August 9, 2016

வெற்றி மாறனின் விசாரணை திரைப்படத்தை முன் வைத்து

உலகத்தரமா? தமிழ் தரமா?
   


...       , கடந்த நாற்பதாண்டுகளாக தமிழகத்தின் முதல்வரைத் தீர்மானிக்கும் செல்வாக்கு மிகுந்த தமிழ் சினிமா பரப்பில் உலகத்தரத்தில் ஒரு சினிமாகூட வரவில்லை என்பது சினிமாவை தீவிரமாக நேசிக்கும் பலருக்கும் மனப்புழக்கத்தை உண்டாக்கும் கேள்வி. இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்திருப்பதுதான் விசாரணை.
இப்படியாக தமிழ் சினிமா தரம் தாழ்ந்ததா அதில் நல்லப படங்களே இல்லையா என்று பலருக்கும் கேள்விகள் எழலாம்

     தமிழில் மிகச்சிறந்த படங்கள் பல உள்ளன. ஆனால், உலகத்தரம் என்பது முற்றிலும் வேறானது. அது முழுக்க முழுக்க சினிமாவில் காட்சி மொழி, தொழில் நுட்பத்தையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவோ, அதன் உள்ளடக்கத்தை வைத்தே அதன் தரம் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. என்னதான் தொழில் நுட்பத்தில் சிறந்தப் படமாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம் முரணாக இருக்கும் பட்சத்தில் அந்தப் படத்தை மக்கள் தூக்கியெறியத் தயங்குவதில்லை.

தமிழ் சினிமா வரலாற்றில் பரசாக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற படங்கள் சமூகத்தில் உண்டாக்கிய தாக்கத்தை இன்றுவரை வேறு எந்தப்படமும் உண்டாக்கவில்லை. ஆனால், இந்தப் படங்களை உலகத்தரத்தின் மதிப்பீட்டில் வைத்துப் பார்க்கும்போது மதிப்பு வெறும் பூஜ்யமாகத்தான் கருதப்படும். அப்படியானால், எது நமக்குத் தேவை? உலகத்தரமா? தமிழ்த்தரமா? என்று கேட்டால் நமக்குத்தேவை தமிழ்த்தரம்தான் என்பதுதான் எனது பதில். நமது பண்பாட்டை, நமது அரசியலை வெகுமக்களிடம் கொண்டு செல்லும் படங்களே சிறந்த படங்கள். மேலும் சினிமா மேலை நாடுகளில் பல வெறும் கலையாகவோ, பொழுது போக்காகவோ அல்லாமல் நமது வாழ்க்கையையும், அரசியலையும் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக இருப்பதால், கலை, வடிவத்தைக் காட்டிலும் வாழ்வின் பிரதிபலிப்பு மிகுந்த தேவையை எதிர்கொள்கிறது. அதை கலை நேர்த்தியுடன் சொல்லத் தெரிந்தவர்களே இங்கு சிறந்த இயக்குநர்களாக முடியும். அதே சமயம் இன்று உலகமயமாக்கல் சூழலில் ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கான பங்களிப்பை பொதுவெளிக்குக் கொண்டு வந்து வைக்கும் பட்சத்தில் உலக அரங்கில் தமிழ் சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தேவையும், நெருக்கடியும், கட்டாயமும் நமக்கு இருக்கவே செய்கிறது.

    இந்தச் சூழலில் இந்த இரண்டு இருவேறு புள்ளிகளை ஒன்றிணைத்து தமிழில் முதல் உலக சினிமாவாக அங்கிகாரம் பெற்றிருக்கிறது விசாரணை.
தமிழில் சிறந்தப் படங்களைப் பட்டியல் போட்டால் விசாரணைப் போல் ஆறேழு படங்களாவது குறைந்தது இருக்கும். ஆனால், அவற்றைவிட, விசாரணை உலகத்தரத்தில் கூடுதல் மதிப்பீட்டை பெறுவதற்குக் காரணம் அதன் நேர்த்தியான திரைக்கதை, மற்றும் தொழில்நுட்பக் கூறுகள், விசாரணையைவிட தொழில்நுட்ப மேதமையைக் கொண்ட படம் என்று நாம் நாயகனைக் குறிப்பிட முடியும். ஆனாலும், விசாரணை படத்தின் யதார்த்தம், தீவிரமான அரசியல் பின்புலம், பாசாங்கற்ற நேரடியான கதையாடல் ஆகியவை அதற்கு முழுமையான மதிப்பீட்டை உருவாக்கித் தருகின்றன.
தமிழில் உலகத்தரத்திற்கு ஈடான பல சிறந்தப் படங்களை அதன் மிகை வெளிப்பாட்டுத்திறன், அல்லது போதிய தொழில்நுட்ப, கலாப்பூர்வ அணுகுமுறை ஆகியவற்றின் குறைபாட்டால்  முழுமையான முழுமையான தமிழ் தரத்தைக்கூட எட்ட முடியாமல் பின் தங்கி விட்டிருக்கின்றன. வேறு சில படங்களோ மிகச்செறிவான தொழில்நுட்பத்துடன் தமிழரின் வாழ்வை, கதைக்களனாக்கி, சினிமாவாக ஒரு சிறந்தத் திரைப்படமாக, மக்கள் மனதிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அத்தகையப் படங்களில் கூடுதல் பொழுதுபோக்குத் தன்மை, நாயகத்துதி, காட்சிப்படுத்தலில் மிதமிஞ்சிய வன்முறை ஆகியவற்றின் காரண்மாக உலகத்தரத்தில் ஒரு எல்லைக்கு மேல் நகரமுடியாமல் தேங்கிவிடுகின்றன.
தமிழில் மதுரையைப் பின்புலமாகக் கொண்டு வெளிவந்த வெற்றிப் பெற்ற பல படங்கள் உலகத்தரத்தில் பின்தங்கி நின்றதற்கான காரணங்கள் இவை. இவையல்லாமல் ஆரண்யகாண்டம், காக்கா முட்டை போன்ற படங்கள் முறையே உலகத்தரமான தொழில்நுட்பம், மற்றும் உள்ளடக்கம் காரண்மாக கொண்டாடப்பட்டாலும், இவற்றில் ஏற்கனவே நாம் பார்த்த உலகப்படங்களின் சாயல்கள் இருந்த காரணத்தினால் அவை முழுமையான உலகப்படமாக நம்மால் அங்கிகரிக்க முடியாமல் போனது. இந்தச் சூழலில்தான் விசாரணை மேற்சொன்ன எந்தக் குறைபாடுகளும் இல்லாமல் முழுமையான உலகச் சினிமாவாக அனைவரும் ஏற்கும் வகையில் வெளிவந்து வெனீஸ் திரைப்பட விழாவில், அதற்கான அங்கீகாரத்தையும், மனித உரிமைகளுக்கான விருதையும் பெற்று நம்மனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது.

 தமிழில் 1946ல் வெளிவந்த கல்பனா காலம் முதல் கொண்டு, பலத்திரைப்படங்கள், உலகத்திரைப்பட விழாக்களில் பங்கேற்று வந்திருந்தாலும், விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவை அனைத்திலும் உட்சபட்ச அங்கீகாரமாக வெனீஸ் திரைப்பட விழாவில் வெற்றிப் பெற்றிருப்பது விசாரணையின் நம் மதிப்பீட்டிற்குச் சான்று.
விசாரணை திரைப்படத்தில் உலகப்படத்திற்கான கூறுகள் எப்படியாக அதில் இடம் பெற்றிருக்கிறது. என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வு செய்கிற போது, அதற்கான முக்கியக் காரணமாக அமைவது இரண்டாம் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதன் காட்சி மற்றும் ஒளிப்பதிவு. முதல் பகுதியில் முழுக்க முழுக்க ஆந்திர குண்டூர் காவல் நிலையத்தை காட்சிப் படுத்தலில் கேமரா வெறும் கருவியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அந்த மூன்று அப்பாவி இளைஞர்கள் வதைக்கப்படுவதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. மஞ்சளும் இருளும் பின்புலமாகக் கொண்டு காட்சிகளில் ஒளிப்பதிவாளர் வெறும் வேடிக்கைப் பார்ப்பவராக மட்டுமே இருக்கிறார்

  இந்தக் காட்சிகளில் நம் கவனம் முழுக்க அந்த மூன்று அப்பாவி இளைஞர்கள் ஆந்திர போலீஸிடமிருந்து எப்போது விடுபடுவார்கள் என்ற ஏக்கத்தையும் நம்மிடம் உருவாக்குவதில் இயக்குநர் செறிவாகவும் செயல்பட்டிருக்கிறார். பல தமிழ்த் திரைப்படங்களில் நாம் பார்த்த காவல்துறை வதைக்காட்சிகளில் சற்றுக் கூடுதலான இவற்றைக் காட்டிலும் சினிமாவில் அதிசயமான, உயர்ந்த ரசனைக்கான பதிவுகளோ எதுவுமில்லை. படத்தொகுப்பில் பனைமட்டையால் பாண்டி உள்ளிட்ட நண்பர்களை வதைக்கும் காட்சிகளில் படத்தொகுப்பாளரின் மேதமை தெறிக்கும் சில தருணங்கள் தவிர, ஒரு சினிமாவாக பெரிதும் கொண்டாட எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமுத்ரகனி உள்ளிட்ட காவல் அதிகாரிகளிடம் மூன்று இளைஞர்களும் மீட்கப்பட்ட, சென்னைக்குக் கொண்டு வந்த பின்புதான் திரைக்கதையும் காட்சி மொழியும் தொழில் நுட்பமும் ஒரு உயர்ந்த தரத்தை நோக்கி பயனிக்கத்தொடங்குகிறது. கதையின் மையப்புள்ளியான சமூக அமைப்பின் சீர்கேடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களும், கோடிகளுக்காக கடமை தவறும் உயர் அதிகாரிகளும் கதைக்குள் பயனிக்கத் துவங்கும்போது ஒரு புதிரான உலகம் பார்வையாளனைச் சுற்றி கட்டமைக்கப்படுகிறது. எல்லாம் முடிந்த அந்த மூன்று இளைஞர்களும், காவல் நிலையத்தை விட்டுப் புறப்பட எத்தனிக்கும்போது, ஒரு காவலன் ஆயுத பூஜை முன்னிட்டு காவல் நிலையத்தை சுத்தஞ்செய்யச் சொல்லி அவர்களை பணிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் g.v. பிரகாஷின் மர்மம் தோய்ந்த பின்னணி இசையின் மூலம் பின் வரக்கூடிய மரணம் தோய்ந்த அபாயத்தைச் சொல்லி நம்மை ஒரு பயத்துக்குள் தள்ளுகிறது. தொடர்ந்து சமுத்ரகனி கிஷோர் இருவரது உரையாடலின் வழியாக சில ரகசியங்கள் நமக்குத் தவறுதலாக வந்து சேர்ந்தாலும் இடையிடையே காண்பிக்கப்படும் அந்த மூன்று இளைஞர்களின் அறியாமைத் ததும்பும் உரையாடல்களும், தொடர்ந்து நம்மை ஒருவித அவலத்தோடு அந்த மர்மத்தை தீவிரமாக அவதானிக்க வைக்கின்றன. குறிப்பாக முருகதாஸ் சொல்லும் வசனம், ஆந்திர காவல் நிலையத்தைவிட, தமிழ் போலீஸ் அழகாகவும், இணக்கமாகவும் இருப்பதாகச் சொல்லி, மகிழ்ச்சியும் மலர்ச்சியுமாக அவர்கள் சிரிக்கும்போது அதில் ஒரு அபத்தம் நிறைந்திருப்பதை நம்மால் ஊகிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அவர்களுக்கு இறுதியாக நடக்கப்போவதை அதிர்ச்சியூட்டும் வகையில் யோசிக்கக் கூடியதாகவும் திரைக்கதையின் மிக முக்கியத் திருப்பமாக உயர் காவல் அதிகாரி காவல் நிலையத்துக்குள் வந்து, சமுத்ரகனியிடமும் கிஷோரிடமிருந்தும் உண்மையை வெளிக்கொணர உத்தரவிட்டபின், சமுத்ரகனி அந்த அரையிலிருந்து, இத்திரைப்படத்தின் உலகத்தரமான தருணங்கள் துவக்கம் கொள்கிறது. அதுவரை நமக்குள் மெதுவாக வளர்ந்து வந்த நிழலுருவமான அச்சம் அந்த ஒரு கணத்தில் நம்மை மொத்தமாக உள்வாங்கிக் கொண்டு பெரும் அந்தகாரத்துக்குள் நம்மை பயணிக்க வைக்கிறது. சமுத்ரகனியின் தீவிரமான முக பாவங்களும், பின்னணியின் மர்மமான இசைக்குறிப்புகளும் அதனைச் செவ்வனே நமக்குள் செய்யத் தொடங்குகிறது. தொடர்ந்து சமுத்ரகனி படியேறி மாடியறைக்குள் வந்து கிஷோரை விசாரித்து, கிஷோர் லஞ்சப்பணம் கொடுப்பதாக கூறியதும், சமுத்ரகனி கிஷோரை கோபத்துடன் அறைந்துவிட்டு  வெளியே வந்து நிற்பதுவரை கேமரா ஒரு பயந்த மாணவனைப் போல நிகழ்வுகளை படம்பிடித்தபடி, அடுத்து சமுத்ரகனி செய்யப் போகும் காரியத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இத்தருணத்தில் ஆடைகள் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில், கிஷோர் காவலர்களிடமிருந்து அடிபட்டு தவழ்ந்து வெளியே வரும் காட்சி நம்மை மேலும் அதிர்ச்சிக்குள் கொண்டு செல்கிறது. அந்த அச்சமூட்டும் தருணத்தில் காவல் நிலையத்தில் தொடர்ந்து ஒலிக்கும் வாக்கி டாக்கியின் துல்லியமான சத்தங்கள் காட்சியின் திகில் தன்மையை உக்கிரமாக்குகின்றன. இந்த நீளமான காட்சிப்பகுதியைத் தொடர்ந்து, அடுத்ததாக கிஷோரை இன்னொரு காவல் அதிகாரி அடித்து உதைத்து கட்டித்தூக்கும் காட்சியும், கிஷோரின் மரண ஓலமும், வெளியில் சென்ற சமுத்ரகனி கிஷோரின் நிலையைக் கண்டு பதட்டமடைவதும் தொடர்ந்து கிஷோரின் இழப்பும், பிற்பாடு கிஷோரின் வீட்டில் செயற்கையாகத் தூக்கிலிடப்படுவதும் என காட்சிகளின் விறுவிறுப்புத் தன்மை துளியளவிலும் நமது கவனத்தை சிதறவிடாமல் முழுமையாக நம்மை காட்சிகளுக்கு நகர்த்திச் செல்கிறது. அதற்குப் பிறகு இறப்பை மறைக்க, உயர் அதிகாரிகளுடன் காவல் அதிகாரிகள் தீட்டும் அத்திட்டமும், கை கழுவ வரும் காவல் அதிகாரியிடம் அப்பாவி இளைஞர்கள் சிக்குவதுமான வரையிலான காட்சிகள் திரைக்கதையின் உட்சபட்சத் தருணங்கள்.     


      இந்தத் தொடர் காட்சிகள் நமது புலன்களை முழுவதுமாக ஆட்கொண்டு நம்மை இருக்கையில் கட்டி வைப்பதற்கான காரணங்கள். முதலாவது ஒலிப்பதிவு, காட்சிக்கோணங்களில், கேமரா அசைவுகளில், அல்லது சூழலுக்கான ஒளி அமைப்புகளில் சிறிய மாற்றம் இருந்திருந்தாலும் இந்த முழுமையான படைப்பாக்கத்திற்கு குந்தகம் ஏற்பட்டிருக்கும்
.
      சம்பவங்களை பார்க்கும் கண்களாக பார்வையாளர்களை உருமாற்றும் அந்த ரசாயனம்தான் இந்தப் படத்தின் தொழில்நுட்ப மேதமைக்கு மிகச் சிறந்த காரணம்

     இரண்டாவதாக, ஒரு கழிவரையில் எவ்வளவு ஒளியின் அளவு இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து, இருளை மிகச் சரியாகப் பயன்படுத்தி, காட்சியனுபவத்தின் திகிலை நமக்குள் மிகச் செறிவாகக் கொண்டுச் சேர்த்திருந்தார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம்.
மூன்றாவதாக செறிவான படத்தொகுப்பும், நான்காவதாக கலாபூர்வமான ஒலியமைப்பும், குறைவான அழுத்தமான பின்னணி இசையும் இயல்பான வசனமும் இவையனைத்தும் ஒன்றையொன்று இறுகத்தழுவிய நிலையில் உருவான படைப்பாக்கம்தான் இந்தப் படத்தின் உலகத்தரமான மதிப்பீட்டிற்குக் காரணம்.
      நான்கு அப்பாவி இளைஞர்களின் அபல வாழ்வினை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் இறுதிக்காட்சி வரை அந்த மைய்யம் விலகாமல் அவர்களின் மீதான துயரத்தை அதிகரிக்கும் வகையில் இருதிக்காட்சியை வடிவமைத்திருந்தால் திரைக்கதை முழுவதும் ஒரு பயத்தைத் தாங்கியிருந்தால் கூடுதல் முழுமையுடன், மனித உரிமைகள் என்ற தனிப்பிரிவுகளைக் கடந்து மேலும் பல உயரிய  விருதுகளை அடைந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கசப்பான இறுதிக்காட்சிகள் மூலம் பார்வையாளர்கள் துக்கத்திலும் இருண்மையிலும் அடைப்பட்டு தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வெற்றியை அது இழந்திருக்கக்கூடும்.

                 கதையின் மைய்யம் இரண்டாவது பகுதியின் இறுதிக்காட்சியில் மெல்ல விலகி காவலர்கள் மீதான கோபத்திலிருந்து மெல்ல விலகி அமைப்பின் மீதான கேள்வியாக மாறுகிற போது பார்வையாளனுக்கு அந்த மூன்று பேரின் மரணமும் பெரிய வருத்தத்தை தருவதில்லை என்ற வகையிலும் விசாரணை தமிழ் சினிமா ரசிகர்களையும் திருப்திபடுத்தி, உலகத்தரத்திலான அங்கிகாரத்தையும் பெற்றிருப்பதின் காரணமாக ஆயிரம் கைகள் கொண்டு ஆரத்தழுவி வரவேற்பது நமது அனைவரின் காலக் கட்டாயம்.

            அதே சமயம் உலக சினிமா என்றால் அது இப்படித்தான் என்றால் தீவிரமான வன்முறை, அல்லது இருண்மை இப்படித்தான் இருக்க வேண்டும்  என்ற பல தவறான முடிவுகளும் எழுந்திருக்கக்கூடும். வெகு சாதாரணமான ஒரு ஆட்டையும் சிறுவனையும் வைத்தே, விசாரணையைவிட, மிகச் சிறந்த உலகத்தரமான கலைப்படைப்புகளையும் உருவாக்க முடியும். ஒரு இயக்குநரின் அணுகுமுறையும், திரைக்கதையின் மேதமையும், உலகளாவிய மனிதப்பண்பும் எந்தக் கதையில் இருந்தாலும் அது உலக சினிமாவாக விளங்க வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

-                                                                                                                                                                                                              - அஜயன் பாலா
நன்றி : நடிப்பு  ஜூன் 2016 இத்ழ்  மற்றும்  ஆசிரியர் .தம்பி சோழன் 
ந்

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...