February 28, 2017

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள் -தமயந்தியின் ” கொன்றோம் அரசி” சிறுகதைத் தொகுப்பிற்கான முன்னுரை

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள்



2010-ல் ஹைதரபாத் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள நேர்ந்தபோதுதான் தெலுங்கு இலக்கிய உலகின் .காத்திரமான பெண்ணிய சிந்தனையாளரும் சிறுகதை எழுத்தாளருமான வோல்காவோடு கொஞ்ச நேரம் பேச சந்தர்ப்பம் கிட்டியது.  பெண்ணின்  முகம், கண், காது, மூக்கு, மார்பு, கூந்தல், யோனி, மற்றும் தொடை என  ஒவ்வொரு பாகத்தின் பெயரிலும் ஒரு கதை எழுதி ஒரு சிறுகதைத் தொகுப்பு வரப்போவதாகc சொன்னார். அப்படி வந்தால் அது உண்டாக்கும் அதிர்வை குறித்து யோசித்தேன்.  ஐந்து வருடமாகிவிட்டது அந்த தொகுப்பு வந்துவிட்டதா இல்லையா தெரியவில்லை. ஆனால் தமயந்தியின் இந்த தொகுப்பை வாசிக்கும்போது அந்த அதிர்வை உணரமுடிகிறது.

மொத்தம் ஏழு வீடுகளைக்கொண்ட தொகுப்பு இது . ஒவ்வொரு வீட்டின் ஜன்னலையும் தன சிறுகதைகளின் வழி  நமக்கு திறந்து காட்டுகிறார் தமயந்தி . வரிகளுக்கப்பால் தெரிவது எல்லாம் வேதனையும் துயரும் கொப்பளிக்கும் கண்கள். உடன்  ஆற்றாமை கோபம் ,காதல் அழுகை காமம்.  என பெண்களின் பல்வேறு உச்ச தருணங்கள்.   ஒவ்வொரு ஜன்னலை கடக்கும் போதும் பெரும் அதிர்விலிருந்து விடுபட முடியாமல் நம்நெஞ்சை பிசைந்துவிடுகிறது. . இந்த ஏழு வீடுகளில் ஏதோ ஒன்று நம்முடையதகாவும் இருக்கிறது என்பது தான் இத்தொகுப்பின்சிறப்பு .

இவை பெண்களின் கதைகள் மட்டும் அல்ல ஆண்களின் கதைகள். ஆண்கள் படித்து உணரவேண்டிய கதைகள் சில கதைகள் ஆண்களின் முகத்தை அறையக்கூடும் முகத்தில் எச்சிலை உமிழக்கூடும்  முன்னர் தாய் தங்கை சகோதரி மனைவி சக தோழிக்கு செய்த துரோகங்களை நினைவுறுத்தகூடும் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தக்கூடும் அவ்வகையில் இக்கதைகள் சமூகத்தில் சிறந்த சுத்திகரிப்பை நிகழ்த்துகின்றன .\அது போல பெண்ணியம் என்பது ஆண்களின் மீதான வெறுப்பை கட்டமைப்பது என்பதை கடந்து பெண்ணின் பாடுகளை வலிகளை சொல்லி  தந்தையை காதலனை  கைப்பற்றி அவர்களுக்கு தங்கள் ப்ரசனையை சொல்லி புரியவைப்பதகவும் .சில கதைகள் அமைந்திருப்பது தொகுப்பின் சிறப்பு .


மங்காக்கா கங்கம்மா ,வசந்தி, வத்சலாவின் தோழி  என வெவ்வெறு பாத்திரங்களில் வந்தாலும் எல்லாமே ஒரே முகம்தான். .அவர்களது உள்ளுணர்வும் வெடிச்சிரிப்பும்  வெடுக்கென துள்ளி எழுந்தாடும் ஆங்காரமும் ஒன்றேபோலத்தான். திணற திணற நம் முகத்தில் ரத்தசேற்றை வீசுகிறார்கள்.சக்தியின் பிரம்மாண்ட பிம்பத்தின் முன் ஆணை சிறுபுள்ளியாக உணரவைத்து ஒடுங்கி நிற்க வைக்கிறார்கள்.

அவள் அப்படித்தான் மஞ்சு போல தன்னை அளவெடுக்கும் ஆணின் தந்திரங்களை மன  ஓட்டத்தை குறுக்கு கேள்வியால் அதிரவைக்கும்போதும் (.மிச்சம் ) கட்டிலில் மூத்திரப்பை சுமக்கும் வயதில் காதலை மீட்டெடுத்து கட்டி தழுவும்போதும் (தடயம்). துரோகம் செய்துவிட்டு வந்தது மட்டுமல்லாமல் அம்மாவிடம் வெட்கமில்லாமல் சிக்கன் கேட்டு ஆண்மையை நிரூபிக்கும் தந்தையை புரட்டி எடுக்கும்போதும் (செருப்பு) பாத்திரங்கள்  கதை என்னும் சட்டகத்தை மீறி நம்மை வியக்க வைக்கின்றன.

 எதையாவது சொல்லிவிடவேண்டும் என்ற நிர்பந்தங்களை அதுவாக அறுத்துக்கொள்வது இக்கதைகளின் சிறப்பு.. ஒவ்வொரு கதையிலும் வெளிபூச்சில் உணர்வலசலாக ஒரு கதையும் மையப்ர்சனையாக இன்னொரு கதையும் நமக்குள் இறங்குகின்ற்ன . இரண்டு கதைகளையும் முடிச்சிடும் புள்ளிகளும் இயல்பாக இருப்பதும் தமயந்தியின் விசேஷகுணங்கள். செருப்பு கதையில் செருப்புதான்  மேலோட்டமான கதை நகர்த்தும் பொருளாக இருப்பினும்  அம்மாவையே அடக்கியாளும் மங்காக்காவின் ஆளுமைத்திறனும்  ஆண் எனும் ஒற்றை அதிகாரகட்டுக்குள் உடைந்து நொறுங்கும் பெண் சித்திரங்களடங்கிய குடும்பமும்  இன்னொரு கதை.

அதுபோல மிச்சம் கதையில்  மாத சுழற்சி சரியான நேரத்தில் வராமல் போவதால் ஒரு பெண் எதிர்கொள்ளும் ப்ரசனைகள் பற்றிய கதையில் அலுவலக அரசியலும் பெணணையே பெண்ணுக்கெதிராக பயன்படுத்தும் ஆணிய அரசியலும் நமக்குள் கதையாக ஊடுருவி கடக்கிறது..தமயந்தியின் கதை சொல்லலில் ஒரு அனாயசம் அலட்சியம் ஒற்றை வரி உரையாடல்கள் வழி நகரும் கதைகளில் ஆங்காங்கு நிகழும் மின்னல் அதிர்வுகள் தமயந்தியின் தனித்தன்மை.

”வாழ்க்கையில என்ன நடந்தாலும் முருங்கக்காய் தோலை சவச்சிட்டு சாவணும் என்ன ருசி “ (கொன்றோம் அரசி )
இப்படி ஒரு பேச்ச் நம்ம அந்த ஆண்டவன் பேச வச்சிட்டாரு இல்லை எப்படி ?
.உன் புருஷன் நலமா ?
உன் பொண்டாட்டி எப்படி நீயும் நானும் கேட்கறா மாதிரி (தடயம்)

இப்படியாக ஒவ்வொரு கதையிலும் உரையாடல்கள் அசத்துகின்ற்ன
வெறும் பெண்னியத்தோடு நில்லாமல் தமயந்தியின் கதைகள் தீவிரமான அரசியலையும் பேசுகின்றன. சமூக மறு கட்டமைபில் அம்பெத்காருக்கு பிறகான செயல்பாடுகள் குறித்தும்  விவாதம் எழுப்புகின்றன. காலம் முழுக்க மனித மலம் சுமந்து சமூகத்தின் ஆரோக்கியத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களின் மகன்கள்  படித்து பட்டம்பெற்று வேலைக்குவரும்போது எதிர்கொள்ளும் வலிகளும் வேதனைகளும் சொல்லப்படுகின்றன. கொன்றோம் அரசியை சம கால அரசியல் கதை . இக்கதை யார் யாரை மையப்படுத்துகிறது என்பது வெளிப்படை. . கதைக்குள் ஊடாடும் அதி புனைவு ஆசிரியருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்திருந்த போதும் திரும்ப திரும்ப மரணத்தை பற்றியே அலைவதை தவிர்த்து இன்னும் பல சுவாரசியமான பக்கங்களுக்குள் நகர்ந்திருக்கலாம் .

தொகுப்பில் இரண்டு கதைகள் ஆணை மையப்படுத்தியவை அல்லது ஆண்களின் அக உலகம் சார்ந்தவை . ஒன்று பி பி ஸ்ரீனிவாசும் ரோஜா மலரே ராஜகுமாரியும் , இன்னொன்று பீப் பிரியாணி ..இரண்டில் பீப் பிரியாணி .குறிப்பிடத்த்ககுந்த சமகால அரசியலை மையப்படுத்திய கதை. .என்னதான் பொதுவெளியில் கட்டிப்பிடித்து காதலிபோல நண்பர்கள் தழுவிக்கொண்டாலும்  குடி அமர்வுகளீல் சாதிய உணர்வு வெளிப்படுவதும் தன் சாதிபெருமையை  ஒரு ஆதிக்க சாதியன்  பேசி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் மேல் வன்முறையை காண்பிப்பதும்  ஆண்களின் உலகில் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று. புற உலகில் கவிஞராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்ற பலரும் இது போன்ற குடி அமர்வுகளில் தங்களின் கோரப்பற்களை காட்டுவதை கண்டு பலமுறை அதிர்ச்சியடைந்திருக்கிறேன் . பீப் பிரியாணி கதை இந்த அக உலகை துல்லியமாக சித்தரிக்கிறது.

கவிதை மற்றும் நாவல் களங்களில் அதிகம் செயல்படும் அளவிற்கு பெண் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதைகளில் புழங்கி வருகின்றனர்  .அதிலும் பெண்களின் வலிகளை அரசியலை பேசும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் மிகக்குறைவு
.
எழுத்துத் துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஓய்வில்லாமல் இயங்கி வருவதுடன்  எண்ணிகை அளவில் தரமான பல நல்ல கதைகள் எழுதியவர் என பார்த்தால் சூடாமணி அம்பைக்கு பிறகு தமயந்தி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்.
இது வரை எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த +கதைகள்  மொத்த தொகுப்பாக தமயந்தி கொண்டு வரவேண்டும் .

இதை நூலாக்கம் செய்வதில் முனைப்பு காட்டி பதிப்பித்து தரும் தமிழின் ஆகச் சிறந்த கவிஞராக அறியப்படும் கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கும் . தற்காலத்தில் நல்ல சிறுக்தையெழுத்தாளனாக வளர்ந்து வரும் அன்பு தம்பி அகரமுதல்வனுக்கும் என் பூங்கொத்தும் வாழ்த்துக்களும்  
                                                      அஜயன் பாலா
04/02/2017


No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...