June 30, 2011

தொலைவிலில்லை அக்காலம்



ஜூலை-2..பைசைக்கிள்தீவ்ஸ் இயக்குனர். விட்டோரியா டிசிகாவின் 108வது பிறந்த நாளின் நினைவாக....



உலகத்தில் தலைசிறந்த இயக்குநர்களை பட்டியல் போடுங்கள் என தலைசிறந்த விமர்சகர்களிடம் நாம் கேட்போமானால் பலரும் சாப்ளின்,அகிரா குரசேவா,பெர்க்மன்,ஹிட்ச்காக்,ட்ருபோ என பல பெயர்களை கூறுவார்களே தவிர அத்தனை சட்டென யாரும் டிசிக்காவின் பெயரை குறிப்பிடமாட்டார்கள்.அதே சமயம் அவர்களிடமே உலகத்தின் தலைசிறந்த படங்களை குறிப்பிட்டு சொல்லச் சொன்னால் அனைவருமே தவறாமல் சொல்லும் பெயர் பை சைக்கிள் தீவ்ஸாகத்தான் இருக்கும்.என்ன விந்தை!பை சைக்கிள் தீவ்ஸ் பெற்ற புகழை அதன் படைப்பாளி பெற முடியவில்லை.போஸ்ட் மாடர்ன் தியரி,படைப்பாளன் இறந்து விட்டான் எனக் கூறுகிறது.டிசிக்காவை பொறுத்தவரை அது முற்றிலும் சரியே.பை சைக்கிள் தீவ்ஸ் டிசிக்காவை சாகடித்துவிட்டது.இந்த திரைப்படத்திற்கு எற்பட்ட அபரிமிதமான வெள்ளிச்சம் டிசிகாவின் முகத்தை மறைத்துவிட்டது.அதற்காக டிசிகாவை குறைந்தவராகவே நாம் மதிப்பிட முடியாது.

உன்னதமான கலைப் படைப்புகள் எல்லாம் அதனை உருவாக்கிய கலைஞனை மறைத்துக்கொண்டுதான் பிரமாண்டமாக எழுகிறது.இன்னும் சொல்லப்போனால் அவற்றின் நிழலில்தான் அந்த நிழலில்தான் அந்த படைப்பாளன் தஞ்சமடைய வேண்டியதாக இருக்கிறது.டாவின்சியின் அளப்பரிய சாதனைகள் மோனலிசாவின் வசீகரமான புன்னகையின் முன் தகுதி குறைந்துபோயின.உமர்கய்யாமின் காதல் சுவை ததும்பும் வரிகள் அவரது வான சாஸ்திர கண்டுபிடிப்புகளின் மேல் மண்ணைபோட்டது.அதற்காக டாவின்சியோ,உமர்கய்யாமோ,டிசிக்காவோ அவர்களது படைப்புகளின் முன் தகுதி குறைந்தவர்களாக நாம் மதிப்பிட முடியாது.இன்னும் சொல்லப்போனால் நம்மைப் போன்ற ஆட்கள் இந்த விபத்திலிருந்து தப்பித்து, படைப்பைவிட படைப்பாளியை முக்கியமாகக் கருதி அவர்களின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சத்தில் கொண்டுவந்து அவர்களது படைப்புகளுக்கு இணையாக கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும்.

1902 ஜூலை 7-ல் இத்தாலியிலுள்ள சோவா நகரில் பிறந்தவர் விட்டோரியா டிசிகா. தனது 20 வயதிலேயே நடிகராக தன் கலை வாழ்க்கையை துவக்கியவர்.நடிக்க ஆரம்பித்த செற்ப காலங்களிலேயே காமெடியனாகவும்.கதாநாயகனாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டார்.பின்னாளில் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி கன்னிகளான சோபியா லாரன்ஸ்,ஜீனாலோலோ பிரிகிடா போன்ற நடிகைகள் தங்களது ஆரம்ப கால இத்தாலிய படங்களில் டிசிகாவோடு நடித்து தங்களது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் என்பது பின்னாளில் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு விசயம்.

ஹெமிங்வே எழுதிய பேர்வெல்டு ஆர்ம்ஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அந்த வருடத்திய ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் டிசிகா 1940-ல் ரோஸ் ஸ்கேர்லட் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக உயர்த்திக்கொண்டார்.இரண்டாம் உலகப்போரின் நெருக்கடியில் அப்போது இத்தாலி சிக்கிதவித்துக் கொண்டிருந்த காரணத்தால் அந்த படம் கவனிக்கப்படாமல் போனது.

1943ல் வெளியான திரைப்படம் THE CHILDREN ARE WATCHING US ...அவரை வியப்புடன் பார்க்க வைத்தது.இந்தப் படத்தில்தான் நியோ ரியலிஸத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவரான கதாசிரியர் ஜெவட்டினியுடன் கூட்டு சேர்ந்தார். தொடர்ந்து மூன்று படங்கள் இருவரும் இணைந்து நியோ ரியலிஸத்தின் அலையை இத்தாலி தொடங்கி உலகம் முழுவதும் ஏற்படுத்தினார்கள்.

ஒரு நடிகர் இயக்குனராக மாறும்போது துவக்கத்தில் ஏற்படும் கசப்புணர்ச்சியே ஆரம்பத்தில் அன்றைய இத்தாலிய திரைப்பட சூழலில் நிலவியது.

1946-ல் வந்த ஹுஷைன் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய சினிமா சஞ்சிகைகள் டிசிகாவை கொணடாடத்துவங்கின.அதற்கு முன் திரைப்படத்துரையில் சோசலிச எதார்த்த வாதமே ரியாலிசம் என்னும் பெயரில் ரஷயாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.அது எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.அந்த ரியலிஸ காலத்தில் சமுக நுண்ணுணர்வுகள் எதுமற்று வெறுமனே கதைக்குள் காட்சிகளை கூர்ந்து கவனிப்பவர்களாகவும் மன ஒட்டங்களை பதிவு செய்பவர்களாகவும் மட்டுமே இயக்குனர்கள் தங்களின் கலை திறமையை கண்டடைந்து புகழ்பெற்றுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய சரிவு ஐரோப்பாவையே சீர்குலைத்திருந்தது. போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அச்சம்,பீதி உணர்வே மக்களிடம் அதிகமாக இருந்தது.
இந்த பின்புலன்களின் கட்டமைவோடுதான் 1947ல் வெளியானது பை சைக்கிள் தீவ்ஸ்.வெறுமனே எதார்த்தம் என்று ஏமாற்றாமல் அதற்கு பின்னாலுள்ள அரசியல் சூழலையும்,ஒரு சாதாரண மனிதன் திருடன் ஆவதற்கான அறிவியல் ரீதியான காரணிகளையும் கொண்டு இத்திரைப்ப்டம் வெளியானது. சுருக்கமாக சொல்லப்போனால் அக்காலத்தைய இத்தாலி அடிதட்டு மக்களின் ஆன்மாவின் குரலாக இருந்தது பை சைக்கிள் தீவ்ஸ்.

இந்த படங்கள் எதார்த்தமாகவே இருக்கின்றன.ஆனால் அதே சமயம் மக்களுக்கு பலவிதமான அரசியல் பின்புலன்களையும் சமூக அக்கறையுடன் எடுத்துரைக்கின்றன.இவை ரியலிஸத்தை விட நூட்பமாக கவனத்தில் எடுத்துரைக்கின்றன.இவை ரியாலிசத்தை விட நுட்பமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை என கருதி இந்த படங்களுக்கு புதிய அடைமொழியாக நியோ ரியலிஸம் என பெயர் சூட்டி இதன் பிரதமகர்களாக டிசிக்காவையும்,ஜெவட்னியையும்,ரோபர்டோ ரோஸலினியையும் அறிவித்து மகுடம் சூட்டினர்.இதுதான்,நியோ ரியலிஸம் தோன்றிய கதை.சுருக்கமாக சொல்வதாக இருந்தால் கதைக்கும் அந்த படத்திற்கும் உண்மையாக இருப்பது ரியலிஸம்.வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உண்மையாக இருப்பது நியோ ரியலிஸம்.

படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஒரு கூலித் தொழிலாளி.அதுநாள் வரை சினிமா சூட்டிங்கை பார்த்திராதவர்.தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இரண்டு மாதங்கள் லீவு போட்டுவீட்டு வந்து நடித்தார்.அதேபோல முதல் நாள் சூட்டிகை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன்தான் படத்தில் சிறுவனாக நடித்த ப்ரூனோ.

படத்தை மேலோட்டமாக பார்க்கும் பார்வையாளனுக்கு ஒரு காவிய சோகம் நிரம்பிய கதை ஒன்று சொல்லப்பட்டிருந்தது.சைக்கிளை திருட்டு கொடுத்தவன் வேறு வழியேயில்லாமல் வேறெறொரு சைக்கிளை திருடும்போது மாட்டிக்கொண்டு திருடனாக அறியப்படுகிறான்.

இந்த கதை உலகெங்கும் எந்த மூலையிலிருப்பவருக்கும் சென்றடையக்கூடியதாக இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றி என்கிறார் ஆந்திரேபஸன்.அதேசமயம் உலகின் மிகசிறந்த சினிமா ரசிகன் ஒருவனுக்கும் அவனால் முழுவதும் கண்டறிய முடியாத பல நுட்பங்கள் திரைக்கதையிலும் திரைப்படமாக்கத்திலும் உருவாக்கம் பெற்றுள்ளன.பைசைக்கிள் தீவ்ஸின் தனித்தன்மை இவைதான்.

எனது கணிப்புப்படி உலகின் மிகச் சிறந்த படங்கள் இரண்டை சொல்லச் சொன்னால் ஒன்று பை சைக்கிள் தீவ்ஸையும்,அதற்கு முன்பாக சாப்ளினின் தி கிரேட் டிக்டேடரையும் சொல்வேன்.இரண்டுமே வரலாற்றை சொன்ன படங்கள்.ஒன்று போருக்கு பிந்தைய அழிவைக் காட்டியதென்றால்,மற்றொன்று போருக்கு காரணமான ஹிட்லரின் இனவெறியை நேரிடையாக இடித்துரைத்து.இரண்டுமே மனிதகுல விடுதலைக்காக தங்களது பாணியில் அழுந்தி பதியவைத்த படங்கள்.

இந்த இருவருக்கும் இடையேயிருந்த ஒப்புமையின் காரணத்தாலோ என்னவோ டிசிகா பைசைக்கிள் தீவ்ஸை சாப்ளினுக்கு தன் வழ்நாளின் கடப்பாடு என பகிரங்கமாக அறிவித்தார்.

மகத்தான் கலைஞன் தன் படைப்பின் முதுகில் வரலாற்றின் வலியை எழுதி வைப்பான்.காரணம் வரலாற்றின் ஆவணங்களைத் தேடும் எதிர்கால சமூக விஞ்ஞானிகளின் விரல்கள் இந்த சமூகத்தின் கலைப்படைப்பையே முதலில் தேடி வரும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் தங்களது திறமைகளின் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட இயக்குனர்கள் பலர் தங்களின் வலிமையையும் சோகத்தையும் மறைத்து வந்திருக்கின்றனர்.காலம் அவர்களின் பெயரை வலக்கையால் எழுதி இடக்கையால் அழித்து வந்திருக்கின்றது.அவர்களது கலைச் செழுமைகள் அனைத்தையும் காலாவதியாக்கியது.


மேன்மையான மனிதர்கள் கொண்டாடப்படும்போது ஒரு சமூகம் தானாகவே நாகரீகமடைகிறது.ஒருவிதமான மறுமலர்ச்சி தமிழகத்தின் ஊடகம் மற்றும் அறிவு சார்ந்த சூழலில் காணப்படுகிறது.நல்ல் எழுத்துக்கள்,நல்ல படைப்பாளர்கள் ஒரளவு வல்லமை பெறுகின்றனர்.அறிவார்ந்த மக்களே நாளைய தமிழ் சமூகத்தை ஆள தகுதியுடைவராவர்.தொலைவில்லை அக்காலம்.

(2002 ல் டிசிக்காவின் நூற்றாண்டை யொட்டி நான் ஏற்பாடு செய்த சிலம்பு 2002 குறும்பட விழாவின் மலரில் வெளியான் கட்டுரை இது .. முன்னதாக தமுஎச எம் எம் டிஏ கிளை டிசிகா நூற்றாண்டை ஒட்டி ஏற்பாடு செய்த விழாவிலும் இக்கட்டுரை வாசிக்கப்ப்ட்டது )

June 22, 2011

செம்மொழிசிற்பிகள் :6 தேவ நேய பாவாணர்

உலகின் முதன் மொழி தமிழ் மொழி எனவும், திராவிடத் தாய்மொழி எனவும்
ஆதார பூர்வமாக நிரூபிக்க.. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர்.அக்காலத்தில் வடமொழி உருது மற்றும் ஆங்கிலத்தால் கலப்புற்றிருந்த நடைமுறைத்தமிழை தன் வேர்ச்சொல் ஆய்வு மூலம் பிரித்தெடுத்து மொழியின் வேர்தேடி பயணித்து விடை கண்டவர்.. மறைமலையடிகளால் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் அறுபடாமல் தொடர்ந்து இயக்கிவந்தவர். மொழி ஞாயிறு என அனைவராலும் அனபுடன் அழைக்கப்பட்ட தேவ நேய பாவாணர்

பிறப்பு ;07- 02-1902

நெல்லை மாவட்டம், சங்கர நயினார் கோவிலில் பிறந்தவர்
தந்தை ஞான முத்து, தாயார் பரிபூரணம் மிகவும் வறுமைச்சூழலில் வாழ்ந்த இத்தம்பதியினருக்கு மழலைசெல்வங்களுக்கு மட்டும் குறைவில்லை.
பத்து குழந்தைகளில் நான்காவாதாக பிறந்தவர். சிறுவயதில் ஒரு கிறித்துவ பாதிரியார் மூமாக வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு கிறித்தவபள்ளியில் சேர்ந்தார். பின் அதேபாதிரியின் உதவியோடு பாளையங்கோட்டையில் கிறித்துவ விடையூழிய உயர்நிலைபள்ளியில் கலவியை தொடர்ந்தார்..பின் மதுரையில் பாண்டித்தேவர் மூலம் நடத்தப்ப்ட்டு வந்த நான்காம் தமிழ்சங்கத்தின் பண்டித தேர்வில் கலந்து கொண்டு இரண்டாவது சிறந்த மாணவராக தேர்ந்தார். அதுவரை இயற்பெயராக இருந்த தேவநேசன் என்பதில்நேசன் வடமொழியாக இருப்பதை அறிந்து தன் பெயரை தேவ நேயன் என மாற்றிக்கொண்டார்.

ஆசிரியப்பணி தேடிவந்தது. முதலில் ஆம்பூர்,பெரம்பூர் என சில காலங்கள் பணியாற்றியவர் சேலத்தில் நகராண்மை கல்லூரியில் பணியாற்றியபோதுதன் முழு நிறைவு கண்டார் . காரணம் அங்கு முதல்வராக பணியாற்றிய இராமசாமி. பவாணரின் ஆராயச்சிக்காக அவருக்கு தேவையாண நேரத்தை ஒதுக்கிதந்து சுதந்திரமாக செயல்படவைத்தவர்.இச்சுதந்திரம் மட்டுமில்லாவிட்டால் பாவாணரின் ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவேறியிருக்குமா எனபது ஐயமே!.

ஆங்கிலம் பிரெஞ்சு லத்தீன் கிரேக்கம் ,இந்தி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளை பயின்ற வித்தகரான இவர் தமிழே உலகின் மூத்த மொழி என தன் ஆய்வுகளின் மூலம் அறுதியிட்டுக்கூறியவர். கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழின் வேர்ச்சொல்தேடி பயணித்தவர். இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். உலகத்தமிழ் இயக்கம் என்பதை
நிறுவி அதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்ப அரும்பாடுபட்டவர். அரசின் செந்தமிழ் அகரமுதலி திட்ட இயக்கத்திலும் இயக்குநராக அவர் பணிபுரிந்துள்ளார். - இலக்கணச் செம்மல்
- தமிழ்ச் சொல் ஆய்வுத்துறை முன்னோடி, தமிழ்பெருங்காவலர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சிறப்புப் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.
தொல்காப்பிய சொல்லதிகாரம், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழர் மதம், தமிழ் வரலாறு, என தமிழ் மொழியின் தொன்மை குறித்து 19க்கும் மேற்பட்ட நூல்களை,தமிழ் மற்றும் ஆங்கில த்தில் இவர் எழுதியுள்ளார்.
தமிழக அரசு இவரது தமிழ்த்தொண்டை போற்றும் வகையில் சென்னை நூலகத்திற்கு அவரது பெயரை பொருந்த சூட்டியதுமட்டுமல்லாமல் அவருக்காக மதுரையில் மணிமண்டபம் எழுப்பியிருப்பதன் மூலம் பாவாணாரின் வாழ்கையை தமிழர் தம் வழித்தடமாக்கி பெருமைபடுத்தியுள்ளது..
மறைவு ; 15-01-1981

June 19, 2011

அமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம் வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து


உலக சினிமா வரலாறு - மவுன யுகம் :

அமெரிக்க அறிவியல் படங்களின் துவக்கம் வளர்ச்சி- ஸ்டான்லி குப்ரிக்கை முன் வைத்து

எதிரிகள் தான் நம்மை தீர்மானிக்கின்ற்னர்
இது புகழ் பெற்ற சுய முன்னேற்ற பழமொழி .. இந்த சூத்திரத்தை யார் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஹாலிவுட் படங்க்ள் தெளிவாக பயன்படுத்தி வருகின்ற்ன .இது வ்ரை அது கண்டுபிடித்த எதிரிகளின் எண்ணிக்கைக்கு அள்வே இல்லை.துவக்க காலங்களில் மனிதர்களை மட்டுமே எதிரியாக சித்தரிதது போய் பின் சிம்பன்சி போன்ற மனித குரங்குகள், பெரிய பல்லிகள், பாம்புகள் எனத்துவங்கி பின் வேற்று கிரக வாசிகள் மற்றும் பெயர் தெரியத பூச்சிகள் என அலைந்து வேறுவழியில்லாமல் கடல் ,எரிமலை ,காற்று என பல்வேறு எதிரிகளை கண்டுபிடித்து உலக குழந்தைகளை தனது தவறான அறிவியலால் பயமுறுத்தி வருகிறது .

அதேசமயம் ஹாலிவுட் அறிவியலை பயன்படுத்தி பல ஆக்கபூர்வமான படங்களையும் கொடுத்தது மறுப்பதற்கில்லை .

ஸ்டார் வார்ஸ், ஜுராசிக் பார்க் ப்ளேடு ரன்னர் அபிஸ் .அவதார் போன்ற படங்கள் அவற்றுள் சில

ஹாலிவுட்டின் அறிவியல் படங்களின் வளர்ச்சி உண்மையில் துவக்க காலங்களில் சற்று ஆரோக்கியமானதாகவே இருந்துள்ளது.

கதை சொல்லும் படத்தை முதலில் எடுத்த ஜார்ஜ் மிலியின் ’’ட்ரிப் டூ மூன்’’ இந்த வகையில் முதல் அறிவியல் புனை கதை படம் எனலாம்

அதன்பிறகு 1931ல் வெளியான மேரி ஷெல்லியின் ப்ராங்கஸ்டைன் எனும் படம் குறிப்பிடும்படியான அறிவியல் புனைகதை படம்

இக்கதை புகழ்பெற்ற ஆங்கில கவியான ஷெல்லியின் மனைவியால் எழுதப்ப்ட்டது . அவர் பெயர் மேரி ஷெல்லி.

ஒருநாள் ஷெல்லியின் வீட்டுக்கு அக்காலத்தின் மகாகவிகளும் ஷெல்லியின் நண்பர்களுமான லார்ட் பைரன் மற்றும் ஜான் கீட்ஸ் மற்றும் சில கவிகள் வந்திருந்த்னர். . அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது மேரிக்கும் லார்ட் பைரனுக்கும் சிறு விவாதம் .சட்டென மேரியை நோக்கி பைரன்

.இவ்வளவு பெசுகிறாய் உன்னால் ஒருகதை எழுத முடியுமா ?

ஏன் முடியாது என்ன கதை வேணும் உங்களுக்கு ?

என மேரி கேட்க பதிலுக்கு பைரன் பேய் கதை என கூற அடுத்த சில இரவுகளில் மே ரி தான் ்கண்ட திகில் கனவை அடிப்படையாக கொண்டு உருவக்கிய கதைதான் இந்த பிராங்கஸ்டைன் .

1931ல் ஜெம்ஸ் வேல் என்ப்வர் இப்ப்டத்தை இயக்கியிருந்தார்

இது ஒரு ஆராய்ச்சியாளனை பற்றிய கதை பல உடல்களிலிருந்து வெவ்வேறான உறுப்புகளை வெட்டி எடுத்து வந்து ஒட்டவைத்து அத்னை உருவமாக்கி தன் அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அத்ற்கு உயிர் கொடுக்க அத்னால் உண்டாகும் தொடர்விபரீதங்களும் அவனுடைய இதய்ம் படும் வேத னைகளுமெ இந்த பிராங்கஸ்டைன் படம்

இத்னை தொடர்ந்து அவ்வப்போது பல படங்க்ள் வந்திருப்பினும் காட்சியமைப்பு திரைக்கதை ஆகியவற்றால் முழுமையான அறிவியல் புனைகதை படமாக வெளியான ஒரே திரைப்படம் ஸ்டான்லி குப்ரிக்கின் 2001 ஸ்பேஸ் ஒடிசி( 1968) தான்.



1928ல் நியூயார்க்கில் பிறந்த குப்ரிக்கின் தந்தை ஜாக் ஒரு வித்தியாசமான பேர்வழி. மகனுக்கு படைப்பு சரியாக வரவில்லை என்பதை அறிந்து வெவ்வேறு ஊருக்குஅனுப்பி அவனது சூழல் மாறுவது மூலம் படிப்பு நன்றாக வரும் என கணக்கு போட்டார். ஆனாலும் படிப்பு மட்டும் வரவில்லை .அதே சமயம் தன் பையன் ஒன்றும் மக்கு இல்லை கொஞ்சம் விவரம் உள்ளவந்தான் ஆனால் படிப்புதான் வரவில்லை என்பதை கண்டு கொண்ட ஜாக் ஒரு முடிவுக்கு வந்தார் . மறுநாள் வீட்டிற்கு வரும்போது அவரது கையில் ஒரு செஸ் போர்டு இருந்தது. அதன்பிறகு அந்த கறுப்புவெள்ளை கட்டங்கள்தான் குப்ரிக்கின் வாழ்க்கையானது.
பதிமூணூ வயதில் குப்ரிக்கின் ஆர்வமும் கவனமும் கறுப்பு வெள்ளைகட்டங்களைலிருந்து விலகி வண்ணங்கள் பக்கம் திரும்புவதை உணர்ந்த ஜாக் மறுநாள் வரும்போது ஒரு காமிராவுடன் வீட்டுக்குள் வந்தார். குப்ரிக்கின் வாழ்க்கை அதன் பிறகு முழுவதுமாக காமிராவும் புகைப்ப்டங்களுமாக மாறிப் போனது பின் ஜாஸ் இசைமீது ஆர்வம் உந்த டிரம்ஸ் வசிக்கவும் பயின்றார்.


ஒரு புறம் இப்படி புதுபுதுசாக அப்பாவின் முலம் கற்க இன்னொருபுறம் பள்ளி படிப்பில் அவர் கடைசி மதிப்பெண்ணே பெற்று வந்தார் . படிப்பு முடிந்து வெலை செல்லும் வயசு வந்ததும் தான் எடுத்த புகைப்படங்களை லுக் மாகசீனிக்கு கொண்டு போக அவர்கள் அவரது படங்களை வாங்கி தொடர்ந்து வெளியிட்ட்னர் . நீயூயார்க்கில் தன் தங்கியிருந்த வீட்டு வாடகைக்காக செஸ் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று அதில் கலந்து வென்று அதில்கிடைத்த பணத்தை கொண்டு வாடகை பணம் கட்டினார் .தொடர்ந்து திரைப்படங்களின் மீது ஆர்வம் உந்த சில டக்குமண்டரி படங்களுக்கு உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின் Fear and Desire (1953),மூலம இயக்குனராக அறிமுகம் ஆனார் .தொடர்ந்து Killer's Kiss (1955) The Killing (1956) கிர்க் ட்க்ளஸ் நடிப்பில் Paths of Glory (1957) Spartacus (1960) போன்ற படங்களை இயக்கி ஹாலிவுட்டில் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்றார்..குறிப்பாக ஒளிப்பதிவில் அவர் செலுத்திய அதீத கவனமும் ஆளுமையும் அவருகென ஒரு தனித்த்ன்மையை உருவாக்கித்தந்த்ன.இத்னைதொடர்ந்து 1968ல் ஆர்தர் சி கிளார்க் அவர்களின் நாவலான 2001 ஸ்பெஸ் ஒடிசியை இயக்கியதன் மூலம் அமெரிக்காவிப் முழுமையான அறிவியல் பட்ங்களுக்கு துவக்க புள்ளி போட்டுகொடுத்தார்.
முதலில் குப்ரிக் கிளார்க்கிடம் கேட்டது அவர் முன்பே எழுதியிருந்த செண்டினல் எனும் கதையைத்தான் .ஆனால் இருவரும் கதை சார்ந்து விவாதித்துக்கொண்டிருக்கையில் குப்ரிக்கு உதித்த திடீர் ஆலோசனைதான் 2001 ஸ்பேஸ் ஒடிசி,.பின் இருவரும் சேர்ந்தெ அதை நாவலாக எழுதியிருந்தாலும் இறுதியில் அது ஆர்தர் சி கிளார்க் க்கின் கதையாகவே அங்கீகரிக்கப்பட்டது .மற்ற எல்லா படத்தையும் போலவே க்டவுளின் இன்மைதான் இப்படத்திற்கும் மையக்கரு. துவக்கத்தில் இப்படத்துக்கு அரங்கத்தில் வரவேற்பில்லை .பிற்பாடு மெல்ல மெல்ல அதுவும் இளைஞர்கள் கூட்டமாக திரையரங்கில் திரள ஆரம்பித்தது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகுதான் ஹாலிவுட்டில் அறிவியல் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து எடுக்கப்பட்டும் வந்தது. தொடர்ந்து குப்ரிக் Clockwork Orange (1971), Barry Lyndon (1975) The Shining (1980). Eyes Wide Shut (1999), போன்ற குறிபிடத்தகுந்த அறிவியல் புனைகதைகளை இயக்கி அறிவியல் புனைகதை இயக்குனராக தனகென தனி முத்திரையை பதித்துக்கொண்டார் .

ஸ்பேஸ் ஒடிசிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெளியான அறிவியல் படங்கள் சிலவும் அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன .அவற்றுள் 1971ல் வெளியான Escape from the Planet of the Apes மற்றும் Quest for Love ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்த்வை . இவற்றைக்காட்டிலும் 1972ல் வெளியான THX 1138
திரைப்படம் எதிர்கால அமெரிக்க உலகையே தனி ரசனைக்குள் வீழ்த்த அடிகோலிட்டது .அப்படத்தின் இயக்குனர் ஜார்ஜ் லூகாஸ். அமெரிக்க சினிமா வரலாற்றில் ஸ்டார் வர்ர்ஸ் என்ற ஒரு படத்தின் மூலம் உலகபுகழ்பெற்றவர். அமெரிக்க சினிமா ரசனையை மாற்றி காண்பித்தவர் .
ஸ்டார் வார்ஸின் வரிகையான 1972ம் ஆண்டு சினிமா உலகை மட்டுமல்லாமல் உலகம் முழுக்க மக்களின் மனோநிலையில் புதிய மாறுதல்களை உருவாக்கி தந்தது.. அதுவரை இருந்த செவ்வியல் சார்ந்த மனித வாழ்வு சார்ந்த மரபு சினிமாவிலிருந்து விலகதுவங்கியது .தனது காட்பாதர் படத்தின் மூலம் பிராண்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் இயக்குனர் அமெரிக்க சினிமா மட்டுமல்லாமல் உலகசினிமா பார்வையளர்க்ளின் ரசனையையே மாற்றி அமைக்கிறார்.
அதித கற்பனைகள் மீ பொருண்மை வெளிகள் , தொழில் நுட்பம் சார்ந்த கட்சி மொழிகள் கண்கூசும் ஒளிப்பதிவுகள் புதுமையான அரங்க் நிர்மாணங்கள் போன்றவை சினிமாவை ஆக்ரமிக்க துவங்கின .அதுவரை இருந்த தனிமனித அனுபவம் போய் சினிமா பொது அனுபவத்துக்குள் வீழத்துவங்கியது ..

( மறுமலர்ச்சி யுகம் முடிவுற்றது அடுத்த இதழ் முதல் உலகசினிமா வரலாறு மூன்றாம் பாகம் : நவீன யுகம் துவங்க உள்ளது )

June 16, 2011

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் : செம்மொழி சிற்பிகள் : 5


ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியில் அச்சகங்கள் பல நிறுவினாலும் அவர்கள் ஆங்கில நூல்களை மட்டுமே அச்சாக்கிக்கொண்டிருந்த சூழலில் பாழும் ஓலைச்சுவடிகளில் கரையான் அரிக்க தமிழ் அழிந்துகொண்டிருந்தது. இதனைக்கண்டு வெந்து பொதும்பி பைந்தமிழ் இலக்கண இலக்கிய செல்வங்களை நூல்களாக பதிப்பிக்க வேண்டி அதன் பொருட்டு வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.உரைநடைத்தமிழின் முன்னோடி. வசனநடை வல்லாளர் என போற்றப்பட்டவர்... யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்.

பிறப்பு :18-12-1822

இலங்கை யாழ்ப்பாணம்,நல்லூரில் பிறந்தவர் .
தந்தை ஞானப்பிரகாசசுவாமிகள் மரபிலே வந்த கந்தசாமிபிள்ளை ,தாயார் சிவகாமி . சகோதரர் நால்வர் உட்பட பரம்பரையே தமிழ் அறிஞர் குடும்பம் சிறுவயதில் தந்தை இறந்துபட அவரது மூத்த தமையனாரின் ஆலோசனையின் பேரில் சுப்ரமணியபிள்ளை மற்றும் சேனாதிராச முத்லியார் ஆகியோரிடம் மூதுரை மற்றும் நிகண்டு ஆகியவற்றை தெளிவுற கற்று தமிழை தன் ஊனில் ஊனாக கரைத்துக்கொண்டார்.பின் இக்காலத்தில் யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் கல்லூரியில் ஆங்கிலபாடம் கற்று இருமொழி வித்தகனாக மாறினார். அக்கல்ல்லூரியிலேயே ஆசிரியராக பொறுப்பும் ஏற்றார். இக்காலத்தில் சைவமும் தமிழும் ஒன்றெனக்கண்டு கொண்ட நாவலர் டிஸம்பர் 31 1847ல் வண்ணார்பண்னை வைத்தீஸ்வரன் கோவிலில் தனது முதல் சொற்பொழிவை நடத்தினார்..பின் சைவ தொண்டு நிமித்தம் ஆசிரிய பணியிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டு அதே வண்ணார்பண்ணையில் பாடசாலை ஒன்றை உண்டாக்கினார். பாடசாலைகளுக்கு சைவத்தில் புத்தகங்கள் தேவையாக இருந்தது. இதனால் ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்களை அச்சாக்குவதன் பொருட்டு சென்னையில் ஒரு அச்சுக்கூடம் ஒன்றை வாங்கவேண்டி தமிழகம் வந்தார்.

திருவாவடுததுறை ஆதினத்தில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவை கண்டு வியந்து அங்கு இவருக்கு நாவலர் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுக்கவும் சொற்பொழிவாற்றி தமிழையும் சைவத்தையும் செழிக்கசெய்தார்.. சென்னை தங்க சாலைதெருவிலும் யாழ்ப்பணத்திலும் தமிழுக்கென தனித்த அச்சகங்களை நிறுவி எண்ணற்ற ஓலைச்சுவடிகளை நூலாகபதிப்பிக்கதுவங்கினார்.. சூடாமணி, நிகண்டு , நன்னூல்,பெரியபுராணம், திருவாசகம் ,திருக்கோவையார்,பாலபாடம் ,ஆத்திச்சூடி,மற்றும் கொன்றைவேந்தன் போன்ற அரிய தமிழ் செல்வங்களை புத்தகமாக்கினார். சிதம்பரத்தில் ஒருபாடசாலை ஒன்றையும் தோற்றுவித்தார்.

இதேகாலகட்டத்தில் தமிழகத்தில் வள்ளலார் என அனுப்டன் அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் இயற்றிய அருட்பா கோவில்களில் பாடப்பட அதனை எதிர்த்து அவை அருட்பாஅல்ல மருட்பா என வாதிட்டார்.ஆனால் அது வழக்காடுமன்றத்தில் தோல்வியுற்றபின் வேத்னைமிக்கவராக யாழ்ப்பாண்ம் திரும்பி தன் சைவைத்தொண்டை தொடர்ந்தார். வர்ணாசிரம தர்மத்தை அவர் ஆதரித்த காரணத்தால் காலத்தில் அவர் கருத்துக்கள் பிற்போக்குதன்மையுடையதாக கருதப்பட்டன. எனினும் தமிழுக்காக அவ்ர் ஆற்றியதொண்டுகாரணமாக வரலாற்றில் இன்னமும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது

இறப்பு ;05-12-1879

June 10, 2011

பெண்ணென பெரிதாய் உளத்தக்க... 4. ; - மேரி க்யூரி


பெண்ணென பெரிதாய் உளத்தக்க... .
தொடர் பாகம் :4


தனி மனிதன் வளராமல் சமூகம் வளர்வதில்லை . அதேசமயம் சமூகத்துக்காக பாடுபடும் தனி மனிதர்தான் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்
- மேரி க்யூரி


நம் பெண்கள் பலருக்கு காதல் ஒரு முக்கிய ப்ரச்னை
காதலில் தோற்று போனாலோ அல்லது நினைத்த நபரை திருமண்ம் செய்ய முடியாது போனாலோ அவ்வளவுதான்...
இனி முடிந்து விட்டது வாழ்க்கை. இனி எல்லாமே அவ்வளவுதான் என செக்கில் மாட்டிய சிவலிங்கமாக தங்களை நினைத்துக்கொண்டு எண்ணங்களை குறுக்கி சுருங்கி போய்விடுகின்றனர்

ஆனால் மேரிக்யூரி அப்படி திரும்பவில்லை,.அவரும் காதலில் தோல்வியுற்றார்.ஆனால் தோல்வியை பாடமாக மனதில் ஏற்றார். அன்று அவர் அப்படி செய்யாவிட்டால் நோபல் பரிசு பெற்று உலகின் ஒப்பற்ற பெண்மணியாக விளங்கியிருக்க வாய்ப்பே இல்லை.

மேரி க்யூரி .. ரேடியத்தை கண்டுபிடித்த்வர்.
இன்று மார்பில் வலி என ஆஸ்பத்தரிக்கு ஓடுகிறோம் டாக்டருக்கு தெரியவில்லை .. உடனே எக்ஸ்ரெ எடுத்துக்கொண்டு வாருங்கள் என்கிறார்.

ஓடிப்போய் எக்ஸ் ரே எடுக்கிறோம் பார்க்கிறோம் ..மருத்துவர்களால் துல்லியமாக ப்ரச்னை கண்டறியப்படுகிறது நோய் தீர்க்கப்படுகிறது

ஆனால் என்றாவது நம் மருத்துவ ப்ரச்னைகளை தீர்க்கும் உற்ற நண்பனான எக்ஸ் ரே எனும் அற்புத சாதனத்தையும் அதற்கு காரணமானவரையும் பற்றி யோசித்திருப்போமா ?

நிச்சயம் யோசித்திருக்க மாட்டீர்கள்
பரவாயில்லை அந்த பாவத்துக்கு பரிகாரமாக அதை கண்டுபிடிக்க மூல காரணமாக இருந்த மேரி க்யூரியின் இந்த கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

யார் இந்த மேரி க்யூரி ..போலந்து நாட்டில் வார்சா எனும் ஊரை சேர்ந்த தேசப்பற்று மிகுந்த தம்பதிக்கு மகளாக நவம்பர் 7ம் நாள் 1867ம் ஆண்டு பிறந்தவர். அடிப்படை கல்வியை உள்ளூர் ஜிம்னாசியத்தில் முடித்தார் . அந்த ஊரில் ஆரம்ப பள்ளிகூடத்துக்கு ஜிம்னாசியம் என்றுதான் பெயர்.
மேல்படிப்பை உள்ளூரில் படிக்க வாய்ப்பில்லை. அப்போது ருஷ்யாவை ஆண்ட ஜார் அரசாங்கம் பெண்கள் உயர்கல்விகள் படிக்க தடை விதித்திருந்தது . ஆனால் மேரிக்கோ அறிவியலில் மேற்படிப்பு படித்து விஞ்ஞானியாக பெரும் விருப்பம் . அப்படியானால் அதற்கு ஒரே வ்ழி அண்டை நாடான பிரான்சுக்கு சென்று படிப்பதுதான். ஆனால் அதற்கோ பெரும் தொகை தேவைப்படும் .

உண்மையில் மேரியின் அப்பாவுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். பரம்பரை பணக்காரர். ஆனால் போலந்து மண்ணீன் விடுத்லை இயக்கத்துக்காக தன் முழு சொத்தையும் இழந்துவிட்டார்.
மேரியை பிரான்சுக்கு போய் படிக்க வைக்க இப்போது அவரிடம் தம்படி காசு கூட இல்லை.

இதனால் மேரி ஒரு முடிவு செய்தார் . அவளது அப்பாவின் உறவுக்காரர்கள் கிராமங்களில் பெரும் பண்ணைகாரர்களாக இருந்தனர். அவர்களது குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்து அதன் மூலம் கல்விக்கான தொகை சேர்ப்பது என முடிவு செய்தார்

ஆனால் அங்கு போன பின் மேரி வெறும் பணக்கர பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லித்தராமல் ஓய்வு நேரங்களில் கிராமத்திலிருக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஒரு மரநிழலில் அமரவைத்து சொல்லிகொடுத்தார்..
ஒரு நாள் இதை பார்த்தான் கரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி

யார் இந்த கரீஸ் மிஸ் இவன் தான் நாயகனோ என அவசரப்பட்டுவிடவேண்டாம் .. இவன் வில்லன்
மேரி வேலை செய்த அவளது பண்ணை வீட்டு முதாளியின் ஒரே மகன். பட்டணத்தில் படித்து கொண்டிருந்த அவன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போதுதான் மேரியை பார்த்தான். மயங்கிவிட்டான்.மேரியை மயக்க வீட்டுக்குள் வளைய வந்தான்.

வீட்டில் மேரிக்கு ஒரு சின்ன அறை .படிப்பு சொல்லிதரும் நேரம் போக மீத நேரத்தில் அறிவியல் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு தனக்கு கொடுக்கப்ட்ட அந்த சின்ன அறையில் மேரி படிப்பாள். அந்நேரம் பூனை போல அறையை சுற்றி வந்து ஜன்னல் கதவை திறந்து நோட்டமிட்டு கள்ள சிரிப்பு காண்பித்தான் கரீஸ் மிஸ்.. சின்ன பெண் தானே அவளும் எத்தனை முறைதான் ஓடி ஒளிவாள்

அடிக்கடி அறையின் ஜன்னல் கதவை அவன் திறக்க ஒருநாள் இவள் மனக்கதவும் திறந்துகொண்டது.

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அந்த நாட்டிலும் அந்தஸ்து வித்யாசம் பார்த்தனர். பண்ணை வீட்டு முதலாளியும் வீட்டில் வேலை செய்பவர்களும் வேறு வேறு. ஒட்டவே முடியாது..?
மகனிடம் இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது என உறுதியாக சொல்லிவிட்டாள்..அந்த பண்க்கார அம்மா . அத்தோடு மேரிக்கு வேலையும் போனது. ஊருக்கு திரும்பினாள்.மகளது மன வாட்டத்தை புரிந்துகொண்டார் அப்பா கடன் பட்டாவது பணம் தருகிறேன் பிரான்சுக்கு படிக்க போ என கட்டளையிட்டார். ஆனால் மேரி கேட்கவில்லை .காரணம் அவள் தன் காதலனை உறுதியாக நம்பினாள். எப்படியும் காதலன் திரும்ப வருவான் கைபிடிப்பான் என காத்திருந்தாள்

ஆனால் சினிமாக்களில் நடப்பது போலத்தான் மேரி வாழ்விலும் நடந்தது . அவன் இப்படி ஏமாற்றுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. மேரி நொறுங்கிபோனார்.. ஆனால் அடுத்த நிமிடமே வாழ்க்கை இதுவல்ல இந்த தோல்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார்போல தன் பணக்கார அத்தையும் அவளது மகனும் மனம் நொந்து தன்னை இழந்தமைக்காக வேதனை படுவதை காண விரும்பினார். அதற்கு அவர் முன் இருந்த ஒரே ஆயுதம் படிப்பு . அறிவியல் மீதான் ஈடுபாடு .அடுத்த நிமிடமே தன் அப்பாவிடம் பிரான்சுக்கு போக ஏற்பாடு செய்ய சொன்னார்

1893ல் பவுதீகத்திலும் , 1894ல் கணிதத்திலும் பட்டம் வென்றார்.
இச் சமயத்தில்தான் தன்னை போலவே அறிவியல் துறையில் ஈடுபாட்டுடன் இருந்த பியர் க்யூரியை மேரி சந்தித்தார். இம்முறை இதயம் கலப்பதற்குமுன் அறிவு கலந்தது.மூன்று வருடம் பரிசோதனை கூடத்தில் இருந்த போது இல்லாத காதல் பிரியநேர்ந்த முதல் கணத்தில் முளைத்துக்கொண்டது . காதலை உணர்ந்த கணமே கல்யாணமும் செய்துகொண்டார்கள் .


அதன் பிறகு கண்வன் மனைவி இருவரது முழு வாழ்க்கையும். அறிவியலுக்காக அர்ப்பணிப்பு செய்யப்ட்டது. தங்களது கண்டுபிடிப்புகள் மூலம மனித வாழ்க்கைக்கு பெரும்பேற்றை உயர்வினை உண்டாக்க இருவரும் முழு மூச்சாக ஈடுபட்டனர் உடல் பரிசோதனைக்கு ஊடுருவும் கதிர் வீச்சுகளையும் அதற்கான தனிமத்தையும் கண்டுபிடிக்க அவர்கள் தங்களை சோத்னை கூடத்திலேயெ வதைத்துகொண்டனர் .அதன் பலனாக அவர்கள் உடல் பெரும் பாதிப்புக்குள்ளானது.

1898 ம் ஆண்டு ஜூலை அவர்கள் கடும் உழைப்புக்கு வெளிச்சம் உண்டானது .கணவன் மனைவி இருவரும் பல்வேறு ஆய்வாளர்கள் அறிஞர்கள் மருத்துவர்கள் மத்தியில் த்ங்களது கண்டுபிடிப்பை வாசித்தனர்.
போலந்து எனும் தாய்நட்டின் பெய்ர் குறிப்பிடும் வகையில் அவர்கள் கண்டுபிடித்த தனிமத்துக்கு வைத்த பெயர் போலோனியம் . இதை சொன்ன அடுத்த நிமிடம் அறிஞர்கள் பெரும் கரவொலி எழுப்பி இருவரையும் கவுரவபடுத்தினர் இதனை தொடர்ந்து அவர்கள் இருவ்ரும் இணைந்து ரேடியம் எனும் த்னிம்த்தை கண்டுபிடித்த்னர், இந்த தனிமத்திலிருந்து பிரித்தெருக்க்ப்டும் கதிர் வீச்சுக்ள் மருத்துவத்துறையில் எக்ஸ்ரே கருவிக்கு பயன்படுத்தபட்டு வருகின்றன.

1903ம் ஆண்டு ஸ்வீடிஷ் அரசாங்கம் பவுதிகத்துறைக்கான இவர்களுக்கான கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசை வழங்கியது. வாழ்க்கை முழுக்க ஆராய்ச்சிக்காக அவர்கள் அர்ப்பணித்த காரணத்தால் இந்த பரிசை வாங்க ஸ்டாக்ஹொம் நகருக்கு செல்வத்ற்கான பணம் கூட அவர்களிடம் இல்லை. மாண்வர்கள் ஒன்றிணைந்து அவர்களாக பணம் திரட்டி அனுப்பி வைத்தனர். அடுத்த சில நாட்களில் கணவர் பியர் க்யூரி சாலையில் ஒரு குதிரை வண்டி ஏறி மரணமடைந்தார்.இதனால் பெரும் துயர் மேரியை சூழ்ந்தது.

எட்டு வருடங்களுக்கு பிறகு 1911ம் ஆண்டு வேதியியல் துறையில் ரேடியத்தை கண்டுபிடித்த்மைக்காக இரண்டவது முறையாக நோபல் ப்ரிசை பெற்றார். இம்முறை தனியாளாக அந்த பரிசை வாங்கி இறந்த கணவருக்கு
சமர்ப்பணம் செய்தார் .மட்டுமல்லாமல் நோபல் பரிசை பெற்ற முதல் பெண்மணி என்ற பெயரும் பெற்றார்.உலகம் முழுக்க மேரியின் பெயர் எதிரொலிதது . எந்த ரேடியத்தை க்ண்டுபிடிக்க அவர் பாடுபட்டாரோ அதுவே அவரது உயிருக்கும் உலை வைத்தது .1934ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் இறந்து அந்த நாளுக்கு பெருமை சேர்த்தார்.

அவர் இறந்தபின் அவர் ரேடியத்துக்காக நிறுவிய பல்கலைகழகத்தின் முன் அவரது பிரம்மாண்ட உருவச்சிலை ஒரு பெண்னின் போரட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உயிர்தியாகத்தையும் பெருமை படுத்தும் விதமாக நிறுவப்பட்டது .

அந்த சிலையருகே ஒருநாள் வயதானவர் ஒருவர் வந்து கண்ணீர்மல்க கையில் ரோஜா பூவுடன் வந்தார் .. அவர் வேறு யாருமல்ல அந்தஸ்து காரணமாக திருமணம் செய்ய மறுத்த மேரியின் தன்னெழுச்சிக்கு வித்திட்ட மேரியின் முன்னாள் காதலர். க்ரீஸ்மிஸ் ச்ரோவ்ஸ்கி

June 7, 2011

செம்மொழி சிற்பிகள் 4 : மங்கலங்கிழார்

மங்கலங்கிழார்
பிறப்பு: 1895


தமிழ் வளர்க்க பதினோரு ஊர்களில் பள்ளீக்கூடங்களை கட்டி கால்நடையாகவே அந்த ஊர்களுக்கு சென்று தமிழ் கற்பித்து தந்த தமிழ் தொண்டர் .அரகோணத்தை அடுத்த புளியமங்கலம் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை குப்புசாமி, தாயார் பொன்னுரெங்கம் அம்மாள். பெற்றோர் இவருக்கு சூட்டிய பெயர் குப்பன்.

புளியமங்கலத்தில் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரை படித்த கிழார் பின்னர் சகோதரியுடன் சென்னை வந்தவர் பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் தன் கல்வியை தொடர்ந்தார். பொருளாதார சுமை காரணமாக தொடர்ந்து கல்வி பயில வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டபோது தச்சு வேலை செய்யதுவங்கினார்.ஆனாலும் அவர் மனம் தன்னால கலவியை தொடர முடியவில்லையே என ஏங்கிட துவங்கியது. இச்சூழலில் சென்னையில் சேஷாசலம் என்பவர் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் இலக்கண இலக்கியம் கற்றுத்தருவது கேள்விப்பட்டு மங்கலம்கிழார் அவரிடம்சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.அவரிடம் தமிழை கற்றதோடு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து இரவு பள்ளிகளை துவக்கினார்.பகலில் தச்சு பணி இரவில் கல்விபணி இரண்டையும் செய்துவந்தார்.

கலாநிலையம் எனும் இதழை துவங்கி சிலகாலம் கட்டுரைகள் எழுதிவந்தார்.
அதேபெயரில் நாடக குழு ஒன்றும் துவங்கி நாடகங்கள்நடத்தினார். கா.ரா கோவிந்தராச முதலியார் இல்க்கண புலி என அக்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.அவரிடம்தான் கிழாரும் இலக்கணங்களை கற்று தேர்ந்தார்.அந்த பெருமகனாரே கிழாரை பெரம்பூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சேர்த்துவிட்டார்.அங்கு பதினைந்து ஆண்டுகள் பணி புரிந்தபின் அப்பணியை விட்டு வெளியேவந்தவர் ஞானம் தேடி இலக்கில்லமல் அலைய துவங்கினார்./ செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின்நட்புகிடைக்க அவர்மூலம் சைவ வைணவ இலக்கியங்களை கற்றபின் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக துவங்கியது.இக்காலத்தில் சின்மயானந்தர் அறிமுகம் கிடைதது. அதன்பிறகு இனிமக்கள் சேவைதான் உயர்ந்த ஆன்மீகம் என்பதை உணர்ந்து மீண்டும் தன் சொந்த கிராமம் புளியமங்கலம் திரும்பினார்.

அத்ன் பிறகுதான் அவரது வாழ்க்கையின் இரண்டாம் பகுதி துவங்கியது
ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை எனும் ஊரில் முதல் பள்ளிக்கூடத்தை துவங்கினார். பின் அத்னையே தலைமையிடமாகக்கோண்டு அறநெறித்தமிழ்க்கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.அத்னமூலம் பதினாறு ஊர்களில் தமிழ் பள்ளிகளை துவக்கினார்.மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொருபள்ளிக்கும் கிழாரே நடந்து சென்று மாணவர்களுக்கு தமிழ் கற்றுதந்தார். 1946ம் ஆண்டில் குருவராயபெட்டையில் இக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.பன்மொழிபுலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், தலைமையிலும் அடுத்த ஆண்டு அறிஞர் மு.வ அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. தன் பள்ளியில் படித்த மாண்வர்களை புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார். அதில் தேசிய நூற்றுக்கணக்கானோர்க்கு ஆசிரியப்பணி கிடைதது.

தமிழகத்தின் வடக்கு எல்லை பிரச்னை ஏற்பட்டபோது சித்தூர் மாவட்டம் த்மிழநாட்டுக்கு தேவை என போராடி சிறைசென்றார்.இரண்டு தமிழர் மாநாடுகளை இதன்பொருட்டு கூட்டினார்..இப்பிரச்னைதொடர்பாக தமிழ்நாடும் வட எல்லையும் எனும் நூல் எழுதினார். அது மட்டுமல்லாமல் நன்னூல்,நளவெண்பா ஆகியவற்றிற்கு உரை எழுதினார்.

இறப்பு: 31-08-1953

June 2, 2011

துள்ளல் இசை உலகின் புதிய இளவல்: ஜஸ்டின் பைபர்


துள்ளல் இசை உலகின் புதிய இளவல்: ஜஸ்டின் பைபர்

நம்மூரில் ஜஸ்டின் என்றதுமே எம்ஜீ ஆரின் கடைசி கால படங்களில் ஆறடியில் ஆஜானுபகுவாக வந்து அடிவாங்கும் அந்த வில்லனைத்தான் நினைவுக்கு வரும் ..
ஆனால் நான் இங்கே சொல்ல வருபவன் ஒரு பதினேழு
 வயசு பொடிப்பையன்.

. முழுப் பெயர் ஜஸ்டின் பைபர்

இன்னைக்கு  அமெரிக்கா மட்டுமல்ல உலக இளையஇதயங்களின்
  சூப்பர் ஸ்டார் . நான்கு மாதங்களுக்கு முன் வெளியான பேபி ஆல்பம் கடைகளில் விற்றுத் தீர்கிறது.

உலகம் முழுக்க இவனுக்கு எங்கு சென்றாலும் படு பயங்கர வரவெற்பு. இவனது மேனேஜர்கள்.  இந்த பொடியன் தங்குவதற்காக ஓட்டல் புக் பண்ணுகிறார்களோ இல்லையோ தவறாமல் ஒன்று புக் பண்ணுகிறார்கள். அது அந்த நகரத்தின் மருத்துவ மனைகளில் சில படுக்கைகள்.. காரணம்

எங்கு சென்றாலும் கூட்ட நெரிசல் காரணாமாக குறைந்தது ஐந்து ஆறு பேர் விபத்துக்குளகிவிடுகிறார்கள். அவர்களை தூக்கி செல்வத்ற்காக ஆம்புலன்சையும் ஸ்ட்ரெச்சரும் பயணத்தில் தவைர்க்க முடியாத பொருட்களாகிவிட்டன. அந்த அளவுக்கு இவன் வேகமாக பரவி வரும் சூப்பர் ஸ்டார் .

சமீபத்திய யூ ட்யூப் ஹிட் கணக்குகளின் படி ஜஸ்டினின் சமகால பாப் ஸ்டார்களான எமினம், ரெஹெனா, பியோன்சி,ப்ரிட்னி ஸ்பியர்ஸ்மற்றும்,ஏகொன்,ஆகியோரை ஜஸ்டினின் இந்தவருட பேபி அனாயசமாக பின்னுக்கு தள்ளியிருகிறது

இதுவரை மொத்தம் 55 கோடிக்குமேலோனார் கண்டுரசித்திருக்கின்றனர் . இவருகு அடுத்த நிலையில் எமினம் 34 கோடியிலும், ரிஹானா 17 கோடி சொச்சத்திலும், பியான்சி பிரிட்னி ஸ்பியர்ஸ் அகோன் ஆகியோர் இவர்களுகு அடுத்த நிலையிலும் இருக்கின்றனர். என்பது ஆச்சரயமான கூடுதல் தகவல்.


நண்பர் ஒருவர் இவனைபற்றி சொன்ன போது முதலில் நான் நம்பவில்லை. முதன் முதலாக இவனது பேபி பாடலை பார்த்தபோது இவன் மேல் பொறாமையும்  எரிச்சலும் என்னுள் பொங்கி பிரவகித்தது .

 இந்த வயசில்  பெண்களை தட்டுவதும் கிள்ளுவதுமாக என்ன அனாயசமா டீல் பண்ணுறான்  என்ன துணிச்சல் என பொறுமினேன் .. பிறகு காலையில் எழுந்தவுடன் பல் விளக்குத்ற்கு முன் இவன் பாடலைகேட்டு சார்ஜ் ஏற்றிக்கொண்டபிந்தான் கொஞ்ச நாளாக வேலை செய்து வருகிறேன்

நான் மட்டுமல்லாமல் சமீபமாக என்னுடன் திரைப்பட பணியில் பங்கேற்கும் உதவியாளர்களும் ஒன்றாக பணீயை துவக்குவத்ற்குமுன் இப்பாடலை முதலில் யூ ட்யூபில் போட்டு பார்த்துவிட்டுத்தான் எங்கள் கச்சாத்துக்களை வெளியில் எடுக்கிறோம் . பாடலை கேட்கும்போது அந்த அளவுக்கு உற்சாகம் ஒரு ஆறு போல உடம்பில் ஊறி திளைக்கிறது கிட்டதட்ட எங்களுக்கு குடும்ப பாடல் போல ஆகிவிட்டது .

 1994ல் மே 1ம் தெதி கனடாவின் ஒண்டாரியோ பகுதியை சார்ந்த லண்டன் எனும் சிறுநகரத்தில் பிறந்த ஜஸ்டின் பிற்பாடு அடுத்திருக்கும் ஸ்ட்ராபோர்டில் வளர்ந்துள்ளான். பிறப்பால் யுதன் . இவன் அம்மா இவன் பிறக்கும்போது ரொம்ப கஷ்டடபட்டார்களாம் .கஷ்டம் என்றால் நம் ஊர் போல சாப்பட்டுக்கே வழியில்லை என்றெல்லாம் இல்லை. கார் இல்லை என அர்த்தம் அவ்வளவே . இது புனையப்பட்ட கதையா தெரியவில்லை .

ஆனால் இவன் பாடல்களீல் வரும் சபால்டன் கிளாஸ்   வார்த்தைகள் காரணமாக இவன் சிறுவயதில் தெரு சிறுவர்களுடன் அதிகமாக பழகக் கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளான் என்பதூவும் ,வறுமையான் சூழலில்தான் வளர்ந்துள்ளான் என்பதூவும் நம்பக்கூடியதாக இருக்கிறது

.ஆனாலும் இன்னொரு பெண்ணிடம் குடும்பம் நடத்தி வந்த அப்பாவை அடிக்கடி சென்று பார்த்து தன் துவக்ககால இசை ஆர்வத்துக்கான பணத்தை பெற்றுள்ளான் . பின் 2007ம் வருடம் பன்னிரடாம் வயதில் சொந்த ஊர் ஸ்ட்ராபோர்டில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாக தானே இசையமைத்து பாடியிருக்கிறான் .

அந்த பாடலை அவன் அம்மா புதுசாக ஒருவெப்சைட்டை துவக்கி குடும்ப நண்பர்களுக்காக அதில் போட்டிருக்கிறாள். இச்சமயம் ஸ்கூட்டர் ப்ரவுன் எனும் இசை வியாபாரி புதிய ஆட்களை அறிமுகப்படுத்துவதற்காக இணையத்தில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்.எதேசையாக ஜஸ்டின் அம்மாவின் வெப்சைட்டை கிளிக்க மறுநாளே அவன் ஜஸ்டின் வீட்டுக்குள் அமர்ந்து அம்மாவின் சம்மதம்பெற்று முதல் ஆல்பத்துக்கு ஒப்பந்ததம் பொட்டுவிட்டார் . அட்லாண்டாவில் ஒளிப்பதிவுக்கு அம்மாவுடன் விமானத்தில் பரந்தான் . ஒன் டைம் எனும் முதல் பாடலே பெரிய ஹிட்      பில் போர்ட் நிறுவனத்தின் 100 சிறந்த பாடல்கள் பட்டியலில் 17ம் இடத்தை பிடித்தது. அடுத்து வந்த ”ஒன்லஸ் லோன்லி கேர்ள்” லவ் மீ என அடுத்தடுத்த பாடல்களும் பெரிய ஹிட் டாக அதன்பிறகு ஜஸ்டினின் வாழ்க்கையில் எல்லாமே சிக்ஸர் மழை. பந்து அதுவாக பட்டு அதுவாக சிக்ஸருக்கு தாவி பறப்பது போல காலம் அவனை புகழ் கிரேனில் தூக்கிசென்றுவிட்டது . ஓபாமாவின் ஒயிட் ஹவிஸில் பிரபல பார்வையற்ற பாப் கலைஞனான ஸ்டீவ் வொண்டருடன் இணைந்து பாடுமளவிற்கு புகழ்க் கொடி ஏறியது.கடந்த வருட கிராமி விருது விழாவின் துவக்கமே லயோனல் ரிச்சியுடன் சேர்ந்து இவன் பாடும் பாடலில் தான் என்பதும் இவனுக்கு கிடைத்த மற்றொரு சிறப்பு . மற்றபடி சிறு வயதிலேயெ அதிக புகழை சேர்த்துவிட்ட இந்த இசை பொடியனை பற்றி அதிகமாக பேச விடாதபடி மனம் பொறாமயால் பொம்முகிறது. என் பொறாமைக்கு காரணமான இவனது அதிக பிரபலமான பாட்டான ”பேபி” பாட்டை நீங்களும் இந்த இணைப்பில் கண்டு கேட்டு காது வழியாக புகையை வெளியே தள்ளுங்கள்

http://www.youtube.com/watch?v=kffacxfA7G4

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...