கவிதை என்பது யாதெனில்...
பாகம் 3
அஜயன்பாலா
உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்
1229 ;பொருளதிகாரம் ; தொல்காப்பியம்
”அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்துதணிந்தது காடு –தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
பாரதியின் மேற்சொன்ன வரிகளை எப்படி வகைப்படுத்தலாம் ?
செய்யுளா? அல்லது பாடலா? அல்லது கவிதையா?
எதுவாக இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் உண்மை
இதற்குள் கவித்துவம் அபராமாய் உறைந்திருக்கிறது.
அதே சமயம் மரபுக்குட்பட்ட எல்லா செய்யுள்களிலும் அல்லது கவிதையிலும் கவித்துவம் இருக்குமா ?
அதேபோல் கவித்துவம் என்பதற்கான அளவுகோள்கள் என்ன
பாடுபொருளை நேரடியாக சொல்லக்கூடிய கவிதைகளை அல்லது செய்யுட்களை எப்படி வகைப்படுத்துவது என்றெல்லாம் கேள்விகள் நமக்கெல்லாம் எழலாம்
ஆனால் இதற்கான பதிலை அத்தனை திட்டமாக கூறிவிடமுடியாது
காலம்தோறும் கவிதையின் முகம் மாறிக்கொண்டேயிருக்கிறது
ஆனால் எந்த செய்யுள்களில் பாடலில் அல்லது கவிதையில் கவித்துவம்
தொக்கியிருக்கிறதோ அவை காலம் தோறும் மனிதமனத்தை இன்புறசெய்து தன்னையும் தமிழையும் காப்பாற்றிக் கொண்டுவருகின்ற்ன.
இதனை எளிமையாக சொல்வோமானால் பூக்கள் எல்லாவற்றிலும் வாசம் இருப்பதில்லை
ஆனால் வாசம் மிகுந்த பூக்கள் தன்னில் ஒருகவர்ச்சியை தக்கவைத்து மனித உணர்ச்சிகளோடு நெருங்கி அமர்ந்துவிடுகின்றன.
பூக்களின் வாசனை போலத்தான் கவிதையில் கவித்துவம் உறைநிலையில் வார்த்தைகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் கவிதைகள் காலங்கள் கடந்தும் தம் இளமையை தக்கவைத்துக்கொள்கின்றன.
கவித்துவம் என்பதை விளக்க வார்த்தைகளில்லை அது அனுபவம் சார்ந்தது.
மனித உணர்ச்சிகளினூடே இருவேறு அறிவுலகங்களுக்குள் நடக்கும் புணர்ச்சி என அதனை கூறலாம்
ஒருவன் தனக்கு தெரிந்ததை சில வார்த்தைகள் மூலம் கொடுக்கிறான்
இன்னொருவன் அத்னை வாசிப்பதன் மூலம் எடுத்துக்கொள்கிறான்
எடுப்பவனும் கொடுப்பவனும் வேறுகாலத்தில் வேறு வேறு வெளியில் இருக்கின்றனர்
எனவே சொற்கள் மூலம கவிதை அவர்களுக்கிடையில் பாலத்தை அமைத்து உணர்ச்சியையும் அனுபவத்தையும் கருத்தையும் கடத்துகிறது.
இது எவ்வளவுக்கெவ்வளவு ஒரு படைப்பாளனுக்கும் வாசிப்பவனுக்குமிடையில் ஒரு அணுக்கமான அளவில் நடைபெறுகிறதோ அவ்வள்வுக்கவ்வளவு அந்த கவிதை காலங்களை கடந்து செல்லும் தகுதியை பெறுகிறது.
அப்படி அணுக்கமாக கவித்துவத்தை கடத்தும் பாடல்களில் ஒன்று பாரதியின் மேற்சொன்ன அக்கினி குஞ்சொன்று பாடல்
ஒரு தேசத்தின் விடுத்லை உணர்ச்சி கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த காலத்தில் அம் மக்களிடையே தேசப்பற்றையும் போராட்ட உணர்வையும் தட்டி எழுப்ப உருவாக்கப்பட்ட பாடல்
வந்தே மாதரம் சுதந்திர பள்ளு என பாரதி இதுபொன்ற பாடல்கள் பல எழுதியிருப்பினும் இந்த நான்கு வரி பாடல் காலத்தால் மெருகேறிக்கொண்டேவருவதற்கு காரணம் அதனுள் உறைந்து நிற்கும் கவித்துவம்
தான் சொல்லவந்த கருத்தை நேரடியாக கூறாமல் வேறொன்றை கூறி அதன் மூலம் மேலும் ஆழமாக நம் மனதில் அக்கருத்தை பதிய வைப்பதன் பொருட்டு இப்பாடலில் பாரதி பயன்படுத்திய சொல் மற்றும் காட்சி படிமங்கள் ஆகியவை கவித்துவத்தின் சாரத்தை கண்டுணர ஏதுவாக இருக்கின்றன.
இந்த படிபங்களினூடேதான் பாடலின் இறைச்சி பொருளானது வார்த்தைகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
மேற்சொன்ன பாடலில் ஒரு விடுதலைக்கான போரில் இளையோனும் மூப்போனும் வேறில்லை உணர்ச்சியின் வேகம் ஒத்தகையது தான் எனகூற வரும் பாரதி அதற்கு உவமையாக அக்னி துண்டம் ஒன்றை குறிப்பிடுகிறார்.
பொறியாக இருந்தாலும் பெரும் சுவாலையாக இருந்தாலும் அக்னியின் வேகமும் அத்தகையது என கூறுகிறார்.
இது நேரடியான காட்சி உவமை. அத்தோடு நில்லாமல் அக்னி எனும் சொல்லோடு குஞ்சு என்ற பதத்தையும் சேர்க்கிறார் .குஞ்சு என்பது பொதுவாக பறவை குஞ்சுகளை குறிக்கும் சொல்
நெருப்புதுண்டத்தை அக்கினிகுஞ்சொன்று என சொல்வதால் அதற்கு ஒருபறவையின் சித்திரம் மெல்ல நம் மனதில் உருக்கொள்கிறது மேலும் அக்கினி குஞ்சொன்றை ... கண்டேன் எனும்போது நெருப்பின் அஃக்றிணைத் தன்மை முழுவதுமாக விலகி அத்ற்கு உயிர்த்தனமை கூடுகிறது . மேலும் அதை அவர் பொந்தில் வைத்தாக கூறும்போது அந்த அக்கினிக்குள் ஒருபறவையின் இயங்குதனமை முழுமையாக சேர்ந்துவிடுகிறது . பொந்து என்பது பறவைகளின் இருப்பிடம் என்பது ஏற்கனவே நம் அறிவில் பொதிந்த சேதியாதலால் வாசிப்பனுபவத்தில் நாமறியாமல் பறவையின் சிறகடிப்பு அதன் பறக்க தவிக்கும் எத்தனிப்பு இவையும் அந்த நெருப்புதுண்டத்துக்கு சேர வரிகள் மனதில் ஒரு உயிரியக்கத்தை துவக்கிவிடுகின்றன.
இப்படியாக கவிப்பிரவாகத்தினூடே குஞ்சு மற்றும் பொந்து சொற்களின் மூலம் ஒரூ உவமானம் தொடர்ந்து அதன் பொருத்தபாடான இன்னொரு உரிப்பொருளை சில வார்த்தைகள் மூலம் சேர்த்துக்கொண்டு இரண்டும் ஒன்றுடன் ஒன்றாக இறுகி ஒரு கட்டிடக்கலைஞனுக்கான தேர்ந்த நுணுக்கத்துடன் கவிஞனின் தன்னியல்பில் வார்த்தைகூட்டங்களுடன் பீறிட்டுவெளிக்கிளம்பிவரும்போது அவை படிமமாக நமக்குள் தேங்கி உயிரியக்கம் கொள்ள துவங்குகின்றன. .
அடுத்த வரி ”வெந்து தணிந்தது காடு” எனும்போது அந்த பறவையின் இயக்கத்துடன் கூடிய தன்னை அழித்து பெரும்படையை அழிக்கவல்ல ஒரு போராளியின் பிம்பம் நம்முள் நாமறியாமல் இறங்கிவிடுகிறது. ஆனால் மனதின் இத்தனை செயல்பாடும் உணர்ச்சி அளவில் நம்முள் ஆழத்தில் செயல்படுவதால் அதன் தாக்கத்தை மட்டுமே நாம் உணருகிறோமே ஒழிய அறிவின் மேல் தளத்தில் வைத்து இது எதனால் உண்டாகிறது என யோசிப்பதில்லை..
இப்படியாக ஏற்கனவே வாசகனுக்குள் இருக்கும் ஞாபக அடுக்குகளை சில வார்த்தைகளின் மூலம் பயன்படுத்திக்கொள்கிறபோது பிரதிக்குள் கவிதை இன்பம் ஒளிந்திருந்து நம்மை மீண்டும் மீண்டுமாய் வாசிக்க தூண்டிவிடுகிறது
அதேபோல இக்கவிதையில் சொல்லப்பாடத சேதி ஒன்று காட்சி இன்பத்தின் காரணமாக இருக்கிறது .
இக்காட்சி இன்பத்தை பற்றி சுலபமாக விளக்க திரைப்பட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவரிப்பது சற்று சுவாரசியமாகவும் இருக்கும் என நம்புகிறேன்
..
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு.
எனும் முதல் மூன்று வரிகளில் பாரதி நான்கு காட்சிகளை சுட்டுகிறா.
ர்
1.”அக்கினி குஞ்சொன்று கண்டேன்”
முத்லாவது- மிட்ஷாட் -அக்கினி குஞ்சு
2.”அதனை அங்கொரு காட்டிடை”
இரண்டாவது- ஹை –வைட் ஆங்கிள் ஷாட்- பிரம்மாண்டமான காடு
3. ”பொந்தொன்றில் வைத்தேன்”
மூன்றாவது- க்ளோசப் ஷாட்- காட்டில் ஒருமரத்தின் பொந்து .அப்பொந்தில்
அக்கினி குஞ்சை ஒரு கை அங்கு வைக்கிறது
4.”வெந்து தணிந்தது காடு””
நான்காவது –”வெந்து தனிந்தது காடு”
இப்போது காமிராபுகைமூட்டத்தின் நடுவே மெல்ல இடமிருந்துவலமாக நகர்ந்தபடி அசைகிறது அந்தபிரம்மாண்டமான காடு இருந்த இடம் இப்போது
முழுவதும் கருகி சாம்பல் காடாக அணைந்தும் அணையாமலும் புகை மண்டிக் காண்ப்படுகிறது..காமிரா இப்போது உயரஎழுந்து கருகிகிடக்கும் மூழுபரப்பையும் காண்பிக்கிறது.
ஒரு முழு காடும் எரிகிறபோது உண்டாகும் பெரும் காட்டுத்தீயின்
சுவாலை, தீயின் வெம்மை ,அது எரிந்து அணைவதற்கு உண்டாகும் காலம் ஆகிய எத்னையும் ஆசிரியர்விவரிக்க வில்லை .
ஆனால் அந்த அனுபவம் நம்முள் ஒரு ஆழ்ந்த கனபரிமானத்தை தோற்று வித்து கவிதையின் பாடுபொருளான நமக்குள் உறைந்துகிடக்கும் வீரத்தையும் தேசப்பற்றையும் அது இயல்பாகவே விசுவரூபமெடுக்கசெய்வதாக இருக்கிறது.
(தொடரும்