முருகபூபதி : ஒரு அதீத கலைஞனின் சமூக உடல்
சத்யஜித்ரேவின் அபு சன்ஸாரில் ஒரு காட்சி. அனேகமாக உலகசினிமாவின் அற்புத காட்சிகளூள் ஒன்றாகக்கூட அது இருக்கக்கூடும் . கல்கத்தாவில் தனியறையில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வசிக்கும் ஆரம்ப எழுத்தாளன் அபுவை நண்பன் ஒருவன் தேடி வருவான் .ஒருமாதத்துக்கு பிறகு அவன் புண்ணியத்தில் அபுவுக்கு வயிறுமுட்ட சாப்பாடு.. நண்பர்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இருட்டில் இரயில்பாதையில் பேசிக்கொண்டு வருவர் . அப்போது அபு மகிழ்ச்சியால் திளைத்தபடி என்றாவது ஒருநாள் தான் மிகபெரிய எழுத்தாளனாகி கலகத்தாவில் வசதியான வீட்டில் அம்மாவுடன் வந்து வசிக்க போவதாக கைகளை விரித்து மகிழ்ச்சியுடன் தன் கனவை பேசிச்செல்வான் . அவன் பேசிக்கொண்டிருப்பதை நடைமுறை தெரிந்த நண்பன் அப்பாவியாக பார்ப்பான் . ஒரு எழுத்தாளனுக்கு இந்தக் கனவு சாத்தியப்படுமா என்பது போன்ற பார்வை அது.
உண்மையில் அபுவை போலத்தான் சென்னைக்கு வந்த புதிதில் நானும் இருந்தேன். அதே போல ரயில் பாதையோரம் பழவந்தாங்கலில் ஒரு அறையில் வசித்துவந்தேன். பொருள் பற்றி எந்த கவலையுமில்லாமல்.
கனவுகள் பெரிய பெரிய கனவுகள் . கையில் காலணா தங்காது ஆனாலும் கைகளை வீசினால் உலகமே எனக்குச் சொந்தம் என்ற மகிழ்ச்சியுடன் காலால் பூமியை அளப்பேன்.அப்படி அளந்து கொண்டிருந்த ஒருநாள்
மாலையில் என் அறைக்கு நான் இப்பவும் மதிக்கும் எழுத்தாளர் கோணங்கி வந்திருந்தார். கோணங்கி என்னைத்தேடி அறைக்கு வருவது பிரபலமான திரை நட்சத்திரம் ஒரு ரசிகனின் வீட்டுக்கு வருவதுபோல எனக்கு அப்படி ஒரு பரவசத்தை தரக்கூடியது .
அன்று அவருடன் அவரை போலவே இன்னொருவரும் வந்தார்.. பாலா இவன் என் தம்பி முருக பூபதி சீக்கிரம் தஞ்சாவூர்ல நாடகம் படிக்கப் போறான் .நாடகம்தான் அவன் உலகம் பாத்துக்க “ அதே போல் பூபதியிடம் திரும்பி ”டேய் பூபதி பாலா நம்மளைப் போல பாத்துக்க . நீ எப்ப வந்தாலும் ஃப்ரியா இங்க தங்கலாம் எனக்கூறி என் சிறிய அறையை மேலும் பெரிதாக்கினார் . அதுமுதல் பூபதி எனக்கு இன்னொருநண்பன்.
கோவில்பட்டியில் கோணங்கியின் வீட்டுக்குப் போகும் சமயங்களில் பூபதியும் நானும் நல்ல இணை. கோவில்பட்டியில் அவர்களது இந்திராநகர் வீட்டை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதுவே ஒரு புதிர்த்தன்மை. அந்த வீட்டை தனியாக ஒருவன் தேடி கண்டுபிடித்தாலே அவன் தமிழின் புதிர்க்கதைகள் எழுதத் தகுதியானவன். அங்கு சென்று திரும்பாத நவீன படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணலாம் . இலக்கிய உலகு அந்த வீட்டுக்கு பெரும் கடன்பட்டுள்ளது. நவீன இலக்கியத்தின் தெற்கு முகவரி என்று கூட அந்த வீட்டை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம்.
அந்த வீட்டிற்குச் செல்லும் சமயங்களில் சிலசம்பவங்கள் எனக்குள் ஆழமான பாதிப்பை உண்டாக்கியுள்ளன. அதில் ஒன்று கோணங்கி. ஊரிலுள்ள சில முக்கிய இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு .. அதிலும் ஒரு கிணறு .. அதைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் கோணங்கி முருகபூபதி காலைக்கடன் கழிக்க வெகுதூரம் பொட்டல்காட்டில் நடந்து செல்வோம் . வழியில் ஓரு தூர்ந்த கிணற்றை காண்பிப்பார் கோணங்கி.. அந்த இடமே பூதத்தின் காலடியால் மிதிபட்டது போல தூர்ந்து போய் ஒரு அமானுஷ்யத்தை உண்டாக்கும். இந்த கிணற்றில்தான் ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்பார் .அது உண்மையா பொய்யா தெரியாது ஆனால் ஒரு மர்மம் அங்கு முடிச்சவிழ்ந்து நம்முடன் பயணிக்கத் துவங்கும்.
ஒருமுறை நான் சென்ற போது கோணங்கியின் அம்மா மரண படுக்கையில் இருந்தார். கோணங்கி என்னை அவரிடம் அறிமுகபடுத்த அவர் அந்த முடியாத நேரத்திலும் படுக்கையில் இருந்துகொண்டே என்னை அருகழைத்து நெற்றியில் விபூதி பூசினார்.
கோணங்கியை காட்டிலும் பேச்சுதுணைக்கு பூபதியும் நானும் நல்ல இணை .அவரது சமீபத்திய நாடகம் பற்றித்தான் எங்களது பேச்சு துவங்கும். ஆனாலும் அதன் பின் எங்களது பேச்சு தீவிர இலக்கியம் , ஓவியம் ,சென்னை நாடகச் சூழல் இவற்றைத்தாண்டி பல மீ பொருண்மை வெளிகளில் அலையும். அவர்களது மொட்டைமாடி அறையில் வினோத படங்கள் இருக்கும் .. சிறு பொம்மைகள் எங்களோடு உரையாடத்துவங்கும். செல்லரித்த பழைய புகைப்படங்களில் காணப்படும் நாடகக்காரர்கள் இரவில் தூங்கும்போது தாண்டிச்செல்வர்.... விபரீதங்களும் மர்மங்களும் நிறைந்த கோணங்கியின் மொட்டை மாடி அறையில் மார்கவெஸ் , சல்வடார் டாலி, புதுமைபித்தன், மொசார்ட் .ஜோதி விநாயகம், தஸ்தாயெவெஸ்கி என இறந்துபட்ட மனிதர்களும் அண்டரண்டா பட்சிகள், விசித்திர குள்ளர்கள் .. விக்ரமாதித்யன் பதுமைகள் , சேகுவேரா வின் கை., கர்னல் கிட்டுவின் ஷூ என இரவுகளீல் எதுவும் நம் கண்முன் வர வாய்ப்புள்ளது .அவர்கள் அனைவருக்குமான உலகம் அங்கு சித்தித்திருந்தது. பழைய ஏடுகிழிந்த புத்தகங்கள் நிறைந்த அலமாரிகளில் அவர்கள் ஒளிந்து கொண்டிருப்பதை போன்ற பிரமை எனக்குள் எப்போதுமிருக்கும் இதற்கும் பகுத்தறிவுக்கும் முடிச்சு போட்டால் பதில் இல்லை . ஆனால் இந்த தீவிர சமிக்ஞைகளை புரிந்துகொள்வதன்முலம் நாம் இன்னொரு அனுபவத்துக்கு தயாராக முடியும் மட்டுமல்லமல் பூபதியின் நாடக உடைகள் புராதன பழங்குடி இசைக்கருவிகள் முகமூடிகள் வினோதபுகைப்படங்கள் ஆகியவை அந்த மர்ம அறையில் இருந்தபடி இப்போதும் என்னோடு உரையாடிக்கொண்டிருப்பவையாக இருந்துள்ளன.
பூபதியின் அக உலகம் கோணங்கியின் அக உலகத்தோடு எளிதில் பொருந்தகூடியது ஆனாலும் கோணங்கி வெவ்வேறு உலகங்களூக்குள் சட்டென தாவிவிடுவார் .. பாய்வதிலும் கடந்து செல்வதிலும் தான் அவருக்கு விருப்பம். ஆனால் பூபதியின் உலகம் அப்படிப்பட்டதல்ல .. அது குறிப்பிட்ட ஒரு உலகத்துள் நுழைந்தால் அதன் ஆழத்தில் முங்கி இன்னொரு எல்லையை நோக்கி நீந்துபவை ..கோணங்கி பேச்சுக்கு திரும்பி விடுவார் ஆனால் பூபதி மௌனத்தோடு உரையாடுபவர் . அதனால்தான் அவரது நாடகங்களில் அழுத்தம் அதிகம். ..
பூபதியின் நாடகங்கள் பெரும்பாலும் தொன்ம சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. சடங்குகள் நம் பழங்குடி மரபு. இதில் பல சடங்குகளைத்தேடி பூபதி பல மாதங்கள் காட்டில் அலைந்து திரிந்து கண்டுபிடித்துள்ளார். இப்படியான் ஆராய்சியில் சில மாதங்கள் அவர் மூழ்கி விட்டு வீடு திரும்பியபோது நானும் அப்போது கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன்.
ஆளே வித்தியாசமாக இருந்தார். தேனீ கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வெளிவந்தவர் போல, பார்ப்பது பேசுவது எல்லாம் வித்தியாசமாக இருந்தது .. ஏதோ பெர்க்மன் படத்துக்குள் இருக்கிறார் போல ஒரு பிரமை தோன்றும் அதன் பிறகுஅவர் நாடகங்களில் வசனங்கள் மெல்ல பின் வாங்க துவங்கி உடல் அசைவுகள் அதிகம் முக்கியத்துவம் பெறத்துவங்கின .
ஒருமுறை அவரது முக்கியமான நாடகம் நடந்து முடிந்த சமயம். ஆனந்த விகடனில் அந்த நாடகம் பற்றி ஒருகட்டுரை வெளியாகியிருந்தது. வழக்கமாக பூபதியும் அவரது நண்பர்களும் மீடியாக்கலிலிருந்து விலகியிருப்பவர்கள் கோணங்கியை போல.காரணம் மீடியாக்கள் காரணமாக கலைத்த்ன்மை சாரம் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் நம்பினர் .ஆனால் அந்தமுறை அப்போது விகடனில் நிருபராக இருந்த அருள் எழிலனின் விருப்பத்தின்பேரில் அக்கட்டுரை வெளியாகியிருந்தது. விகடன் வெளியான சிலநாட்களில் பூபதிக்கு சக நாடகக்காரன் ஒருவனிடமிருந்து ஒரு அநாமதேய கடிதம். பூபதி மீடியாக்காரனாக மாறிவிட்டதாகவும் இனி நாடகத்தை விட்டு சினிமாவுக்கு நுழையபோவதையே இது காண்பிக்கிறது என்பதாகவும் நக்கல் செய்து எழுதப்படிருந்தது அக்கடிதம். அதை படித்த பூபதி மிகவும் விசனப்பட்டுகிடந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்குச்சென்றிருந்தேன்.தகவலைகேள்விப்பட்டதும் இலக்கியம் மட்டுமல்லாமல் எல்லாத்துறையிலும் இது போன்ற ஏழரை ஆட்கள் எட்டரை வேலைகளில் ஈடுபவடுதை அறிந்து வருத்தம் கொண்டேன் . அவருக்கு ஆறுதல் எப்படிச் சொல்லலாம் என யோசித்தேன். அவரை மன அழுத்ததிலிருந்து முழுவதுமாக விடுவிக்க அவரது பாணியை கையாள்வதென முடிவு செய்தேன் .
பின் அவரிடம் நாடகம் நடத்துன நிலத்துக்கு நீ என்ன செஞ்சே எனக் கேட்டேன் ?அந்த இடம் ஒரு தேரி காடு நல்ல செக்கசெவேலென சிவந்துகிடக்கும் வளமான செம்மண் பூமி . அதில் பல பூச்சிகள் உயிரினங்கள் தாவரங்கள் செழித்த நிலம் ..அந்த இடத்தில் வெறுமனே பூமியை பயன்படுத்திவிட்டு வரலாமா அதன் சமன் குலைந்திருக்குமல்லா.. எனகேட்டேன் .உடனே ஒரு கெடா வெட்டி பொங்கல் போடு எல்லாம் சரியாகும் என்றேன். அடுத்த சில நாட்களில் அங்கு தன் குழுவினருடன் சென்று பூபதி பொங்கலிட்டு மொட்டை போட்டுக்கொண்டு திரும்பினதாக போனில் தகவல் சொன்னார் . அந்த குரலில் மகிழ்ச்சி தெறித்தது.
இது ஒரு சைக்கலாஜி அவ்வளவுதான் .அப்போதைக்கு அவரை பீடித்திருக்கும் மன அழுத்த்திலிருந்து விடுவிக்க எனக்கு தெரிந்த ஒரே மருந்து அவரை இன்னொரு கொண்ட்டாட்டத்துக்கு தயார்படுத்துவது அவ்வளவே.
இந்த விடயத்தை நான் இங்கே பகிர்வதற்கு காரணம் பூபதி தன் கலையை உணர்வு பூர்வமாகவும் சடங்காகவும் வழிபட்டு அதை எப்படி தனக்கான கலாச்சராமாக மாற்றிக்கொண்டார் என்பதுவே ஆகும். இத்தனைக்கும் அவருக்கு கடிதம் எழுதியவர் மேல் அவருக்கு சிறிதும் கோபமில்லை . ஆனால் அவருக்கிருந்த மன உளைச்சல் எல்லாம் இப்படி ஒரு எதிர்வினை வருமளவுக்கு தன் செயல் இருந்துவிட்டதோ எனும் அச்சம் காரணமாகத்தான். ஆனால் அது தேவையற்றது என்பதை நான் உணர்ந்தேன் ஆனால் சொல்லவில்லை. மாற்று வழியை காண்பித்தேன் அவ்வளவுதான்.
இந்த சம்பவத்தை நான் குறிப்பிடக் காரணம் ஒரு கலைஞனாக அவரிடம் நான் கண்ட பரிபூரண முழுமைதன்மையை உங்களுக்கு விளக்கத்தான். இத்தனை சுயநேர்மையுடன் நாடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் இன்று தமிழ்சூழலில் ஒருவரும் இல்லை .
அவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு ஆய்வாளராக பல கிராமங்களுக்கு சென்று பல நாடக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படங்களை சேகரித்து ஒரு கண்காட்சியும் நிகழ்த்தியுள்ளார். இது ஒரு அரிய பணி .உண்மையில் இது ஒரு அரசாங்கத்தின் பணி .தனி மனிதனாக தன் ஆர்வத்தின் பேரில் மட்டுமே இதை செய்திருக்கிறார். இந்தபணிக்கு அவர் எந்த அங்கீகாரத்தையும் எதிர் இன்று வரை எதிர்பார்த்தவரில்லை. அரசாங்கம் விருது கொடுத்தால்கூட அது அவரை கொச்சைபடுத்துவது போலத்தான். நானும் கூட ஒரு பதிவுக்காகத்தான் இங்கே குறிப்பிடுகிறேன் .
இன்று கிட்டதட்ட நாடகம் என்ற துறையே அழிந்துவிட்டது . எல்லா பட்டறைகளும் கோடம்பாக்க குடியிருப்புகளாக சினிமாவை செழுமைபடுத்த வந்துவிட்ட சூழலில் நம் கண்முன் ஒற்றை ஆளாய் இன்னமும் உறுமிக்கொண்டிருக்கும் உடல் பூபதியினுடையது என்பதில் ஐயமில்லை . அவரது நாடகங்கள் நமக்கு நெருக்கமானதோ இல்லையோ நமது உடல்களுக்கு மிகவும் நெருக்கமானவை. அவரது உடல் அசைவுகள் நாம் மிருகமாக காட்டில் உலவிய காலங்களை மீண்டும் நமக்குள் உணர்த்துபவை. நாடகம் என்பதை தீர்மானிக்கும் சதுரவடிவ அரங்கத்தன்மையை அறுத்து நமக்குள்ளிருக்கும் வெளிகளை மேடையாக்கும் சாத்தியம் கொண்டவை . அப்படியான் ஒரு தமிழ் நாடகக்காரனின் அந்த உடல் நம் முன் மீண்டும் சென்னையில் தோன்ற உள்ளது . வரும் ஜூலை பத்தாம் தேதி பூபதியின் புதிய நாடகம் சூர்ப்பணங்கு ஸ்பெசஸ் எண்: 1, எலியட்ஸ் க்டற்கரை. பெசண்ட் நகரில் நடைபெற உள்ளது. ஒரு புதிய அனுபவத்துக்காக காத்திருப்பவர்கள் அவசியம் தவறவிடகூடாத தருணம் இது..
2 comments:
அஜய் ரெம்ப நெகிழ்வாகவும் உணர்வு பூ ர்வமாகவும் என்னை முருக புபதியிடம் இழுத்து சென்றது
நல்ல பதிவு.
Post a Comment