January 5, 2015

நீர்க்குமிழி வாழ்க்கையில் ஒரு எதிர் நீச்சல்


அஞ்சலி  : இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்



ஒரு முறை ஒரு இணைய இதழ் தமிழ் சினிமாவின் சிறந்த நூறு படங்களை தொகுக்கச் சொன்னபோதுதான் அதுவரை பார்க்காத பாலச்சந்தரின் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தது.
சில கறுப்பு வெள்ளை படங்களை பார்க்கும் போது அவரது படங்கள் நாடக சினிமா என்ற பிம்பம் எனக்குள் உடையத் துவங்கியது அதன்பிறகு அந்த தொடர் நிறுத்தப்பட்டாலும் அந்த வாய்ப்பு இல்லாவிட்டால் நான் பாலச்சந்தரை கடைசி வரை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போயிருக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக மூன்று முடிச்சுவின் முதல் பகுதியில் வரும் இருபது நிமிட காட்சிகள். ரஜினி கமல் ஸ்ரீதேவி ஆகிய மூவரது அறிமுகம் மற்றும் உறவு நிலை வளரும் காட்சிகளில் கதை சொல்லும் முறையில் பிரெஞ்சு நியூ வேவ் தாக்கத்தை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.
பல காட்சிகளில் வசனம் இரண்டாம் நிலையில் நின்று காமிரா கோணங்களும் அசைவும் முதல் நிலையில் நின்று மிஸான்சேன் பாணியில் கதை நகர்த்தப்பட்டிருந்தன. . ரோமன் பொலான்ஸ்கியின் நைப் அண்டர் தி வாட்டர் கதையை தழுவி வேறு மாதிரியாக எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்த போதும், மூன்று பாத்திரங்களுக்கு இவர் தமிழ் பாணியில் மாற்றிக்கொடுத்த விவரணைகள் படத்திற்கு ஒரு தன்னியல்பான தன்மையை உருவாக்கியிருந்தன.
பி எஸ் லோக்நாத்தின் ஒளிப்பதிவில் சென்னை வீடொன்றின் மொட்டை மாடி அறையும் பகல் வெளிச்சம் நிறைந்த காட்சிகளும் நல்ல சினிமாவின் சாத்தியங்களை அதிகமாகவே கொண்டிருந்தன. பிற்பாடு இரண்டாம் பகுதியில் காட்சிகள்  நாடகத்தன்மைக்குள் விழுந்ததால் கதை நகர்த்துதல் இயல்பாக வசனத்தின் கைக்கு மாறிப்போனது

தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை ,அவர்கள் அபூர்வ ராகங்கள் என அவரது சிறந்த கறுப்பு வெள்ளை படங்களை  பார்க்க  அவர் மீதான மதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனால் நான் சினிமா பார்க்க துவங்கிய காலத்தில் அவர்  மேல் அதுவரை எனக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை.
ரஜினியை அறிமுகப்படுத்தியவர் என்ற அடையாளம் மட்டுமே என்னுடைய தலைமுறையில் பெரிதாக இருந்த்து. என்னதான் தண்ணீர் தண்ணீர் ….வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களை அவர் எடுத்துக்கொண்டிருந்தாலும்.. பாரதிராஜா பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோர்  உண்டாக்கிய தாக்கங்களை அந்த இடைப்பட்ட காலங்களில் அவரால்  உருவாக்கவில்லை. அப்போது உண்டான புதிய அலை படங்களோடு அவரால் போட்டியிட முடியவில்லை.  பிற்பாடு சிந்துபைரவி படம் வெளியான போதுதான் அவர் மீண்டும் வெற்றிக்கு பாதைக்கு திரும்ப பயணித்தார். இடைப்பட்ட காலத்தில்தான் அவர் மரோ சரித்ரா ஏக் துஜே கேலியே போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் உயரங்களை தொட்டுக்கொண்டிருந்தார்.
மூன்று முடிச்சை தொடர்ந்து, வரிசையாக அவருடைய அவள் ஒரு தொடர்கதை பார்த்த போது அவர் மீதா மரியாதை பல மடங்கு உயர்ந்தது.
அதற்கு முன்வரை எனக்குள் சினிமா பற்றி சில வரையறைகள் இருந்தன. முக்கியமாக அவை காட்சி பூர்வமாக செயற்கையான நாடகத்தன்மை இல்லாமல் இது போன்ற சில வரையறைகள் உருவாகியிருந்தன.
ஆனால் அவள் ஒரு தொடர்கதையின் பாத்திரங்கள் என்னை உலுக்கி எடுத்தன.
அதற்கு முன் நான் அப்படத்தின் மூலப்படமான  ரித்விக் கட்டக்கின் மேக தக்க தாரா படத்தை இரண்டு முறை பார்த்தவன் என்றாலும் அவள் ஒரு தொடர் கதையில் அவர் காண்பித்த மனிதர்கள் அந்த கறுப்பு வெள்ளை சென்னை அதன்பிறகு பார்த்த தமிழ் சினிமாக்களை விடவும் நூறு மடங்கு வீரியமாகவும் ஆழமாகவும் ஊடுருவி உலுக்கி எடுக்க துவங்கியிருந்தன.
தமிழ் சினிமாவின் பெண் பாத்திரங்களில் சிறந்த படைப்பு எது எனக் கேட்டால் மகேந்திரனின் முள்ளும் மலரும். ஷோபாவுக்கு இணையாக நான் அவள் ஒரு தொடர் கதை கவிதாவைத்தான் சொல்வேன்.
அன்றைய கால கட்டத்தில் சென்னை நகரத்தை உரித்து சினிமாவில் வார்த்த காட்சிகளில் தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு வேலைக்கு போகும் சரசாரி பெண்ணாக சுஜாதா தோன்றிய விதம் அத்தனை உயிர்ப்பு.
கடற்கரையில் பிச்சை எடுக்கும் குருட்டுத்தம்பியை வீட்டில் கண்டிக்கும் காட்சியிலாகட்டும், குடிகார அண்ணன் திருந்திவிட்டதை எண்ணி மகிழும் தருணத்திலாகட்டும், தான் காதலித்த ஒருவனை தன் விதவைத் தங்கை திருமணம் செய்ததை கேள்விப்படும் போதாகட்டும் கவிதா பாத்திரத்தின் மேல் நம்மை மீறிய ஒரு ஈர்ப்பு தவிர்க்க முடியாமல் உருவாகிறது.
 அதையும் தாண்டி பெண் என்பவளின் துயரத்தின் இருண்ட பக்கங்களையெல்லாம் வெளிச்சமிட்டு காட்டி அவளுக்கு என்னன்ன மதிரியான எண்ணங்கள் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை அந்த படம் வெளியாகி முப்பது வருடம் கழித்து சிடியில் பார்க்கும் என்வரை கற்று கொடுக்கும் பணியை இச்சமூகத்துக்கு உருவாக்கி கொடுத்திருப்பதுதான் அந்த படத்தின் தனிச்சிறப்பு.
படத்தில் கவிதாவின் காதலனாக வரும் விஜயக்குமார் இரண்டாவது முறையாக விட்டு போன கண்ணாடியை எடுக்க வரும்போது அவருக்கும் கவிதாவின் விதவைத் தங்கையாக வரும் ஸ்ரீ ப்ரியாவுக்கும் இடையிலான உரையாடலை காட்சி படுத்திய விதம் அவரது இயக்குனர் பாணியின்  உச்சம்
விஜயக்குமார் கேள்விகளுக்கு மறைந்து நின்று கையில் வைத்திருக்கும் கத்திரியின் சத்த்த்தில் பதில் சொல்லும் ஸ்ரீப்ரியா பிற்பாடு தான் விதவை என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சியில்  அடையாளமில்லாதவளாக அவள் தன்னை உணருவதை நிழலாக காண்பித்து விஜயக்குமார் நிழலோடு உரையாடுவதாக காண்பித்திருப்பார்.
திரைக்கதையில் வெறும் வசனமாக இருக்கும் காட்சி இயக்குனரின் சொல் முறையின் காரணமாக நம்முள் கூடுதல் வீரியத்துடன் இடம்.பிடித்து விடுகிறது.
இந்தவகையிலான அவரது பாணி காட்சியமைப்பு அவ்வப்போது சில படங்களில் இடம்பிடித்தாலும் முழு படமும் அவரால் இப்படி செய்ய முடியாது போனது வருத்தமே

யுடிவி தனஞ்செயன் மூலமாக பாலச்சந்தர் அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நான்கு வருடங்களுக்கு முன் வாய்த்தபோது அவரிடம் அவள் ஒரு தொடர்கதை பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டியது. நான் சொல்வதை அவர் ஆச்சர்யத்துடன் கேட்டார். அதற்கு முன்பாக விகடனில் என்னுடைய கட்டுரைகள் வாசித்திருப்பதை கூறிய அவர் உங்களுக்கு அந்த படம் பிடிச்சிருந்ததா என நமப முடியாமல் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு ஆச்சர்யப்பட்டார். ழுபதுக்களின் துவக்கத்தில் சென்னை உள்ளும் புறமுமாக எப்படியிருந்தது என்பதன் ஒரே பதிவு என்றேன்.
உண்மையும் அதுதான். தொழில் சார்ந்த நகர வாழ்க்கை பெருக துவங்க கூட்டுகுடும்பங்கள் அதிகரித்து வந்த அக்காலத்தில் மனித உறவுகளின் அவலம் அந்த திரைப்படத்தில்தான் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சினிமா தாண்டி சமூக ஆவணமாகவும், தமிழ் சினிமாவுக்கு அப்படம் ஒரு சொத்து என கூறினேன்.
அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அக்னி சாட்சி இந்த அ வரிசை படங்கள்தான் என்னை பொறுத்தவரை சமூகத்தை அதிகமாக பாதித்த படங்களாக இருக்க முடியும் என்பது என் அனுமானம். கூட்டி கழித்து பார்க்கும் போது பாலச்சந்தர் திரைப்படங்கள் உறவுகளின் அபத்தங்களையும், பெண்களின் உணர்வுகளையும் மையப்படுத்தியவை என சொல்ல முடியுமென்றால் அதை சிறப்பாக வெளிக்கொணர்ந்த படங்களாக மேலே உள்ள படங்களை குறிப்பிட முடியும். இந்த அ வரிசை தவிர்த்து சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், போன்ற வெற்றி படங்களும், எங்க ஊர் கண்ணகி, போன்ற தோல்வி படங்களும் அவருடைய பாணியை ,தனித்தன்மையை அழுத்தம் திருத்தமாக வெளிக்கொணர்ந்த திரைப்படங்கள். புது புது அர்த்தங்கள் படத்தில் அதே  வெடுக் துடுக் பாத்திரம் வில்லியாகவும் அவரால் உருவாக்க முடிந்தது  ஆச்சர்யமான முரண்.
கல்கி  அந்த வரிசையில் அவருடைய கடைசிப்படம். ஆனால் கால மாற்றம் காரணமாக அந்த திரைப்படம்  மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
அரங்கேற்றம் துவங்கி ஆண் வர்க்கத்தையும் சமூகத்தையும் தன் சாட்டையடி வசனங்களால் அடித்து நொறுக்கித்தள்ளிய பாலச்சந்தரின்  பெண் பாத்திரம் கல்கி யோடு தன் சோர்வை கண்டடைந்தது
பாலச்சந்தரின் அடையாளம் என்பது இந்த வகைப்படங்கள்தான்
இதுபோன்ற படங்களை இவருக்கு முன்பும் பின்பும் தமிழ் சூழலில் யாரும் எடுக்கவே இல்லை.
இந்த  பாணியைத்தவிர, வறுமையின் நிறம் சிவப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற சமூகத்தின் அன்றைக்கு உயிர்ப்பான பிரச்னைகளை பேசிய திரைப்படங்கள் அவரது இன்னொரு பாணி.
நீர்க்குமிழி, எதிர் நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் போன்ற அவரது ஆரம்ப கால கறுப்பவெள்ளை நாடக பாணி படங்கள் இன்னொரு வகை.
நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன் டூயட் போன்ற இசை நடனத்துக்கு முக்கியத்துவம் தந்த பாணி என அவர் திரைப்படங்களை பல்வேறு பாணிகளாக வகைப்படுத்தினாலும் அவரது எந்த பாணியிலும் சேராத மரோ சரித்ரா திரைப்படம் தான் அவரது திரைப்படங்களில் பெரும் சாதனை நிகழ்த்திய திரைப்படம்.
ஆனால்  பாலச்சந்தர் பற்றி நினைவு கூறும் பலரும் அந்த திரைப்படம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் அவர் மற்ற படங்களில் அல்லாத ஒரு நீரோட்டமான காட்சி மொழி அந்த படத்திலும் அதன் இந்தி பதிப்பான ஏக் துஜே கேலியே விலும் தான் உணர முடிந்தது.
இயக்குனர் பாலச்சந்தரின் பெருமைகளூள் எம்.ஜி.ஆர் , சிவாஜி காலத்தில் நாகேஷை நாயகனாக நடிக்க வைத்து அவர் ஈட்டிய வெற்றியைத்தான் அனைவரும் குறிப்பிடுவார்கள் . ஆனால் என்னை பொறுத்தவரை  முதன்  கறுப்பான ஆண்களையும் பெண்களையும் கதாநாயகர்களாக திரையில் அறிமுகப்படுத்தியதுதான் அவரது சாத்னைகளின் உச்சம்
சிவப்பானவர்கள் மட்டுமே அழகானவர்கள் ,சினிமாவிலும் அவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற போலிபிம்பம் கெட்டியாய் இறுகிக்கிடந்த சமூகத்தின் படிமத்தை உடைத்தது அவருடைய சாதனை. ரஜினி, சரிதா இருவரையும் அவர் அறிமுகப்படுத்தாவிட்டால் வேறு எப்படியும் அவர்கள் அன்றைக்கிருந்த தமிழ் சூழலில் அறிமுகமாக வாய்ப்பே இல்லை.
தப்புத்தாளங்களில் திருடன் ரஜினி, பாலியல் தொழிலாளி சரிதா போன்ற விளிம்பு நிலை பாத்திரங்களை திரையில் நாயகன் நாயகியாக அறிமுகம் செய்ததும் அவருடைய சாதனைகளில் ஒன்று.
பாத்திரங்கள் எதையாவது திரும்ப திரும்ப பேசுவது அவரது பாணி
அரங்கேற்றத்தில் உன் அப்பா எனக்கு மாமனார் எனும் ஒரு குழப்பமான விடுகதை
அவள் ஒரு தொடர்கதையில்  படாபட் ஜெயலட்சுமியின் படாபட்
மற்றும்
மூன்று முடிச்சுவில் ரஜினி சிகரட்டை தூக்கி போடுவது ,கைகளை வைத்து மேனரிசம் செய்வது என துருத்தலாக பாத்திரங்கள் எதையாவது செய்வதன் மூலம் பார்வையாளனிடம் பாத்திரங்களை அழுந்த பதியவைப்பது அனைவருடைய பாணி
மோட்டர் பைக்குகளை திரையில் அறிமுகப்படுத்துவதை சமூக மாற்றங்களின் குறியீடாக அவள் ஒரு தொடர்கதையில் புல்லட்டையும் , அவர்கள் படத்தில் காற்றுகென்ன வேலி பாடலில் ராஜ் தூத் பைக்கையும்  , புன்னகை மன்னனில் இந்த் சுசூகி பைக்கையும் முதன் முதலாக திரையில் காண்பித்து இளைஞர்களை பரவசப்படுத்தினார்
பாலச்சந்தர் இறந்த செய்தி குறுந்தகவலாக எனக்கு வந்த போது அவர் மருத்துவமனையில் உயிருடன் போராடிக்கொண்டிருந்தார். பிற்பாடுதான் அது பொய்யான செய்தி என தெரிய வந்தது என்றாலும் அந்த ஐந்துநிமிட இடை வெளியில் நான் மிகவும் துயருற்று அமைதியாக ஒரு நிமிடம் காலத்தோடு உறைந்து நின்றேன்.
என் அம்மா எனை கைப்பிடித்து கடைதெருவுக்கு சிறுவயதில் சென்ற போது  ஒரு சினிமா போஸ்ட்ரை காண்பித்து டேய் இது பாலசந்தர் படம்டா ரொம்ப பெரிய டைரக்டர் அவர் படமெல்லாம் அருமையா இருக்கும் என சொன்னது இப்போதும் எனக்குள் பசுமையாக நினைவில் உள்ளது.
இப்படியாகத்தான் டைரக்டர் என்ற பதம் என் வாழ்க்கைக்குள் நுழைந்து முக்கியம் பெற துவங்கியது.
உண்மையில் இக்கட்டுரை எழுதவும் காரணமாக இருந்தது என் அம்மா. எனக்கு கை நீட்டி போஸ்ட்ரை காண்பித்த அந்த  நிகழ்வுதான்.

என் அம்மாவை போல பல பெண்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்ததுதான் அவரது மிகபெரிய சாதனை.

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...