கடந்த ஆண்டு2020ல் லாக்டவுனை ஒட்டி முக நூலில் வாசகர்கள் சிலரது கேள்விகளுக்கு தினம் ஒரு பதில் சொல்லி எழுதி வந்தேன் அதில் வந்த இந்த கேள்வி இந்த தொடரோடு நெருங்கியிருப்பதால் பதிவிடுகிறேன்
-அஜயன் பாலா
கேள்வி
தஸ்தாயெவ்ஸ்கியின்
வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறதா,? இருந்தால் அது எப்படி புனைவாக மாறுகிறது ?தனிமையில் உருவான குழப்பங்கள், எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றம். அதே நேரம் எல்லாவற்றையும் விட தூய அன்பு, நிர்கதி அவமதிப்பு இது அனைத்தும் அவரின் தனிப்பட்ட வாழ்கையை படிக்கும்பொழுதும் உணர முடிகிறது. அதேபோல் தாஸ்தாயெவெஸ்கி வாழ்ந்த காலகட்டத்தில் சில புரட்சிகர அமைப்புகள் அவரை நிராகரித்தர்கள் என்பது உண்மையா? மாக்சிம் கார்க்கி தீமையின் உருவம் என்று தாஸ்தாயெவெஸ்கியை பழித்தது உண்மையா? அப்படியானால் எதனடிப்படையில் புறக்கனித்தார்கள்.
.
பதில் :
தஸ்தாயேவெஸ்கியின்
வாழ்க்கை பற்றி அவர் பாத்திரங்களோடு ஒப்பிடும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது . வாசித்ததும் இல்லை.
ஜே.எம் .கூட்ஸியின் அவர் வாழ்க்கைபற்றிய
நாவல் கூட கற்பனைதான். ஆகவே அதை
தவிர்த்துவிட்டு பின் பகுதி கேள்விக்கு வருகிறேன்
ருஷ்ய எழுத்தாளர்களில்
பலருக்கும் தஸ்தாயெவெஸ்கி மேல் ஒரு வித கசப்புணர்ச்சி இருந்தது உண்மை. இதில் மாக்ஸிம் கார்க்கி மட்டும் விதிவிலக்கல்ல
வாழும் காலத்திலேயே
பலரும் அவரை அங்கீகரிக்கத் தயங்கினர்
தனித்த இரு மலைகள்
எப்போதும் பேசிக்கொள்வதில்லை என்பது போல டால்ஸ்டாயும் தாஸ்தாவெஸ்கியும்
சமகாலத்தவர்களாக இருந்த போதும் கூட
கடைசிவரை இருவரும் சந்தித்துக் கொண்டதேயில்லை. பெரும் மவுனம் அவர்களிடையே
நிலவியது என்கின்றனர் ஆய்வாளர்கள் . நம் தமிழ்நாட்டிலும் பாரதியாரும் பெரியாரும்
சம காலத்தவராக இருந்த போதும் கடைசிவரை அவர்கள சந்தித்துக்கொண்டதான எந்த ஒரு
பதிவும் இல்லை .
ஒரு முறை புஷ்கின் சிலை
திறப்பு நிகழ்ச்சிக்கு மாஸ்கோ வந்த தாஸ்தேவெஸ்கி டால்ஸ்டாயை சந்திக்க விரும்பியபோது நண்பர்கள் தடுத்துவிட்டனர்
இருவருமே வாழும் காலத்திலேயே புகழுச்சியில் இருந்தனர் என்பதையும் இருவருமே
அகவுலகில் நெருக்கமாக இருந்திருக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்
.
அதேசமயம் இறக்கும் வரை தஸ்தாயெவெஸ்கி பற்றி எதுவும்
பேசியிராத டால்ஸ்டாய் அவர் இறந்தபின் என் வாழ்க்கையில் தஸ்தாயெவெஸ்கி எவ்வளவு
நெருக்கமானவர் என்பதை அவர் இன்மையில் உணர்கிறேன் என கடிதம் எழுதினார் . அது போல
டால்ஸ்டாய் இறப்பதற்கு முன் வாசித்த கடைசி
புத்தகம் தாஸ்தாயேவெஸ்கி எழுதிய கரமசோவ்
சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது . இருவரது மனைவியும் இருவரது மரணத்துக்குப்பின்
நெருங்கிய தோழிகளாக இருந்தனர் என்பது வேறு விஷயம்.
அது போல அவரது இன்னொரு
சமகாலத்தவரான புகழ்பெற்ற எழுத்தாளர் .
இவான் துர்கனேவ் தஸ்தாயெவெஸ்கி பற்றி குறிப்பிடும் போது ” அவரது கற்பனாவாத எழுத்து
எதார்தத்துக்கு முற்றிலும் எதிரானது . நடுரோட்டில் சிங்கம் ஒன்றை நாம் எதிர்கொள்ளும் போது நமது முகம் பயத்தால்
சட்டென சிவக்கும் அடுத்த நிமிடமே ஓட்டமெடுப்போம் …..ஆனால் தச்தாயெவெஸ்கியின்
பாத்திரம் அப்படிச் செய்யாது மாறாக முதலில் பயத்தில் முகம் சிவக்கும் பிற்பாடு
நமக்கு ஏன் பயம் வருகிறது இப்போது ஓடாவிட்டால் இந்த சிங்கம் என்ன செய்யும் என
யோசிக்கும் இது தான் தாஸ்தாயெவெஸ்கி கதைகளின் ப்ரசனை என கிண்டலாக கூறியிருக்கிறார்
பொதுவாக வாழும் போது என்ன
விமர்சனம் இருந்தாலும் இறப்புக்குபிறகு
உயர்ந்த எழுத்தாளர்கள் பலர் கொண்டாடப்படுவர் ஆனால் தஸ்தாயவெஸ்கிக்கு நேர்ந்ததோ
தலைகீழ் இவான் புனின், மாக்ஸிம் கார்க்கி
, விளாதிமீர் நபக்கோவ் என பல புகழ்பெற்ற எழுத்தாளர்களால் தஸ்தாயெவெஸ்கி இறப்புக்குப் பின் கடுமையாக
விமரசிக்கப்பட்டார்
ருஷ்யாவின் முதல் நோபல் பரிசு பெற்ற கவிஞரான
இவான் புனின் ருஷ்ய இலக்கியத்தில் தஸ்தாயெவெஸ்கியின் எழுத்துக்கள் மக்களை சீரஷிவுபாதைக்கு அழைத்துச்
செல்பவை என்றும் கடவுளின் இருப்பை பற்றியே சதா உளறுபவை என்றும் . குறிப்பிட்டுள்ளார் . மேலும் வாசிப்பவனை
அவர் சிந்திக்கவிடாமல் பெரும் கற்பனைக்குள் அழைத்துச்சென்று மயக்க நிலையில்
ஆழ்த்துகிறார் என்றும் குறிப்பிடுகிறார்
அது போல இன்னொரு நோபல் பரிசு பெற்றவரான விளாதிமீர்
நபக்கோவ் தஸ்தாயெவெஸ்கியின் எழுத்தை
முற்றிலும் நிராகரித்து அவர் தன் பாத்திரங்கள்
அனைத்தையுமே கடவுளுக்கு பாவம்
செய்பவர்களாக மாற்றுகிறார் என்றும்
விமர்சித்துள்ளார்.
இறுதியாக உங்கள் கேள்வியான மாக்சிம் கார்க்கி
க்கு வருவோம் முதலாம் உலகப்போருக்கு முன்பாக ரஷ்யன் ஆர்ட் தியேட்டரில் தஸ்தாயெவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நாடகமாக நிகழ்த்த சிலர் முயற்சித்த போது கடுமையாக அதை எதிர்த்து
போராட்டங்கள் நடத்திய மாக்ஸிம் கார்க்கி”
தஸ்தாயெவெஸ்கி கொண்டாடப்பட்வேண்டிய
எழுத்தாளர் தான் ஆனால் அவர் தீமையின் உருவம் ”எனும் கடும் குற்றாச்சாட்டை அப்போதுதான் முன் வைத்தார்
. ருஷ்யமனிதர்களிடையே அருவருப்பையும் கீழ்மையையும் இருண்டபக்கங்களையும் மட்டுமே தன் படைப்புகள்
மூலம் காண்பிக்கிறார். மாறாக வாழ்வின் மீது நம்பிக்கையூட்டும் துளி வெளிச்சம் கூட அவர் எழுத்தில் இல்லை எனக்கூறியிருக்கிறார். இதனை எதிர்த்து தஸ்தாயெவெஸ்கிக்கு ஆதரவாக
பலரும் மாஸ்கோ ஆர்ட் தியேட்டருக்கு கடிதம்
எழுதி நாடகம் நடைபெறவேண்டும் என வலியுறுத்தினர் . ஆனாலும் அப்போது லெனின் மாக்சிம் கார்க்கிக்கு பக்கபலமாக இருந்தார் . காரணம்
அவரும் தஸ்தாயெவெஸ்கியின் எழுத்துக்களை
அவநம்பிக்கையின் எழுத்துக்களாக கருதினார் . ஒருமுறை த்ஸ்தயேவெஸ்கியின் கரமசோவ்
சகோதரர்களை நீங்கள் படித்திருக்கிறீகளா எனக்கேட்டபோது அவர் அது போன்ற குப்பைகளை படிக்க நான் என் நேரததை
பயனபடுத்துவதில்லை எனகூறியிருக்கிறார். ஆனாலும் லெனின்கூறிய இந்த கருத்தை அவர் மனைவி
நடாஷாவிடம் வேறு ஒருமுறை கேட்டபோது
அப்படியில்லை தஸ்தாயெவெஸ்கியின் நாவல்களில் காணப்படும் அதீத
ஆழ்மனத்தேடல்கள் தனி,மனிதனை
புரட்சியிலிருந்து விலக்கிவைக்கும் என்பதாலேயே அவர் அப்படி விமர்சித்தார் என்றும்
லெனினுக்கு பிடித்தமான எழுத்தாளர்களில் தஸ்தாயேவெஸ்கியும் ஒருவர் என்றும்
கூறியிருக்கிறார். ஏறக்குறைய இதே கருத்தை ட்ராட்ஸ்கியும் சில இடங்களில்
குறிப்பிட்டிருக்கிறார்.
அது போல
புரட்சிக்குபின் போல்ஷ்விக் ஆட்சி ருஷ்யாவை கையகப்படுத்தியபின் எழுத்தாளர்களுக்கு கலைஞர்களுக்கு சிலை வைக்கும்
அவரது பட்டியலில் முதலில் இருந்த பெயர் லியோ டால்ஸ்டாய் இரண்டாவது பெயர்
தஸ்தாயேவெஸ்கி .
இப்படி தஸ்தாயெவெஸ்கி எனும் மகத்தான எழுத்தாளன் பலராலும்
விமர்சனத்துக்கு ஆளாலும் அவரது படைப்புகள் உலகின் மூலை முடுக்குகள் அனைவரிடத்தும்
சென்று அழியாப்புகழை அடைந்துவிட்டவை . இன்று உளவியல்
கலாச்சாரம் பண்பாடு சமூகவியல் இறையியல் என பல்வேறு ஆய்வுகளுக்கு அவரது
நாவல்கள் எடுத்தாளப்பட்டு
மனிதகுலவளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி வந்துள்ளன என்பதும் நாம்
கவனிக்கத்தக்கது
; அஜயன் பாலா
No comments:
Post a Comment