July 12, 2017

கடந்து போகும் சாயங்காலம்

நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாம் விதி  கவிதை தொகுப்பு (1999) க்கு நான் எழுதிய   முன்னுரை
         சொற்கள் ஒரு மயக்கத்தை முன்வைத்து ஒன்று கூடும் போது கவிதையாகிறது. மயக்கம் சிலரிடம் கவிதைக்குள் நிகழ்கிறது. சிலரிடம் வாசக அனுபவத்தில் நிகழ்த்தப்படுகிறது. மொழியால் கட்டமைக்கப்படும் கவிதைகள் தன் மயக்கத்தை அல்லது ஒரு மறதியை வேண்டுகின்றன. பிரிதொன்றில் இது வாசகனிடம் தீர்மானமாக உருவாக்கப்படுகிறது.

இங்கே மயக்கம் என்பது ஒரு பரவசம் அல்லது எண்ணத்தில் ஒரு அதிர்வு அல்லது மனதில் விழும் ஒரு ஒலித்துண்டு

இத்தகைய கவிதைகள் பெரும்பாலும் நம் ஞாபகத்தில் தொலைந்த ஒரு கூழாங்கல்லைத் தேடி எடுப்பதிலும் பிற்பாடு அது வாசக அனுபவத்தின் மூலம் ஒரு வைரமாக்க முயல்வதிலும் வெற்றியடைகின்றன.

முத்துக்குமாரினுள் அபரிமிதமான ஒரு தச்சன் இருக்கிறான். அவன் மொழியைக் காட்டிலும் அனுபவத்தையே ஓயாது இழைத்து வருகிறான்

தேவை ஏற்படுகிற போது தன் அனுபவக் காடுகளினூடே டார்ச் அடித்தபடி அலைந்து திரிந்த எல்லோருக்கும் பொதுவான அரிய காட்சி சில்லுகளைத் தேடி எடுக்கிறான்.

நாம் மறந்தாலும் நாம் கடந்து வந்த துயரங்களின் ஈரங்கள் ஒரு போதும் உலர்வதில்லை

முத்துக்குமார் அவற்றை தன் கவிதைக் கொடிகளில் உலர்த்துகிறார். உடன் பிறந்த சகோதரிகள் யாருமற்ற சூழலில் அவருடைய ஏக்கங்கள் தானாக சொற்களாக மாறிவிடுகின்றன

தலையணைக்குள் பஞ்சுகளினூடே சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் தம்பியின் சட்டைகள் தோற்றுவிக்கும் அனுபவத்தைப் போல, முத்துக்குமாரின் கவிதைகள் நம்மை ஒரு பழைய ஞாபகத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.

நாம் அப்போது அம்மா, அப்பா, தம்பி, தங்கை என புறவாசல் திறந்து கிடக்கும் ஒரு பழைய வீட்டிற்குள் ஒரு சாயல் காலத்தை கடந்து கொண்டிருந்தோம்.

காலங்களில் மழை நம்மை மெளனமாக்கியது. போர்வைக்குள் கனவுலகம் விரிந்தது. வெயில் நம்மை விளையாட்டிற்கு வெளியே அழைத்தது. வந்து சாப்பிட்டு போகச் சொல்லி நம் பேரைச் சொல்லி அழைக்கும் அம்மாவின் குரல் இன்னும் ஓயவில்லை

முத்துக்குமாரின் கவிதைக்குள் அது கேட்கிறது. அக்காக்களின் விரல்கள் நம் தலையைத் தடவுகின்றன.

நான் வளர்ந்த காஞ்சிபுரத்தை ஒட்டிய அதே களத்தை வேறு யாரிடமும் திரும்பப் பெறாத சூழலில் முத்துக்குமாரிடம் நான் வசிகரம் கொண்டது இதனால் தான்

முத்துக்குமாரின் பெரும்பாலான கவிதைகளைப் போலவே இருக்கிறது அவரது எளிமையான வாழ்வு. முத்துக்குமாரின் தம்பியைப் போல எனக்கொரு தம்பி இல்லையென பலமுறை நினைத்திருக்கிறேன்.  நெகிழ்ச்சியான சகோதரர்களுக்கிடையேயான புரிதல் பலசமயம் எனது பால்யத்தை நினைவுபடுத்தியிருக்கிறது

வீடு, வீடு இருக்கும் வீதி, வீதிகள் நிறைந்த ஊர், விளையாடும் சிறுவர்களின் குரல்கள், கோயில் கோபுரங்களில் இருந்து பறக்கும் புறாக்கள், மொட்டைத் தலையுடன் குளத்தில் குளிக்கும் டூரிஸ்ட் பெண்களின் முலைக் காம்புகள் என எனது அனுபவங்களையே முத்துக்குமாரின் கவிதைகளில் பார்க்கிறேன்.

என்னை யெளவனத்தில் இருந்து பால்யத்திற்கு அழைத்துச் செல்லும் முத்துக்குமார் மீண்டும் என்னை பால்யத்தில் இருந்து குழந்தமைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பட்டாம்பூச்சி விற்பவனுக்கு பிறகு மொழியின் வழித்தடத்தில் இத்தொகுப்பு நீண்ட தூரம் முன் நகர்ந்து சென்றிருக்கிறது. ஒரு தனி அனுபவம் உலக அனுபவமாகும் சாத்தியம் முத்துக்குமாருக்கு வசப்பட்டிருக்கிறது.

வாழ்த்துகளுடன்

அஜயன் பாலா
டிசம்பர்’99

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...