இயற்கையை கொண்டாடும் கவிதைகள்
மௌனன் யாத்ரீகா வின் கவிதை தொகுப்பு
நெல்லில் கசியும் மூதாயின் பால் –
முன்னுரை– அஜயன் பாலா.
” ஏற்கனவே அறியப்பட்ட கவிதைகளிலிருந்து தப்பிப்பதும், வார்த்தைகளால் தைக்கப்பட்ட
புதிய ஆடையை உருவாக்குவதும் கவிஞனின் வேலை.இத்தொகுப்பு அதைச் செம்மையாக செய்துள்ளதாகக்
கருதுகிறேன்”
******************************************************************************************
கவிதையின் இன்பம் வேறெவற்றோடும் ஒப்பிட
முடியாதது. அந்த இன்பத்தை வாசக மனதில் தோற்றுவிப்பது ஒவ்வொரு கவிஞனுக்கும் சவால்.
அது காட்சியிலா, பொருளிலா, மொழியிலா அல்லது
மூன்றும் பிரித்தறியா வண்ணம் ஒன்றிலொன்று பின்னியிருக்கும்படியான செய்நுட்பத்திலா
என்பதில் கவிதையின் சூட்சுமம் உட்பொதிந்து கிடக்கிறது
இந்த சவாலை கவிதை எழுத வரும் ஒவ்வொரு புதிய
கவிஞனும் எதிர்கொள்கிறான்.
இன்பத்தை ஒளித்து வைப்பதின் விளையாட்டு, கவிதையின் தொழில்நுட்பமாகி பின்
சாரத்தை அகற்றி உள்ளீடற்ற கவிதைகள் எழுதுவது வரை இன்றைய கவிஞன் எல்லா
தந்திரங்களையும் கடந்துகொண்டிருக்கும் சூழலில். வெளியாகிறது இப்புத்தகம்.
மௌனன் யாத்ரீகா இத்தொகுப்பின் மூலம் தன்னைத்
துண்டாக வெட்டிக்கொண்டு இன்றைய கவிதைப் போக்குகளிலிருந்து வேறு ஒரு புதிய பாணியை
உருவாக்க எத்தனிக்கிறார்
வாசிப்போருக்கு இருபது வருடங்களுக்கு முந்தைய
வண்ணதாசன் கவிதைகளின் எதார்த்த அழகியல் பாணி நினைவுக்கு வரலாம். ஆனாலும், இவை புதியவை. மழைக் காலத்து
தும்பிபோல, இரவுக் காற்றில் தாயின் சேலைத் தலைப்பின்
வாசம்போல எல்லாக் காலத்துக்கும் புதியவையாக இக்கவிதைகள் நம்மை வசீகரிக்கின்றன.
பிறந்த குழந்தையின் மேனியில் பரவிக் கிடக்கும்
பனிக்குடத்தின் நீர்போல கவிதை முழுக்க ஓர் ஈரம் சுற்றிப் பரவுவதை வாசிக்கும்போது உணரமுடிகிறது.
முழுக்க ஊடகங்களால் வன்புணர்வுக்காட்பட்ட நம்
அறிவுலகக் குப்பைக் கிடங்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் விதமாக ஒரு ஜம்ப்
கட்டில் புத்தகத்தைத் திறந்ததும் அந்த ஈரம் நம்மைப் பற்றிப் படர்வதை உணரமுடியும்
அந்த அளவிற்கு இக்கவிதைகள் நம் சூழலின் தேவையாகவும்
மருந்தாகவும் இருப்பதுமே இக்கவிதைகளின் சிறப்பு.
பேருந்து, ரயில் என வெவ்வேறான பயணங்களில் கிளர்ச்சியுறும்
இவரது கவிமனம் கண்ணுற்ற இடம்தோறும் கவிதைகளாக மொக்கவிழ்கின்றன.
இச்சை சார்ந்த அழகுணர்ச்சிகளிலிருந்து விலகி
இயல்பான வாழ்வின், கண்ணுக்கு
தெரிந்த அறிவுணர்ச்சிக்குள் நாம் இதுவரை ஆட்படாத ஓர் அழகினைக் காட்சிப் பொருளாக்கி
அதை வார்த்தைளால் நமக்கு கோர்த்து பரவசப்படுத்துகின்றன இவரது கவிதைகள்.
முதல் கவிதையில், பேருந்தில் சக பயணியின் கையிலிருக்கும்
குழந்தையின் கண்களை, சின்னத் திராட்சையைப்போல அவை
மிதந்தலைந்ததாகக் கூறுவதில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு
கவிதையிலும் தனது தனித்தன்மையை நிறுவிக்கொண்டே வருகிறார்.
விரல்களின் செம்மண் சாயத்தை வைத்து அவன் நேற்று
பிடுங்கிய கடலைக் கொடியையும், அவன் நிலத்தையும் ஞாபகப்படுத்தும் இவரது சொல்முறை பெரிதும் சினிமாவின்
ரிவர்ஸ் டெக்னிக் எனப்படும் பின்புணரும் காட்சி மொழியைக் கொண்டு உருவாக்கம்
கொண்டிருப்பது சிறப்பு.
என்றாலும், கவிதைகளைக் காட்சி ஒன்று, காட்சி
இரண்டு என வரிசைப்படுத்துவது இலக்கியத்திற்கான விசேட குணங்களிலிருந்து அன்னியப்
படுத்துவதாகவும் இருக்கிறது.
பல இடங்களில் சங்கப் பாடல்களின் வர்ணனையை நமக்கு
ஞாபகப்படுத்துகிறார் மௌனன். பச்சைக் கலர் ஜிங்குச்சான் என்னும் கவிதையில்
பேருந்துக்குள் நுழைந்து பயணிகளோடு பயணிக்கும் வண்ணத்துப் பூச்சியை விவரிக்கும்
தருணத்தில் அது வெளிப்படுகிறது.
அதேபோல கச்சிதமான தேர்ந்த வார்த்தைகளால்
கட்டமைக்கப்படும் கவிதைகள் இவரது மொழி ஆளுமைக்குச் சான்று. இப்படி, சில சொற்களில் மனதில்
சித்திரத்தை உருவாக்கி அதை வாழ்வனுபவத்தோடு பொருத்துவதில் இவரது தேர்ந்த கவிமொழி
தெரிகிறது.
புற உலக வாழ்க்கையின் எந்தப் பிரச்சினையையும்
இந்தக் கவிதைகள் பேசமறுக்கின்றன.
இன்றைய சூழலில் கிராமங்களின் அவல நிலை, சாதிய வன்முறைகள், விவசாய தற்கொலைகள் எதையும் இக்கவிதைகள் பேசவில்லை.
ஒருவேளை இன்னும் ஒருமுறை நாம் இந்தக் கவிதைகளை
வாசிக்க விரும்புவதற்கு காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். குழந்தையின் வாயிலிருந்து
ஒழுகும் எச்சிலைபோல அவ்வளவு தூய்மையான, உயிரோட்டமான அனுபவத்தை உருவாக்க முயல்வதுதான்
இக்கவிதைகளின் சிறப்பே.
முழுக்க முழுக்க மிக அழகான புகைப்படத்
தொகுப்புக்குள் நுழைந்துக் கொண்டதுபோல ஓர் அனுபவத்தை இத்தொகுப்பு உருவாக்குவது
இதன் தனித்தன்மை.
திரைப்பட இயக்குனர் போல காட்சிகளின்
துல்லியத்துக்குள் இவர் விழுகிற தருணங்கள் நமக்குள் மழைத்துளியாய் விழுந்து
சிலிர்க்க வைக்கின்றன. தாகூருக்கு வாய்த்தது போல இயற்கையைக் கொண்டாடும் கவிதைகள்
யாருக்கும் வாய்க்கவில்லை.
அப்பழுக்கற்ற, தூய்மையான காட்சியனுபவத்தை இயற்கையோடு சங்கமித்து
உருவாக்கும்போது அக உலகில் அது உருவாக்கித்தரும் ஆன்மீக தருணங்கள் ஒப்பீடற்றவை.
இந்தக் கவிதைகள் அதற்கு முயற்சிக்கின்றன.
மௌனன் யாத்ரீகா தொடர்ந்து இதே பாதையில் பயணிக்க
வேண்டும். எல்லோரும் எழுதும் கவிதையாக இது இல்லாமல் இருக்கிறது. அதுவே இதன்
தனித்தன்மை, அதுவே
இதன் சிறப்பு. இன்னும் இதே பாதையில் பயணிக்கும்போது கண்டறியப்படாத வாழ்வின்
அழகியலையும், பல உன்னத தருணங்களையும் உங்களால் மீட்டுத்
தரமுடியும் என நம்புகிறேன்.
- அஜயன் பாலா
சென்னை -93
2016 - மார்ச் மாத பகல் பொழுது.
2016 - மார்ச் மாத பகல் பொழுது.
No comments:
Post a Comment