குருதத் (9 July 1925 – 10 October 1960)
வசந்தகுமார் சிவ சங்கர் படுகோன் எனும் பெயர் கொண்ட குருதத் இந்தியாவில் துன்பவியல் சினிமாக்களின் நாயகனாக அறியப்படுபவர்.நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞரான குருதத் இந்திய சினிமாவின் ஆர்சன் வெல்ஸாக கருதப்படுபவர் . அமெரிக்காவின் டைம்ஸ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இரண்டு இதழ்கள் தனித்தனியே வெளியிட்ட சிறந்த 100 படங்களின் பட்டியலிலும் இவர் இயக்கிய பியாசா மற்றும் கக்கேஸ் கி பூல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளது . பெங்களூரில் கொங்கனி பேசும் குடும்பத்தை சேர்ந்த குருதத் சிறுவயதிலேயே படிப்பதற்காக கல்கத்தாவுக்கு சென்று அங்கேயே படித்து வளர்ந்த காரணத்தால் வங்காளியாகவே அறியப்பட்டவர். வேலைக்காக மும்பை வந்த குருதத் அங்கிருந்த பிரபாத் ஸ்டூடியோவில் டெலிபோன் ஆப்ரேட்டராக இருந்து உதவி இயக்குனராகவும் நடிகராகவும், நடன இயக்குனராகவும் பணி புரிந்தார் . அச்சமயம் அதே ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய படத்துக்கு ஒரு இளம் நடிகர் ஒப்பந்தம் ஆகியிருந்தார். அவர் பின்னாளில் இந்தி சினிமாவின் நிரந்தர நட்சத்திரமாக 80 வயதிலும் நாயகனாக நடித்த தேவ் ஆனந்த்.
ஆனந்த் ஒரு நாள் லாண்டரியில் தான் கொடுத்த சட்டை தவறுதலாக யாரிடமோ மறிப்போய்விட்ட தகவலறிந்து அந்த நபரை தேடி வர அந்த சட்டையுடன் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் தீவிரமாக நடனம் சொல்லி கொடுத்துக்கொண்டிருந்தார். தேவ் ஆனந்த் ஓடிசென்று குருத்தின் சட்டையை பிடித்து உடனே கழட்டும்படி படபிடிப்பின் நடுவே கேட்க .. இருவருக்கும் அந்த மோதல் ஒரு நட்பை உருவாக்கி தந்தது. அப்போதே என்றாவது ஒருநாள் குருதத் தான் இயக்குனராக ஆனால் ஆனந்தை கதாநாயகன் ஆக்குவது என்றும் தேவ் ஆனந்த் நடிகராக உயர்ந்து தயாரிப்பாளரானால் குருதத்தை இயக்குனராக ஆக்க வேண்டும் என்றும் இருவரும் எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
தேவ் ஆனந்த் நாயகனாக உருவாக அவர் சொன்னது போலவே தன் நண்பனை அழைத்து படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் . குருதத்தின் முதல் படமான பாஸி மிகப்பெரிய வெற்றி பெற அதை தொடர்ந்து குருதத் சொந்தமாக தன் பெயரில் கம்பெனி ஒன்றை துவக்கி அதன் மூலம் தயாரிக்கப்பட்ட "C.I.D." படத்தில் ஆனந்தை கதநாயகனாக நடிக்க வைத்தார் . இப் படத்தை இயக்கியவர் ராஜ் கோஸ்லா. பாஸியை தொடர்ந்து இருவரும் ஜால் எனும் படத்தில் இணைய அதுவும் ஹிட் ஆகியது .ஆனால் தேவ் ஆனந்தின் சகோதரர் சேத்தன் ஆனந்துக்கும் குருத்துக்குமிடையிலான மனக்கசபின் காரணமாக இருவரும் பிரிந்து அவர்வரவர் வழியில் படங்களை தந்தனர் . இதனை தொடர்ந்து குருதத்தே தன் படங்களில் நாயகனாக நடிக்கத்துவங்கினார் .
Baaz (1953) Mr. & Mrs. '55 (1955) Sailaab (1956) இந்த அவரது திரைப்பட்ங்கள் அவருக்கு வணிக ரீதியான வெற்றிகளை கொடுத்தாலும் அவர் பெயர் நிலைக்க காரணமாக இருந்த திரைப்படங்கள் அவர் கடைசியாக இயக்கிய இரண்டு படங்கள். 1957ல் வெளியான Pyaasa மற்றும்.1959ல் வெளியான Kaagaz Ke Phool . ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்திய சினிமாவில் ரேவின் பதேர் பாஞ்சாலி மற்றும் கட்டக்கின் மேக தக்க தாரா ஆகிய பட்ங்களுக்கு அடுத்த நிலையில் மிகச் சிறந்த படங்களாக கருதப்படுகின்றன. புற வாழ்க்கையில் குருதத் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அகவாழ்வில் குருதத் எப்போதும் திருப்தியடையதவராக துயருற்ற நிலையிலேயே காணப்பட்டார் ஒரு தோல்வியுற்ற கலைஞனாகவே அவர் தன்னை எப்போதும் கருதினார் . அவர் தயாரித்த சில படங்களின் தோல்விகள் அவரை பெரிதும் பாதித்தன.
இந்த அவரது மனோநிலை பியாசா வில் உக்கிரமாக வெளிப்பட்டது படத்தில் கவிஞனாக நடித்த குருதத் இறந்தபிறகே புகழ் அவரை வந்தடைவதாக திரைக்கதை எழுதியிருந்தார். உண்மையில் அதுதான் அவர் வாழ்விலும் நடந்தது. ரேவைப் போல அவர் வணிக சினிமாவிலிருந்து விலகி நடக்கவில்லை . வணிகம் எனும் வலையில் சிக்கிக்கொண்ட ஒரு புறாவின் மனநிலையில் அவர் தவித்தார். ஒரு பக்கம் தீவிர படைப்பு மனோபாவம் இன்னொருபக்கம் வர்த்தக சினிமா எனும் கொடூர இயந்திரம் இன்னொருபக்கம் வஹீத ரஹ்மானுடனான காதல் தோல்வி . இப்படி பல்வேறு திசைகளில் ப்ரச்னைகளீன் கரங்கள் அவரை இழுக்க அதுவே அவரது தொடர்ந்த தோல்வி மனப்பான்மைக்கு காரணமாக அமைந்த்து.
1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி அவருடைய ப்ளாட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டதன் காரணமாக அந்த தற்கொலை நிகழ்ந்ததாக பிற்பாடு அறியப்பட்டது. அவரது திரைப்படங்கள் பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் ஆகிய நகரங்களில் சிறப்பு த்திரையீடாக நிகழ்த்தப் பட்டபோது அரங்கு நிறைந்த காட்சிகளாக கைதட்டல்களுடன் வரவேற்பை பெற்றன. ஆனால் இதற்காக அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது என்பதுதான் அன்றைய இந்திய சினிமவின் நிலை . இன்று குருத்த் இந்திய சினிமாவின் லச்சினைகளீல் ஒன்றாகவும் எண்ணற்ற சினிமா காதலர்களுக்கு காவியத் தன்மையின் நிறைவிடமாகவும் விளங்குகிறார்.
( புத்தக கண்காட்சியில் வெளிவரவிருக்கும் எனது நூலான உலக சினிமா வரலாறு - இரண்டாம் பாகம் - மறுமலர்ச்சியுகம் நூலிலிருந்து )
- அஜயன் பாலா