட்டறயில் கிடத்தப்பட்டிருந்த போதும் அத்தகைய ஒரு உணர்வலையை என்னால் அறிந்துணர முடிந்தது.
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து எனக்கு அவ்வப்போது அழைப்பு வரும் .. அஜய் நாளைக்கு காலையில நேரமிருந்தா இங்க வாயேன் என கூப்பிடுவார். மறுநாள் போனதும் அவர் நான் எதையாவது செய்யணும் சில புத்தகங்கள் போடலாம்னு இருக்கேன் நீதான் எழுதனும் என்பார் .அஜய் நீ எழுதனாதான்பா எனக்கு திருப்தியா இருக்கும் இந்த வீடு சந்தியா ராகம் இரண்டையும் முடிச்சு கொடு .. உனக்கு பணம் வேணும்னாலும் தரேன் என்பார்.
வீடு திரைக்கதை எழுதி பாதி முடிக்கையில் வேறு பட வேலைகள் வந்து என்னை இழுத்துகொள்ள தொடர்ந்து என்னால் அதில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. என் திருமணத்தை அவர் தலைமையில் நடத்த அழைக்கச் சென்ற போது வீடு திரைக்கதை புக்கா கொண்டு வரணும்பா உனக்கு நேரமிருக்கா என்றார். நான் அவரிடம் என்னுடைய சூழலை சொல்லி உணர்த்த அப்ப நீ கவலையை விடு , என் ஸ்டுடண்ட்ல ஒருத்தன் நல்லா எழுதறவன் இருக்கான் அவனை வச்சு எழுதிக்கறேன் என்றார்.
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் எதையாவது செய்யணும் அஜய் எதையாவது விட்டு போகணும்னு நெனக்கிறேன் என்றே சொல்லிக்கொண்டிருப்பார். என திருமணத்தை அவர் முன்னிலையில் நடத்த விரும்பினேன் . திருமணத்தன்று காலையில் வீட்டிலிருந்து புறப் பட்டபடி அவருக்கு வாகனம் அனுப்ப போன் செய்த போது .. என்னப்பா மாப்ள நீயே இன்னும் வரலையா நான் உன் மண்டப வாசல்ல தான்ப்பா இருக்கேன் என்று காலையில் ஆறுமணிக்கே ஆச்சர்யபடுத்தினார்.
திருமணத்தை நடத்திவைத்து அவர் சிறப்புரை ஆற்றிய போது அந்த சிறிய அரங்கம் ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டலால் அதிர்ந்தது. உன் மனைவிக்கு மசால் வடை பிடிக்கும்னு தெரிஞ்சா டெய்லி சாயந்திரம் கடைக்கு போயி, ஒரு மசால் வடை வாங்கிட்டுப் போ .. என இல் வாழ்க்கை வெற்றி ரகசியம் சொல்லித் தந்து ஆச்சர்யப்படுத்தினார் . இப்போதும் மாலைகளில் வீடு திரும்பும் சமயங்களில் எனக்கு நினைவுக்கு அந்த சொற்களும் முகமும் ஞாபகத்திற்கு வரும்
இறுதி ஊர்வலத்தின் போது நான் மிதமிஞ்சிய பதட்டத்தில் இருந்தேன். நான் மட்டுமல்ல . அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும் அப்படியாக கூச்சலும் ஆரவாரமுமாய் இருந்தார்கள் .அனைவரது உடலும் அனாவசியமாக பத்றிக்கொண்டிருந்தது. அமைதியாக கிடக்கும் அவரது உடலை சுற்றி பதட்டத்துடன் பல உடல்கள். ஏதோ ஒன்றுஇல் இந்த உடல்கள் அந்த உடலோடு தன்னை அடையாளம் கண்டு கொண்டதன் விளைவாகவே இதனை உணர முடிந்தது. இத்த்னைக்கும் இவர்களில் 90 சதவீதம் பேரை அவருக்கு நேரடியாக தெரியாது. ஆனாலும் ஏன் நான் உட்பட இவர்களின் உடகளில் இத்தனை பதட்டம் .யோசித்த சமயத்தில் அவர் படங்கள் மூலமாக பெற்ற ஞானம் அவர்களது முதுகுத்தண்டு வழியாக விழித்துக்கொண்டு அவரது உயிரற்ற உடலோடு ஐக்கியமாக முயல்கிறது.
அதுதான் ஒரு குருவின் தன்மை
சினிமாவில் அழகியலையும் கலையையும் நேசிக்கும் மனிதர்கள் மத்தியில் அவர்களது முதுகுதண்டின் கீழே அவரது ஞாபகங்கள் என்றும் உறங்கிகொண்டிருக்கும் .
இறுதியாத்திரை முடிந்து போரூர் மயானத்தில் அவர் உடல் அருகே என்னால் நெருங்க முடியவில்லை . பெரும் கூட்டம் தடையாக இருந்தது..ஆனாலும் நான் பெரும் ஆற்றலால் இயக்கப்படுபவனாக அசுரவேகத்தில் கூட்டத்தை பெரும் கூச்சலுடன் கிழித்தபடி எப்படியோ மயான அரங்கினுள் நுழைந்து அவர் உடலருகே சென்று தலைமாட்டின் அருகே அமர்ந்தேன்
மின் மயானத்தின் கருத்த உருண்ட வாய் அவர் தலைமாட்டில் உடலை மொத்தமாக விழுங்க காத்திருக்க அவரது உடலின் இருபுறமும் அவருக்கு நெருக்கமான உதவியாளர்கள் . நான் அவருக்கு தலைமாட்டில் முதல் ஆளாக இருக்க எனக்கடுத்து
வெற்றி மாறன் ராம் வரிசையாக இன்னும் பலர். சிறுவயதில் நான் பார்த்து ரசித்த அதே தொப்பியையும் பின் தலையையும் என் கைகள் தாங்கியிருந்தன.
என் தந்தை இறந்தபோது அவரை இறுதி சடங்குக்காக கைகளால் தாங்கியபோது அடைந்த உணர்வு நிலையை அன்று முழுமையாக உணர்ந்தேன். அந்த தொப்பி வழியாக ஒரு ஈரத்தை என் கைகள் உணர்ந்தன. அனைவரும்
அஜயன் பாலா
- நன்றி (குமுதம் )தீராநதி ..மார்ச்.20014
-
.
2 comments:
Arumai..
ஒரு மனிதனின் உன்னத உயரத்தை தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் படம் பிடித்த வரிகள்..சிறப்பு..அழகு..!
Post a Comment