July 3, 2021

என்னை மாற்றிய புத்தகம் -இல்லூஷன்ஸ் – ஆங்கில நாவல் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் -- அஜயன் பாலா

 

 

 

என் வாழ்க்கையில் எத்தனையோ நூல்கள் என்னை நெகிழ்த்தியிருந்தாலும் ஒரு புத்தகம் அதிசயம் போல என் வாழ்க்கையை  மாற்றியமைத்தது . வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியத்தை அது எனக்கு கற்றுத்தந்தது.

இன்றுவரையிலான என் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கான சாவியை அந்த புத்தகத்தில் தான் மனதால் கண்டுபிடித்தேன்.  அந்த ஆங்கில நூலின் பெயர்  இல்லூஷன்.  எழுதியவர் ரிச்சர்ட் பாக். 

எப்போதும் பொருளை நோக்கி திட்டமிட்டு வாழும் இந்த மூக்கணாங்கயிறு வாழ்க்கை எவ்வளவு போலித்தனமானது என்பதைச் சொல்லிக்கொடுத்த நூல் அது மேலும் இந்த நூல் எனக்கு வந்து சேர்ந்ததே ஒரு கதை  இருபது  வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சென்னை திவுத்திடலில் இருக்கும் சிற்றரங்கம் என்னும் இடத்தில் நாடகம் ஒன்றை பார்க்க நண்பர் எழுத்தாளர் கோணங்கியின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன் . அன்று இரவு அந்த நாடகத்தை நடத்திய அண்ணாமலை எனும் நண்பர் வீட்டில் இருவரும் தங்கினோம் . அப்போது கோணங்கி இந்த இல்லூஷன் நாவலை பார்த்துவிட்டார் . கேட்டால் படிக்க தரமாட்டார்கள் என்றெண்னி அந்த நூலை என் பைக்குள் சட்டென போட்டு அப்புறம் வாங்க்கொள்கிறேன் என்றார்.  இருவரும் மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு அப்போது பழவந்தாங்கலில் இருந்த என் வீட்டுக்கு வந்த  போது சட்டென கோணங்கி  பயணத் திட்டத்தை மாற்றி வழியில் பேருந்தில் இறங்கி கையசைத்து போய்விட்டார் . வீட்டுக்கு வந்தபின்  எதேச்சையாக பையை திறக்க  இந்த நூல் . இல்லூஷ்ன் இருந்தது . அதுவரை பெரிதக ஆங்கில வாசிப்பு இல்லாவிட்டாலும்  முதல்முறையாக  அந்த நூலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன் பிற்பாடு ஐந்து வருடங்களுக்கு பின் என் வாழ்க்கையை  அது திருப்பி விட காரணமாக அமைந்தேவிட்டது . 

நூலின் ஆசிரியர் ரிச்சர்ட் பாஹ் ஒரு விமான ஓட்டி . அவரோடு பயணிக்கும் டொனால்டு எனும் சக விமான ஓட்டிக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலும் அதையொட்டி நடக்கும் அதிசயம் போல சம்பவங்களும் தான் கதை. ஒரு சுயசரிதம் போல புதுமையான வடிவத்திலான நாவல் இது  

இந்த நாவலின் ஓரிடத்தில்  கதை சொல்லி நாயகனிடம்  அவரது நண்பர் டொனால்டு சொல்லுவார் ….நமக்கிருக்கும் பிரச்னைக்கெல்லாம் காரணமே நமது தேவைதான் . . அதுதான் நம்மை அலைக்கழிக்கிறது.  ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையை உருவாக்குகிறது .  இதிலிருந்து  தப்பிக்க ஒரே வழி எல்லா ஓட்டத்தையும் நிறுத்தி விடுங்கள்  கனவுகளை ஆசையை நிர்பந்ததை ஒழித்து விடுதலையாகுங்கள் . மனதின் ஆழத்தில் ஒரு சக்தி பிறக்கும் . அதில் திளைத்துக்கொள்ளுங்கள்  அதன் பின் வாழ்க்கையில் நீங்கள் மனதில் ஒன்று நினைத்தால் அது அதிசயம் போல நடக்கும் என சொல்லுவார் . நாவலின் மையப்பகுதியே இதுதான் .

 அது போல நாயகன் ரிச்சர்டும்  செய்தபிறகு இருவரும் ஒரு உணவு விடுதிக்கு சென்று அமர்வார்கள்  ஏதோ ஒரு உணவை  ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கும் போது  நாவலாசிரியர்  டொனால்டிடம் நீங்கள் சொல்வது போல செய்துவிட்டேன்  மனதில் ஒளியை கண்டுபிடிக்க முடிகிறது . ஆனாலும் நான் நினைப்பது எல்லா,ம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்பார் . அப்போது டொனால்டு உங்களுக்கு தெரிந்த பூ எதையாவது மனதில் நினைத்து கண்ணை மூடுங்கள்  கண் திறக்கும் போது அதை   பார்க்கமுடியும்  என்பார். ரிச்சர்டும் அந்த இடத்தில் தோன்ற வாய்ப்பே இல்லாத ஒரு பூவை  மனதில் நினைத்துக்கொண்டு கண்ணை மூடி அமர்வார் . கண்னை திறக்கும் போது அவர் மனதில் நினைத்த அதே பூ கண்முன் .   உணவு மேசையில் அவர்கள் சற்றுமுன் ஆர்டர் செய்த உணவின் மேல் அழகுக்காக பொருத்தப்பட்டிருக்கும்

பிற்பாடு இந்தக்காட்சி பல ஆங்கிலபடங்களில் தமிழ் படத்திலும்  காட்சிப் படுத்தப்ப்ட்டது வேறு விஷயம் . இந்த கதையில் வரும் இது போன்ற சம்பவம் நிஜத்தில் நடக்குமா இல்லையா என்ற கேள்விகளை  விட்டுவிட்டு வெறுமனே கதையாக வாசிக்கும் போது இந்த காட்சி என் வாழ்க்கையின் பல நெருக்கடிகளுக்கு தீர்வாக அமைந்தது

திரைப்பட இயக்குனராக ஆகும் கனவோடு சில படங்களில் உதவி இயக்குனராக் பணிசெய்து விட்டு  இயக்குனராகும் வாய்ப்பு தேடி அலைந்து பல வாய்ப்புகள் நெருங்கி வந்து கைதவறிப் போன பின் மிகவும் மனக்கிலேசத்தில் இருந்த போது  இந்த நாவல் தான் எனக்கு கைகொடுத்தது .  மன நெருக்கடி மிகுந்த ஒரு நாளில் இயக்குனராகும் கனவை விட்டுவிடுவது நடக்கும் போது நடக்கட்டும் என விட்டு விட்டேன் . மனம் அமைதியானது ஆனால் அப்போதுகூட நான் எழுத்தாளானாவேன் என நினைக்கவில்லை .ஆனல் வாழ்க்கையின் பலவேறு காரணிகள் என்னை அலைக்கழித்து இன்று எழுத்தாளனாக அடையாளம் பெற்றுள்ளேன் . ஒரு வேளை அந்த நூலை நான் படிக்காஅவிட்டால் நான் இதைவிடவும் மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கலாம்.  ஆனாலும்  என் அப்போதையை மன உளைச்சலுக்கு அந்த நூலின் தத்துவம் தான் என்னைக்



காப்பாற்றியது .


உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...