May 31, 2017

சுந்தர ராமசாமி எனும் ஒரு முக்காலத்து புளியமரம்


(எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னம்பலம் மின்னிதழில் பிரசுரமான சிறப்புக்கட்டுரை )


சுந்தர ராமசாமியை எனக்கு பிடிக்காது எழுதும்போது அவரைபற்றி வண்டி வண்டியாக திட்டத்தான் காரணம் கொட்டிக்கிடக்கிறது என்றுதான் நண்பர் விஜய மகேந்திரனிடம் முதலில் இந்த கட்டுரைக்கு மறுத்தேன். பரவாயில்லை விமர்சனம்தானே எழுதிக்கொடுங்க  என  வற்புறுத்தி கேட்டவுடன்  எழுதத் துவங்குகிறேன் . நிச்சயம் வம்பு வழக்குகள் வரும் 


பாரதி புதுமைப்பித்தன் ஜெயகாந்தனுக்குப் பிறகு  அந்த வரிசையில்  தமிழ்ச் சூழலில் அடுத்து  சுந்தர ராமசாமிதான் வந்துவிடுகிறார்.  தி ஜானகிராமன் அசோகமித்ரன் பிரமிள் என தனிப்பெரும் சாதனையாளர்கள இக்காலத்தில் இருந்தார்கள் எனினும்  இவர்கள் மூவரையும் கடந்து நாவல் சிறுகதை கவிதை கட்டுரை என நான்கு துறைகளிலும் தனி முத்திரை பதித்து முழுமையான எழுத்தாளனாக ஒரு உயரத்தை அடைந்தவர் எனும் நோக்கில் சுந்தரராமசாமிக்கென்று தனி பீடம் இருக்கவே செய்கிறது.

இலக்கிய அரசியல்களை கடந்து நோக்கும் போது நாவலில் ஒரு புளிய மரத்தின் கதை,  ஜே ஜே சிலகுறிப்புகள், மற்றும்  சிறுகதையில் பிரசாதம், ,ஜன்னல், ,ரத்னாபாயின் ஆங்கிலம் , குரங்குகள், பள்ளம், பல்லக்கு தூக்கிகள் போன்ற கதைகளும் கட்டுரைகளில் பல இருந்தாலும் தனித்து சொல்வதென்றால் அகிலனுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை கண்டித்து அவர் எழுதிய கட்டுரையும்  கவிதைகளில் அனைவராலும்  போற்றப்படும் சவால் கவிதையும் அந்தந்த துறைகளின் தனிபெரும் சாதனை என்றே சொல்லமுடியும் .

 இப்படியாக இலக்கியத்தின் அனைத்து வாசல்களின் வழியாகவும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்ட சுந்தரராமசாமி அவர் காலத்தில் வந்த காலச்சுவடு ( இப்பொது வருவது  அல்ல- அவரது காலத்தில் வந்த காலச்சுவடு மிகக்குறைந்த அளவில் வந்து நின்று போனது –அந்த இதழ்களுக்கு அவரே ஆசிரியர்) இதழ்களின் வழியாகவும் தான் ஒரு சிறந்த சிறுபத்திரிக்கையாளனாகவும் தமிழ்ச்சூழலுக்கு தன்னை அழுத்தமாக  நிறுவியுள்ளார்.
அவர் ஆசிரியராக இருந்த காலச்சுவட்டில் அரசியல் வம்புகளுக்கு இடமில்லை. தேர்ந்த கட்டுரைகளும் கவிதைகளும் சிறுகதைகளுமே இடம்பெற்றிருந்தன. சிறந்த புகைப்டங்களை தாங்கிய அட்டைபடங்கள் அவரது தேர்ந்த ரசனக்கு இப்பவும் சான்று .

 இன்றைய இலக்கிய உலகின் தீவிர வாசகர்கள் தங்கள் உடம்பில் ஓடுவது இலக்கிய 100% ரத்தமாக இருக்கவேண்டும் என விரும்பினால் முதலில் அக்காலத்திய காலச்சுவடு ,நிறப்பிரிகை கல்குதிரை  மீட்சி அதற்கு முன்னோடிகளான கசடதபற பிரக்ஞை ஆகியவற்றை தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளரான சுந்தர ராமசாமிக்கு அவர் இறந்து 12 வருடங்களுக்கு பின்பும் அவருக்கான மதிப்பீடு உயர்ந்துள்ளதா அல்லது அவருக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் படைப்பு வரிசை முறையாக தரப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

காரணம் அவரை இவ்வளவு புகழும் நானே கூட இதுநாள் வரை அவரைபற்றி எதுவும் எழுதவில்லை. ஏன் எழுதவில்லை எது என்னை எழுதவிடாமல் என்னையும் இன்னும் பலரையும் தடுத்துவிட்டது என்றால்  அது அவர் மீது நிழலாக படிந்து விட்ட ஓரு வெறுப்பு. இதற்கு பல காரணிகள் இருந்தன.

தமிழ் சூழலில் இலக்கியம் வெகுஜனத்துக்கு மெல்ல பரவ ஆரம்பித்த காலத்தில் புதிய காலச்சுவடு புத்துருவாக்கம் கண்ட நேரத்தில்; இலக்கிய அரசியல் என்ற பதம் தமிழ்ச்சூழலில் உருவாகும் போது அவர் அதன் மையமாக இருந்தார் . அது அவர் விரும்பியொ விரும்பாமலோ நடந்த ஒரு துன்பியல் நிகழ்வு

அந்த துன்பியல் நிகழ்வின் இறுதிக்காட்சி பிள்ளை கொடுத்தான் விளை சிறுகதை. அவரது இலக்கிய அரசியல் பிரவேசத்துக்கு (1998-2004) அக்கால கட்டமும்  ஓரு காரணம். அப்போதுதான் திடீரென நவீன இலக்கியம் பெரும் வாசக பரப்பை எட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. புத்தக கண்காட்சியில் கட்டுகடங்காத கூட்டம்.   

அது வரை  இலக்கியம் என்றாலே மரபு கவிதைகள் மட்டுமே என முக்கியத்துவம் கொடுத்த வெகுஜன ஊடகங்கள் திடுமென நவீன எழுத்தளர்களயும் பொருட்படுத்த துவங்கியது. எழுத்தாளர்களும்  அது வரை வெகுஜன ஊடகங்களை கண்டுகொள்ளாது  இது  வியாபாரம்  எவன் சீண்டுவான் என இலக்கிய கெத்து காட்டி வந்த நிலை மாறத்துவங்கியது. அது அவர்களே பத்ரிக்கை உதவி ஆசிரியர்களோடு உறவுப்பாலம் வளர்த்து வரும் அளவுக்கு நிலைமை மோசமானது.

பத்ரிக்கையாளர்களுக்கும் பொங்கல் தீபாவளி இதழ்களின் போது கட்டுரைகள படைப்புகள் வாங்க போக ஒரு பர்ஸ்பரம் ஒரு இணக்கம் உருவான சூழலில் இலக்கியவாதிகளில் யார் அதிக பிரபலமானவர் என்பதை முடிவு செய்யும் அதிகாரம்  வெகுஜன பத்ரிக்கைகளுக்கு மாற துவங்கியது

அதனால் வேறு வழியே இல்லாமல்  நாகர்கோவிலாக இருந்த தமிழின் இலக்கிய தலை நகரம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. இது காலத்தின் சதி.. ஆனால் இக்காலத்திற்கு முன் நவீன இலக்கியத்தில் சுராவுக்கான இடம் இருக்கே அது  எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு என் வாழ்க்கை சம்பவங்களே உதாரணம்

ஜே ஜே சில குறிப்புகள் வெளிவந்த காலத்தில் இன்று பாகுபலி போல தமிழ் நாடு முழுக்க பிரம்மாண்டமாக பேசப்பட்டவர். 82 முதல் 92 வரையிலான பத்தாண்டு காலத்தில் ஜே ஜெ மிகப்பெரிய பாதிப்பை தமிழ் சூழலில் நிகழ்த்தியிருந்தான். ஜே ஜேவை படித்து விட்டு பலரும் ஜே ஜேவாக தங்களை கற்பனை செய்துகொண்டு பிதற்றிய காலம் அவை. நானே கண்கூடாக பலரை பார்த்திருக்கிறேன். 

நான் வசித்து வந்த திருக்கழுக்குன்றத்தில் மலையடிவார படிகட்டுகளில் அமர்ந்துகொண்டு 20துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாங்கள் ஜே ஜேவை பற்றி தினசரி பேசி வந்தோம.் தினசரி ஒருவன் ஜேஜே சில குறிப்புகளின் முக்கியமான ஒரு வரியை வாசிப்பான் . பின் அந்த வரியை முன் வைத்து அனைவரும் நீண்ட நேரம் விவாதிப்போம். யாராவது ஓருவன் இன்னொருவனை பாராட்டிவிட்டால் போதும் மாட்டுக்கு சொறிந்து கொடு என ஒருவன் உரக்க கத்துவான்  அது  நாவலில்  புகழ்பெற்ற வசனம். வெற்று மணலில் வேட்டை நாயின் கால்தடங்களைப்போல அனைவரது மனமும் ஒரு கொந்தளிப்பில் திளைக்க விவாதம் செய்வோம் இத்தனைக்கும் யாருக்கும் பெரிய இலக்கிய வாசிப்பு பழக்கம் இருந்ததில்லை.
அப்போது எங்கள் ஊருக்கு புதிதாக தொடங்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு புதிதாக வந்த ஆசிரியர் தினகரன் என்பவர் தான் ஜே ஜேவை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார் . அவர் மூலமாக வாசிக்கத் துவங்கி குறைந்த காலத்தில் சிந்தனை மையம் என்ற ஒன்றை துவக்கி தினசரி மாலை கூட்டம் நடத்தும் அளவிற்கு ஜே ஜே சில குறிப்புகள் அனைவரையும் பாதித்துவிட்டது.

பிற்பாடு லோர்க்கா கவிதைகள் குறித்தும் எக்ஸிஸ்டென்ஷியலிசம் குறித்தும் எங்கள் அமைப்பு சார்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் அளவுக்கு அந்த நாவல் ஒரு இளைஞர் கூட்டத்தையே உருவாக்கியது.

அக்க்லாத்தில் எனக்கு சுந்தர ராமசாமி ஒரு கடவுளை போல தோன்றினார். பேசாமல் சுந்தர ராமசாமியை முதல்வராகினால் எப்படியிருக்கும் அவர் அமைச்சரகத்தில் அசோகமித்ரன் ஆதவன் சாகந்தசா மி வண்ணநிலவன்  வண்ணதாசன் என அப்போது எனக்கு தெரிந்த அனைத்து எழுத்தாளர்களையும் கற்பனை செய்து பார்ப்பேன்
பிற்பாடு சென்னை வந்த பிறகும் அவர் மீதான் பிரேமம் அடங்கவில்லை. ஒருமுறை நண்பர்களுடன் சுற்றுபயணம் தொடர்பாக நாகர்கோவில் சென்ற போது கிடைத்த அவகாசத்தில் அட்ரஸ் தெரியாமல் ஒரு பகல் முழுக்க சுந்தர ராமசாமி வீடு தெரியுமா என கேட்டு அலைந்திருக்கிறேன்.

பிற்பாடு தான் நான் அலைந்து திரிந்த இடத்தில் வெகு அருகில்தான் அவரது துணிக்கடை இருந்திருகிறது என தெரிய வந்தது.இப்படியாக தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்து கொண்டு தமிழ் இலக்கிய உலகையே தன் நாவல் மூலம் அதிரவைத்தவர் சுந்தர ராமசாமி.
இன்றைய வாசகர்களுக்கு இது மிகையாகத் தெரியலாம் . காரணம் இணையம் இன்று எப்பேர்பட்ட எழுத்தாளனையும் நெருங்கி பார்த்து அவர்களை  சுலபத்தில் வெறுத்துவிடும் வாய்ப்பை உண்டாக்கிவிடுகிறது. இது காலத்தின் பெரும் துரதிர்ஷ்டம்.

அன்று எல்லாமே அச்சு எழுத்து மூலமாகத்தான்.நிகழ்ந்தது.  எழுத்து உண்டாக்கும் பரவசத்தை வெறு எவற்றின் வழியும் அடைந்து விட முடியாது. இப்படி ஒரு வரியை எழுதிய எழுத்தாளன் எப்படி இருப்பான் எப்படி சிந்திப்பான் என்ற சிந்த்னையே பெரும் கிளர்ச்சி ஊனடாக்கும் அந்த  மனக்கிளர்ச்சியால் அந்த எழுத்தாளனை நேரில்  சந்திக்கும்  ஆவல் அதிகரிக்கும்  .
அப்படிபட்ட ஒரு மனக்கிளர்ச்சியோடு சுந்தரராமசாமியை நேரில் காணும் ஆவல் கொண்டிருந்த எனக்கு சென்னையில் அதற்கான முதல் வாய்ப்பு நண்பர் யூமா வாசுகிமூலம் கிட்டியது.
அக்காலத்தில் யூமாவும்  நானும் ஒரே காம்பவுண்டில் பழவந்தாங்கலில் அடுத்தடுத்த அறையில் தங்கியிருந்தோம் . நாளைக்கு சுந்தரராமசாமி உடலண்ட்ஸ் டிரைவின்னுக்கு வருகிறார் அவரை அங்கு நான் பார்க்க போகிறேன் நீயும்ன் வா என அழைப்பு விடுத்தார்.
மறுநாள் டிரைவின்னில் அவரை நாங்கள் பார்க்க போன போது அவரை சந்திக்க அவர்து பழைய நண்பர்கள் சிலர் ஆர்வத்துடன் வந்திருந்தனர். நெருங்கி பேச முடியாவிட்டாலும் அருகிலிருந்து அவர் பேசுவதை கவனிக்க முடிந்தது. வெறும் அறிமுகத்தோடு இருவரும் திரும்பினோம்.

எழுத்தாளர்கள் கவிஞர்கள் யூமா  வாசுகி  மற்றும் பிரான்சிஸ் கிருபாவுடன் நான் 


அடுத்த நாள் நானும் யூமாவாசுகியும் நங்க நல்லூரில் அவர் தன்  மருமகள் வீட்டில் தங்கியிருக்கும் தகவல் அறிந்து அங்கு சந்திக்க சென்றோம்.அங்கு யூமவாசுகியுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவினார். யூமாவுக்கும் அவருக்குமிடையில் நன்குபரிச்சயமிருந்தால் இருவரும் பல விஷயங்கள் குறித்து மனம் விட்டு பேசினர். யூமா என்னை  புதிதாக சிறுகதைகள் எழுதி வருபவனாக அறிமுகப்படுத்தினார். அப்போது எனது  இரண்டு கதைகள் வெளியாகியிருந்தன.

பேச்சு தமிழர்கள் வாழ்க்கை குறித்து திரும்பியது . கேரளாவில் மக்கள் பேணும் சுத்தம் ஒழுங்கு தமிழ் நாட்டில் இல்லை என்பதும் தமிழ் நாட்டில் கண்ட இடங்களில் எச்சில் துப்புகிறார்கள் மலையாளிகள் அப்படி செய்வதில்லை என்று  ஆதங்கத்தோடும் வேதனையோடும்  பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசியது உண்மை என்றாலும் அப்போது என் தமிழுணர்வு சட்டென பொங்கி விட்டது . ஆமாம் சார் அங்கு தட்ப வெட்ப நிலை அப்படி இது வெப்ப மண்டலம் உமிழ்நீர்சுரப்பது தவிர்க்க முடியாதது. கேரளா போல தமிழ் நாட்டிலும் இயற்கை சூழ்ந்த மலைகளின் வசிப்பிடமாக இருந்தால் அவர்களும் சுத்தமாக இருந்திருப்பார்கள்  என கூறினேன்
அவருக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை . அதிகபிரசிங்கித்தனமாக பேசுகிறானே என்பது போல ஒரு முறை உற்றுப்பார்த்தார். அவரை பற்றி நான் பலமுறை நண்பர்கள் சொல்ல கேட்டது என்ன வென்றால் அவரிடம் பெரியவர் சிறியவர் பாகுபாடு கிடையாது யாரும் அவரிடம் துணிந்து கருத்து கூறலாம் அவரிடம் அதற்கு இடமுண்டு என்பதுதான் . அந்த துணிச்சலில்தான் நான் பதில் சொன்னேன். ஆனால் அவரிடமிருந்து உரையாடல் தொடரும் என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒருவேளை அவரிடம் முன்பே நான் அவரது ஜே ஜேவை படித்து விட்டு   டு ஊரில்  மனபிராந்தியாய் அலைந்தது பற்றீயும் அவரை பார்க்க நாகர்கோவிலில் அலைந்தது பற்றியும் கூறியிருந்தால் அவர் என்னோடும் சகஜமாக உரையாடியிருப்பாரோ என்னவோ
அதன்பிறகு அவரை நேராக சந்திக்கவில்லை

அடுத்த சில நாட்களில் அவர் நூல் ஒன்றின் வெளியீட்டு விழா புக் பாயின்ட் ஹாலில் நடந்த போது சென்னையில் முதல் முறையாக ஒரு இலக்கிய கூட்டத்துக்கு இருநூறுக்கும் அதிகமானபேர் கலந்து கொண்டு ஆச்சர்யபடுத்தினர்

உண்மையை பற்றியும் உள்ளொளி பற்றியும் தீவிர மனத்தூண்டுதலை உண்டாக்கிய  அவரால் படைக்கப்பட்ட ஜே ஜே அந்த கூட்டத்தின் நடுநாயகமாக இருந்த சுந்தரராமசாமியை பார்த்து என்ன சொல்லியிருப்பான் இதுதான் அன்றைய இரவு எனக்கு மிகபெரிய கேள்வியாக இருந்தது.
தொடர்ந்து பிள்ளை கொடுத்தான் விளையால் உண்டாக்கிய சர்ச்சை எல்லாம் சேர்ந்து அவரது பிரம்மண்ட பிம்பம் இலக்கிய பரப்பில் அவர் மீதான ஒரு எதிர்ப்பை உண்டாக்கியிருந்தது.
ஒருவேளை அப்படி ஒரு கதை எழுதாமல் விட்டிருந்தால் அவர் மீதான் பிம்பம் இப்போதைக்கு இருப்பதைக்காட்டிலும் கூடுதலாக இருந்திருக்குமோ என்னவோ
மொழியில் அவர் கொண்டிருந்த மாளாக்காதல்  தமிழுக்கு பெருமை சேர்த்திருப்பது மட்டுமல்லாமல் புதிய தலைமுறைகள் உருவாக  காரணமாக இருந்துள்ளது . 

90 களில் எழுத துவங்கிய பலர் அவரது எழுத்தின் நிழலில் உருவானவர்களே
அவரது சிறுகதைகள் மொழி பற்றிய பிரக்ஞையில்லாத இக்கால படைப்பாளிகளுக்கு   சிறந்த வழிகாட்டிஇலக்கியத்தை வெற்று  ரசனையை கடந்து தத்துவங்களின் வழி மீட்க முயன்ற நாவலாசியர்களில் அவரே முழுமையாக வெற்றிபெற்றவர்.

தொடர்ந்து சுந்தரராமசாமி குறித்த மீள்பார்வைகள் வெளிதரப்புகளில்லிருந்து உரையாடலாய் மாற இக்கட்டுரை வழி வகுக்கும் என நம்புகிறேன்  

, 

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...