January 30, 2009

இரு காதல் கவிதைகள்

1
போனேன் கண்டு கலங்கி
அழகான பெண் ஒன்றை ஒர் நள்ளிரவில்
இன்னமும் தீராது நடுநடுங்கி மனசு
மண் புயலில் சுற்றி சுழலும் காலம்
கண்களில் மண் அப்பி
இறைவன் கொண்டு செல்வான் என வியந்து
கை தூக்கி நிற்கிறேன்
அவ்ள் கடந்து சென்றபோது
அதிர்ந்த ஸ்லீப்பர் கட்டைகளின் இடி முழக்கத்தில்
நொறுங்கி தூளாகும் என் எலும்புகளின் ஓசையுடன்
அசையா புகைப்படமாய்
கம்ப்யூட்டரில் ஒட்டியிருக்கிறது
உன் திரு.மதி.முகம்.
2
நேற்று நான் பாத் ரூமில் கதவை
தட்டியபோது
ஒரு குளிர் காற்றாய் உன் வளைக்கரம்
கன்விலே முகிழும்போது மட்டும்
ஏன் கொண்டை போட்டு வரவேண்டும்
என் கண்மணி
நேற்று நீ குளித்த் ஆற்றில்
செத்து விழுந்தனவே என் மன
பார ம்தாங்கா தந்தகி ளைகள்.
இன்னமும் மனசை மயக்குக்கிறது
நீ விட்டுச்சென்ற கல்லின்ஈர மஞ்சள்.

January 20, 2009

பிரமிள்


 கவிதை எரித்த சூரியன்

-அஜயன் பாலா
உலகம் சொற்களால் ஆனது! சொற்கள் இல்லாத ஓர் உலகத்தை நம்மால் கற்பனையில்கூட யோசிக்க முடியாது.
ஒரு சமூகம் தனது ஞாபகங்களைச் சொற்களின் பயன்பாட்டினூடே கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் சேகரித்து வைத்துக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக வரலாற்றையும் கலாசாரத்தையும் கடத்தி வருகிறது. இந்தச் செயல்பாடு இல்லாத ஒரு மொழியில் சொற்கள் அர்த்தகனத்தைச் சுலபமாக இழந்துவிடுகின்றன.
இவ்வாறாக ஒரு சமூகத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு இறைச்சிப் பொருளாக விளங்கும் கவிஞனின் சொற்களும் வாழ்வும் காலங்காலமாக பரிதாபத்துக்குரிய நிலையில்தான் இருந்து வருகின்றன. வாழும்போது பாரதிபட்ட துன்பங்களும், அவமானங்களும் இன்று கதைகளாகவும் காவியங்களாகவும் சிலாகிக்கப்படுகின்றன. தனது ஒத்துவராத இயல்பு காரணமாக சமூகத்தில் அவர் பட்ட துன்பங்களின் கதைகள் நம் யோசனைக்கு அப்பாற்பட்டது. வாழும்போது கவிஞனை இம்சித்துப் பார்க்கும் இதே சமூகம், இறந்த பிறகு அவனுக்கு சிலை வைத்து கொண்டாடுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை.
பாரதிக்குப் பிறகு வந்த இத்தகைய தீவிர மனநிலை கொண்ட கவிஞர்களில் நகுலனும், பிரமிளும் குறிப்பிடத்தக்கவர்கள். மனித மனத்தின் இயல்பு குறித்தும், பிரபஞ்சத்திற்கும், இவற்றிற்குமிடையேயான தொடர்பு குறித்தும் கவிதை எழுதியவர்கள். அதேபோல வெளி உலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல் ஒரு வித எள்ளல் தன்மையுடன் அவதானித்தவர்கள். இருவருமே அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைச் சிதறடித்துப் பதில்களையே கேள்விகளாக்கி தங்களது தீவிர மனநிலையை வெளிப்படுத்தியவர்கள். இருவரில் நகுலனுக்கு வீடே உலகமாக இருந்தது. ஆனால் பிரமிளுக்கு உலகமே வீடாக இருந்தது. இருவரில் பிரமிளுடன் நான் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரோடு சில பொழுதுகளில் உரையாடியிருக்கிறேன்.
அப்போது சென்னை ரங்கநாதன் தெருவில் “முன்றில்’ என்ற பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. முன்றில் சிற்றிதழின் ஆசிரியரான மா. அரங்கநாதன் மற்றும் அவரது மகன் மகாதேவன் ஆகிய இருவரும் அதனை நடத்தி வந்தார்கள். அப்போது மாலை நேரங்களில் எழுத்தாளர்கள் அங்கு கூடுவது வழக்கம். நான் அப்போது நகரத்திற்குப் புதியவன். நண்பர் ஒருவரின் பரிச்சயத்தின்பேரில் அந்தக் கடைக்குச் செல்லத் தொடங்கினேன்.
சஃபி, கோபிகிருஷ்ணன், லதா ராமகிருஷ்ணன், சி. மோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், நாகார்ஜுனன், சாருநிவேதிதா, யூமா வாசுகி என பலரும் அங்கு வந்து செல்வர். இதனாலேயே அப்போது நான் பணி செய்து கொண்டிருந்த புலனாய்வு பத்திரிகையின் பணி முடிந்ததும் அந்த இடத்திற்கு விரைவேன். அதுபோல நான் விரைந்து சென்ற ஒரு நாளில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவாக்கில் ஒல்லியாக, ஜோல்னா பை கண்ணாடி சகிதம் அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன்.
கூர்மையான நாசி மற்றும் விழிகளுடன், மீசை தாடி சுத்தமாய் ஷேவ் செய்யப்பட்டு மழுமழுவென முகம். அவர்தான் பிரமிள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அவரிடம் பேசி பரிச்சயமும் செய்து கொண்டேன். பேச்சினூடே சினிமாக்கள் மீது அவருக்கிருந்த ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. ஒரு சினிமா தொடக்க காட்சியிலிருந்து இறுதிவரை க்ளைமேக்சை நோக்கியே நகர வேண்டும். நல்ல திரைக்கதை அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என பேச்சினூடே கூறினார்.
நண்பர்கள் மூலமாக அவரது முகவரியைப் பெற்றுக்கொண்டேன். அடுத்த இரு நாள்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டைத் தேடிச் சென்றேன். அப்போது அவர் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தால் கீழே பெரும் பன்றிக்கூட்டம் உணவுப்பொருள்களுக்காக சதா இரைச்சலிட்டபடி காணப்படும். அங்கே வசித்த யாரோ அதனைக் கூட்டமாக வளர்த்து வந்தனர். பிரமிள் தனியாக அங்கே வசித்து வந்தாலும் பெரும்பாலும் அங்கிருப்பவர்களிடம் நன்மதிப்பு பெற்றவராகவே இருந்தார். வீட்டைத்தேடி வந்தபோது குடியிருந்தவர்களின் பாவனையிலிருந்தே இதனை என்னால் யூகிக்க முடிந்தது. அந்தச் சிறிய அறையில் ஒரு மூலை முழுக்க வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். அதற்கு முன் பிரமிளை சந்தித்தபோது வம்பை விலை கொடுத்து வாங்குவதுபோல என பலர் எச்சரித்தனர். ஆனால் அவர் என்னைச் சற்று கேலியும் கிண்டலுமாக அணுகினார்.
பேச்சினூடே சற்று நேரம் நிதானமாக என்னைத் தனது சோடாபுட்டி கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்ப்பார். அன்றைய காலகட்டத்தின் சக எழுத்தாளர்கள்பற்றி விசாரித்தார். நீ அவனுடைய ஆளா என கேள்வி கேட்டார். அப்போது அவருக்கும் பல எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய சர்ச்சைகள் சிற்றிதழ்களில் ஓடிக் கொண்டிருந்த நேரம்.
அன்று எனக்கும் சேர்த்து அவரே உலை போட்டார். குக்கரில் வடிப்பதுபோல சிறிது தண்ணீர்கூட கஞ்சியாக வெளிப்படாமல் அலுமினியப் பாத்திரத்தில் சாதம் வடிக்கிறேன் பார் என்றார். அதுபோல வடித்துக் காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அரிசிக்கும் தண்ணீருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்றார். பின் ரசம் மற்றும் ஊறுகாயுடன் அன்றைய என் பகல் பொழுது கழிந்தது.
அப்போது அவருக்கு எப்படியும் 54 வயதிருக்கும். அவரிடம் கேட்டபோது அப்படித்தான் சொன்னார். நானும் அவரும் அன்று வெளியில் இறங்கி நடந்தோம். எனக்கு உள்ளூர பெருமிதம். காலத்தின் மிகச்சிறந்த கவிஞனோடு வீதியில் நடந்து செல்கிறோம் என்ற உணர்வு.
ஆனால் எங்களைக் கடந்து சென்ற எவரும் அந்த ஸ்மரனை இல்லாது கடந்துபோவது என்னை ஆச்சரியப்படுத்தியது. இப்போது யோசிக்கும்போது என் அதீதம் நகைப்பை வரவழைக்கிறது என்றாலும் அப்போது பதட்டமான மனநிலையில் நகரத்திற்குப் புதிதாக அறிமுகமாகியிருந்த எனக்கு, அப்படியான உணர்வுதான் இருந்தது.
பின்னர் இருவரும் சற்றுதூரம் உஸ்மான் ரோட்டில் நடந்து சென்றபின் எதிரே ஒரு பசு எதிர்ப்பட்டது. அந்தப் பசுவின் முன் நெடுநேரம் அவர் நின்றார். அந்தப் பசுவும் சலனமில்லாமல் அவர் முன் நின்றது. இருவரையும் புறச் சூழலையும் நான் மாறி மாறிப் பார்த்தபடி அங்கே நின்றிருந்தேன். சாலையில் கடந்து செல்வோர் எங்களை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டபோது அவரிடம் நான், ஏன் எதற்காக அப்படி நின்றீர்கள், என்றேன். நான் பசுவோடு பேசிக் கொண்டிருந்தேன் என்றார். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். அவர் சொன்னது உண்மையா, பொய்யா எதையும் நான் யோசிக்கவில்லை. ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனைப்போல ஒருவித களிப்பு அப்போது என்னுள் நிறைந்திருந்தது.
இரண்டாவது முறை அவர் வீட்டிற்குச் சென்றபோது இருவரும் வெளியில் இறங்கி வெகுதூரம் நடந்தோம். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி இறங்கி ஒரு புத்தக அலமாரி குறித்து விசாரித்தோம். அவர் எதிர்பார்த்ததை விட நல்ல அலமாரி கிடைத்தது. போதிய பணம் கொண்டுவராததால் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு மீண்டும் பாலத்தில் ஏறி இருவரும் உஸ்மான் ரோடு பக்கமாக நடந்து வந்தோம்.
அப்போது பரவாயில்லை உன்னோடு வந்தால் காரியம் கூடுதலாகப் பலிதமாகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார். எல்லாம் சில நொடிகள்தான். சட்டென பேச்சு, மா. அரங்கநாதன் குறித்து எழுந்தது. அப்போது இருவரும் சிற்றிதழ்களில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். இந்தப் பிரிவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
நான் இதுகுறித்து பேச்சு எடுத்ததும் உடனே அவர் முகம் மாறியது. எனக்குத் தெரிந்துவிட்டது நீ அவனுடைய ஆள் எனக் கூறியபடி அவசரமாக என்னைப் பிரிந்து எதிர்சாரிக்கு வேகமாக ஓடி ஒரு “ஸ்டூடியோ’வினுள் நுழைந்துகொண்டார். அங்கிருந்த நபர்களிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொன்னார். கடைக்காரர்கள் வெளியில் வந்து என்னைப் பார்த்தனர். உடனே நானும் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். எனக்கு வருத்தமாக இருந்தது.
அவரிடம் ஏன் இதுகுறித்து பேச வேண்டும் என என்னை நானே நொந்துகொண்டேன். ஒரு குழந்தையைப்போல அவர் ஓடிச்சென்றது இப்போது என் மனதில் காட்சி சித்திரமாக என்னைத் துன்புறுத்துகிறது. இது நிகழ்ந்து சில ஆண்டுகள் கழித்து அவர் இறந்த சேதி கேள்விப்பட்டபோது உண்மையில் என் கண்களில் நீர் துளிர்த்தது.
கடைசிவரை ஒரு நிம்மதியின்மை அவரை அலைக்கழித்தது. உலக நியதிக்கு ஆட்படாதவராக அவர் தன்னை முழுவதுமாக வேறு உலகத்தில் இருத்திக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதுபோன்ற கவிஞர்கள் குறித்து ஒரு சமூகம் எப்போதும் பிரக்ஞை இல்லாமல் சுழல்கிறது. இப்போது ஓரளவு நிலைமைகள் சாதகமாகத் தெரிகின்றன. ஆனால் எல்லா காலத்திலும் தீவிர மனநிலையும் சொற்களின் தேடலும் கொண்ட கவிஞன் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகவே செய்வான்.
இந்த முரணைப் புரிந்து கொள்வதும், இத்தகைய கவிஞர்கள் குறித்து நமது பொதுபுத்திக்கு உட்படுத்துவது மட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் சரியான காரியமாக இருக்க முடியும்.

அஜயன் பாலாவின் படைப்புலகம் - ஒரு அறிமுகம்-லதா ராமகிருஷ்ணன்


'கார்ட்டூனில் ஒரு சூரியனை வரைந்து அடிக்கோடிடும் போதே அது கடலாக மாறும் அதிசயத்தை நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன், அறைக்குள் வெள்ளம் நிறைந்திருக்கிறது, என் காலை முட்டும் காகிதக் கப்பல்கள் ஒன்றிலிருந்து ஒரு இளவரசி என் தொடையைக் கிள்ளுகிறாள், கடல் என் நண்பனானதால் ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழை பற்றியும் குறிப்பெடுக்க முடிகிறது.

சமீபத்தில் 'மருதா ' பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள 'மயில்வாகனன் ' மற்றும் கதைகள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் உரையிலிருந்து ஒரு பத்தியே மேலே தரப்பட்டுள்ளது, எழுத்தாளர் அஜயன்பாலாவின் சிறுகதைகள் 15 இடம் பெற்றுள்ள இந்தத் தொகுப்பில் நம்மைப் பிரதானமாக ஈர்ப்பது கதைகளின் மொழியும். தொனியும், 'மாஜிக்கல் ரியலிஸம் ' என்று வகைப்படுத்தப்படும் பாணியில் அமைந்துள்ள கதைகள் வாசிப்பனுபவம் தருவதாகவும். நிகழ்கால சமூக அரசியல் போக்குகளை சுட்டுவதாகவும். 'நையாண்டி செய்வதாகவும் உள்ளன, கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி '. 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு '. 'டினோசர் - 94 '. 'ஒரு வரலாற்றுக் கதை '. 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் '. என தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிறைவான வாசிப்பனுபவம் தருகின்றன,

'துரோகத்தின் நிழல் '. 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை ' முதலிய ஒன்றிரண்டு கதைகள் எனது வாசிப்பில் அத்தனை நிறைவை தரவில்லை,
நிலவும் தமிழ்ச் சூழலில் சில புத்தகங்களுக்கும். படைப்பாளிகளுக்கும் தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விடுவதும். வேறு சில தகுதிவாய்ந்த படைப்பாளிகளுக்குப் போதுமான கவனம் கிடைக்காமலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது, இந்த இலக்கிய எதிர் போக்கிற்கு மாற்றாய் சில 'இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது, அப்படியான அமைப்புகளில் ஒன்றான 'வெளி 'யின் சார்பில் சமீபத்தில் 'அஜயன்பாலாவின் ' கதைத் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டம் நடந்தேறியது, வெளி ரங்கராஜன். சங்கரராமசுப்பிரமணியன். ஆசதா. பால்நிலவன். யூமா வாசுகி. 'மருதா ' பாலகுருசாமி. நான் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் உண்மையிலேயே அரங்கு நிரம்பிய கூட்டமாக விளங்கியது நிறைவைத் தந்தது, அதை ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது,

'வெளி ' இலக்கிய அமைப்பின் நிறுவனர் 'வெளி ரங்கராஜன் ' நூலிலுள்ள கதைகளைப் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார், கதை முடிவில் என்ன சொல்கிறது என்பதைக் காட்டிலும் 'ஒன்றிற்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளுக்கான சாத்தியத்தைத் தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது என்பதே தனக்கு முக்கியமாகப் படுவதாகக் குறிப்பிட்ட அவர் இத்தகைய இலக்கிய முயற்சிகளை பரவலாக அறியச் செய்வதே 'வெளி 'யின் நோக்கம் என்றார், மொழிபெயர்ப்பு. விமர்சனம். சிறுகதைகள் என நவீன இலக்கியத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு தொடர்ந்து இயங்கி வரும் திரு, அசதா. 'மாய யதார்த்தம் ' வகையான கதைகளை எழுதுவதில் அளப்பறிய சுதந்திரம் இருப்பதோடு அதே அளவுக்கு பொறுப்புடைமையும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது, அதற்கென்று ஒரு 'ஆன்மா ' உள்ளது, அது இல்லாத போது இத்தகைய எழுத்துக்கள் 'வெற்று வார்த்தை ஜாலமாகப் போய்விடும் அபாயமுண்டு ' என்றார், இதே கருத்தையே தமிழின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களுள் ஒருவரான சங்கரராம சுப்பிரமணியனும் முன்வைத்தார், இதன் தொடர்பாக அவர் கூறிய 'குட்டி டினோசார் ' கதை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது, அவர் பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் தன்னால் அஜயன்பாலாவின் 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு ' போன்ற கதைகளை கூடுதலாகவே உள்வாங்கிக் கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார், யதார்த்த வகை கதைகள் எழுதுகையில் மொழி நடையை மாற்றிக் கொள்ள தேவையில்லை என்றும் அப்படியில்லாமல் அஜயன்பாலா கையாண்டிருக்கும் வகை கதைகளுக்கு. அவை வெற்றியடைய கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிபட்ட எழுத்தாளர் 'பால்நிலவன் ' அஜயன்பாலாவின் ஒவ்வொரு கதையும். ஒன்றிலிருந்து ஒன்று மாறுப்பட்ட நடையிலும். தளத்திலும் இயங்குவதாக குறிப்பிட்டார், கூட்டத்திற்கு வந்திருந்த வேறு பலரும் அஜயன்பாலாவின் சிறுகதைகளில் தாங்கள் உணரக் கிடைக்கும் கவித்துவத்தையும். அந்நியப்பட்ட மனதையும் மற்ற நுட்பங்களையும் குறித்துப் பேசினார்கள், அஜயன்பாலா. தனது ஏற்புரையில் 'திடமென்று நாம் நம்பியிருக்கும் எதுவும் திடமானது அல்ல, சமீபத்திய சுனாமி இதற்கொரு அப்பட்டமான உதாரணம் ', இந்த அறிதலும். அலைக்கழிப்புமே தனது கதைகளின் இயக்குவிசைகளாகின்றன என்றார், கோணங்கி. எஸ், ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் தனக்குள் அதிகத் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்றார், தனது தோழர்களான சங்கரராமசுப்பிரமணியன். மருதா பாலகுருசாமி. தளவாய் சுந்தரம் முதலியவர்களின் அன்பும். தோழமையும் தன் படைப்பாற்றலுக்கு உந்துசக்திகளாகின்றன என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்,

Review: Ulaga Cinema Varalaaru -BIG FM 92.7


BIG FM 92.7
Book: Ulaga Cinema Varalaaru — Mouna Yugam (Silent Period)
Author: Ajayan Bala
CHENNAI: A Welcome publication in Tamil, most likely the first of its kind, narrating the interesting history of world cinema during the period December 1895 to October 1927 being the silent age when many purists and diehard conservatives sincerely felt that the medium would not last long. Ajayan Bala who is involved in many a capacity in cinema has narrated interestingly the fascinating true story of the founding, growth and development of silent film around the world, including India.
Today there is great awareness about film history in this part of the country and this book will go a long way in filling the virtual vacuum that exists.
A Welcome publication in Tamil, most likely the first of its kind, narrating the interesting history of world cinema during the period December 1895 to October 1927 being the silent age when many purists and diehard conservatives sincerely felt that the medium would not last long. Ajayan Bala who is involved in many a capacity in cinema has narrated interestingly the fascinating true story of the founding, growth and development of silent film around the world, including India. Today there is great awareness about film history in this part of the country and this book will go a long way in filling the virtual vacuum that exists.
The book is well illustrated with thumbnail photographs, which adds to its attraction and utility.
The author is currently working on more volumes to continue his in-depth study and writing of the later exciting periods of world cinema. Economically priced, this book is a must read for Tamil readers who wish to know the fascinating tale of international cinema. The publishers also deserve to be congratulated besides the author for planning and publishing such a book.

அல்ஜீரிய விடுதலைப்போர்: ஒரு சுருக்கமான வரைவு!

-அஜயன் பாலா
உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நிலங்களாக மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி வந்தனர். இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின் குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். இதனிடையே பதின்மூன்றாம் நூற்றாண்டில் நாடு பிடிக்கும் ஆசையில் கப்பல்களில் திசைக்கொரு பக்கமாக அலைந்த ஸ்பானியர்கள் மொராக்கோ வழியாக அல்ஜீரியாவுக்குள் நுழைந்தனர். அல்ஜீரியாவை ஆக்ரமித்தனர். அதன் பிறகு துருக்கியைச் சேர்ந்த ஏட்டோமான் வம்சத்தினர் அல்ஜீரியாவை ஸ்பெயினர்களிடமிருந்து கைப்பற்றினர்.இறுதியாக, 1830ல் பிரெஞ்சுப் படை அல்ஜீரியாவை முழுமையாகத் தன் வசப்படுத்தியது. அப்போது பிரெஞ்சு அரசு ஏற்படுத்திய எல்லைகளின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இன்றைய அல்ஜீரிய அரசு. அது அல்ஜீரியாவை முழுமையாகக் கைப்பற்றியதோடு மட்மில்லாமல் அல்ஜீரிய மக்களின் சொத்துகளையும் கையகப்படுத்தியது.அல்ஜீரியாவில் முஸ்லிம்களைப் போலவே, யூதர்களும் பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால், பிரெஞ்சு அரசாங்கம், தனது குடியேற்ற பிரெஞ்சு மக்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுத்தது. இதனால் பிரெஞ்சு குடியுரிமை அதிகாரத்தில் முக்கிய பதவிகளில் பிரெஞ்சு மக்களே பங்கேற்றனர். உடன் ஏகபோக சுகத்தையும் அனுபவித்தனர். இதனால் மண்ணின் மைந்தர்களாக இருந்த அல்ஜீரிய முஸ்லிம்களும் யூத இனத்தவர்களும் பிரான்சு அரசாங்கத்தின் மேல் கடும் கோபம் கொண்டிருந்தனர். கூட்டாக இணைந்து அரசாங்கத்தை எதிர்த்தனர்.இதனால் 1865ல் பிரான்சை ஆண்ட மன்னன் நெப்போலியன் அல்ஜீரிய மக்களின் இந்த எதிர்ப்பை பலவீனப்படுத்த ஒரு திட்டம் வகுத்தான். அதன்படி யூத மக்களுக்கு மட்டும் வாக்குரிமை அதிகாரத்தை வழங்கினான். இது மண்ணின் பூர்வ குடிகளான அல்ஜீரிய மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.காலங்காலமாக இந்த மண்ணில் வாழும் தங்களுக்குக் குடியுரிமை இல்லாமல் குடியேற்றமாக வந்த வேறு இனத்தார் நம்மை அடக்கி ஆள்வதா? மக்களிடம் இந்த கேள்வி குமுறலாக வெடித்தது. அல்ஜீரிய தேசிய அடையாள மீட்பு பணியில் அல்ஜீரிய மக்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர். படிப்பறிவு மிக்க அல்ஜீரிய மக்கள், இன உணர்வையும் தேசிய இனத்திற்கான தேவையையும் மக்களிடம் வலியுறுத்தி போராட்ட விதையை அல்ஜீரிய மக்களின் மனதிலே ஊன்றினர்.1930ல் இத்தகைய உணர் வெழுச்சிகள் ஒரு வடிவம் கொண்டன. தேசிய விடுதலை முன்னணி எனும் இயக்கம் அல்ஜீரிய முஸ்லிம்களிடையே உதயமானது. இச்சூழலில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. தொடக்கத்தில் முதல் உலகப் போரைப் போல இரண்டாம் உலகப்போரிலும் பிரெஞ்சு அரசை ஆதரித்தனர். போரின் இடையில் வெற்றி சட்டென ஜெர்மன் நாஜிக்களின் பக்கமாகத் திரும்ப அதுவரை அல்ஜீரிய மக்களிடையே இருந்து வந்த பிரெஞ்சு மக்களின் ஆதரவு குறையத் தொடங்கியது.அல்ஜீரிய விடுதலைக்கான சுதந்திரக் குரல்கள் பகிரங்கமாக எழ ஆரம்பித்தன. 1943இல் பெர்ஹாத் அப்பாஸ் எனும் முஸ்லிம் தலைவர் 56 அல்ஜீரியத் தேசிய உலகத் தலைவர்களின் கையெழுத்துடன் கூடிய அல்ஜீரிய மக்கள் அறிக்கை ஒன்றைத் தயாரித்து பிரெஞ்சு அரசாங்கத் திடம் சமர்ப்பித்தார். அதில், அல்ஜீரிய முஸ்லிம் மக்களுக்கு அல்ஜீரிய ஆட்சியில், சட்ட வசதிகளில் சம உரிமை அளிக்க கோரி அந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிரெஞ்சு அரசாங்கம் இந்த கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டுள்ள சிலருக்கு மட்டும் பிரெஞ்சு குடியுரிமை தருவதாக கூறியது. இது அல்ஜீரியாவில் கொந் தளிப்பை உருவாக்கவே மக்கள் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை காண்பிக்கத் திரண்டனர்.மே 8, 1945.அல்ஜீரிய வீதிகளில், வீட்டுச் சுவர்களில், முதல் முறையாக ரத்தக்கறைகள் படிந்த நாள். அன்று மக்கள் பிரெஞ்சு அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி வீதியில் சென்றனர். பிரெஞ்சு அரசாங்கம் பாதுகாப்புக்காக வீதிகள்தோறும் எண்ணற்ற ராணுவத்தினரை வரிசையாக துப்பாக்கி மற்றும் லத்தியுடன் நிற்க வைத்தது. ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறிய சலசலப்பு சடுதியில் பெரிய கலவரமாக வெடித்தெழுந்தது. அதற்காகவே காத்திருந்த ராணுவத்தினர் வெறித் தாக்குதலை மக்கள் மீது நடத்தினர். தப்பித்து ஓடிய மக்கள் எல்லாரையும் விரட்டி விரட்டி போலீஸ் அடித்து நொறுக்கியது.பிரெஞ்சு அரசின் அதிகாரபூர்வ கணக்குப்படி மொத்தம் 1500 முஸ்லிம் மக்கள் இந்த கலவரத்தினால் இறந்ததாக கணக்குக் காட்டப்பட்டது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 6000 முதற்கொண்டு 45000 வரை இருக்கும் என பத்திரிகைச் செய்திகள் கூறின.இந்த சம்பவம்தான் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது நிரந்தர வெறுப்பை உருவாக்கியது. பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அல்ஜீரிய இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது என உறுதியெடுத்துக் கொண்டனர்.அவ்வப்போது பல எதிர்ப்புகள் ஊர்வலமாக நிகழ்த்தப்பட்டன. அதனை பிரெஞ்ச் அரசாங்கம் தனது வன்முறை நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கியது. இதனிடையே இரண்டாம் உலகப் போர் முழுவதுமாக முடிவடைந்து ஜெர்மனி பிரான்சிடம் முழுமையாக சரணடையவே அதுவரை பயந்திருந்த பிரெஞ்சு அரசு முழு பலத்துடன் அல்ஜீரிய போராளிகளை ஒடுக்க முடிவு செய்தது.ராணுவத்தினர் இரவு பகலாக மறைமுகப் போராட்டங்களிலிருந்த முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிக் கொன்றது. கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 50,000 பேர் பிரெஞ்சு அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாக யூவ்ஸ் பெனாட் எனும் வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார். இதன் பிறகும் நாம் அமைதியாகப் போராடுவது வெற்றியைத் தராது என முடிவெடுத்த அல்ஜீரியா விடுதலை முன்னணியைச் சேர்ந்த மக்கள் இனி முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என முடிவு செய்தனர். அனைவரும் கைகளில் ஆயுதங்களுடன் சபதம் மேற் கொண்டனர். போராட்டத்தில் களமிறங்கினர். அதன் ஆரம்ப வேலையாக போராளிகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போருக்கான தகுந்த சமயத்திற்காக காத்திருந்தனர். நேரமும் வந்தது.அல்ஜீரிய சுதந்திரப் போர் நவம்பர் 1, 1954தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடங்கி, தனது போரைத் தொடங்கியது.பிரெஞ்ச் அரசாங்கத்தின் ராணுவக் கிடங்குகள், காவல் நிலையங்கள், பாதுகாப்பு முகாம்கள் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. சற்றும் எதிர்பாராத இந்த திட்டமிட்ட தாக்குதலால் பிரெஞ்ச் அரசு அதிர்ந்தது. முன்பே, தேசிய விடுதலை முன்னணியினர் தங்களது படைகள் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர் சங்கங்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் என பல்வேறு பிரிவுகளில் மக்களிடம் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தது.போராட்டக் குழுவின் தலைவர் அகமத் பென் பெலா எகிப்தின் கெய்ரோவிலிருந்து தனது திட்டங்களை துல்லியமாக தீட்டி உடனுக்குடன் தனது கொரில்லா வீரர்களை செயல்பட வைத்துக் கொண்டிருந்தார். அதேபோல் தேசிய விடுதலைப் படையின் மற்றொரு தலைவரான பிரான்ஸ்வா பனான், தேசிய விடுதலைப் படையின் இந்த அதிரடி கொரில்லா தாக்குதல் எந்த வகையில் நியாயமானது என்பதை அறிவார்ந்த ரீதியாக தெளிவாக உணர்ந்து அதற்கான சித்தாந்தங்களை உருவாக்கி உலக அரங்கில் போராட்டத்திற்கு ஒரு மதிப்பீட்டை உருவாக்கித் தந்திருந்தார். போராட்டத்தின் முதல் வேலையாக அல்ஜீரியாவின் கிராமங்களில் பண்ணைகள் மூலமாக ஏகப்பட்ட சொத்துக்களை வளைத்துப் போட்டிருந்த ஐரோப்பியர்களை அவரவர் நாட்டுக்கு விரட்டி அடித்துப் போராளிக் குழுவினர் சொத்துக்களை கைப்பற்றினர். பதிலுக்கு பிரெஞ்ச் அரசாங்கம் போராளிகளை நசுக்க கடும் நடவடிக்கை எடுத்தது.போராளிகள், கைகளில் கிடைத்தால் அவர்களை பலவிதமாக சித்ரவதைக்குட்படுத்தி பொது மக்களிடம் தங்களது நடவடிக்கைகளின் கொடூரத்தை உணர்த்தி பயமுறுத்தி வந்தனர். போராளியின் வீடுகள் சூறையாடப்பட்டன. போராளிகளின் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால், போர் இரண்டு பக்கங்களிலும் அதிக அளவிலான வெறியை மென்மேலும் மூட்டியது. பிரெஞ்சு அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கைகள் காரணமாக போராளியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி தேசிய விடுதலை முன்னணிப் படை மேலும் வலுப்பெற்றதே ஒழிய, பயமேற்படவில்லை.விடுதலைப் போரையும் போராளிகளையும் எகிப்து உள்ளிட்ட இதர முஸ்லிம் நாடுகளின் அரசுகள் அங்கீகரிக்க தொடங்கியது. எழுத்தாளர்கள் மற்றும் உலகப் புகழ் பெற்ற தத்துவவாதிகளான ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் ஆகியோர். பிரான்சிலிருந்து கொண்டு போராளிகளுக்கு ஆதரவாக தத்துவ நிலைப்பாட்டை உலகறிய தங்களது எழுத்துகள் மூலமாக பகிர்ந்துகொண்டனர். ழான் போல் சார்த்தர் ஒரு படி மேலாக சென்று இலக்கியத்திற்காக தனக்களித்த நோபல் பரிசையே போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிராகரித்து போராட்டத்தை உலகறியச் செய்தார்.இதன் காரணமாக தேசிய விடுதலைப் படையின் இந்த அல்ஜீரியச் சுதந்திரப் போரானது உலகெங்கும் பெரிய ஆதரவைப் பெற்றது. அல்ஜீரியாவை அல்ஜீரியாவுக்கே விட்டுக் கொடுங்கள் என உலகம் முழுக்க அரசியல் தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதில் ஆல்பர்ட் காம்யூ போராளிகளின் கொடூர சித்திரவதை குறித்து அறிந்து பிரெஞ்ச் அரசாங்கத்திடம் நீங்கள் சுதந்திரம் தராவிட்டாலும் பரவா யில்லை, மக்களை சுதந்திரமாகவாவது வாழவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், தேசிய விடுதலை முன்னணியினர் இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் “ஆல்பர்ட் காம்யூவை’’ முட்டாள் எனக் கூறினர். எங்களுக்கு நடுநிலையாளர்கள் தேவையில்லை. எங்களுக்கு விடுதலை வாங்கித் தர ஒத்துழைக்கும் ஆதரவாளர்கள் மட்டுமே தேவையென உறுதியாகக் கூறினர். அவர்கள் அப்படிக் கூறியதற்குக் காரணம் ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியர் என்றாலும் அவர் ஒரு ஐரோப்பிய வம்சாவளி யைச் சேர்ந்தவர் என்பதுதான்.போர் துவங்கிய சில நாட்களிலேயே UDMA., PCA., கம்யூனிஸ்டுகள் என பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்த அல்ஜீரிய விடுதலைப் போராளிகள் ஒவ்வொருவராக தேசிய விடுதலை முன்னணியுடன் இணையத் தொடங்கினர். UDMAவின் தலைவரான அப்பாஸ் திலிழின் தலைமையிடமான கெய்ரோவிற்கு விமானத்தில் பறந்து சென்று தங்களது குழுவை இணைத்துக் கொள்ளும் தகவலைக் கூறினார். இவர்களுள் மெஸ்ஸாலி ஹெட்ஜ் என்பவரைத் தலைவராகக் கொண்ட MNA மட்டும் FLNன் வன்முறைப் பாதையைக் கடுமையாக எதிர்த்து வந்தது. பிரான்சிலிருந்த அல்ஜிரிய தொழிலாளர்கள் மத்தியில் MNA அமைப்புக்கு பெரும் ஆதரவு இருந்தது. அல்ஜீரியாவில் விழிகி தனது இந்த ஆதரவாளர்களுடன் போராடி வந்தது. FLNன் ராணுவப் பிரிவான ALN எனப்படும் கொரில்லாப் படை MNAன் இந்தச் சிறிய ஆதரவுச் குழுவை முழுமையாக பிரான்சிலேயே அழித்தொழித்தது.இதன் மூலம் அல்ஜீரியா முழுவதும் ஒரே போராளிக் குழுவாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. மேலும், பிரான்ஸ் நகர வீதிகளிலும், காபி கடைகளிலும் இரண்டு குழுக்களைச் சேர்ந்த போராளிகளும் திடீர் திடீரென மோதிக்கொண்டனர். இந்த மோதலில் மட்டும் ஏறக்குறைய 5000 போராளிகள் இறந்திருந்தனர். இதனிடையே பிரெஞ்ச் அரசாங்கம் 1955 ஜனவரியில் ஜாக்குஸ் ஸான்ஸ்டுலே (Jacues Sanstalle)வை கவர்னர் ஜெனரலாக அல்ஜீரியாவின் போராளிகளைச் சமாளிக்க அனுப்பிவைத்தது. அவர் முஸ்லிம் மக்களிடையே தன் மதிப்பைப் பெற்று அல்ஜீரியாவுக்கு ஆதரவாக சில திட்டங்களைத் தீட்டி பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு நன்மதிப்பை ஈட்ட பார்த்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதையும் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டார்.பிரச்சினையின் தீவிரத்தை அதுவரை பிரான்ஸ் அரசு உணராமல் அசட்டையாகத்தான் இருந்தது. ஆகஸ்ட் 1955ல் பிலிப் வில்லி (Philio Villee) நகரத்தில் FLN நடத்திய பெரும் தாக்குதல்கள் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு FLN ன் பலத்தையும் தீவிரத் தன்மையையும் உணர்த்தியது. அதுவரை கிராமங்களில் மட்டுமே போரிட்டு வந்த போராளிகள் முதன்முறையாக இச்சமயத்தில்தான் நகரத்தைக் குறிவைத்தனர். மேலும் அதற்கு முன்வரை பொதுச் சொத்துக்களுக்கு மட்டுமே சேதம் விளைவித்து வந்த போராளிகள் முதல் முறையாக கடுமையாக தாக்கியதில் 123 பேர் கொல்லப்பட்டனர். அதில் 79 பேர் பிரெஞ்ச் நாட்டவர். இறந்தவர்களில் வயதான பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.1956 ஆகஸ்டில் FLNல் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 34 பேர் அடங்கிய அதன் உயர்மட்டக் குழு ஒன்றாகக் கூடி FLNஐ இரண்டாகப் பிரித்தது. போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வென ஒரு குழுவும் வெளியுறவு நடவடிக்கைகளில் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றொரு குழுவுமாக பிரிக்கப்பட்டது.இதனிடையே 1956 அக்டோ பரில் FLN ன் படைக்குழுத் தலைவர்களான அகமத் பென் பெல்லா, முகமது போதியர்ஃப், முகமத் சிதர் மற்றும் அஜித் அசயத், ஹோசின் ஆகியோர் மொராக்கன் DC-3 மைதானத்தில் சென்றபோது பிரெஞ்ச் விமானப்படை அதிகாரிகள் அத்துமீறி விமானத்தினுள் நுழைந்து போராட்ட தலைவர்களை கைது செய்தனர். அந்த கைது சம்பவத்திற்கு ஐ.நா.வின் அரபு நாடுகள் கூட்டணியினரிடமிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடமிருந்து பிரெஞ்சு அரசாங்கத்திற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில்தான் FLN தனது உச்சகட்டப் போரை நிகழ்த்த முடிவெடுத்தது.செப்டம்பர் 30, 1956 அன்று மூன்று பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன் அலுவலகமும் ஒன்று. 1957ல் இலையுதிர் காலம் வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்பு களையும் நிகழ்த்தி, FLN பிரெஞ்ச் அரசாங்கத்தை அலற வைத்தது.இதே காலகட்டங்களில் திலிழி மறைந்து தாக்கும் கொரில்லா யுத்த நடவடிக்கைகளில் மிகுந்த திறமையுடன் பயன்படுத்தியது. உடன் போராளிகளை காட்டிக் கொடுத்த சக அல்ஜீரியர்களையும் திலிழி போராளிகள் கொடூர முறையில் சித்திரவதை செய்தனர். இதில் கிராமத்தினர்கள், அரசாங்க ஊழியர்கள், அப்பாவி விவசாயிகள் சிலரும் திலிழின் இந்தக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் பலி வாங்கப்பட்டனர். காதுகளை அறுத்தல், மூக்குகளை அறுத்தல் போன்றவை அவர்களது நடவடிக்கைகளில் உட்சபட்ச கொடூரமாக பின்பற்றப்பட்டது.FLN ன் உட்பிரிவுக்குழு ஒருபுறம் இதுபோன்ற பேரழிவு நடவடிக்கைகளில் இறங்க பிறக் குழுக்களானது ராஜதந்திர காரியங்களில் இறங்கி உலக நாடுகளின் கவனத்தை அல்ஜீரியாவின் பக்கம் திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு முக்கிய நிகழ்வாக 1957ல் அது அல்ஜீரியா முழுதும் மிகப் பெரிய வேலைநிறுத்தத்தை உருவாக்க திட்டமிட்டது. இப்படி ஒரு வேலை நிறுத்தம் மட்டும் நடந்து முழுவெற்றி பெற்றால் அது உலக நாடுகளுக்கு FLN மீது பொது மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும். அதனால், ஐ.நா.சபை பிரான்சிடம் அல்ஜீரியாவுக்கு திரும்பத் தரும்படி கட்டளை இடும். இதனால் தவிர்க்க முடியாமல் அல்ஜீரியாவை விடுதலை செய்ய நேர்ந்துவிடும் என முடிவெடுத்த பிரான்ஸ் அந்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக தங்களது அல்ஜீரிய பிரதிநிதியான ஜெனரல் மாசுவுக்கு உடனடியாக கட்டளையிட்டது.எப்பாடு பட்டேனும் எந்த நடவடிக்கை எடுத்தாவது இவ்வேலை நிறுத்தத்தை தகர்க்க வேண்டும். ஜெனரல் மாசு உடனடியாக தன் வேட்டையை முதலில் கிராமங்களில் தொடங்கினார். ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாக புகுந்து திலிழி போராளிகளை கைது செய்தனர். அப்பாவி முஸ்லிம்கள் இரண்டு தரப்பிலும் சித்தரவதைக்கு உள்ளானார்கள்.பல இடற்பாடுகளுக்கு இடையில் வேலை நிறுத்தம் நடந்தது. அல்ஜீரிய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கைகோர்த்தது போல் வேலை நிறுத்தத்தை முழுமையாக வெற்றியடையச் செய்தனர். தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன. ஜெனரல் மாசுவின் ராணுவ வீரர்கள் செய்த தந்திரங்கள் எதுவும் பலிக்கவில்லை.ஐ.நா.சபையில் இந்த வேலை நிறுத்தம் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்தன. ஆனாலும், பிரெஞ்சு அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பலனாக சில மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்தன. டிக்காலே மீண்டும் பிரான்சின் அதிபராக பதவி யேற்றார். அல்ஜீரிய மக்களின் மன வேதனையை தான் முழுமையாக அறிந்துகொள்வதாக கூறினார். அல்ஜீரியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதன்மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண விரும்புவதாக அறைகூவல் விடுத்தார். போரினால், தொய்வுற்றிருந்த முஸ்லிம் மக்களுக்கு டிக்காலேவின் பேச்சு ஆதரவும் நம்பிக்கையும் தருவதாக இருந்தது. ஆனாலும், FLN இதற்கு உடன்படவில்லை. இதனூடே மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது.Force-K எனும் தலைப்பில் FLN போராளிகள் சிலர் பிரெஞ்ச் ராணுவத்தில் ஊடுருவல் நிகழ்த்தினர். ஆனால், ராணுவத்திற்கு எப்படியோ மூக்கு வியர்த்துவிட்டது. வீரர்கள் மத்தியில் அடையாள பரிசோதனைகள் நடத்தப்பட்டு திடீர் திடீரென பல வீரர்கள் காணாமல் போயினர். திலிழின் இந்த Force-K நடவடிக்கையும் தோல்வியடைந்தது. இதனிடையே FLN ன் கூடுதலான வன்முறை நடவடிக்கைகளுக்கு மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என அல்ஜீரிய மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் FLN ஒரு முடிவுக்கு வந்தது.GPRA (Provisional Government of the Algerian Republic) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு அரபு நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும் ஆதரவு அளித்தன. FLN ன் தலைவரான அப்பாஸ் தான் இதற்கும் தலைவராக அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த அமைப்பை இயக்கி வந்தார். இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதன்படி அல்ஜீரிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்றும், மக்கள் விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும் டிக்காலே உறுதி கூறினார். இதற்கு சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர்.அதன்படி 1962 ஜூலை 1 ல் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன் மக்கள்தொகையில் மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர். ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். ஜூலை 5 மிகச்சரியாக பிரெஞ்ச் நாட்டினர் அல்ஜிரியாவுக்குள் நுழைந்து 132ஆவது ஆண்டில் அல்ஜீரியா முழு தேசிய விடுதலை நாடாக அறிவிக்கப்பட்டது. எண்ணற்ற பிரெஞ்ச் ஆதரவு முஸ்லிம்களும், யூதர்களும், இதர ஐரோப்பிய சமூகத்தினரும் அல்ஜீரியாவை விட்டு வெளியேறினர். அதனையும் மீறி அவர்கள் அங்கு இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதுதான் உண்மை.இந்த நீண்ட எட்டாண்டு விடுதலைப் போரில் ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் போரிலும் அதன் தொடர்பான நடவடிக்கைகளிலும் இறந்திருந்தனர். பிரெஞ்ச் தரப்பிலிருந்து 18000 பேர் பலியாகி இருந்ததாகவும் 65000 பேர் காயமுற்றதாகவும் அறிவிக்கப் பட்டனர். ஐரோப்பிய சமூகத்தில் 10,000 பேரும், பொது முஸ்லிம்கள் 70,000 பேரும் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டதாக இன்னொரு பட்டியல் கூறியது. விடுதலைப் பெற்ற நாளிலிருந்து FLN தலைவரான அகமது பென் பெலா மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்தார்.இன்னொரு FLN தலைவரான பென் கத்தா தலைமையில் மற்றொரு குழு ஆட்சிப் பதவிக்குப் போட்டியிட உடனடியாக பென் பெலாவால் அக்குழு அடக்கி ஒடுக்கப்பட்டது. செப்டம்பர் 20ல் முழுமையான தேர்தல் நடந்து அகமது பென் பெலா ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். தொடர்ந்து 109வது நாடாக அல்ஜீரியா அக்டோபர் 8, 1962ல் ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டது-.

இன்று - அஜயன்பாலா


அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப கலையின் முகமூடிகள் வெவ்வேறு வண்ணங்களில் கணம்தோறும் உருமாறிக் கொண்டிருக்கின்றன. மனித மனம் கலையை ஒரு சமூகத்தின் ஆன்மாவை பிரதிபலிக்கும் கருவியாக தொடர்ந்து பயன்படுத்தி தனது இறையான்மையை காத்துக் கொள்கிறது. கலையின் கடைசிக்குழந்தையான சினிமா தற்போது டிஜிட்டல் கேமராக்களின் வருகையால் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான நிர்பந்தத்திற்கு இயல்பாகவே உந்தப்பட்டு அதற்கான வழிவகைகளை குறும்படம் மற்றும் ஆவணப்படங்களின் வாயிலாக கண்டடையத் தவித்து நிற்கிறது.தமிழுக்கு இது குறும்படங்களின் பொற்காலம் எனக் கூறுமளவிற்கு கையடக்க கேமராக்களின் உதவியுடன் தமிழகத்தின் பல்வேறு மூலைமுடுக்குளில் கலைஞர்கள் தங்களது கருப்பொருளை நோக்கி கேமராவை ழர்ர்ம் ண்ய் செய்யத் துவங்கியுள்ளனர். சினிமா குறித்த அடிப்படை ஞானம் இவர்களின் முயற்சிக்கு தடையாக இருக்கவில்லை. குருடன் சிலையை தடவிபார்ப்பதுபோல் தங்களது ஆளுமைகளை தட்டுதடுமாறி தாங்களாகவே தடவிப் பார்த்து பூரிப்படைகின்றனர். இவர்களில் பலரது முயற்சி முதல்நிலையிலேயே தோல்வியடைந்தாலும் குறிப்பிட்ட சிலர் அசாத்தியமான படங்களையும் உருவாக்கியிருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில இயக்குனர்கள் இத்துறையில் தொடர்ந்து திரைப்படங்களை எடுத்து நவீனச் சூழலுக்கு வலிமை சேர்த்து விடுகின்றனர்.இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் இவ்வளவு தீவிரமாக இத்துறையில் மற்றவர்கள் இயங்குகிறார்களா என்பது ஆச்சர்யமே. இயல்பாகவே, நமக்கிருக்கும் தன்னுணர்வும், பிறகாரியங்களின் மீதான அதீதமும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தின் முக்கியப் பயன்பாடுகளான, குறும்படம், ஆவணப்படங்கள் மற்றும் இதர வகையான செய்திப்படங்களும் நாளைய வரலாற்றை தீர்மானிக்கக் கூடிய முக்கிய சக்திகளாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.அகசுதந்திரம் அதிகமுள்ளவர்கள் ஆளுமைமிக்க கலைஞர்களாக உருவெடுப்பதுபோல் அகவெழுச்சியும் உந்துதலும் உள்ள ஒரு சமூகம் பிற சமூகத்திலிருந்து தன்னை மேலும் முன்னெடுத்துச் செல்லும். ஒரு சமூகத்தின் அக எழுச்சி அதன் கலைகளை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. காலம் தோறும் கலையின் முகம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாறிவரும் சூழ்நிலையில் அந்த மாறுதல்களை அச்சமூகம் எவ்வளவு தூரம் உள்வாங்கி தங்களை வெளிப்படுத்துவதைப் பொறுத்து அச்சமூகம் தன்னை பின்னடைவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறது. உலகம் முழுக்க ஒரு சர்க்கியூட்டிற்குள் கொண்டு வர முயலும் இன்றைய எலக்ட்ரானிக் யுகம் கலையுலகத்திற்கு பரிசளித்திருக்கும் கையடக்க டிஜிட்டல் கேமராக்களின் பயன்பாடுதான் நாளைய சமூகத்தின் அக எழுச்சியை தீர்மானிக்கும் புதிய சக்திகள். இதுபோன்ற காலத்தின் சமிக்கைகளை முன்கூட்டியே அறியாத நுண்ணறிவற்ற அரசு எந்திரமும் ஊடகங்களும் அச்சமூகத்தை பெரும் அவலத்திற்கு தயார் படுத்துகின்றன.இத்தகைய சூழலில் வெளியாகியிருக்கும் கவிஞர் அய்யப்பமாதவனின் ‘இன்று’ என்ற கவிதையை முன்வைத்து முழுவதும் படிமங்களின் தொகுப்பாக கொண்டுவரப்பட்டுள்ள இக்கவிதை சித்திரத்திற்கு கவிதையின் பின்னணியே போதுமானதாக இருக்கிறபோது பின்னணி இசை படைப்பின் ஓர்மையை தேவையில்லாமல் சிதறடிக்கிறது. எந்த சப்தமும் இல்லாமல் வெறும் காட்சி படிமங்களுக்குப்பின் கவிதையை வாசிக்கும் குரல் மட்டுமே ஒலித்திருக்குமாயின் இன்னும் தன்னை முழுமையான படைப்பாக இக்கவிதை சித்திரம் உருவாகியிருக்ககூடும். மேலும் கவிதைகளில் சொற்கள் ஒரு வாசகனுக்கு பல் அர்த்த சாத்தியபாடுகளை முன்வைக்கிறது. ஆனால் காட்சி வடிவத்தில் படைப்பாளியின் கற்பனை முழுவதும் திட்டமிட்ட வடிவத்திற்குள் சிக்கிக் கொள்வதால் கவித்துவம் என்பது இருவேறு காட்சிகளை ஒன்றிணைக்கும் போதும் அல்லது ஒட்டு மொத்த காட்சிகள் தரும் ஒருமையின் போது மட்டுமே சாத்தியமான தாகப்படுகிறது. காற்றில் ஆடும் கிளிப்புகள், ஓவியங்கள், மலர்கள், விரல்களின் நிழல்கள்,வாகனங்கள் விரையும் நகர மேம்பாலம் என வெவ்வேறு படிமங்களில் மூன்று நிமிட காட்சியில் நாம் மறந்து போன ஒரு கனவை நமது ஆழ்மனத்திலிருந்து மீண்டும் நனவு மனநிலைக்கு கொண்டு வருகிறது.நகரத்தின் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு கவிமனத்தின் சிதிலத்தை மலர்கள் மற்றும் தீயினை குறியீடாக பயன்படுத்தி, இக்கவிதைக்கான காட்சிகளை காட்சியியல் படிமங்களாக உருவாக்கியுள்ள இயக்குனர் பாண்டியராஜனும் ஒளிப்பதிவாளர் செழியனும் பாராட்டுக்குரியவர்கள். 

January 17, 2009

அன்பான என் நெஞ்சனைய வாசகர்களுக்கு, இந்த எனது கூட்ஸ் வண்டி இன்று முதல் இந்த தடத்தில் தன் பயணத்தை துவங்க இருக்கிறது.இதில் சரக்குகளின் விசேஷம் குறித்து இப்போதைக்கு என்னால் எதுவும் கூறமுடியாது.இதை எழுதுவதற்கு காரணமே எழுதுவதைதவிர வேறு ஒன்றுக்கும் இல்லை.அசந்தர்ப்பமாக வேணும் என் தலைமேல் ஒரு இலை விழுந்துவிடாதா என்ற ஏக்கமும் உள்ளூர தன்னை உயிர்ப்பித்துக்க்கொண்டிருக்கிறது.ஒரு கவிதை எழுதுபவனின் மனோநிலையுடன் தான் இந்தபயணம் இப்போது பிளாட்பாரத்தை கடந்து தடதடக்கதுவங்கியிருக்கிறது.ஒரு கதை எழுதுபவனாக,இலக்க்கியவாதியாக எப்போதுமே நான் போத்னைகளை வெறுப்பவனாக இருக்கிறேன்.யாருக்கும் தத்துவ பிச்சைகளை இடும் அபிப்ராயமும் எனக்கில்லை. கைகள் இரண்டால் தண்ணீரை விலக்கி ஆழத்தில் பயணிப்பது போல மனதை மேலும் மேலுமாக விரித்தபடி நீந்திக்கொண்டிருக்கும் இந்த எனது பயணம் முற்று முழுக்க அகவயமானது.அவ்வப்போது உங்களுக்காக நான் எடுத்துப்போடும் சிப்பிகளில் முத்துக்கள் இருந்துவிட்டால் கொஞ்சம் மன்னியுங்கள்.நானும் அப்போது அதிர்ஷ்டம் நிறைந்தவனாக நினைத்துக்கொள்கிறேன்

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...