..
மதுரையில் இருந்த போது நண்பர் இயக்குனர் அருண்மொழியின் அழைப்பு. குரலில் பதட்டம். கொரிய அரசாங்கமும் சாகித்ய அகாதமியும் இணைந்து சாம் சங் நிறுவனத்தின் உதவியுடன் வழங்கும் தாகூர் விருது இந்த ஆண்டு எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் நாவலுக்கு கிடைத்திருப்பதாகவும் முடிந்தால் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொல்லும்படியும் கூறினார்.
அவரிடம் எப்படி வாழ்த்தை பகிரலாம் என யோசித்துக்கொண்டே அவசரமாக விரல்கள் செல்போனில் எஸ். மற்றும் ஆர். பட்டன்களை மாற்றி மாற்றி அழுத்தி தேடியது. இல்லை தொலைபேசி மாறியதில் எப்படியோ எண் விடுபட்டுள்ளது. அருகிலிருந்த நண்பரிடம் கேட்டேன் அவரிடமும் இல்லை.யாருக்காவது போன் செய்து எண்ணை வாங்கலாமா என நினைத்து பின் வாழ்து சொல்வதின் வழமையான சம்பிரதயங்களின் காரணமாக அதனை தவிர்த்து ராமகிருஷ்ணன் குறித்து நினைவலைகளை நண்பருடன் பகிரதுவங்கினேன்.
முதன் முறையக கவுதம் சித்தார்த்தன் தான் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனனை ஒரு புத்தக கண்காட்சியில் அறிமுகபடுத்தினார். பதிலுக்கு எஸ்ராவும் என்னை தெரியும் என்றார். எனக்கு ஆச்சர்யம் .பிறகு விக்ரமதித்யன என்னை பற்றி சொல்லியிருப்பதாக கூறி கைகுலுக்கினார்.அப்போது நானும் விக்கியும் ஒரு பத்திரிக்கையில் ஒன்றாக பணிபுரிந்துகொண்டிருந்தோம்.அப்போதைய இலக்கிய உலகிற்கு முகநூல் ட்விட்டர் எல்லாம் விக்கிபீடியா எல்லாமே விக்கிதான். சிறிய ஆள் பெரிய ஆள் என்றில்லை .அவர் தன்க்குள் அங்கீகரித்தால் போதும் அவ்வளவுதான் .அதன் பிறகு அவரே தவிர்த்தாலும் முடியாது. இலக்கிய முத்திரை அவர்மீது விழுந்துவிடும்.
இப்படியாக என் பெயரும் அவர் மூலம் குறுகிய காலத்தில் கோவில்பட்டி முதல் கோடம்பாக்கம் வரை சென்றுகொண்டிருந்தது.எஸ்ராவும் என்னை பற்றி முன்கூட்டியே அறிந்திருந்திருந்தார்
அந்த முதல் சந்திப்புக்கு பிறகு எஸ்ராவையும் கோணங்கியையையும் அடிக்கடி அப்போது தி நகரில் இருந்த முன்றில் புத்தக அலுவலகத்தில் மாலை நேரங்களில் பார்க்க முடிந்தது. இவர்களை போல பிரேமிள், நாகார்ஜீனன்,கோபிகிருஷ்ணன், .. லதாராமகிருஷ்ணன் ஆகியோரும் மாலை வேளைகளில் அங்கு வருவார்கள். என்றாலும் கோணங்கியும் ராமகிருஷ்ணனும் பலரிடமும் இணக்கமாகவும் இலகுவாகவும் அனைவரிடமும் பழகினர். மேலும் அப்போது இலக்கிய உலகில் அவர்கள் இருவரும் பெரும் வசீகரத்துடன் பேசப்பட்ட காலம்.
இவர்களை சந்தித்து நட்பு பேணுவதற்காக நானும் அங்கு அடிக்கடி செல்வேன். ஒரு எழுத்தாளன் ஆகிவிடும் உத்வேகத்தில் இருவரிடமும் என்னை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்களில் முயன்று தோற்றுகொண்டிருந்தேன் .
முன்றில் மா அரங்கநாதன் வசித்திருந்த பழவந்தாங்கலில் அடுத்த தெருவில்தான் என் அறையும். கடை மூடியபின் இருவரும் ஒன்றாக ரயிலில் வீடு திரும்புவோம். மா. அரங்க நாதன் வீட்டு மாடியில் வரிசையாக சில அறைகள். அதில் ஒரு அறை எழுத்தாளர்களுக்கானது.வெளியூரிலிருந்து வரும் பல எழுத்தாளர்கள் அந்த அறையில் இரவு தங்குவது வழக்கம். அந்த அறையில் அமர்ந்துதான் இலக்கிய சிந்தனைக்காக என் முதல் கட்டுரையை எழுதிய ஞாபகம்.
அன்று கடை மூடியதும் எஸ்ராவும் கோணங்கியும் அந்த அறையில் தங்க முடிவெடுத்து பழவவந்தாங்கலுக்கு ரயில் மூலம் திரும்ப நானும் அவர்களுடன் வந்துகொண்டிருந்தேன். இன்று எப்படியும் என் அறைக்கு அவர்களை அழைத்து சென்று நான் அதுவரை எழுதியிருக்கும் நோட்டுகளை காட்டி நானும் ஒரு மாயக்கதைகள் எழுதுவதில் ஆர்வமிக்கவன் தான் என்பதை உணர்த்த முடிவெடுத்து மிகவும் பத்ட்டத்தில் இருந்தேன். ஆனால் என் விருப்பத்தை பேச இடமளிக்காதபடி எங்களுடன் வந்த இன்னொரு வாசகர் ..அவரும் என்னை போல சமீபமாய் இலக்கிய பூச்சியால் கடிபட்டு பதட்டமாக இருந்தார். அவர் தொடர்ந்து இருவரிடமும் தான் படித்த புத்தகங்கள் குறிப்பாக ஆங்கில கிளாசிக்குகள் பற்றியும் கார்டூன்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். எனக்கோ கொஞ்சம் கடுப்பு. சரி இன்னைக்கு நாம் நினைத்த காரியம் அவ்வளவுதான் என நொந்தபடி உள்ளூர அந்த நபரையும் அவரது ஆங்கில புத்த்க அறிவையும் சபித்தபடி அமைதியாக பயணித்தேன் . பழவந்தாங்கல் வந்தது. எஸ் ராவும் கோணங்கியும் சட்டென என் பக்கம் திரும்பி உன் அறை இங்குதான் இருக்கிறது என்றாயே அங்கு போகமலாமா என அவர்களாக கேட்க மனசிலிருந்து ஒரு நீரூற்ரு பீறிட்டு கிளம்பியது.
டேய் அவன் பேசிபேசியே கொன்னுட்டான் நேரா அறைக்கு போனா அவனும் எங்ககூட வந்துடுவான் அவங்கிட்டருந்து தப்பிக்கத்தான் உங்கிட்ட வரோம் .. பரவாயில்லை உன்னை பாத்தா நல்ல பையான தெரியுது அமைதியா இருக்க என இருவருமே கூறினர். அன்று இரவு இருவரும் சாப்பிட்டு சாவகசமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் என் நோட்டு புத்தகத்தை நைசாக அவர்கள் முன் கொண்டு வைத்தேன் .அந்த நோட்டு கிட்டத்தட்ட என் கற்பனைகளின் சிதறலான உயிரணுக்களின் எழுத்துரு. அவ்வப்போது மனதில் தோன்றும் கதைகள் மற்றும் அன்று பிலிம்சேம்பரில் பார்த்த உலகசினிமா அனுபவங்கள்.. ஆகியவற்றை அதில் கிறுக்கியிருந்தேன். அதில் நான் கிறுக்கியிருந்த தாண்டவராயன் மற்றும் முருகேசன் ஆகிய இரு கதைகளை படித்துவிட்டு இருவரும் பாராட்டினர் . மறுநாள் ஞாயிறு பகல் முழுக்க அவர்களுடன் கழிந்தது. அப்போது கோணங்கியின் பட்டுபூச்சியின் மூன்றாம் ஜாமம் தொகுப்பு உருவாக்கிக்கொண்டிருந்த நேரம் . இருவருமே அந்த கதைகளின் உலகில் இருந்தனர். அராபிய கதைகளின் ஆயிரத்தோரு இரவிலிருந்தும் விக்ரமாதித்தன் கதைகளின் உலகத்திலிருந்தும் குள்ளர்களும் கடல்கொள்ளையர்களும், அண்ரண்டா பட்சிகளும், பேசும்கிளிகளும் ,கதை சொல்லும் பொம்மைகளும் அவர்களது பேச்சின் மூலம் என் அறைக்குள் வரத்துவங்கினர். அதனால் ஒரு வினோதம் மூவரையும் சுற்றி வார்த்தைகள் மூலம் வலை பின்னியிருந்தது.
அன்று மாலை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அவர்களை வழியனுப்ப நான் காத்திருந்த அந்த கணங்கள் தான் என் வாழ்க்கையை அர்த்தபடுத்திய கணங்கள்.
அப்போது நான் எழுதவிருக்கும் ஒரு கதை பற்றி அவர்களிடமும் சொன்னேன் . முகம் எனும் அந்த கதையை கேட்ட கோணங்கி
”டேய் தம்பி இனி நீ சினிமாவை தேடி ஓடாத .. நீ எங்க கூட இருக்கவேண்டியவன்டா .. ராமகிருஷ்ணனை அடிக்கடி பாத்துக்க..”, என சொல்ல ராமகிருஷ்ணனும் அதை ஆமோதிப்பது போல சிரித்தபடி தலையசைத்தார். கிட்டதட்ட மூன்று மணிநேரம் இப்படி ரயில் நிலையத்திலேயே அமர்ந்து பெசிக்கொண்டிருந்தோம் . சட்டென நேரமாகிவிட்டதை உணர்ந்து அவர்கள் அப்போது ஸ்டேஷனுக்குள் வந்த ரயிலைபிடிக்க புறப்பட்டனர் . கையசைத்தபடி அவர்களை வழியனுப்ப ரயிலின் அருகே சென்ற என்னை .. என்னடாதம்பி ஏன் வேடிக்கை பாக்குற வா நீயும் ஏறிக்கோ
என அழைத்தனர் . நானும் யோசிக்கவில்லை சடாரென அவர்களுடன் ஏறிவிட்டேன். கையில் காசில்லை. உடுத்த மாற்று ஆடைகளில்லை ..ஆனால் எதையும் யோசிக்காமல் வழியனுப்ப வந்த நான் பயணியாகி விட்டேன் . அவர்கள் அழைத்தவுடன் தொற்றிக்கொண்ட என் சுபாவம் காரணமாக அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்து போனது. அதன்பிறகு மூன்றுநாட்கள் .. நானும் கோணங்கியும் ராமகிருஷ்ணனின் பரமரிப்பில் சென்னையில் சுற்றி திரிந்தோம். அப்போது ராமகிருஷ்ணன் குங்குமத்தில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவருக்கு கே.கே நகரில் ஒரு அறை இருந்தது. இரவில் கோணங்கியும் ஏஸ்ராவும் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்க அவர்களது வார்த்தைகளின் உலகம் தரை வழியாக என் உடம்பை நோக்கி ஊர்ந்து வர துவங்கியது. வெறும் சிலிட்ட சிமண்ட் தரையில் மகத்தான குளிர்ச்சியை அன்று இரவில் உணர்ந்தேன் . இரவு முழுக்க அவர்கள் பேசிக்கொண்டிருந்த்னர். நானும் கண்விழித்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன். தொடர்ந்து மூன்றுநாட்கள் அவர்களின் உரையாடலைகேட்டபடியே அவர்களுடன் ஒரு மாண்வனை போல திரிந்தேன். கதை எழுதுவதும் எழுத்தாளனாக மாறுவதும் உலகின் அதி உன்னத லட்சியமாக என்னுள் கடலிலிருந்து மேலெழும் மலைகளை போல உருக்கொண்டன.
கோணங்கிக்கும் எஸ் ராமகிருஷ்ணனுக்கும் அச்சமயம் நல்ல ஒத்திசைவு இருந்தது. இருவருமே ஒருவரில் ஒருவர் அதிகமாக அறிவை பகிர்ந்துகொண்டனர். பாதித்துக்கொண்டனர். எஸ்ரா வுக்கு கோணங்கி மேல் அவருடைய படைப்புகள் மேல் அபரிதமான மரியாதை இருந்தது. அதே போல கோணங்கியும் எஸ்ராவின் ஆங்கில அறிவின் வழியாக பல தகவல்களை படைப்புகளை பெற்றுக்கொண்டார். இருவரது படைப்புகளிலும் இருவரும் பங்கெடுத்துள்ளனர். இலக்கிய இரட்டையர்கள் எனுமளவிற்கு அவர்கள் இருவரும் ஒருவரில் ஒருவர் அடையாளம் கொண்டிருந்தனர். இம் மூன்றுநாட்களில் நான் அடைந்த உள எழுச்சிதான் பிற்பாடு சினிமாவை மீறி நானும் ஒரு எழுத்தாளனாக அடையாளம் பெற என்னை உந்தித்தள்ளின.
இதன் தொடர்ச்சியாக அவர்கள் விருட்சம் அழகிய சிங்கர் வீட்டுக்கு ஒருநாள் மதிய நேரம் சென்றுள்ளனர். உன் இதழுக்கு வந்த கதைகளை கொண்டுவா பார்க்கலாம் என்று அழகிய சிங்கரிடம் கூற,அவரும் அவர்கள் முன் தான் வீண் என ஒதுக்கிய கதைகளை கொண்டுவந்து வைத்தார். அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துவந்தவர்கள் என் முதல் கதையான் தண்டவரயன் கதையின் கையெழுத்து பிரதியை பார்த்துள்ளனர். தாண்டவரயன் எனும் அந்தபெயர் அவர்களுக்கு என்ன காரணத்தினாலோ மிகவும் பிடித்திருந்தது.அந்த பிரதியை கையிலெடுத்து சிங்கரிடம் தந்து இதை நீ அடுத்த இத்ழில் போடு.. என தந்துள்ளனர். இப்படியாகத்தான் என் முதல் கதை பிரசுரம் அச்சாக இருவரும் காரணமாக இருந்தனர்.
அதன்பிறகு அவ்வ்போது ராமகிருஷ்ணனை சந்திக்க செல்லும்போது நல்ல புத்த்கங்களை குறிப்பாக சிறுகதை தொகுப்புகளை கொடுத்து படிக்க சொல்வார். அவ்வப்போது அவரும் என் அறைக்குவருவார் .. கிராம வீடுகள் போல ஓடு கூரைவேய்ந்த அந்த வீட்டின் முன் பகுதியில்தான் யூமாவாசுகியும் வசித்து வந்தார் . என் அறைக்கும் யூமா வின் அறைக்கும் இடையில் ஒரு தென்னை மரம் கிணறு செம்பருத்தி செடிகள் ஆகியவை இருந்தன. இந்த சூழல் காரணமாக கோணங்கிக்கும் எஸ்ராவுக்கும் எனது அந்த அறை மிகவும் பிடித்திருந்தது . அவர்கள் வந்தால் இரவு நெடுநேரம் அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பேன். ஒருநாள் எஸ்ரா என் பழவந்தாங்கல் அறையில் எனக்கு முன் வந்திருந்து காத்திருந்தார்.. அப்போதுநான் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அறைக்கு வந்ததும் அசதி காரணமாக அவர் பெசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டேன் ..மறுநாள் காலை எழுந்தவுடன் “அவர் உன்னை தேடி வந்திருக்கிறேன் நீ பாட்டுக்கு தூங்குகிறாயே உனக்கு இலக்கியத்தின் மேல் இருக்கும் அக்கறை இதுதானா என கொபத்துடன் கேட்டார் . அது ஒரு எழுத்தாளனின் கொபம் மட்டுமல்ல இலக்கியத்தை தீவிரமாக உபசிக்கும் ஒரு தபசியின் கோபம். அதன்பிறகு அவர் என் அறைக்கு வரவில்லை
அதன் பிறகு பலமுறை அவர் சென்னை வரும்போதெல்லாம் அவரை தேடி சந்தித்துள்ளேன்..படித்த கதைகள் குறித்து ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வார். மணிக்கணக்கில் அவருடன் இடைவிடாமல் பேசும் வாய்ப்பும் நேரமும் எனக்கு கிட்டியுள்ளது.எனக்கு தெரிந்து தமிழின் எந்த இலக்கியவாதியும் தன்னை தேடி வருபவர்களிடம் இப்படியாக தன்னிடமிருக்கும் அறிவையும் ஞானத்தையும் பகிர்ந்துகொண்டதில்லை. ஒருமுறை அவரது அட்சரம் இதழுக்கு என்னிடம் கதை கேட்டார். எனது மோசமான கையெழுத்துடன் கூடிய காகிதங்களை அடித்தல் திருத்தலுடன் அப்படியே கொடுத்தேன் இப்படியா ஒருபத்திரிக்கைக்கு கதை தருவாய் என கடுமையாக திட்டி திருப்பி கொடுத்தார். எனது அசட்டுதனங்களை இப்போது உணர்கிறேன் .
தொடர்ந்து பல்வேறு கரணங்களுக்காக அவருடன் முரண் பட்டிருக்கிறேன்.
சண்டையும் போட்டிருகிறேன் அவரும் என்னை காயப்படுத்தியுள்ளர் . துளியளவு வன்மமும் கோபமும் அக்காலங்களில் என்னிடம் இருந்ததுண்டு. சட்டென ஒருநாள் பனித்திவலைகள் போல அவை என்னுள் மறைந்தும் போனதுண்டு அவர் மீதான விமர்சனங்கள் இன்னமும் இருக்கிறது .ஆனால் அவை மலையை அடிவாரத்தில் பார்க்கும் போது அதை மறைத்து நிற்கும் சிறு மரங்கள் போன்றவை .
நான் இப்போது விலகி வந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் .. மரங்கள் சிறியதாக தெரிகிறது .மலை இன்னும் இன்னுமாய் பெரியதாகிக்கொண்டிருக்கிறது
அவருக்கு கிடைத்த விருது அவரது கடும் உழைப்புக்கும் அவரது இழப்புக்கும் ஈடில்லாதது பல உயரங்களை தொடவிருக்கும் அவரது அடுத்தடுத்த எழுத்து பணிக்கு என் வாழ்துக்கள் .
அவர் குறித்த இவ்வளவு அபிப்ராயம் கொண்ட நான் அவருக்கு பரிசு கிடைத்தாக தெரிந்ததும் வெறுமனே வாழ்துக்கள் என சொல்லிக்கொண்டால் அது எவ்வளவு நாடகத் தன்மை கொண்டதாக இருக்கும் என நினைத்து பாருங்கள். அதன் பொருட்டே இந்த பதிவு
3 comments:
ஒரு எழுத்தாளனுக்கும் - வாசகனுக்கும் உண்டான உறவை திறன்பட சொல்லி உள்ளீர்கள்.
எஸ்.ரா. தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்பதை மறுப்பதற்கில்லை.
அவருக்கு இந்த கடை கோடி வாசகனின் வாழ்த்துக்கள்.
எஸ்.ரா - வை பார்த்திருக்கிறேன். பழகியதில்லை. இப்பதிவு மூலம் அவரை உணர்கிறேன்
அருமையான பதிவு பாலா
Post a Comment