July 31, 2016

சினிமா இயக்குனர்களுக்கான வழித்துணை கையேடு ; விக்னேஷ்வரனாகிய நான் ,நூல் விமர்சனம் :


நூல் விமர்சனம் :


விக்னேஷ்வரனாகிய நான்   ஆசிரியர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்  

        
   சினிமா பற்றி தமிழில்  வருடம் தோறும் பல புத்தகங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.  ஆனால் கோடம்பாக்கத்தை புரிந்து கொள்ள எந்த புத்தகத்திலும் சாவிகள் இல்லை. குறிப்பாக உதவி இயக்குனர் காலத்திலும் இயக்குனருக்கான முயற்சியின் போதும் படப்பிடிப்பு  தளங்களிலும் உளவியல் சார்ந்தும்  நடைமுறை பிரச்சனை சார்ந்தும்  பல சிக்கல்களை   ஒருவன் எதிர்கொள்ளகூடும்.   பாக்யராஜ் அவர்களின் வாங்க சினிமாவை பற்றி பேசலாம் எனும் ஒரு புத்தகம் தான்.  அதுவும் கூட திரைக்கதை பற்றியே பெரிதும் பேசியது. இந்நிலையில்  உதவி இயக்குனர்களுக்கு ஒரு பைபிள் போல வந்திருக்கும் வழி காட்டி தான் இயக்குனர்.ஏ.வெங்கடேஷ் அவர்கள் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக வந்திருக்கும் விக்னேஷ்வரனாகிய நான் எனும் புத்தகம்.

               ஏ .வெங்கடேஷ் ஒரு கமர்ஷியல் இயக்குனர்  அவரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என உலக சினிமா மேதைகள் சிலர் நினைக்கலாம்.   அவர்கள் மட்டுமல்ல வாழ்க்கை எனும் போர்களத்தில் நின்று வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கற்க பல விஷயங்கள் இருக்கிறது.

              ஹாலிவுட்டில்   studio darlings  என இயக்குனர்கள் சிலரை வகைப்படுத்துவார்கள் . கோடம்பாக்கத் தமிழில்  தயாரிப்பாளர்களின் காதலி.  இந்த காதலிகள் உள்ளடக்கத்தை விட  உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துபவர்கள். பத்து ரூபாய் காரியத்தை எட்டு ரூபாயில் முடிப்பார்கள் சரியான திட்டமிடல்  கடும் உழைப்பு இரண்டும் இவர்களின் சொத்து. குறித்த காலத்திற்கு முன்பாக படத்தை முடித்து செலவைக் குறைப்பது அவர்கள் அணுகுமுறை . தமிழில் அதற்கு சரியான உதாரணம்  ஏ வெங்கடேஷ் அவர்கள். இவருக்கு  முன்னோடியாக கே எஸ் ரவிக்குமாரை சொல்லாம். இவர்களின் படத்தை போலவே தினசரி வாழ்விலும் எப்போதும் துடிப்போடும் ஆற்றலோடும் இருப்பார்கள் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குமேலாக தொடர்ந்து படங்களை இவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதன் சூட்சுமம்  இதுதான். சினிமா என்பது பல பேருக்கு சோறு போடும் வர்த்தக  இயந்திரம் என்ற கோணத்தில் பார்த்தால் இவர்கள்  இண்டஸ்ட்ரிக்கு பிரம்மாக்கள் . நான் என்னதான் உலக சினிமா பற்றி எழுதினாலும் இந்த தொழில் இயந்திரத்தில் நானும் ஒரு சிறிய ஆணி என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. இவ்வகை யில் இவ்வகை இயக்குனர் மேல் முன்னோடிகளாக மதிப்பும் மரியாதையும் உண்டு. .
        
         ஏ.வெங்கடேஷ் சாருக்கும் எனக்கும்  காமன் பிளாட்பார்ம்  இயக்குனர் கே.ராஜேஷ்வர் அவர்கள். இருவருமே அவருடைய உதவியாளர்கள் . அவர்  பணியாற்றி பத்து வருட இடைவெளிக்கு பின் நான் சேர்கிறேன்.  அவரை முதன் முதலாக சந்தித்ததும் கே.ராஜேஷ்வர் அவர்களின் துறைமுகம் படப்பிடிப்பில் தான் . எனது சினிமா வாழ்க்கை க்கு பிள்ளையார் சுழி போட்ட படம் அது.

ஒருநாள் குஷால் தாஸ் கார்டனில் படப்பிடிப்பு . ஸ்பாட்டில் நான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த போது இயக்குனர் ராஜேஷ்வருடன் கண்ணாடி போட்டு இன் பண்ணியபடி பணிவாக ஒருவர் பேசிக்கொண்டி ருந்தார். அவர்தான் இயக்குனர்  ஏ.வெங்கடேஷ் . ஷங்கர் அசோசியேட் மகா பிரபுன்னு  ஒரு பிரம்மாண்ட படம் பண்ணிக்கிட்ருக்கார், பின்னால் இன்னொரு அசிஸ்டண்ட் என்னிடம் அவசரமாக காதில் ஓதினான். (மகா பிரபு அப்போது மிகபெரிய அளவில் எதிர் பார்ப்பில் இருந்த படம்.)  அந்த ஒரு செகண்ட் தான் அந்த காட்சி . ஆனால் அது மனதில் ஸ்திரமாக ஒட்டிக்கொண்டது. காரணம் இயக்குனர் முன்  மகா பிரபு காட்டிய அலாதி பணிவு, உடல் மொழி.

                அதன் பிறகு காலங்கள் உருண்டன. ஏ.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குனராக இண்டஸ்ட்ரியில் கொடிகட்டி பறக்க துவங்கினார்  , நானும் என் பணியில் ..இப்போது நண்பர் ஒருவர் மூலமாக வெங்கடேஷ் அவர்கள் என்னை அழைக்க அவரை பார்க்க செல்கிறேன். இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 20 படங்கள் இயக்கி பேரெடுத்தவர். ஆனால் இன்றும் நான் முதன் முதலாக பார்த்த அதே பணிவு பதட்டம்  வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பு . நேரடியாக பேச்சை துவக்கினார் “மனிதன் படம் பார்த்தேன் உங்க  டயலாக்ஸ்  பிடிச்சிருந்தது. என்னோட அடுத்த படத்துல உங்க கூட வொர்க் பண்ணலாம்னு நெனக்கிறேன்.”
      எனக்கு தயக்கம் ,“சார் நான் கொஞ்சம் சிரியஸ் ..  நீங்க பக்கா கமர்ஷியல்  எனக்கு பஞ்ச் டயலாக்லாம் எழுத வராது. எதார்த்தமான உரையாடல் தான் என்னோட ஸ்டைல்  

      ”சார்  இந்த படம் கமர்ஷியல்,கொஞ்சம் வெரைட்டி வித்யாசமான த்ரில்லர்..
        உங்களை மாதிரி ஒரு ரைட்டர் இருந்தா ப்ராஜக்ட் நல்லா இருக்கும்னு யோசிக்கறேன். ”
            பின் சுருக்கமாக கதையை சொன்னார். ரொம்ப பிடித்து போனது. ஹிட்ச்காக் பாணீ த்ரில்லர்.  எழுதித்தான் பார்ப்போமே என ஒத்துக்கொண்டேன் . உடனே செக்கை போட்டு அட்வான்ஸ் நீட்டினார். வாழ்க்கை அதை பிடுங்கிக்கொள்ளும் கண்டிஷனில் இருக்க  வாங்கிக்கொண்டு வீடு வந்துவிட்டாலும்  ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.  இதுவரை பணியாற்றியவர்கள் அனைவரும் சமவயதினர் . ஆனால் முதன்முறையாக  வயதிலும் அனுபவத்திலும்  மூத்த ஒருவரிடம் பணியாற்ற போகிறோம் எப்படி  என்பது போல ஒரு தயக்கம். கருத்துகள் வெளிப்ப்டையாக முன் வைப்பது என் வழக்கம் ஏற்றுக்கொள்வாரோ இல்லையோ என்றும் ஒரு அச்சம் .

          சில நாட்கள் கழித்து அவரது இந்த புத்தகம் தயாரான நிலையில் படிக்க கொடுத்தார். இக்கட்டுரைகளை படிக்க துவங்கிய நான் அடடா  இப்படி ஒரு மனிதரிடமா பணியாற்ற போகிறோம் என உள்ளம் துள்ள துவங்கியது.
                அப்படி  அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என உங்களுக்கு கேள்வி எழலாம். வாழ்க்கை இருக்கிறது . வாழ்க்கையை விட சிறந்த பல்கலைகழகம் எதுவும் இருக்கமுடியாது. கிட்ட்த்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றிகளையும் தோல்விகளையும் ரோலர் ஸ்கோலர் போல மாறி மாறி சந்தித்த அவரது அனுபவங்களுக்கு பின்னால் இருக்கும் வலியும் அழுகையும் கோபமும் புன்னகையும் மகிழ்ச்சியும் களிப்பும்  தான் இந்த புத்தகம் . 

           இதில் மொத்தம் 31  பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சனை, அதனால் உணடான அழுத்தம் அதை தீர்க்க அவர் போராடிய விதம் என சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் விவரிக்கிறார்.

          சிறுவயது சூழல் இளமைக்கால வறுமை. படித்து முடித்து வேலை தேடும் படலம், வாய்ப்பு தேடி கோடம்பாக்கம்  வீதிகளில் படிகளாய் ஏறிய காலம் என ஒவ்வொரு காலத்திலும் தான் பெற்ற அறிவை கற்றுக்கொண்ட பண்புகளை   நம்மோடு அழகாக கடத்திவிடுகிறார்.
             இவற்றை வரிசையாக சொல்லியிருந்தால் கூட புலம்பலாக இருந்திருக்கும் . போரடித்திருக்கும் . புத்திசாலித்தனமாக நடைமுறை வாழ்க்கையில் துவங்கி ஷங்கருடான ஜென்டில் மேன் அனுபவங்களை சொல்லி போகிற போக்கில் தன் வலிகளையும் இதயத்தில் சுருக்கென குத்தி போகிறார்.

            ஒரு பகுதியில் படிப்பு முடித்து குடும்பத்தை காப்பற்ற பஸ் ஸ்டாண்டில் தள்ளுவண்டியில் கூவி கூவி ஜூஸ் விற்கிறார், சட்டென அவர் குரல் கம்முகிறது அவர்முன்  முன்னாள் காதலி அப்பா அம்மா ஆகியோர் .அவமானம் ஒருபக்கம்  ஆனாலும்  தொடர்ந்து கூவுகிறார். அவர்களையும் வாங்கி பருகசொல்லி கூவுகிறார். அங்கிருந்து அந்த பெண்னை முதன்முதலாக பார்த்த அனுபவம் விரிகிறது. காதல் கதையானாலும் அதில்  நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள ஒரு அழுத்தமான வாழ்க்கை பாடத்தை நமக்கு விட்டு செல்கிறார்.

           ஜென்டில் மேன் படப்பிடிப்பு , முழுதுமாய் முடிய இன்னும் நான்கே நாட்கள் தான் . இந்நிலையில் கேம்ரா மேன் ஜீவாவுக்கும் இயகுனர் ஷங்கருக்கும் சட்டென முட்டிக்கொள்கிறது. இனி ஜீவா வேண்டாம் என ஷங்கர் முடிவெடுக்கிறார். ஜீவாவும் இனி இந்த படமே வேணாம் என முடிவுக்கு வருகிறார். அசோசியெட்டாக அப்படத்தில் பணிபுரியும் வெங்கடேஷ்  சட்டென ஷங்கரிடம் ஒரு வார்த்தை சொல்கிறார். நின்ற படப்பிடிப்பு மீண்டும் இயங்குகிறது. பிரம்மாண்டமான வெற்றி பெற்று தொடர்ந்து அந்த கூட்டணி பல வெற்றி படங்களையும் படைத்தது வரலாறு.
            அப்படி அவர் சொன்ன வார்த்தை என்னவாக இருக்கும் யோசித்து பாருங்கள்.இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மிளகாய் வெடி நம்மை அசரவைக்கிறது. அதே போல எழுத்தும் அத்தனை செறிவு  அத்தனை  துல்லியம் .சொல்ல வந்த விஷயத்தை  நறுக்கென சொல்லுகிறார். பல நாளா பத்திரிக்கையில் டெஸ்க் வொர்க் அனுபவஸ்தர்களுக்கு கூட வாய்க்காத ஒரு கச்சிதம் ஒவ்வொரு கட்டுரையிலும் நம்மை புத்தகத்தை கையை விட்டு இறங்க விடாமல் கட்டிப்போடுகிறது .

          இந்த புத்தகத்திற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் வசந்த பாலன் இருவரும்  எழுதியிருக்கும் முன்னுரைகள் புத்தகத்திற்கு கூடுதல் மதிப்பை உண்டாக்குகிறது,பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற அனுபவ கட்டுரைகள் இன்னும் ஷங்கர் மணிரத்னம்  போன்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள  ஆவலை உண்டாக்குகிறது இப்புத்தகம்.
.

புத்தகத்தை ஆன்லைனில் பெற       www.discoverybookpalace.com    அணுகவும். 

July 27, 2016

கைக்கூப்பு., பணிவு.,விடையாற்றி ,வழியனுப்பு..ஞானக்கூத்தன் அஞ்சலி . ;





ஞானக்கூததன் நவீன கவிதைக்குள் மரபை இறுக்கி பிடித்தவ்ர்
அவர் அணிந்திருக்கும் கண்னாடி கூட அவர் மரபின் செறிவான் குருத்து என்பதை சொல்லும் பற்றாகுறைக்கு ஜிப்பா வேறு . இலக்கியத்துள் அப்போதுதான் ஜீன்ஸ் பேண்ட் நுழைய ஆரமப காலம். ஆனாலும் ஜிப்பா ஆசாமிகள் எண்ணிக்கையே அதிகமிருந்தது. அவர்களிடம் நெருங்கவே முடியாது . இப்படியாகத்தான் ஞானக்கூத்தன் ஜிப்பா இலக்கியவாதியாக எனக்கு அறிமுமானார் .

இப்படி மரபான் ஆசாமியாக இருந்தாலும் கவிதைக்குள் ஒரு புதிய வெளியை புதிய ஜன்னலை காண்பிப்பவராகவும்  தமிழ் நவீன்  இலக்கியத்தின் அழுத்த்மான  அடையாளங்களூல் ஒருவராகவும் விளங்கினார். இந்த இரண்டு எல்லைகள் தான்  ஞானக்கூத்தன் கவிதைகளும் .
. வசன கவிதையில்  பாரதி புதுமை பித்தனுக்கு பிறகு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் . இருண்மை இறுக்கம் மிகுந்த நகுலன் பிரமிளுக்கு பிறகு எளிமையான வரிகளில் நவீன தமிழ் இலக்கியத்தை கவிதை மூலமாக உயரத்துக்கு கொண்டு சென்றவர்.  .அன்று வேறு கிழமை , சூரியனுக்குப் பின் பக்கம் , கடற்கரையில் சில மரங்கள். மூன்று தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கசடதபற காலத்தில் அவர் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது..பாடைக்கு கீழே  தூக்கிச்செல்லும் கால்களுக்கு நடுவே சிக்கி உதைபடும் நாய் போன்ற  வலுவான காடசி படிமங்கள் அவரது பலம்.  பல வருடங்களாக அவரை கூட்டத்தில் சந்தித்த போதும் நெருங்கி பழகியதில்லை . 2003ல் சாகிதய் அகாதமி சார்பில் காதி பவனில் பாலச்சந்நிரன் சுள்ளிக்காடு பங்கேற்ற நிகழ்வில் வெங்கட் சுவாமிநாதன்தான்  என்னை  ஞானக்கூத்தனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.  அச்சமயம் ஆங்கில தேசிய வார ஏடான வீக் இந்தியாவின் சிறந்த வளரும் எழுத்தாளர்கள் 20 பேர்களில் என்னையும் ஓருவராக தேர்வு செய்து புகைப்படத்துடன் சிறு கட்டுரையுமா வெளியிட்டிருந்தது.  அதைச்சொல்லி பின்னால பெரியாளாவப்போறார்னு வீக்லயே சொல்லிட்டான்  இப்பவே அறிமுகம்  செஞ்சிக்கோங்க  என நக்கலாக  கூற அதன் பிறகு ஞானக்கூத்தனும் என்னை விசாரித்து அறிந்து கொண்டு பிறகு காணும் போதெல்லாம் சினிமா பணிகள் குறித்து விசாரிப்பார். பாரதிருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில்  பத்து வருடங்களுக்கு முன் அவருக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்வில் ஆற்றிய ஏற்புரை நெடு நாள் என் நினைவில் நின்றது. சங்கம் என்ற பெயரில் நண்பர்களுடன் கேர்ந்து இலக்கியகூட்டங்களை அய்யப்ப மாதவனின் கோடம்பாக்கஸ்டுடியாவில்  நடத்திக்கொண்டிருந்தோம். அப்போது பெண் கவிகள் அதிகமாய் எழுத துவங்கிய நேரம். ஏழு பெண்கவிஞர்களின் நால்களுக்கான விமர்சனகூட்டத்திற்கு தலைமை ஏற்க அழைத்திருந்தேன் வந்து சிறப்புரை  ஆற்றினார். பல வருடங்களுக்கு பிறகு  கடைசியாக இந்த புத்தககண்காட்சியில் விருட்சம் அரங்கில் பார்த்தபோது சினிமா வாழ்க்கை குறித்து விசாரித்தார்.. தமிழ்×சமஸ்கிருதம் சார்ந்து அவர் நிலைப்பாடுகள் மேல் பல விமர்சனங்கள் உண்டு .. காலத்தின் சாட்சியாக கீழ்வெண்மணி ஆகிய கவிதைகளும் எழுதியவர் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.
இன்றைய  வெளிப்படை கவிதைகளின் முன்னாடி அவர். அன்னாருக்கு  கைக்கூப்பு., பணிவு.,விடையாற்றி ,வழியனுப்பு... கீழே அவரது புகழ் பெற்ற கீழ் வெண்மணி கவிதை.

கீழ்வெண்மணி

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின

புகையோடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்

குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்

இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க

_ ஞானக்கூத்தன்

July 18, 2016

ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது -திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை

கண்டராதித்தனின் “ திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை
 -அஜயன் பாலா

தமிழ் கவிதைகள்  இன்று  ஒரு  மிகப்பெரிய வெற்றிடத்துக்குள் வந்து மூச்சு முட்டி நிற்கின்றன .இந்த வெற்றிடம்  தற்காலிகமானதுதான் . சிறுகதை போலோ, நாவல் போலோ, கவிதைக்கு மிகப்பெரிய இடைவெளிகள் தமிழ் இலக்கிய சூழலில் எப்போதுமே உண்டானதில்லை.மேலும் அரைகவிகள் , காசு கவிகள், துதிபாடிகள் கவிஞர் என்ற பேரில் எல்லா காலத்திலும் தமிழகத்தில்  நிறைந்து காணப்படுகின்றனர். தமிழகத்தின் அதிகமாக விற்பனையாகும் இதழ் முதல், கடைக்கோடி  இதழ் வரை கவிதை இல்லாமல் பிரசுரமாவதை அச்சு இயந்திரமே  விரும்புவதில்லை . அந்த அளவுக்கு   கவிதைகள்  அதிகமாக எழுதப்படுகின்றன . மற்ற மொழிகளில் இது போல கவிதைகள் எழுதப்படுகின்றனவா என்று  தெரியவில்லை.

இப்படியான சூழலில் சிறந்த கவிதைகள் எனும் ஒரு இடத்தை ஒரு தொகுப்பு  பெறுவது சவாலான  விஷயமே. திருச்சாழல் தொகுப்பு  வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம்  ஆகப்போகும் சூழலில்  இது போன்ற  விமர்சன கூட்டங்கள் கவிதைக்கும் கவிஞனுக்கும்  பெருமை சேர்க்கின்றன. இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த  தென் திசை இலக்கிய வட்ட அமைப்பிற்கும்  அமைப்பாளர்களுக்கும் ,நண்பர்  அதீதன் சுரேன் மற்றும் தேவிமகன் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

ழ கவிதை களுக்குபிறகு நீண்ட இடைவெளியுடன் கவிதயுலகம் விரக் விட்டு எண்ணக்கூடிய கவினர்களால் மட்டுமே இயங்கி வந்த நிலையில்
2000க்குப்பின் கவிதை உலகம் பெண் கவிஞர்கள் மூலமாக மிகப்பெரிய உடைப்பை உண்டாக்கியது. இத்னை   தொடர்ந்து 2004க்குப்பின் புதிய அலையாக ஆண்கவிஞர்களும் புற்றீசல் போல படையெடுத்தனர். புது எழுத்து காலம் என்று கூட சொல்லுமளவிற்கு அந்த காலத்தின் கவிஞர்களுக்கு முழுவதுமாக மேடை கொடுத்து, அந்த பாய்ச்சலுக்கு வழி வகை செய்தார் மனோன் மணி.அந்த புது எழுத்து காலத்தில் ஸ்ரீநேசன், ராணி திலக், பழனி வேல் ஆகியோருடன் அறிமுகமானவர் கண்டராதித்தன்.

இந்த அலையில் இவர்களுக்கு சற்று முன்னதாக லஷ்மி மணிவண்ணன் யவனிகாஸ்ரீராம் சங்கர ராம சுப்ரமணியன் . ஆகியோர் வந்திருந்தாலும்,

அதே போல இந்த அலையின் பிந்திய ஆளாக பிரன்சிஸ் கிருபா, அய்யப்ப மாதவன் ஆகியோர் இணைந்திருந்தாலும்,

இவர்கள் அனைவருமே இக்காலத்தின் சிறந்த கவிகளாக அவரவர் தொகுப்பு வரும் வெவ்வேறு காலங்களில்  கால இடைவெளிகளில் அறியப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து இசை இளங்கோ கிருஷ்ணன், செல்மா பிரியதர்ஷன்,  லிபி ஆரண்யா,  சபரி நாதன் ,வெயில் ரியாஸ் குரானா,  நரன் ,கதிர்பாரதி  ,  போகன் சங்கர் போன்ற கவிஞர்கள் இச்சரடை தொடர்ந்து இன்றுவரை எழுதி வந்தாலும்,    .            
இவர்களுள் கண்டராதித்தன்  கவிதைகள் இன்று வரை மிகுந்த தனித்தன்மை  கொண்டவையாக  இருக்கின்றன என்பது அதன் சிறப்பு.

குறிப்பாகவே அவரது முந்தைய இரு தொகுப்புகளான 2001ல் வெளியான கண்டராதித்தன் கவிதைகள் மற்றும் 2007ல் வெளியான சீதமண்டலம், இவை இரண்டின் மூலமாக மட்டுமே அவருக்கு இந்த பெயர் கிட்டியிருப்பதை மொழிசார் கவியுலகு நன்கறியும்.  இதன் மூலம் கண்டராதித்தன்  மட்டுமே சிறந்த கவி என்பதான அர்த்தம் இல்லை, அவரைக்காட்டிலும்  வேறு  சிலருக்கும் காலத்தின்  அரிய சிம்மாசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கட்டுரை கண்டராதித்தன் கவிதைகளின் ஈரப்பசையை மட்டுமே அளவெடுக்கவிருப்பதால் அவருடைய அந்த சிம்மாசனத்துக்கும் மூன்றாவது தொகுப்பான திருச்சாழலுக்கும்   பொருத்தம் உள்ளதா, இல்லை சிம்மாசனத்துக்கு  முட்டுகிட்டு கொடுக்கவேணுமா,  இல்லை சிம்மாசனத்தையே அப்புறப்படுத்திவிடலாமா, என்பதை பரிசோதித்து பார்ப்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

 அவருடைய முந்தைய இரு தொகுப்பின் கவிதையாக்கத்தை லேசாக ஒரு எட்டு பார்த்துவிட்டு இன்றைய கவிதைகளில் என்னவாக உருமாற்றம் அடைந்துள்ளார் என்பதை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

2000ல் வெளியான முதல் தொகுப்பான கண்டராதித்தன் கவிதையில் அவரிடம்  கவித்துவமாய் சொல்வதற்கு பாடு பொருட்கள் அல்லது இறைச்சி நிறையவே இருந்தது. கீழ் காணும் பூ பற்றிய கவிதையில் ஒரு பூ நம்மை வந்தடையும் விதத்தை பட்டியலிடுவதை  பார்ப்போம்.


கவிதை

           //ஒரு நீதியை நமக்கு சொல்வது போல்
பூக்கள் பூக்கின்றன

ஒரேயொரு பூக்கூந்தல் இந்த வீதி
முழுவதையும் அழகாக்கிவிடுகிறது

பூக்களின் வழி பெண்கள் மேலும்
சுந்தரமாகிறார்கள்

உற்சவ மூர்த்தி  தண்டை மாலைகளுடன்
அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்

பூப்பல்லக்கில் அசைந்து போகிறது
அண்ணாரது பூத உடல்
நமக்கென  நீதிகளை
பூக்கின்றன செடிகள்  அதனால்
நமக்கு கிடைக்கிறது ஒன்றிரண்டு
பூக்கள்
            
பூ வெவ்வேறு விதமாக நம்மை வந்தடைவதை இக்கவிதை  காட்சி படுத்துதலின் மூலம் முழுமையான கவிதையாக  நம்மை வந்தடைகிறது 
இந்த குணம் அவரது அடுத்த தொகுப்பான சீத மண்டலத்தில் பெரும்பாய்ச்சலை சந்திக்கிறது. கவிதை என்பது இறைச்சி பொருளை தாண்டி மொழியின் சாத்தியத்தை அல்லது கவிதையிலிருந்து கவிதையை லாவகமாக வெளியேற்றும் தன்மையுடையதாக மாற்றிக்கொள்கிறார்.  சீத மண்டலத்தின் எந்த  கவிதைக்கும் சாவி இல்லை. இறுக்கமான சொற்களை தைத்து அதை விந்தையான வடிவத்தில் தைத்து இறைச்சியை கண்டடைய முடியமல் வாசகனை திணறவைத்து  வெளியேற்றும் அந்த வித்தையை, மிக தேர்ந்த தொழில் நுட்பத்துடன்  செய்திருந்தார்.  அவரது சமகாலத்தில் வேறு யாருக்கும் இத்தகைய வசீகர இறுக்கம் வாய்க்கவில்லை, இவரது சம காலத்தவர்களான ஸ்ரீநேசன் , ஷங்கர் யவனிக்கா ஆகியோர் வாசிப்பின் பேரின்பத்தை முன்வைத்த கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தபோது முற்றிலும் புதிர்த்தன்மையான  சொற்கட்டுமானத்தின் மூலம் ஒரு வசீகரத்தை தக்கவைத்துக்கொண்ட கவிதைகளாக  காணப்பட்டது   சீதமண்டலத்தின்  சிறப்பு .

அவரது மொழியில், திராவிட திரைப்பட பணியிலான ஒரு சப்த ஒழுங்கையும் இக்கவிதைகளில் காணமுடியும். ஒருபுறம் சப்தரீதியான அற்றொழுக்காத மொழி ஒழுங்கும் உள்ளிடாக அர்த்தச்சிதைவுமாக இக்கவிதைகளின் வசீகரம்  மிகுந்த தனித்தன்மை கொண்டதாக அமைந்திருந்தது.

உதாரணத்துக்கு சீதமண்டலத்தில் அவரது கவிதை
  தலைப்பு : நீ எழுது

//கள்வர்கள் கபட தாரிகள் பாவிகள்
திரியும்  இருண்ட தெருக்களில்
உனக்கொரு மேசை தயாரிக்கப்பட்டது//

என துவங்கி

//ஆள் அம்பு அரிவாளென ஆயுதங்கள் வடிக்கும்
உலைக்களத்தின் ஓசையை கேட்டோம்
கேடு மிகுந்ததால்
அலறும் பட்சிகளின்
 சப்தத்தை கேட்டோம்
பெண்டிரும் சிசுவும் கதறும்
ஓலத்தையும் கேட்டோம்
அன்பையோ சமாதானத்தையோ
காதலையோ துயரத்தையோ
உன்மூலம் அறிந்து
ஆகாயத்திலிருந்து  எவனும் வந்து
தழுவத்தேவையில்லை தேவடியா மகனே //
( சீத மண்டலம் )

என முடியும் கவிதையின் கேட்டோம் டோம் டோம் என சப்த ஒழுங்கினூடே, கட்டுண்டோம் பொறுத்திருந்தோம் என திராவிட பாரம்பரியத்தின் மொழி ஒழுங்கினூடே, இறுதியில் தேவடியா மகனே என அதிரும் கடைசி வரியின்  முரண் தான் கண்டராதித்தனின் கவிதைகளின் பலம்.

அவரது இந்த மொழி அடுக்குகளின் திராவிட இயக்க வசனங்களின் சாயல்  எனக்கு குறையாக படவில்லை, மாறாக அது அவரது உத்தியாக கவிதைக்குள் தான் உருவாக்க முனையும் சட்டகத்துள்  வரலாற்றினுள்  வாசகனை கழுத்தை பிடித்து அழுத்த உதவும் உபாயமாக அறியமுடிகிறது.மேலும் வரிகளுக்குள்  ஒளிந்திருக்கும் அந்தகாரம் காலத்தின் இருண்ட மடிப்புகளக இருப்பதால் நவீன கவிதையின் சாத்தியத்தை இக்கவிதைகள் ,முழுமையாக வரித்துக்கொள்கின்றன,
கண்டராதித்தனின் கவிதைகளின் சிறப்பே இந்த வரிகளுக்கிடையிலான அந்த காரம் தான்.இந்த காரத்தினுள் நுழைந்து அர்த்தங்களை தேடும் வாசகன், சோழ கோயில்களின் வவ்வால் மண்டிய   குகையில் புதையுண்டவனாகிவிடுவான். இப்படியாக ஒருபுறம் தமிழ் புரணிகத்தை கட்டியெழுப்பும்  வரிகள் இன்னொருபுறம்  தேவடியா மகன் இந்த இரண்டும் சேர்ந்த அவரது குரல் ஒருவகையில் நிலவுடமை சமூகத்தின் மரபை இழக்காத குரல்களாக இருந்தாலும், இன்னொரு புறம் அவற்றின் கட்டுகளிலிருந்து வெளியேற தவிக்கும் நவ கவிஞனின் குரலாகவும் இரண்டு வேறுபட்ட தவனியில் இயக்கம் கொள்கின்றன. சீதமண்டலம் மூலமாக கண்டராதித்தன் பெற்ற இந்த தனித்த அடையாளம் அவரது மூன்றாவது தொகுப்பான திருச்சாழலில் சற்று நீர்த்த வடிவிலேயே காணப்படுகிறது.

 இடைப்பட்ட காலத்தின் புதியகவிகள் மற்றும் முந்தைய தொகுப்பின் மீதான விமர்சனங்கள் அவரையும் வசன கவிதைகள் என அழைக்கப்படும் ப்ளேய்ன் பொயட்ரிக்குள் விழத்தட்டியிருக்கூடும்

 திருச்சாழல் தொகுப்பின் இரண்டாவது கவிதையான  “கடவுள் முட்டாள்களிடம் அனபாயிருக்கிறார் எனும் கவிதையில் இதுவரையில்லாத  புதிய கண்டாராதித்தனை  எளிமையான வசனங்களினூடே பார்க்க முடிகிறது.  இன்று வெறும் துண்டுதுண்டாக மொழி பிடிமானம் இல்லாத நடைமுறை வாழ்க்கையின் சில்லுகளை வார்த்தையாக கோர்ப்பதை கவிதையாக்கத்தின் புதிய தொழில்நுட்பமாக பார்க்கமுடிகிறது. கிட்டத்தட்ட இந்த பாணி எரிசலூட்டும் வகையில் அதன் அழிவை எய்து விட்ட நிலையில்    கண்டராதித்தன் எனக்கும் தவில் வாசிக்க வரும் என நிரூபிக்க முயல்வதை  வெறும் பரிசோதனையாக மட்டும் எடுத்துக்கொள்ளமுடியாது.

இது போன்ற கவி சவால்கள் உயர்ந்த கவிஞனின் கால  தடுமாற்றங்களாகத்தான் கணக்கில் எடுக்க முடியும். இன்னபிற கவிதைகளில் இந்த நேரடி வசன தன்மையில்லாவிட்டாலும்  முந்தைய தொகுப்பின் அடர்த்தியான மொழி திரவ நிலைக்கு இறங்கியுள்ளதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. காலத்தோடு   தன்னை புதுப்பித்துக்கொள்ள முனையும் போது கவிஞன் தன் அடையாளங்களையும் காப்பற்றிக்கொள்ளவேண்டியது  அவசியம். முந்தைய தொகுப்பின் ஒரே சொல்முறை அல்லது பாடுபொருளில்லிருந்து விலகி இத்தொகுப்பில் பல்வேறு முயற்சிகளை கவிஞர் முன்னெடுத்துள்ளார் .  பொதுவாக கண்டரின் கவிதைகளின் தனித்த  பாணி  வியக்கப்பட்ட அளவிற்கு தனியாக சிறந்த கவிதை என எந்த கவிதையும் அடையாளப்படவில்லை . உதாரணத்துக்கு யவனிக்காவின் குறைந்த கூலிக்கு முந்திரிகொட்டை உடைப்பவன். ஸ்ரீநேசனின் நள்ளிரவில் ஏசுகிறிஸ்து . ஷங்கரின்  சிங்கத்துக்கு பல் துலக்குபவன் போன்ற அடையாளமான கவிதைகள் என எதையும்  இவரிடம் சொல்ல முடியாது . ஆனால் இத்தொகுப்பில் பல சிறந்த கவிதைகள் பாணியிலிந்து விலகி எழுதப்பட்டிருக்கின்றன .   சிறந்த கவிதைகள் அடையாளமான கவிதைகள் அவர் எழுதியுள்ளார். குறிப்பாக  ஞானப்பூங்கோதைக்கு  வயது 40, மகளின்  கண்ணீர் , நோய்ப்பிண்டம் , நீண்டகால எதிரிகள் என சிலவற்றை பிரித்து எடுத்து கூற முடியும்
 அவ்வகையில் இந்த போராட்டத்தில்   ஒரு  கவிஞனாக கண்டராதித்தன் வெற்றி பெற்றவராகவே கருதமுடியும்.

தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் ஒன்றாக நோய்ப்பிண்டம் எனும் கவிதை அவரது முந்தைய தொகுப்பின்  பாய்ச்சல்களை பன் மடங்கு கடந்துவிட்டதை உணர முடிகிறது. வழக்காமான பாணியிலிருந்து விலகிய இக்கவிதையின் பாடுபொருள் கவிஞனின் தீவிர அகவுலகம் பற்றி பேசுகிறது. கண்டராதித்தனின் கவிதைகளில் பொதுவாக சுயம் சார்ந்த கவனங்கள்   இருப்பதில்லை .  மனதின் முன் விழும் சாயைகளை பற்றியே அவரது கவிதைகளில் கவலை மிகுந்திருக்கும் அது காதலியாகவோ, நண்பனாகவோ, எதிரியாகவோ அல்லது வழிப்போக்கனாகவோ இருக்கக்கூடும்.  தன் துயரம் துன்பம் எதையும் கவிதைக்குள் இறக்கிவைக்காத கண்டராதித்தனின் இந்த நோய்பிண்டம்  கவிதை மிக மிக நுட்பமான கவிதை எழுதுபவனின் உளவியல் சிக்கலை பாடு பொருளாக்கி கவிதையாகவும் வடிவமைத்திருக்கிறது அதன்முதல் வரியே இவ்விதம் துவங்குகிறது.

//தானொரு மன நோயாளி என்பதையறிந்த கவிஞன்
அதனை முழுமுற்றாக ஏற்கிறான் ,பெருமிதப்படுகிறான் //

எனத்துவங்கி தீவிரமான மன அவஸ்தைகளை கவிதையாக்கி எழுதி செல்கிறது.
இது போல  நண்பனாகிய எனக்கும் வேத புரீஸ்வரனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கும் . திருக்கோலம்  என தலைப்பிட்ட கவிதை பின் சோமன் சாதரணம், மகளின் கண்ணீர் , சஞ்சாரம் சீபத்த ஆகிய கவிதைகளில் கண்டராதித்தனின் சீத மண்டலத்தின் தனித்த அடையாளத்தை அதன் கெட்டித்தன்மையை உணரமுடிந்தது.

மகளின் கண்ணீர் கவிதையில் வழக்கத்துக்கு மாறாக கவிஞர் ஒரு காட்சியை விவரிக்க துவங்குகிறார். தேர்ந்த சினிமா காட்சியைப் போல விரியும் அக்கவிதையில்  இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் மோதிக்கொண்டதை தொடர்ந்து, அதில் ஒருவரான கவிஞனின் முகத்தில் எதிர்பட்டவன் ஓங்கி குத்து விடுகிறான் , இதனால் முகத்தில் ரத்தம் வழிய கவிஞன் நிற்பதை முன்னாள் அமர்ந்திருக்கும் மூன்றுவயது மகள் பார்க்கிறாள். அவன் எதிர்பார்த்தார் போல அவள் அழவில்லை . மகள் அழாத காரணத்தை யோசித்தப்படியே கவிஞன் செல்ல சட்டென மகளின் பிஞ்சு விரல்கள் அவன் காயத்தை தடவுகின்றன . பின் அவள் கண்ணீர் இதயத்தை நனைக்க,
இறுதியாக  என் தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது இது என முடிக்கிறார்.

இது போன்ற சம்பவ விவரிப்பு கவிதைகள் அல்லது கதை சொல்லும் கவிதைகள் அவரிடம் வேறு எதுவுமே இல்லை. இதை வாசிக்கும் போது ஸ்ரீநேசனின் இன்னொரு கவிதை ஞாபகத்தில் வருகிறது. தலைப்பு தெரியவில்லை . அதன் சாரமான சம்பவம்  இப்படியாக துவங்குகிறது.  ரயில் பெட்டியில் பழம் விற்கும் ஒரு பெண்ணை காவலாளி கண்மூடித்தனமாக தாக்குகிறான் . அந்த காட்சியை நமக்கு விவரித்துசெல்லும் கவிஞன் ஸ்டேஷனில் அதை கண்டு பலரும் வேடிக்கை பார்ப்பதை சொல்லி  எல்லோரும் அந்த பெண்ணுக்காக வருத்தப்பட கவிஞன் மட்டும்  தாய் அடிபடும் இந்த காட்சியை பார்க்க நேரும் அவளது மகனின் நிலைப்பற்றி யோசிப்பார். ஒரு கவிதையாக வாசிப்பவனை உலுக்கிவிடக்கூடிய கவிதை இது  ஒப்பீட்டளவில் இரண்டும் சிறந்த கவிதைகளே.  நேசனின் கவிதையில் ஒரு அதிர்ச்சி இருக்கும் ஆனால் அதைக்கடந்து  கண்டரின் கவிதையின் இறுதி வரியான “ தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது  எனும் வரியில் ஒரு காவியத்தன்மையான உணர்ச்சியை கவிஞரால் நம் மனதில் சித்திரமாக உருவாக்க முடிவது, இக்கவிதையின் சிறப்பு . பிக்‌ஷ்னை  தாண்டி  இந்த வரிக்கவிதையாக  தன்னை   நிறுவிக்கொள்ள  உதவுகிறது.

தொகுப்பின் மற்றுமொரு சிறந்த கவிதை  ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது
இக்கவிதையும்  ஒரு அனுபவ விவரிப்பு கவிதைதானென்றாலும் கவிதையின் அடியோட்டமான  ஒரு புனைவு  இதன் கவித்தன்மையை சாத்தியப்படுத்திவிடுகிறது,
தன்னைப்போல ஒரு பெண்ணை உணர்வது  என்பது ஒரு வித்தியாசமான அனுபவம். எனக்கு தெரிந்து உலக சினிமாக்கள் அல்லது கதைகளில் கூட இடம்பெறாத புதிய கற்பனை .

அதே போல சின்ன சின்ன கவிதைகளும் சட்டென  ஈர்த்து விடுகின்றன

//சமயத்தில் பெரும்
அவமானத்தை
ஏற்பதற்கு
குற்றத்தை நீ செய்திருக்க
வேண்டிய   அவசியமில்லை //

எனும் நான்கு வரி கவிதையில் பெரும் வலியும் வேதனையும் உள்ளடங்கியிருக்கின்றன , என் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வே அத்ற்கு சாட்சி . ஒரு பெரிய அவமானத்தை குற்றமே செய்யாமல் தலை குனிந்து ஏற்க வேண்டிய சந்தர்ப்பம்  எனக்கு ஒருமுறை உருவானது.

சென்னையில் நான் குடியேறிய ஆரம்ப காலத்தில் என் அறை நண்பனாக தங்கியிருந்தவன் .. நள்ளிரவில் அடுத்த வீட்டின்  காம்பவுண்ட் ஏறி படுக்கை அறையை ஆர்வம் மிகுதியில்  எட்டிப்பார்த்துவிட . அவர்கள் அதை பார்த்தவுடன் ஓடிவந்து அறையில் படுத்துக்கொண்டான் . பின் அவர்கள் கூட்டமாக வந்து கதவைத்தட்ட என்ன விவரம் என தெரியாமல் எழுந்து கதவை திறந்த எனக்கு அடியும் உதையும் கிடைத்தது. பிறகு விவரம் தெரியவந்தபின் என் அறை நண்பனை காட்டிகொடுக்காமல் நானே பழியை ஏற்றுக்கொண்டேன்.

கண்டராதித்தனின் இக்கவிதை சட்டென என் வாழ்வின் பக்கத்தை அறுத்து என் முன் காண்பிப்பதாக இருந்தது.

தொகுப்பில் கவிதையாக சேர்க்க முடியாத அல்லது ,முழுமையாகத  சொத்தை கவிதைகளும் இருக்கின்றன.  குறிப்பாக சங்கரலிங்கனாரின்  லீனியர் குடி
சாவை தள்ளும் சிறுமி போன்றவை  இக்கவிதை தொகுப்பில் தவிர்த்திருக்க வேண்டியவை.

பொதுவாக கண்டராதித்தன் கவிதைகளை வாசிப்பவர்கள் கவிஞர் எந்த காலத்தில் வாழ்கிறார் என்ற  ஐயமேற்படக்கூடும் ..இன்று கவுரவக்கொலைகளும்  நவீன மயமாக்களின் பாதிப்புகளல்லாமாக கழியும்  ஒரு காலத்தில் கண்டராதித்தனை இவை எதுவுமே தாக்கவில்லையா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. 

கண்டரின் கவிதைகளின் உச்சமான கவிதைகளில் சீத மண்டலம் எனக்கு இப்போதும் முதன்மையாக இருக்கிறது.

என்ற போதிலும் தனித்துவம் குறையாத அவனது கவிமொழி இன்னமும் தொடர மேலும் வளர நண்பனாகவும் ஒரு மொழியின் உபாசகனாகவும் அவன்மேல் கொள்ளைபிரியமே

யவனிகா ஸ்ரீராம் , கண்டராதித்தன் , ஸ்ரீநேசன், ஷங்கர்ராம சுப்ரமணியன் ஆகியோரும் இதர தனித்தன்மை மிக்கவர்களாக  இருந்தாலும்  கவிதைக்குள் செயல்படும் நிலப்பரப்பு மற்றும் சொல் முறை மொழி ஆகியவற்றில் தனித்தன்மையை அவர் தக்கவைத்துக்கொள்கிறார்.  2010க்குப் பிறகான கவிஞர்களில் மற்ற மூவருக்கும் வாரிசுளை நம்மால் கணடெடுக்க முடியும்,
ஆனால் கண்டராதித்தனின்  கவிதா செய்முறை என்பது வாரிசுகளை அண்டவிடாமல் தனித்து நிற்கிறது.



உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...