July 7, 2017

ஹாலிவுட் வளர்ந்த கதை

               அமெரிக்க சினிமாவாவை பொறுத்தவரை  அதன் ஸ்டூடியோ சிஸ்டங்கள்தான் அதன் ஆதார கட்டமைவு. அதனை முழுமையாக புரிந்துகொள்ளாமல் ஹாலிவுட்டை புரிந்துகொள்வதென்பது சற்று சிரமமான விஷயமே.

               அந்த ஸ்டூடியோ சிஸ்டம் உருவாகிக்கொண்டிருந்த காலத்தில் இரண்டுவிதமான மாற்றங்கள் அமெரிக்காவில் துரிதமாக நடைபெற்றன. ஒன்று முதல் உலகப்போருக்கு பின் அமெரிக்க பொருளாதாரம் அடைந்த அபார வளர்ச்சி, இரண்டாவதாக புதிதாக அமெரிக்காவைத் தொற்றிய ஜாஸ் கலாச்சாரம்

திடீர் பொருளாதார மாற்றம் மக்களை கட்டற்ற உற்சாகத்தில் திளைக்க வைத்த காரணத்தால் வாழ்க்கை முறை தறிகெட்டு ஓடத்துவங்கியது.
வழக்கமான நீதி போதனை திரைப்படங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு
வன்முறை செக்ஸ் தூக்கலான படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டானது. இதனையொட்டி  கத்தோலிக்க குருமார்கள் திரைப்பட துறைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் (1934-1954) ஹாலிவுட்டை தங்களது முழுமையான கட்டுக்குள் வைத்திருந்தனர்

இந்த பகுதியில் அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பாக அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஹாலிவுட்டின் அமைப்பு என்னவாக இருந்தது என்பதையும் முன்னோட்டமாக அறிந்து கொண்டு பிற்பாடு  இத்தகவலை அறிவது நம்மை முழுமையான புரிதலுக்கு அழைத்துச்செல்லும் என நினைக்கிறேன்.
MPPC   யின் தோற்றமும் சிதைவும்

               MPPC  என சுருக்கமாக அழைக்கப்படும்  மோஷன் பிக்சர் பேடண்ட் கம்பெனி எனும் அமைப்பு தான் முதல் உலகப்போருக்கு முன்பாக அமெரிக்க சினிமாவை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி வந்தது .இது குறித்து உலக சினிமா வரலாறு பகுதி ஒன்றில் தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் வாசகர்களின் வசதிக்காக மீண்டும் ஒருமுறை சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

               சினிமா துவக்கக் காலத்தில் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகிய அளவுக்கு தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை பெருகவில்லை . அப்போது ஏக போக அரசனாக இருந்தவர் தாமாஸ் ஆல்வா எடிசன் மட்டுமே,  மற்றும் சில குட்டி தயாரிப்பாளர்கள் இருந்தாலும்சினிமா கருவிக்கான காப்புரிமை எடிசன் வைத்திருந்த காரணத்தால் பலராலும் அவர் சொன்ன விலைக்கு வாங்க முடியாமல் தவித்தனர். இதனால் உரிமை இல்லாத போலிக் கருவிகளை வாங்கி பலரும் மறைமுக படத்தயாரிப்பில் இறங்கினர். அதே சமயம் தியேட்டர்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான சினிமாக்கள் தேவைப்பட, இதனால் பல இடைத்தரகர்கள் முளைத்தனர் . அவர்கள் இந்த கள்ள நிறுவனங்களின் சினிமா பிரதிகளை வாங்கி தியேட்டர்களுக்கு விநியோகித்தனர்.

               இது எடிசனுக்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணியது.  மட்டுமல்லாமல் இத்தோடு எடிசன் படத்தையே அவருக்கு தெரியாமல் பலர் போலி பிரிண்ட் எடுத்து தற்போது திருட்டு விசிடி போல தியேட்டர்களுக்கும் விநியோகித்தனர்.

   
            இந்த பிரச்னைகளுக்கு முற்று புள்ளி வைக்க விரும்பிய தாமஸ் ஆல்வா எடிசன் அப்போது தன் தொழிலில் போட்டியாளராக விளங்கிய டிக்சனை சந்தித்தார். இந்த டிக்சன் யாருமல்ல எடிசன் நிறுவனத்தில் முன்னாள் ஊழியராகப் பணியாற்றி சினிமா கருவிகளைக் கண்டுபிடிக்க முழு முதற்காரணமாக இருந்தவர் . பிற்பாடு எடிசனிடமிருந்து பிரிந்து அமெரிக்கன் ம்யுட்டாஸ் கோப் எனும் புதிய கம்பெனியை உருவாக்கி தொழிலில் இன்னொரு பெரிய ஆளாக வளர்ந்து எடிசனுக்கே தலைவலி உண்டாக்கியவர் . (பார்க்க முதல் தொகுதி மௌனயுகம் )

               பெருகி வரும் போலிகளை கட்டுப்படுத்த எடிசன் வேறு வழியே இல்லாமல் தன் போட்டியாளர் டிக்சனை சந்தித்து பேசினார் . அவருடன் ஸ்டார் பிலிம் கம்பெனிபதே போன்ற பதினாறு குட்டி தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து கொள்ள அசையும் படங்களுக்கான காப்புரிமை எனும் Motion Pictures Patent Company  எனும் நிறுவனத்தை தோற்றுவித்தார்கள்.

இதுதான் MPPC உருவான கதை ..

               இந்த நிறுவனம்  கோடாக் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டு மேற்படி அமைப்பில் உள்ள நிறுவனங்கள் தவிர வேறுயாருக்கும் பிலிம் நெகட்டிவ் விற்பனை செய்யக்கூடாது என்றும் அப்படி விற்பனை செய்தால் இந்த நிறுவங்கள் யாரும் கோடாக்கோடு வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஒரு கிடுக்கிப்பிடி போட அதுமுதல் போலிகள் குறையத்துவங்கி ஒட்டு மொத்த அமெரிக்க சினிமாவும் MPPC யின் முழுமையான கட்டுபாட்டுக்கு வந்தது.

இது பழைய கதை  முதல் உலகப்போருக்கு முந்தியது

ஆனால் போர்க்காலத்திலேயே இந்த காட்சிகள் மாறத்துவங்கின
               தனிப்பட்ட நிறுவனங்கள் பூதாகரமாய் வளரத்துவங்க ஒவ்வொன்றாய் MPPC யிலிருந்து பிரிந்து செல்லத் துவங்கின. போருக்குப் பின் ஊதிப்பெருகிய அமெரிக்க பொருளாதாரம் பெரும் பணமுதலீடுகளுக்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டதுவால் ஸ்ட்ரீட், ஸ்டூடியோக்களில் பெரும் பணத்தை முதலீடு செய்ய விரும்பியது. மேலும் கம்யூனிச வளர்ச்சிக்கு எதிராக முதலாளித்துவத்தை, அமெரிக்கத்தனத்தை வளர்க்க வேண்டிய அதன் அரசியல் நிர்பந்தம் காரணமாக அதன் கண்ணுக்கு உடனடியாக தென்பட்டது அப்போதைக்கு ஆரோக்கியமாக இருந்த சினிமா தொழில்தான். உண்மையில் முதல் உலகப்போர் அமெரிக்க சினிமாவுக்கு அடித்த யோகம் என்றும் சொல்லலாம் போரில் பங்கேற்காத காரணத்தால், அதைத் தொடர்ந்து சினிமாவைத் தயாரித்து ஐரோப்பியா முழுக்க வியாபாரத்தை விரிவடையச் செய்தது. அதே சமயம் போரில் தீவிரமாக இருந்த காரணத்தால் ஐரோப்பியாவில் சினிமா தொழில் முழுவதுமாக சீர்குலைந்திருந்தது.  

               போரில் கவனம் செலுத்த வேண்டி வந்த காரணத்தால்  திரைப்பட உலகம் சோர்ந்திருந்த  இந்தச் சூழலை அமெரிக்கா சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து நகைச்சுவைப் படங்களாக இறக்க ஐரோப்பிய மக்கள் கதைட்டி ரசித்து அமெரிக்க சினிமாவுக்கு உலகம் முழுக்க பெரிய சந்தையை உருவாக்கித் தந்தனர்


               இந்தச் சூழலில்தான் வால் ஸ்ட்ரீட் எனப்படும் அமெரிக்க பங்கு சந்தைகளிலிருந்து இந்த ஸ்டூடியோக்களுக்கு அதிக  பணம் முதலீடு செய்யத் துவங்கினர்குறித்த காலத்தில் படத்தை எடுக்க வேண்டும் . திட்டமிட்ட செலவுக்கு மேல் போகக்கூடாது. திரைக்கதையில்  என்ன எழுதப்பட்டதோ அதிலிருந்து இம்மியும் மாறக்கூடாது, போன்ற விதிகள் இக்காலத்தில்தான் தோன்ற ஆரம்பித்தன. அதுவரை இயக்குனர்களின் கையில் இருந்த சினிமா மெல்ல தயாரிப்பாளர்களின் கைக்கு மாறத்துவங்கியது

               இப்படி ஒருபக்கம் சினிமாவின் உள் கட்டமைவில் பல மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்க உடன் புற கட்டமைவிலும் பலவித மாற்றங்கள்
இம்முறை மத குருமார்கள் ஆதிக்கம் சினிமாவை புறத்திலிருந்து கட்டுப்படுத்த துவங்கியது. நேரடியாக வாட்டிகனிலிருந்தே அமெரிக்கப் பாதிரிகளுக்கு கலாச்சார சீர்கேடுகள் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
லெஜியன் ஆப் டீசன்ஸி எனும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழு மூலம் நாடு முழுக்க சினிமாவால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் படி குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் வல்லமை முழுமையாக சினிமாவின் கையில் இருப்பதாக  ஒரு தலையணை சைசுக்கு ஒரு புத்தகத்தை தயாரித்துக் கொடுக்க அது கத்தோலிக்க குருமார்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தை உண்டாக்கியது. உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கினர்.

      1934ல் இந்த இந்த அமைப்பு  கத்தோலிக்க மற்றும் யூத குருமார்களுடன் இணைந்து நாடுமுழுக்க திரைப்படங்களை புறக்கணிக்கும் புதிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததுஇதனைத்தொடர்ந்து திரைப்பட தொழிலுக்குத் திடீர் சரிவுகள் உண்டாகத்துவங்கின . இதனை உடனடியாக உணர்ந்து சுதாரித்துக்கொண்ட தயாரிப்பாளர்கள், திரைப்படங்களைக் கண்காணிக்கும் அரசு சார்ந்த குழுவில் பாதிரிகளையும் சேர்க்க முடிவெடுத்தனர்இதன் படி ஜோசப் எல் க்ரீன், மற்றும் டேனியல் ஏ லார்ட் ஆகிய இரு கத்தோலிக்க பாதிரிகள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அமெரிக்க சினிமா எப்படி இருக்க வேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் வகையில் சில சட்ட திட்டங்களை கொண்டுவந்தனர்.
அதன் படி கீழ்க்கண்ட சட்டங்கள் அமுலுக்கு வந்தன.

1.   கதைப்படி திருமணம் செய்த தம்பதிகளாக இருந்தாலும் அவர்கள் படுக்கையில் இருப்பது போன்ற காட்சிகள் காண்பிக்கக் கூடாது.
2.   பாலுறவு ,கற்பழிப்பு , சரசம் மற்றும் முத்தக்காட்சிகள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.  கதைக்கு அவசியம் காண்பித்தே ஆகவேண்டும் என்பதாக இருந்தால் அப்பொழுது முடிவில் அவர்கள் அக்குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட்து போன்ற காட்சிகள் அமையவேண்டும்.
3.   பாலுணர்வை தூண்டக்கூடிய ஆடைஅவிழ்ப்பு அல்லது ஆபாச உடையுடன் கூடிய நடனங்கள் மற்றும் விபச்சாரம் போதை வஸ்துக்களை பயன்படுத்துவது போன்றவை கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும்.
4.   எந்த மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும் காட்சிகள் புனையக்கூடாது.
5.   மிருகங்கள் குழந்தைகள் ஆகியவற்றை துன்புறுத்துவது போல காட்சிகள் கூடாது.
6.   குழந்தை பிறப்பது போன்ற காட்சிகள் காண்பிக்கக் கூடாது.
7.   கிரிமினல் காட்சிகள் குறிப்பாக துப்பாக்கிகள் போன்வற்றை காண்பிக்கக் கூடாது.
8.   அதுபோல கிரிமினல்கள் கையால் போலீஸ் அதிகாரிகள் சாவது போல காட்சிகள் இருக்கக் கூடாது.
9.   படத்தில் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பாத்திரங்கள் இறுதியில் தண்டனை அடைவது போல காண்பிக்கப்பட வேண்டும்.
10. கதைக்கு அவசியமில்லாத நிலையில் தற்கொலை மற்றும்
கொலைக்காட்சிகள் தவிர்க்கப்படவெண்டும்

இந்த சட்டதிட்டங்களைக் கண்காணிக்க PCA எனும் அமைப்பு நிர்மானிக்கப்பட்டு அதன் தலைவராக பாதர் ப்ரீண் அமைக்கப்பட்டார்.
ப்ரீண் கையெழுத்து மற்றும் PCA வின் முத்திரையில்லாமல் ஒருபடம் வெளியாக முடியாதபடிக்கு அப்போதைய தயாரிப்பாளர் கூட்டமைப்புடன் ஒரு இறுக்கமான ஒப்பந்தம் ஒன்றை PCA அமைப்பு போட்டுக்கொண்டது. 1934இல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் அடுத்த இருபது வருடங்கள் அதாவது 1954 வரை ஹாலிவுட்டை தன் கிடுக்கிப்பிடியில் வைத்திருந்தது.

        PCA இந்த பணியைச் செவ்வனே செயலாற்ற சில முக்கியமான நடவடிக்கைளை மேற்கொண்டது அதன்படி,
1.   படத்தயாரிப்புக்கு முன்பாக கதை பற்றி அமைப்பின் தலைவரான பாதர் ப்ரீண் அவர்களிடம் ஒரு அமர்வு உட்கார வேண்டும்
2.   அதற்கு முன்பாக முழுவதுமாக எழுதப்பட்ட திரைக்கதை இந்த அமைப்பில் சமர்ப்பிக்கப் படவேண்டும்.
3.   அமர்வில் உண்டாகப்படும்  மாற்ங்களை திரைக்கதையில் செய்துகொள்ள எழுத்தாளர்கள் சம்மதிக்க வேண்டும்.
4.   அது போல திரைக்கதை மட்டுமல்லாமல் படப்பிடிப்புத்தளத்திலும் உடைகள் மற்றும் காட்சி அமைப்பிலும் தொடர்ந்து கண்காணிக்க
PCA அமைப்புக்கு முழு அனுமதியும் தரவேண்டும் .
5.   படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் PREVIEW எனப்படும் முன் திரையீடு PCA அமைப்புக்காக பிரத்யேகமாகத் திரையிடப்பட வேண்டும்.
6.   இந்தத் திரையிடலின் போது அமைப்பிலிருந்துவரும் இருவருடன் படத்தில் திரைக்கதையில் சம்பந்தப்பட்ட இருவருடன் முற்றிலும் புதிய நபர் ஒருவரும் பத்தை அமர்ந்து பார்வையிடுவார்.
7.   அமைப்புக்கும் படக்குழுவுக்கும் பிரச்னை வரும் காட்சிகளின் போது மூன்றாமவர் கருத்து பரீசீலிக்கப்படும்.
8.   குறிப்பிட்ட காட்சி ஆட்சேபகரமானவை என அமைப்பு உறுதி செய்தால் அவற்றை முழுமையாக நீக்கியபின்தான்  மீண்டும் அமைப்பு வெளியீட்டு சான்றிதழ் தரமுடியும்.
இந்த சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு தயாரிப்பாளர்கள் படமெடுக்கத்  துவங்கினர்.

இதன் காரணாமாக அவஸ்தை என்னவோ திரைக்கதை எழுதுபவர்களுக்குத்தான்.

அவர்களது கற்பனைகளுக்கு இடப்பட்ட வேலிகாரணமாக திரைக்கதைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையாகவே உருப்பெற்றன.

உதாரணத்துக்கு காதல் படங்கள் என்றால் இறுதிக்காட்சி வேறு வழியே இல்லாமல் கல்யாணம் பண்ணியே தீரவேண்டும்.

கொஞ்சம் பாலுறவு தூக்கலாக நடித்தால் குறிப்பிட்ட நடிகரோ நடிகையோ இறுதியில் நோய்வந்து சாக வேண்டும்.


இத்தனை கட்டுப்பாடுகள் கொண்டு வந்த காரணத்தால் சமூகத்துக்கு ஒரு நன்மை உண்டானது என்றால் அது சில முக்கியதிரைப்படங்கள்.

       குறிப்பாக டென் கமாண்ட்மண்ஸ் மற்றும் பென்ஹர் போன்ற மதம் சார்ந்த திரைப்படங்கள் அதற்குமுன்வரை வெறும் செக்ஸ் படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு பெருமளவில் பணம் சம்பாதித்துவந்த இயக்குனர் சிசிலி பி டெமிலி தான் இந்த திடீர் சட்டதிட்டங்களால் முதலில் தாக்குதலுக்கு ஆளானவர். கத்தோலிக்க குருமார்களின் பார்வையும் அவர் மீதுதான் பதிந்தது. மத குருமார்களின் கண்டன கனைகள் கடித வடிவில் அவரது வீட்டுக்கே வந்தன .

இனி ஆபாசத்தை நம்பி பிழைப்பு ஓட்ட முடியாது என்ற இக்கட்டான நிலை அவரை சுற்றி சூழவே, இனி தன் தொழிலை காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் அவர் பக்தி மார்க்கத்துக்கு திரும்பினார். ஆனால் பிற்பாடு அதுதான் அவரை உலகப்புகழுக்கு அழைத்துச் சென்றது.

MPC யின் இந்த புதிய விதிகளால் உண்டான இன்னொரு பயன் ஸ்டுடியோ கட்டமைவு.

இன்று வரை அமெரிக்க சினிமாவுக்கு அடிப்படை தூணாக விளங்கும் இந்த ஸ்டூடியோ அமைப்பு  இந்த விதிகளால்தான் உருவானது.
திரைக்கதையை முன்கூட்டி சமர்ப்பிக்க வேண்டும்.
அதை ஆய்வு செய்ய தனி கமிட்டி
அதன் முடிவுக்கு பின்பே இயக்குனர் தீர்மானிக்கப்படுவார்.
படம் முடிந்தபின் இதர விஷயங்களில் குறிப்பாக  படத்தொகுப்பில் இறுதிகட்ட தீர்மானம் மற்றும் விளம்பர வர்த்தகங்களில் தயாரிப்பாளர்கள் முதன்மை பணியில் செயல்படுவது மாதச்ம்பளத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நடிகர்களை பணியமர்த்துவது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டது.,  இப்படியாகத்தான் முழு கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இக்காலத்தில் இயக்குனரைக்காட்டிலும் படத்தின் எழுத்தாளர்கள் பல விஷயங்களை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள்

முதலில் MPC  அமைப்பில் திரைக்கதையை முடிவு செய்த பின் குறிபிட்ட எழுத்தாளர்தான் நடிகர்களை தீர்மானம் செய்வது துவங்கி படத்தில் இன்ன ஷாட் இப்படியாகத்தான் வரவேண்டும் என்பது வரை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருந்தனர் . இக்காலத்தில் இயக்குனர் என்பவர் ஒரு வகையில் மேஸ்திரி போலத்தான்
இயக்கப்பட்டு வந்தனர் .


1933 லிருந்து 1945 வரை கிட்டத்தட்ட 70,000 படங்கள் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டன அத்துணை படங்களும் மேற் சொன்ன விதிகளுக்கு கட்டுபட்டே எடுக்கப்பட்டு வெளியாகின .
(  உலக சினிமா வரலாறு பாகம் இரண்டு மறுமலர்ச்சியுகம் தொகுப்பிலிருந்து  )

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...