July 20, 2017

டினோசர்- 94,- சிறுகதை,

டினோசர்- 94
ஒரு வரலாற்றுக்கதை

கதை சொல்லிக்கான சில உரிமைகளுடன் இக்கதையின் மூலாதார ரகசியம் குறித்து அடியேன் பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியம் இருப்பதன் காரணமாகத் தங்களின் அனுமதி வேண்டித் தண்டம் சமர்ப்பித்து நான் சொல்லபோகும் இச்சம்பவத்தைக் கூர்ந்து செவிகட்குமாறு நிர்பந்திக்கிறேன்.

      சில நாட்களுக்கு முன் சவிஸ்தாரமாய் மவுண்ட் ரோட்டில் கைவீசி நடக்குங்கால் சட்டென எதிர்பட்டு  “அடடேஎனக் கையைப் பிடித்துக் கொண்டார் அந்த நண்பர். உடும்புப்பிடி என்பார்களே அப்படி ஒரு பிடி. மனுஷனுக்குக் கொஞ்சநாள் மிலிட்டரி சகவாசம் உண்டு போல.

      உம்மைத்தான் பார்க்கணும்னு நெனச்சுண்டிருந்தேன் எனக் கூறி சம்பிரதாயமான சில அசல குசல விசாரிப்புகளை முடித்துக் கொண்டு  ச்டக் கென இடுப்பிலிருந்து ஒரு கத்தியை உருவினார் ஆசாமி.

      எனக்குக் கதை சொல்லும் ஞானம் அத்தனைப் போறாது என்றும், தன்னிஷ்ட்த்திற்கு வெற்று கற்பனைகளை வார்த்தைகளாகக் கொட்டி விட்டால் கதையாகிவிடுமா என்றும் அங்கலாய்த்துக் கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன் என் பத்திரிக்கை அனுபவம் குறித்து இலக்கியச் சஞ்சிகையொன்றில் நான் எழுதிய கதை குறித்துதான் மனுஷன் இப்படி விளாசித் தள்ளுகிறார் என்பதை நொடியில் ஜீரணித்துக் கொண்டேன்.

      பதிலுக்கு நானும் யதேஷ்டமாய் ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டு “ஆங்கானும்என்றபடி ,ஒரு காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசினா இன்னும் ஜோரா இருக்குமே “ எனக் கட்டையை கொடுத்தேன்.

      ஓ அதுக்கென்ன?.......என்றபடி இடதுகைச் சுட்டுவிரலைக் கட்டை விரலுடன் மேல்சட்டைப் பாக்கெட்டில் நுழைந்து நோட்டம் விட்டபடி கடைக்குள் என்னை பின் தொடர்ந்தார்.

    சூடாக இருந்த காபித் தம்ளரைக் கையிலெடுத்துகொண்டு  கொஞ்சம் குனிந்தார் போல் உதட்டண்டை எடுத்துச் சென்றபோது, “உமக்கெல்லாம் கொஞ்சம்கூட சமூக அக்கறையே இல்லைஎன ஒரு போடு போட்டார், காப்பி வாங்கிக் கொடுத்த சாக்கில்.

      மனுஷன் எந்த வகையான  ஆசாமி என்பதை இனம் கண்டுகொண்ட சந்தோஷத்துடன் நானும் மேலே சொன்னதைப் பொருட்படுத்தாமல் தம்ளரைக் காலி பண்ணிக்கொண்டிருந்தேன்.

      பில்லைக் கொடுத்த மனுஷன் மீதிச் சில்லறைக்காகக் காத்திருக்கும் சமயத்தில் இடுப்பிலிருந்து இன்னொரு கத்தியை உருவினார்.

   சாண்டில்யனுடைய  ஜலதீபம் படித்தீருக்கிறீரா........
    என்ன இந்த ஆசாமி சமூக அக்கறை என்கிறான், சம்பந்தமே இல்லாமல் சாண்டில்யன் என்கிறான், ஒரே குழப்பமான் ஆசாமியாய் இருப்பான் போலிருக்கே.... இன்னைக்குத் தீர்ந்தோம் என மனசுக்குள் நினைத்தவாறு,
    என்ன சென்னீர் சாண்டில்யானா?.....என நான் கேட்க,
    என்ன உமக்குச் சாண்டில்யனைத் தெரியாதா ?
   
    மனுஷர் உண்மையிலேயே அதிர்ச்சியில் உறைந்து விட்டார். சுத்தமாகத் தெரியாது என்று சொன்னால் செத்தே போய்விடுவார் போலக் காட்சியளித்தது அவருடைய முகம்.

    ஓ! இந்த ராஜாக்களைப் பத்தியெல்லாம் கதை எழுதுவாரே அவரை சொல்கீறீங்களா”- என நான் சுதாரித்த அடுத்த நிமிடம்,

    மனுஷனுக்கு முகம் ஜிவு ஜிவு எனச் சிவப்பாக ரத்தம் கொட்டியது.

     ஹா......சரித்திரம். உமக்கு அத்தனை இளக்காரமா?...அது எழுதறது அப்படி ஒண்ணும் லேசுபட்ட காரியமில்ல தெரியுமா உமக்கு?.......... முடிந்தா நீர் ஒரு சரித்திரக் கதை எழுதிப் பாரும், அப்பத்  தெரியும் உம்ம லட்சணம்.........மேல்மூச்சு இழுத்துக் கொண்டது அன்னாருக்கு.

   சரி... சரி........ என்ன சொல்லிட்டேன், இதுக்குப்போய் இவ்வளோ கோப்படறீங்களே........என இரண்டு எட்டு ஜகா வாங்கி சல்போட்டா சலாம் போடாத குறையாய், நான் ஒன்னும் தப்பாப் பேசிடலையே சாண்டியல்யனா என்று கேட்டேன்.அதுக்குப் போய் இப்படி டென்ஷனானா எப்படி....?

  ம்”.........என்றபடி குழந்தைபோல் முகத்தை தூக்கிக் கொண்டார்.


சரி நீங்க சொன்னாப்படி நானும் ஒத்துக்கறேன் ..உங்களுக்கு ஒரு சரித்திரக்கதை எழுதவோணும் அம்புட்டுதானே
  ம்........அவர் முகத்தில் சுரத்து இன்னும் குறையவில்லை
  
  ம்.......சொன்னால் மாத்திரம் போதாது, எவ்வளவு பந்தயம்னு சொல்லணும்

   அந்தச் சமயத்தில் வீட்டு வாடகைப் பிரச்சினை சம்பந்தமா அடியேனுக்கு ஒரு ஐநூறு ருபாய் அவசரமாகத் தேவைப்பட்டது. ஆசாமிக்கு ஒரு சரித்திரக் கதை எழுதி காண்பித்தால் கதைக்கு கதையுமாச்சு, ஐநூறுக்கு ஐநூறுமாச்சு. ஆசாமியும் மறுப்பேதுமில்லாமல் ஒத்துக்கொண்டார். அவர் ஒத்துக்கொள்வார் எனத்தெரிந்துதான் அவரைப் பந்தயத்திற்கே நான் அழைத்திருந்தேன். ஐநூறு ரூபாய்க் கனவு, பின்னங்காலைப் பிராண்ட.......அவசர அவரமாய் வீடு வந்து சேர்ந்து, பேனா பேப்பர் சகிதமாய் மொட்டை மாடிக்குச் சென்று மூச்சிறைக்கப் பார்த்ததுதான் மிச்சம்.

   ராஜா ,ராணி.....குதிரை.
   ராஜா ,ராணி....ஜாக்கி.

      ச்சே....என்ன எழவுடா இது இங்கேயும் இந்தச் சீட்டாட்டம் வந்து கழுத்தை அறுக்கணுமா. கமலத்துக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான் குரவாளைய நெரிச்சிடுவாள்.

      எத்தனை முறை யோசித்தாலும் இதைத் தவிர மனசில் வேறெதுவும் தோன்றக் காணோம். நாளைக்கே எழுதிக் காண்பிப்பதாகச் சவால் வேறு.

      ராஜா,ராணி,குதிரை...இந்த மூன்றுதான் திரும்ப ஒடிக்கொண்டிருந்ததே ஒழிய ஒரு ராஜபேரிகையோ, ஜதிபல்லக்கோ எதுவுமே தோன்றக் காணோம் சம்பந்தமே இல்லாமல் குதிரைக்குப் பதில் அவ்வப்போது, வினோத பிராணி டினோசர் வேறு வந்து வந்து சென்றது. அப்போதுதான் மின்னலடித்தது போல் மனசுக்குள் சட்டென்று ஒரு ஐடியா.

      சில வருடங்களுக்கு முன்பு மெட்ராசில் ஜீராசிக் பார்க் படம் ரீலீசாகி சத்யம் தியேட்டரில் தூள் கிளப்பிக்கொண்டிருந்த போது அப்போது இருந்த சமூக அரசியல் சூழலை வைத்து ஒரு கதை எழுத வேண்டுமென்று யோசனை பண்ணியிருந்தேன். அது இப்போது ஒர்க்கவுட் ஆகும் போலத் தெரிந்தது.

      சரித்திரக் கதைக்கு ராஜாக்கள் மட்டும்தான் இருக்கணுமா? ஏன் முதல் மந்திரி, ஜில்லா கலெக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லம் இருக்கக் கூடாதா? அஞ்சு வருஷனாலும் கடந்துபோன காலம் எல்லாமே சரித்திரக் கணக்குத்தானே....இப்படியாக எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு அந்த கதையை எழுத ஆரம்பித்தேன்.

      நதிமுலம் ரிஷிமூலம் ஆகியவற்றைத் தொடர்ந்து கதைமூலம் என்றும் மூணாவதாக சேர்த்து கொள்ளலாம். அந்த அளவிற்கு ஒப்பானதான இந்த ஜீவ பிரம்ம வேதாந்த ரகசியத்தை ஒரு நெருக்கடியின் காரணமாக உங்களிடம் சொல்லியிருக்கிறேன் சகாக்களே.

      ஆகவே நீங்களும் படம் வெளியான் 94 ஆம் வருடத்து மெட்ராசை மனதில் சித்திரமாக வரைந்து இக்கதைக்குள் பிரவேசித்து வாசகானுபவம் பெறுவீரானால் அதுவே அடியேனின் விண்ணப்பமும் என கூறி கோடானு கோடி தண்டம் நமஸ்து.

     


வருஷம்  1994


      சென்னை சத்தியம் தியேட்டர். நகரத்திலிருக்கும் முக்கால் வாசி உல்லாச பிரியர்களுக்கு மெளண்ட் ரோட்டில் இருக்கும் சத்தியம் தியேட்டர் சர்வ பிரசித்தம். காலேஜ் கட் கோஷ்டிகளுக்கு கிட்டத்தட்ட இது ஒரு கோடை வாசஸ்தலம் மாதிரி.

      சாதாரண இங்கிலீஷ் படத்திற்கே கூட்டம் கூட்டமாய் ஜீன்ஸ்கள் கும்மியடிக்கும் தியேட்டர் இது. ஸ்பீல்பெர்க் டைரக்ட் செய்து உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஜீராசிக் பார்க் படமென்றால் கூட்டத்திற்கு சொல்லவா வேண்ணும். படம் ரிலிசாகி இருபது நாளான பிறகும் அன்றைய பதினோரு மணி காட்சிக்காய் தியேட்டர் வாசலில் கூட்டம் முதல் ஷோ போல ரொம்பி ரோடு வழிந்து கொண்டிருந்தது. ஆனால் தியேட்டர் உள் வாசலோ இன்னும் திறந்த பாடில்லை. வழக்கமாக இந்த நேரத்திற்கெல்லாம் பீஹாரில் வெள்ளம் ஒடி வந்தியிருக்க வேண்டிய சமயம்.

      லேட்டுக்கு காரணம் ஏதாவது அல்ப விஷயமாக இருக்கும் என ஜனக் கூட்டமும் நாகரிகம் பேணி கிடைத்த அவகாசத்தில் காதல் செடி வளர்த்துக் கொண்டிருந்தனர் .ஒன்னா, ரெண்டா, எத்தனைக் கூட்டம். அத்தனை பேரையும் சமாளிப்பது என்ன அத்தனை சாமானியமா என்ன?
  
      இத்தனைக் கூட்டமும் நான்கு நாட்களுக்கு முன்னமே ரிசர்வ் செய்து காத்திருப்பது படத்தில் வரும் டினோசர்களை பார்க்கத்தான்.

      அவ்வளவு ஆசையாக பார்க்க வந்து படத்தில் ஒரு டினோசர் கூட இல்லாவிட்டால் அத்தனை கூட்டமும் ஆத்திரத்தில் என்ன செய்யும் என்பதை நீங்களே ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

      நடந்த விஷயம் இதுதான்.

      காலையில் போரடிக்குது என சும்மானாச்சும் படத்தின் கடைசி ரீலை ஒட்டிப் பார்த்த ஆபரேட்டருக்கு பகீரென்றது. காரணம் ஒரு டினோசர் கூட காட்சியில் வரவில்லை. வெறும் மனுஷர்களும் மரங்களும் மட்டுமே நகர்கிறதே தவிர பைசாவுக்கு கூட ஒரு டினோசரையும் படத்தில் காணோம்.

      அடுத்த நிமிஷம் வீட்டிலிருந்த மேனேஜருக்கு விவகாரம் தெரிவிக்கப்பட அவர் அலறிப் புடைத்து ஒடி வந்து படத்தை முழுசாய் ஒட்டிப் பார்ப்பதற்குள் காலை காட்சிக்கு தியேட்டர் முன் இத்தனை கூட்டமும் தயாராய் கூடிவிட்டது.

      அத்தனை டினோசர்களும் எப்படி கம்பி நீட்டி இருக்கும்னுஒரு ஊழியர் அப்பாவியாய் கேட்கப் போக ,முதல்ல இந்த ஜனங்ககிட்ட இருந்து நாம எப்படி கம்பி நீட்டறதுன்னு ஒரு வழியப்பாருங்கப்பான்னு எரிந்து விழிந்தார். இதற்குள் இந்த கம்பி விவகாரம் எப்படியோ வெளியே காத்திருந்த கூட்டத்திற்கு பரவிவிட்டது. பெரிய கலவரமே நடக்க போகிறது என மேனேஜரும் ஊழியர்களும் பயந்து கிடக்க,நடந்ததோ தலைகீழ்.


      வெளியே காத்திருந்த கூட்டத்திற்கு இந்தச் செய்தி படத்தைக் காட்டிலும் அதி சுவாரஸியமான ஆச்சர்யமான விஷயாமாகவே பட்டது. தகவல் காதுக்கு எட்டிய அந்த ஒரு நொடியில் தாங்கள் அன்னைவருமே ஒரு குழந்தைப் பருவத்தை அடைந்துவிட்டதைபோல ஒரு மாதிரியான சந்தோஷத்தை ருசித்தனர்.

      டினோசர் சினிமாவிலிருந்து காணாம போயிடுச்சா? ஒரு விஷேசமான புதிரின் சுவை இந்தச் செய்திக்குள் இருப்பதாகவே அவர்களுக்குத் தோணியது. எல்லாம் ஒரு சில நிமிஷங்களுக்குத்தான். தகவல் ஆதாரபூர்வமானது எனத் தெரியவந்த பிறகுதான் கூட்டத்தினரின் அடி வயிற்றுக்குள் ஒரு கண்ணாடி டம்ளர் சீலீரென உடைந்தது.

      டினோஷர்கள் காணாமல் போன விவரம் குறித்து பலரும் பல மாதிரி பேசிக் கொண்டிருக்க,அரசியல் ஞானஸ்நானம் பெற்ற ஒரு சிலர் இந்த சம்பவத்தில் டி.என்.சேஷனுக்கு ஏதோ விதத்தில் தொடர்பிருக்கிறதென தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள் கூற்றில் ஒரளவு உண்மை இருந்தாலும் சம்பவத்துக்கு மிழு பொறுப்பும் அவர்தான் எனக் கூற முடியாது. நடந்த விவரம் இதுதான்.

      கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தேர்தல் கமிஷன் அதிகாரியான டி.என்.சேஷன் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தேர்தல் சின்னமாக டினோசரை ஒதுக்கியதிலிருந்தே அரசல் புரசலாக அதுப்பற்றி கண்டனங்கள் எழுந்துகொண்டிருந்தன.

      அதிலும் வரும் தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடுவோம் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்த ஒரு பெரிய கட்சிக்கு சேஷனின் இந்த திடீர் நடவடிக்கை மிகுந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணியது.

      ஜீராசிக் பார்க் படம் வெளியான நாள் தொட்டு,பட்டி எல்லாம் டினோசரை சின்னமாகக் கொண்ட எந்த கட்சியும் தேர்தலில் வெகு சுலபமாக ஜெய்த்துவிடும் என அவர்கள் உறுதியாக எண்ணம் கொண்டிருந்ததால், அந்த சதியை முறியடிக்க ரகசியமாக ஒரு ஆலோசனை கூட்டத்தை அவசரமாகக் கூட்டியது. இன்னும் இரண்டே நாட்களுக்குள் எந்த ரூபத்திலிருந்தாலும் டினோசரை அழித்துவிட வேண்டியது. இதுவே அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட ரகசிய திட்டம்.

      இதற்காக அங்கே ஒரு குழுவும் உருவாக்கப்பட பத்து நிமிடங்களுக்குள் தங்களின் அதிரடி செயல்பாடு குறித்த ஒரு பட்டியலையும் செயற்குச் சமர்பித்தது.

      மேற்படி பட்டியலில் எக்மோர் கன்னிமாரா நூலக வளாகத்தில் மியூசியத்தின் எதிரே சர்வ பராக்கிரமமாய் வீற்றிருக்கும் இரண்டு டினோசர் சிலைகளையும் குண்டு வைத்து தகர்ப்பதுதான் அவர்களின் முதல் திட்டம்.

      அதன்படி முந்தின நாள் மதியம் அந்த இடத்திற்கு வேவு பார்க்க சென்ற இருவர் தங்களுடைய திட்டம் குறித்து ரகசியமாக பேசிக்கொண்டனர். இன்று இரவு 2 மணிக்கு இந்த இரண்டு டினோசர்களையும் வெடி வைத்து தகர்த்துவிடுவோம் என்பது அவர்களது பேச்சின் சுருக்கம்.

      இந்த தகவல் எப்படியோ சிலைகளாக நின்றுகொண்டிருந்த இரண்டு டினோசர்களின் காதுகளிலும் விழுந்துவிட இரண்டும் அதிர்ச்சியில் உயிராகிவிட்டன்.

      ஆ.......இதென்ன புதுக்கதை. அதிர்ச்சியில் சில்லைகள் எப்படி உயிராகும் என மகாபுத்திசாலித்தனமாய் நீர் கேட்டீரானால் பதில் இதுதான். மனுஷர்கள் மட்டும் அதிர்ச்சியில் சிலையாகலாம், சிலைகள் அதிர்ச்சியில் உயிராகக் கூடாதோ. நல்லா இருக்கிறதய்யா உம் நியாயம்……

      கேள்வி கேட்காமல் வாயைப் பொத்திக்கொண்டு கதையை மேலே படித்துச் செல்லவும்.

      அதிர்ச்சியில் உயிராகி அந்த ரெண்டு டினோசர்களும் இன்று இரவுக்குள் எப்படியும் எஸ்கேப் ஆகிவிடுவதென முடிவெடித்துக்கொண்டன்.

     
நடுநிசி........

      மியூசியம் எதிரே மஞ்சளான சோடியம் வெளிச்சத்தில் கொட்டும் பனியில் தேமே என நின்றுகொண்டிருந்த இரண்டு டினோசர்களும் சடக்கென கண்விழித்து சுற்றும் முற்றும் திரும்பி ஒருமுறை நோட்டம் இட்டன.
      எங்கும் பேரமைதி.

      பீடத்திலிருந்து காலை மெல்ல அகட்டி புல்தரையில் வைத்தபடி கீழிறங்கிய இரண்டு டினோசர்களும் அடுத்த நான்காவது எட்டில் ரோட்டுக்கு வந்து இடப்பக்கமாகத் திரும்பி தப்பித்தோம் பிழைத்தோமென ஒட்டமெடுத்தன.

      அதே சமயம் ஜிராசிக் பார்க் ஒடிக்கொண்டிருக்கும் மவுண்ட்ரோடு சத்தியம் தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் முடிந்து ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பி,விளக்குகள் அனணக்கப்பட,கிட்டத்தட்ட அந்த பகுதியே இருளில் புதைந்த நேரம்.

      தியேட்டரின் வலப்பக்கக் காம்பவுண்ட் கேட் பக்கமிருந்து ஒரே ஒரு டினோசரின் தலை மட்டும் வெளியே நீண்டு சுற்றும் முற்றும் பார்த்தது. ஆள் அரவம் எதுவும் இல்லை எனத் தெரிந்து கொண்டதும் எட்டிப்பார்த்த அது வெளியே வர அதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக விதவிதமான சைசுகளில் ஒரு ஊர்வலம் போல டினோசர்கள் வெளியே வரத் தொடங்கின. இத்தனை நாளாகத் தியேட்டருக்குள் இருந்து புழுக்கம் தாளவில்லை என்றும் ஒரு சேஞ்சுக்கு இந்த ஊர் எப்படி இருக்கிறது என சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு வெளியே வந்தாகவும் பிற்பாடு ஒரு சமயம் சொல்லிக் கொண்டன.

      கிட்டத்தட்ட ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் போல் அணிவகுத்த டினோசர்கள் தீப்பெட்டி சைசுகளில் இருந்த கட்டிடங்களை சர்வ அலட்சியமாக தாண்டியபடி மவுண்ட் ரோட்டுக்குள் பிரவேசித்தன.அவற்றின் இடுப்பு சைசுக்கு இருந்த எல்.ஐ.சி.கட்டிடத்தின் அருகே வந்ததும் எல்லா டினோசரும் சேர்ந்து ஆட்டம் போட ஆரம்பித்தன. உற்சாக மிகுதியில் சில குட்டி டினோசர்கள் தாராபூர் டவர் மேலேறுவதும் குதிப்பதுவுமாக விளையாடிக் கொண்டிருக்க......

      அதே சமயம் எக்மோர் மியூசியத்திலிருந்து தப்பித்த ரெண்டு டினோசர்களும் மூச்சிரைத்தபடி அவசர அவசரமாச் சிந்தாதிரிப் பேட்டை மார்க்கமாக மவுண்ட் ரோட்டுக்கு வந்தன. ஒரு நிமிஷம் ரெண்டு கோஷ்டியும் ஒன்றையொன்று பார்த்து நின்றன. சூழலைப் புரிந்துகொண்ட மியூசியம் டினோசர்கள் முதலில் பேச்சைத் துவங்கி “நீங்கள் ஜீராசிக் பார்க்டினோசர்கள் தானே?எனச் சந்தோஷத்துடன் கூச்சலிட்டன.

      அவர்களின் இந்த உற்சாகத்தால் கடுப்பாகி போன மியூசியம் டினோசர்கள் இரண்டும் “நல்ல எழவாப் போச்சு. என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு, உங்களால்தான் எங்களுக்கு இந்த நிலைமை, உயிரைக் கையில பிடிச்சுகிட்டு பயந்துபோய் ஒடியாரோம். நீங்க என்னாடான்னா கூத்தடிச்சுக்கிட்டு இருக்கிங்க. என்ன அப்படி முறைக்கிறீங்க. நம்மள சுத்தமா ஒழிச்சிகட்ட ஒரு கும்பலே புறப்பட்டிருக்கு. உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? தெரியலைன்னா சொல்றதக் கேளுங்கஎனக் கூறி நடந்த சம்பவங்களைக் கூற, ஒரு ஆறே ஒடுமளவிற்கு மற்ற டினோசர்கள் அனைத்தும் பயத்தில் சிறுநீர் மழையே பெய்தன.


      உடல் வெலவெலக்க ஒரு டினோசர், இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். தியேட்டருக்குள்யே விளையாடலாம்னு. சொன்னாக் கேட்டாதான் “எனப் புலம்ப ஆரப்பித்தது.

      உஷ்....சைலண்ட் யாரும் சத்தம் போடாதீங்க என்று ஒரு மீயூசியம் டினோசர் கீழே கஜேந்திர விலாஸ் ஒட்டல் பக்கமாக விரலை நீட்ட, அங்கே சர்வர் ஒருவன் கொட்டாவி விட்டபடி மடித்துக்கட்டிய கைலிக்குள் மற்றொரு கையை நுழைத்தபடி இயற்கை உபாதைக்காக வேண்டி கீழே குத்துக்காலிட்டமர்ந்தான்.

      ஒரேயடியாய் நம்மை ஒழித்துக்கட்ட வேண்டி பாம் எடுக்கத்தான் அமர்ந்துள்ளான் என எல்லா டினோசருக்கும் அது எச்சரிக்கை விடுக்க, பயமும் பதட்டமுமாய் மற்ற டினோசர்கள் அனைத்தும் என்ன செய்வதெனத் தெரியாமல் அசுர வேகத்தில் ஒட ஆரப்பித்தன.

      ஆர்ட்ஸ் காலேஜ் பக்கமாக் திரும்பிய டினோசர்கள் கூவம் பாலத்தினருகே வந்ததும்,அந்த மியூசியம் டினோசர் எல்லா டினோசர்களையும் ஒரு நிமிடம் நிறுத்தி “இதைவிட்டால் தப்பிக்க வேறு வழியில்லை,எல்லோரும் குதியுங்கள் எனக் கூறிக்கொண்டே ஒன்றன்பின் ஒன்றன்பின் ஒன்றாய் தொப்....தொப்...பெனக் கூவத்தில் குதித்தன. குதித்த பிறகுத்தான் ஜீராசிக் டினோசர்களுக்கு கூவத்தின் நாற்றம் உறைத்தது.

      ஊர் இருட்டிற்குத் தேவையான கருப்பு திரவத்தை உலகத்திற்கே இனாமாக வழங்கும் ஒரே நதி இது. ஆபத்துக்குப் பாவமில்லை, அட்ஜஸ்ட் பண்ணிக்கொள். மீதி கதையை நாளை.....என உத்தரவிட மற்ற டினோசர்களும் கூவத்தில் மெல்ல இறங்க ஆரம்பித்தன.

      மறுநாள் காலை சத்தியம் தியேட்டரில் நடந்த கூத்துதான் வாசகர்கள் துவக்கத்திலேயே படித்தது. முதலில் ஆச்சரியப்பட்டவர்களை மெல்லக் கிலி பிடிக்கத் தொடங்கியது. எல்லோரும் தங்களுக்குப் பின்னால் பிரமாண்டமாக ஒரு டினோசர் நின்று கொண்டிருப்பதாக எண்ணி பீதியில் திருப்பிக்கூட பார்க்க மனமில்லாமல் பதட்டத்தில் கிருகிருக்க ஆரம்பித்தனர். இரண்டொரு நொடியில் ஒரு பிரளயமே அங்கு துவங்கியது. பொரும் கூச்சலுடன் மூலைக்கொன்றாய்த் தியேட்டரை விட்டு சிதறி ஒடியது கூட்டம். வானத்தில்லிருந்து நெருப்பு துண்டுகள் விழுந்தாற்ப்போல செய்திகளைக் கேட்ட மாத்திரத்தில் மக்கள் பீதியில் அலற,அடுத்த ஐந்தாவது நிமிடம் நகரமே பேய் பிடித்தார்போல் பதரியது.

      பாதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் ஹாரன் சத்தம் கட்டிடங்களைக் கிடுகிடுக்க வைத்தன. போலிஸ் ஸ்டேஷன்களில் வயர்லஸ் அலறியது. தகவல் கோட்டைக்குப் பறந்தது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை பாதியிலேயே நிறுத்தப்பட்டு விடுப்பு அளிக்கப்பட்டன. தகவல் பசியால் வெறிப்பிடித்துக் கிடந்த தனியார் சேனல்களுக்கு இந்தத் தகவல் பெருந்தீனியாக இருந்தது. ஒரு டிராகுலாவுக்கான சந்தோஷத்துடன் தங்களிடமிருந்த பழைய டினோசர் ஸ்டாக்குகளை எல்லாம் எடுத்துப்போட்டு மக்களை மேலும் பீதியுறச் செய்தன.

      எந்த நேரமும் டினோசர்கள் தங்களின் வீட்டுக் கதவைத் தட்டலாம் என்கிற பயத்தில் வீடுகளில் மக்கள் உறைந்து கிடக்க, நகரத்தின் இந்த ராட்சத மெளனம் தாளாமல் ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் போன்ற இதர ஜந்துக்களும் பீதியுற்றுக் கிடைத்த இடங்களில் பதுக்கிக் கிடந்தன.

      இது ஒருபுறமிருக்க மற்றொருபுரம் டினோசர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. போலீசார் ஒருபிரிவாகவும், தீயணைப்புப் படையினர், ஊர்காவல் குழுவினர் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு பல்வேறு குழுக்களாக நகரத்தின் எல்லா மூலைகளுக்கும் அனுப்பப்பட்டனர். ஊர்க்காவல் படையினர் இந்தப்பணியைச் சவாலாக எடுத்துக் கொண்டாலும் டினோசர்களைத் தாங்கள் பார்ப்பது போல அவர்கள் கற்பனை செய்து பார்த்தபோது அது கற்பனைக்கெட்டாத பேரதிசியமாய் தோன்றியது.

      வேன்களின் கூரையிலிருந்து....மெக்கப்போன்களுடன் நகர்ந்து கொண்டிருந்த போலீசார் மறு அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.

      நகரமே இப்படி ஒரு கலவரத்தில் இருக்க இதைப் பற்றி கடுகளவுமறியாமல் டினோசர்கள் கூவத்தில் உறங்கிக் கொண்டிருந்தன.

      நேற்று இரவு ஒடிவந்ததின் களைப்புதான் அவைகளின் இந்த நீண்ட் உறக்கத்திற்குக் காரணமாகும். உறங்கிக் கொண்டிருந்த டினோசர் ஒன்றின் மூக்கில் தவளை ஒன்று புகுந்தது அழிச்சாட்டியம் செய்ய,அதை வெளியே தள்ளும் விதமாகக் கழுத்து நீள,டினோசர் பலத்த உறுமலுடன் தலையைச் சிலுப்பிக் கொண்டு வெளியே நீட்டியது. அந்த நேரம் பாலத்தைக் கடந்து கொண்டிருந்த ஒரு போலிஸ் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்து அதிர்ச்சியில் விக்கித்து சைரன்கள் அலற அடுத்த சில நிமிடங்களில் நகரத்தின் மூலை முடுக்குகளில் திரிந்து கொண்டிருந்த போலீஸ் வாகனங்கள் அனைத்தும் கூவம் நதியை நோக்கிப் படையெடுத்தன. டி.வி.ரேடியோக்களுக்கு விபரம் தெரிவிக்கப்பட அதன்மூலம் விபரமறிந்த பொதுமக்கள் பெரும் திரளாகக் கூவம் நதிக்கரை நோக்கி வாகனங்களில் படையெடுத்தனர். தங்களைச் பெரும் கூட்டம் கூடுவதைக் கண்ட எல்லா டினோசர்களுக்கும் விழிப்புத் தட்டியது. முந்தின இரவு நடந்த சம்பவம் குறித்து அவைகளுக்கு அப்போது தான் ஞாபகம் தட்டியது.

      நரி வாயில் தப்பித்து புலி வாயில் மாட்டிக்கொண்ட கதையாக அனைத்து டினோசர்களும் என்ன செyவதெனத் தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தன. ஒருபுறம் டினோசர்களை எப்படி வெளிக்கொணர்வது எனத் தெரியாமல் போலிஸ் குழப்பிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் மக்கள் கூட்டம் வேறு அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

      பாதுகாப்பிற்காக கரை முழுக்க கட்டைகள் மூலம் அவசர அவசரமாக ஒரு தடுப்பு வேலியைப் போலீஸ் உருவாக்கியதன் மூலம் ஒரளவு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும், கூட்டத்தையும் கூச்சலையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மனித தலைகள்.

      கூட்டத்தினருக்கு டினோசர்களைத் தரிசிக்கும் ஆவல் கட்டுக்கடங்காமல் கொந்தளித்தது. திடுமென ஒரு திருவிழா போல எக்கச்சக்கமான கூட்டம் சேர்ந்துவிடவே அதற்காகவே காத்திருந்தவர்களைப்போல் டினோசர் பொம்மைகளையும், டினோசர் ஸ்டிக்கர்களையும் துரிதமாக அச்சிட்டனர். சில புத்திசாலி நிறுவனங்கள் ஒரு பெரிய அட்டையில் டினோசரையும் அதன் கீழ் தங்களது நிறுவனத்தின் பெயரையும் கொட்டையாக அச்சிட்டு இலவசமாக விநியேகித்தனர். கூட்டத்தின் நடுவே ஒரு மத யானையைப் போல் திடுமெனப் புகுந்து ஆட்டோவிலிருந்து ஒரு அலுமினிய டபராவும் சில கண்ணாடிக் குப்பிகளுமாக வந்திறங்கி பூப்போட்ட ரோஸ் நிறக் கைலியை மடித்துக் கொண்டு காதில் புகைந்த மலபார் பீடியுடன் சேட்டானொருவன் களத்திலிறங்க அடுத்த ஐந்தாவது நிமிடம் சேச்சியின் தலைமையில் அங்கு ஒரு டீக்கடை பரபரப்பாக இயங்கிக்கொடிருந்து. குட்டன்கள் ஐந்தாரு பேர்....புறப்பட்டுப் பல திக்குகளுக்குச் சாயா சப்ளை செய்து கொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவே எக்கி, டினோசர்களைப் பார்த்தபடி கரையிலிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் டவுசர் தெரிய வேட்டியை மடித்துக் கட்டிய அண்ணாச்சி ஒருவர் தலைக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலித்துக் கொண்டு படிக்கட்டுகளின் வழியே மொட்டைமாடிக்கு அனுப்பிக் கொண்டிருந்தவர், அங்கிருந்து பார்த்தால் டினோசர்கள் 3டி எபெக்டில் தெரியிமென்றார். மேலேறி பார்த்த மக்களுக்கும் டினோசர்களை தரிசித்த கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இறங்குவதாகப் போடப்பட்டிருந்த ஏணியை விடுவித்துக் கழிவு நீர் சிமேண்ட் குழாய்களைப் பிடித்துக் கொண்டு சர்.....சர்.....ரென கீழே குதித்தனர்.

      இந்த தீடீர் வியாபாரத் தந்திரத்தைக் கண்டு விக்கித்துப்போன பக்கத்துக் கட்டிட அண்ணாச்சியொருவர் கட்டணத்தைப் பாதியாக தலைக்கு ஐம்பது பைச்சாவாக, குறைத்து தன் படிகட்டுக் கதவுகளைத் திறந்து விட்டார். போதாக்குறைக்குத் தன் கடையிலிருந்த கால் டவுசர் பையகள் இருவர் மூலமாகத் தெருவிலிருந்து கொண்டு கூட்டத்தினரை நோக்கி கூவி அழைக்கச் செய்து கூட்டமனைத்தையும் தன் பக்கமாக ஈர்த்துக் கொண்டார்.

      அதன்பொருட்டு இருவருக்கும் கைகலப்பு நடந்ததாகக் கேள்வி.
     
            கதையை இந்த இடத்தில் நிறுத்திச் சோம்பல் முறித்து கைகளை உதறிக்கொண்டு எழுதி வைத்த காகிதத்தையெல்லாம் வரிசையாக நம்பர் போட்டு வைத்தேன். டீக் குடித்தால் தேவலை போலத் தோன்றியது. வாசலுக்கு எட்டிப் பார்த்தால் ஒரு பயலையும் காணோம். சட்டைப் பாக்கெட்டைத் துழாவிப் பார்த்ததில் பத்து ரூபாய் அகப்பட்டது.

      சந்தோசத்துடன் சட்டையை மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தபோதுதான், எதிர்த்த வீட்டு அம்மாச்சு, டி.வி.எஸ்.ஃபிப்டியை என்னைத் தொடுகிறார்ப்போல நிறுத்தி “மாமா ஏறிக்கோங்க,ஏ றிக் கோங்க “என்றான்.

      என்னடாப்பான்னேன்.

      சும்மா ஏறுக்கோ . மவுண்ட்ரோடு வரைக்கும் போய்ட்டு வந்துடலாம்னான். நானும் எங்க போறான்னு தெரியாம ஏறி உட்கார்ந்தேன்.

      படவாப் பயல் என்னையவே இங்க கொண்டுவந்து நிறுத்திப்புட்டான். கூவத்தைச் சுற்றி ஏகக் கூட்டம் எங்கயும் போயிடாதீங்க.  நான் போய் டோக்கன் போட்டுண்டு வந்திடறேன்னு சொல்லிட்டு வண்டியைத் தள்ளிகிட்டுப் போயிட்டான். ஒஹோ டோக்கன்கூடப் போட்டாச்சாஎன்றபடி நான் கொஞ்ச தூரத்திலிருந்த சேட்டனின் டீக்கடை நோக்கி எட்டு வைக்க முற்பட்டபோதுதான் ஆசாமியைப் பார்த்தேன். மனுஷன் நம்ம சாண்டில்யன் வகையறா. என்ன டினோசரைப் பார்க்க வந்தீரா...என்னாச்சு உம்ம சபதமெல்லாம். தோ....எழுதிக் கிழிச்சுடறேன்னு சவால் விட்டுட்டுப் போனீரே, என்னாச்சு

      அவமானம் பிடுங்கி தின்றது. வழக்கம்போல் சமாளிப்பாக ஒரு இளிப்பு இளித்து வைத்தபடி “தோ நாளைக்குக் கொடுத்திடறேன்எனக் கூறிவிட்டு அம்மாச்சுவிடம் கூடச் சொல்லிக்காமல் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.
முதல் வேலையாய் பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு மீண்டும் கதையை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்தேன்.

      இப்படியாக டினோசர்களைச் சுற்றிக் கூடியிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தை முன்வைத்து பலரும் பலவிதமாகக் கைவரிசைக் காண்பித்துப் பாக்கெட்டை ரொப்பிக் கொண்டிருந்தனர்.

      அன்று குட்டையாயிருந்த ஒரு உருவம் தலையில் முக்காடு ஒன்றைப் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு ஒரு கூண்டு வண்டி சகிதமாக்க கரையில் யாருக்கும் தெரியாமல் கழுகுப்போல் காத்திருந்தது. அந்த உருவம் வேறு யாருமல்ல. ஆடு, மாடு, கோழி, குதிரை, பாம்பு, பல்லி, பூரான் முதற்கொண்டு எறும்புவரை எல்லா வற்றையும் நடிக்கவைத்து புகழ்பெற்ற பிரபலச் சினிமா இயக்குநர் அவர்.

      எப்படியாவது ஒரு டினோசரைத் தள்ளிக் கொண்டு சென்று, தான் அடுத்து இயக்கப்போகும் ‘ஆடி அமாவாசைதிரைப்பட்த்தில் ஒரு டான்ஸ் ஆட் வைத்து வசூல் மழையை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர் திட்டம். அந்த நேரம் பார்த்துக் கையில் டி.வி. கேமராவும் மைக்குமாக அலைந்து கொண்டிருந்த ஒரு சேனல் கும்பலின் கண்ணில் அவர் பட்டுவிட நைசாக யார் கண்ணிலும் படாமல் மனுஷர் எஸ்கேப் ஆகிவிட்டார். கதை வளவளாவென நீண்டு கொண்டே போகிறார்போல் தோன்றவே, கதை எப்படி முடிப்பது எனத் தெரியாமல் ரொம்ப யோசித்து, ஒன்றும் பிடிபடாமல் அப்படியே பேனாவால் மண்டையைத் தட்டிக்கொண்டிருந்த போதுதான் அனாதரட்சகனாக அறைக்குள் பிரவேசித்தான் அந்தப் பையன்.

      பக்கத்து தெருவிலிருப்பவன் சினிமாவில் அசிஸ்டண்ட் டைரக்டராக இரண்டு. மூன்று படங்களுக்கு வேலை செய்துவிட்டு தனியாகப் படம் பண்ணப்போகிறேன். அவனை உட்காரவைத்து இப்படியெல்லாம் ஒரு கதை என எழதினது வரை அவனிடம் வாய் வழியாக சொன்னபோது தலையைத் தலையை ஆட்டிக்கொண்டே எல்லாவற்றையும் கேட்டான். கதை குறித்து அவன் சொன்ன் அபிப்பிராயமெல்லாம் இந்தச் சமயத்தில் உங்களுக்கு தேவையில்லை. அவன் கதைக்குத் தன் சினிமாப் பாணியில் ஒரு முடிவைச் சொன்னான். அது எனக்கு பிடித்துப் போகவே கோடி புண்ணியம்டா சாமி என அவனுக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே அவன் வாய் வழியாக சொன்னவற்றை கீழே கதையாக விடுபட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

      கூவம் நதிக்கரையில் இப்படி பலவகையான சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் டினோசர்களை மீட்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ஆர்வமிகுதி காரணமாகவும், நெருக்கடியான இந்த நேரத்தில் தக்க ஆலோசனை சொல்வதன் மூலமாகவும் முதல்வரின் மனதில் கடற்கரைத் துயிலிடம் போல் நீங்காத இடம் பிடித்து விடலாம் என்று ஆளாளுக்குப் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொண்டனர்.

      எவரது ஆலோசனையிலும் திருப்தியுராத முதல்வர் அவர்கள் தன் உடன் பிறவாத நண்பரிடம் இது குறித்து ஆலோசிக்க, இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். டினோசர்களை மீட்க அதை உருவாக்கிய ஸ்பீல்பெர்க்கை இம்மீடியட்டாக மெட்ராஸ் வரவழைப்பது அவர்கள் திட்டம். முதல்வரின் நேரடிச் செயலாளர் மூலம் ஹாலிவுட்டுக்கு ஐ.எஸ்.டி. கால் பறக்க இரண்டொரு கைகள் மாறிய பிறகு ஸ்பீல்பர்க்கே நேரடியாக லைனில் கிடைத்தார். விபரம் அறிவிக்கப்பட்டதும் முதலில் அதிற்சியடைந்த ஸ்பீல்பெர்க்’,தான் உருவாகிய டினோசர்கள் அப்படி எதுவும் முறைகேடாக சாத்தியமில்லையென்றும் அதை வடிவமைத்த மென்பொருளின் விதிகளைத்தாண்டி அதனால் தன்னிசையாக இப்படிப்பட்ட செயல்களில் இறங்க முடியாதென்றும் தீர்க்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நடந்த விவாதத்தின் இறுதியில், தான் அடுத்த ப்ளைட்டில் மெட்ராஸ் வருவதாக வாக்களித்த ஸ்பீல்பெர்க் ,தான் வரும்வரை தன் டினோசர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காக்க வேண்டியது முழுக்கவும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அப்படியேதும் நேர்ந்தால் பன்னாட்டு மன்றத்தில் தான் வழக்கு தொடருவேன் என்றும் மீண்டும் எச்சரிக்கை செய்தார்.

      ஸ்பீல்பெர்க்கின் சென்னை விசிட் குறித்த தகவல் சென்னை முழக்கத் தீயைக் காட்டிலும் வேகமாக பரவத் தொடங்கியது. இதுதான் இந்த பிரச்சனைக்கான ஒரே தீர்வு என சமயோஜிதமாக முடிவெடுத்த முதல்வரை மக்கள் அனைவரும் ஒருமனதாகப் பாரட்டினர்.

      ஆனால் அதே சமயம் கோடம்பாக்கத்தில் மட்டும் எது குறித்து  பனத்தகண்டன குரல்களும் அதிகமாக எழுந்தன. இயக்குநர்கள் குழு கையில் கறுப்புக் கொடி ஏந்தி மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை முற்றுகையிட்டது. தங்களது அஸிஸ்டெண்டுகள் மூலம் ‘ஸ்பீல் பெர்க்கே திரும்பிப்போபோன்ற வாசகங்களை எழுதிய அட்டைகளைப் பிடித்தபடி ஏர்போர்ட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

      எங்கே ஸ்பீல்பெர்க்? இருக்கிற ஒன்று, இரண்டு புரடியூசர்களையும் கவுத்து தமிழில் படம் பண்ணி நம்மையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிடுவாரோ என்கிற பயம்தான் அதற்கு காரணம் என்பது பிற்பாடு பி.ஆர்.ஒ மூலம் தெரியவந்தது.

      இந்தத் தீடீர் முற்றுகையின் காரணமாக ஸ்பீல்பெர்க்கிற்கென பிரத்யேகமாக ஒருவழி அமைக்கப்பட்டு கோட்டையை நோக்கிப் பயணிக்க ரகசியமான காரும், சுற்றிப் பாதுகாப்பு வாகனங்களும் தயாராகக் காத்திருந்தன.

      தனக்காக பெருங்கூட்டம் வரவேற்க காத்திருக்கும் என எதிர்பார்த்து கையசைத்தபடியே ப்ளைட்டிருந்து இறங்கிய ஸ்பீல்பெர்க்கிற்கு விமான நிலையத்தில் யாரும் இல்லாததைக் கண்டு மிகவும் ஏமாற்றமாகிப் போனது. இதுபோன்றதொரு அவமானத்தை வாழ்நாளில் சந்தித்ததில்லை எனப் பொறுமிக்கொண்டே இறங்கியவரிடம் காவலர்கள் குழு நிலையைத் தெளிவுபடுத்திய பிறகுதான் சற்று ஆசுவாசமடைந்து காணப்பட்டார்.

      ஆடுத்த இருபத்தைந்தாவது நிமிடத்தில் ஸ்பீல்பெர்க் தனது சகாக்களுடன் கோட்டைக்குள் நுழைந்தார்.

      கோட்டை வாசலில் ஹெலிகாப்டர் காத்திருக்க சற்று தூரத்தில் முதல்வரும் ஸ்பீல்பெர்க்கும், மைக்கேல் கிரிக்டனும், வடிவமைத்த கம்ப்யூட்டர் என்ஜினியரும் செக்யூரிட்டி படை சூழ வந்து கொண்டிருந்தனர்.

      கூவத்திலிருந்த கூட்டத்தினரின் தலைக்கு மேலே வீர்...விர்..ரென ஹெலிகாப்டர் பறந்து வானத்தில் சுழல ‘ஹோவென பெரும் இரைச்சல் எழுந்தது. தயாராக போடப்பட்டிருந்த ப்ரத்யேக ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தன் இறக்கைகளை சுழல விட்டவாறு ‘ட்ரும்...என்ற பிரமாண்டமான டி.டி.எஸ். சப்தத்துடன் ஹெலிபேடில் இறங்க, அது கூவம் நதியில் வட்ட வட்டமாக சிற்றலைகளை எழுப்பியது.

      ஹெலிகாப்டரில் இருந்து முதலில் ஸ்பீல்பெர்க் இறங்க அடுத்தாக இறங்கிய முதல்வரர் கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து தன் வழக்கமான பாணியில் கையசைத்துக் கொண்டார்.

      24வது வட்டத்தின் சார்பாக என கூவிக்கொண்டே தொண்டனொருவன் கரையில் இருந்து மாலையொன்றை வீச, தொடர்ந்து ஏகப்பட்ட மாலைகள் வந்து விழுந்துக்கொண்டிருந்தன.

      டினோசர்களை எப்படிக் காப்பாற்றுவது என்ற யோசனையிலிருந்த ஸ்பீல்பெர்க் கூட்டத்தினரின் இந்தச் செய்கையால் திடுக்கிட்டுப் போனார்.

      பிறகு தனது கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கு கட்டளைகள் பிறப்பிக்க, பபுள்காம் மென்றபடி அந்த ஆசாமி லேப்டாப்பைத் திறந்து டினோசர்களுக்கான மென்பொருளின் உதவியோடு கூவத்தில் மூழ்கிக் கிடந்த டினோசர்களுடன் தொடர்புகொள்ள உடனடியாக அவையனைத்தும் ஒரு சேர குரல் எழுப்பின.
     
தொடர்ந்தாற்போல் ஸ்பீல்பெர்க் எழுப்பிய கட்டளைகளை மதித்து வரிசையாக ஒரு ராணுவ அணிவரிசையைப் போல ஒன்றன் பின் ஒன்றாக அவை தயாராகநின்றன. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வழியில் டினோசர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுக்க ஸ்பீல்பெர்க் அவற்றைச் சத்தியம் தியேட்டருக்கு வழிநடத்திச் செல்ல, கூடியிருந்த கூட்டமனைத்தும் டினோசர் வாழ்கஎன படித்த கோஷத்தை மறக்காமல் கூச்சல் போட்டனர். எல்லாம் இனிதே முடிந்து அன்று இரவே சத்யம் தியேட்டரில் இரண்டாம் ஆட்டத்தைக் கண்டுகளித்த பிறகே ஸ்பீல்பெர்க் விமானமேறினார். எல்லாம் சரி.

      ஸ்பீல்பெர்க்கிற்குக் கட்டுபட்டது எல்லாம் அவரது படத்தில் வந்த டினோசர்கள் மட்டும்தான். அதல்லாமல் மியூசியம் டினோசர் ரெண்டும் கூவத்தில் கிடந்ததே அவற்றின் கதி என்ன ஆனது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

      ஒரு வேளை நீங்கள் மியூசியம் பக்கமாக போவீரானால் டினோசர்கள் திரும்ப அங்கே வந்துவிட்டதா எனப் பார்த்து எனக்குக் கடிதம் எழுதவும்.

      இப்படியாக ஒரு வழியாக கதையை எழுதி முடித்தேன். ஐநூறு ரூபாய் கிடைக்கப் போகும் ஆவலுடன் சாண்டியல்யன் ஆசாமியைத் தேடிப்பிடித்து கதையை ஒப்படைப்பதற்குள் நான் பட்ட மன அவஸ்தை இருக்கிறதே!  அப்பப்பா என்னை எதிரிலேயே உட்கார வைத்துவிட்டு மனுஷர் பொறுமையாக படிக்க ஆரம்பித்தார். முழுவதுமாகப் படித்து முடித்த பிறகுதான், பெரிசா அள்ளிவிட்டீர் சரித்திரக்கதை எழுதிக் காமிக்கிறேன்னு, எனக்கு தெரியும் உம்மால முடியாதுன்னு.

      அடப்பாவி....மனுஷன் கல்லைப் போடறானேஎன நொந்து கொண்டு, கடந்து போனதெல்லாம் சரித்திரக் கணக்கில்தான் வரும்என என் லாஜிக்கைச் சொன்னேன். மனுஷன் கேட்டால்தானே?

      தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால் என்பதில் கடைசி வரைக்கும் பிடிவாதமாக இருந்து விட்டார்.

      சரி, எழுதிய கதை வீணாகிப் போகக்கூடாதே என்ற காரணத்தாலும் இக்கதையை ஏதேனும் பிரசுரத்திற்குப் பயன்படுத்தியாவது எனது பணத்தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்ற நப்பாசையிலும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். தாங்கள் சித்தம் என் பாக்கியம்.


No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...