May 16, 2017

தமிழ் சினிமாவின் அக நடிப்பு : மரியானிலிருந்து ஒரு பின்னோக்கிய பார்வைஉண்மையில் நாமனைவரும் நடிகர்களே வீட்டுக்குள் போகும்போது கணவனாகவும் அலுவலகத்துக்கு போகும்போது அதிகாரியாகவும் அல்லது கடை நிலை ஊழியனாகவும் நடிக்கிறோம் . நம் பாத்திரத்தை மேலும் வெளிப்படுத்த நமக்கான பிரத்யோக  உடைகள் அல்லது சில வார்த்தைகல் பயன்படுகின்ற்ன . அலுவலகத்துக்கு நாம் லுங்கி கட்டி போவதில்லை . வீட்டில் கோட்டு சூட்டுடன் இருப்பதில்லை . இடத்திற்கு தேவைபடுகிறார் போல் காஸ்ட்யூமர் இல்லாமல் உடையை நாமே தேர்வு செய்து கொள்கிறோம். உண்மையில் சிறந்த நடிப்பு என்றால் இதுதான் .. நம்மிடமிருந்து இன்னொரு பிம்பத்தை நம்மால் சுலபமாக எளிமையாக கட்டமைக்க முடிகிறது .. நம்ப வைக்கவும் முடிகிறது. ஆனால் சினிமாவில் பாருங்கள் நாம் எவ்வலவு ஆவேசமாக் கத்துகிறோம் உடை மற்றும் மேக் அப் களை கவனியுங்கள் அதில்தான் எத்தனை மிகை ..

தன்னை பாத்திரமாக வெளிப்படுத்துதல் ..பாத்திரத்தினுள் தன்னை மூழ்கச்செய்தல் என இரண்டுவகையான நடிப்பை பொதுவாக நம் தீவிர  சினிமாக்களில்  அல்லது கதை சார்ந்த சினிமாக்களில் பார்க்க முடிகிறது. முன்னது உடல் நடிப்பென்றும் பின்னதை புலனகளீன் நடிப்பென்று கொள்ளலாம்  உடலும் மனமும் பிரிக்கமுடியாத்தாகையால் இரண்டு பாணியிலுமே  ஒன்று இன்னொன்றை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

நாடக நடிகர்கள் தொலைவில் இருப்பவர்களுக்கும் தங்களை காண்பிக்க உடல் நடிப்பின் மிகையான பாவனையை பயன்படுத்தினர் . கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தால் கூட மேடையில் தடாலென விழுவர். . அல்லது இறப்பு சேதி கேட்டவுடன் கையில் கொண்டுவரும் கண்ணாடி தம்ளர் இரைச்சலான் பின்னணி இசையுடன் கீழே உடைந்து சிதறும். ஆனால் சினிமா வில் க்ளோசப் வந்த பிறகு  அதாவது பார்வையாளன் நடிகனை நெருங்கி பார்க்கும் வாய்ப்பு கிட்டியபிறகு இதுபொன்ற  ஓவென இரைதலும் கையை காலை சகட்டுமேனிக்கு  ஆட்டி  சத்தமாக வசனம் பேசி நடிப்பதும் மிகையாகி அவசியமற்றதாகிப்போனது.

இதன் காரணமாக  சினிமாவில் உடல் நடிப்பு பின்னுக்கு போய் மனம் அல்லது புலன் சார்ந்து நடிப்பது அவசியமாகியது ..இப்படிப்பட்ட நடிப்பே பார்வையாளனின் ரசனையை தரம்  உயர்த்தவும் செய்கிறது. இதன் காரணமாக  சினிமாவில் அசலான நடிப்பை விமர்சனம் செய்கிறபோது ஒரு நடிகனின் க்ளோசப்பைத்தான் முக்கியமாக கைக்கொள்ள முடியும்  . மன (அக) நடிப்பு உயர்ந்த இடத்தை பெறுவதும் இதனால்தான். ஆனால் துர்பாக்கியமாக பலர் இன்னமும் நம்மில் உடல் (புற)நடிப்பே பிரதானம் என கொண்டாடி வருகின்ற்னர். இங்கு நடிப்பை பலர் உடல் மற்றும் மேக அப் அல்லது சிகையலங்காரம் பாத்திரத்தின் அங்க வெளிப்பாடு ஆகியவற்றோடு பெரிதும் பொருத்திபார்க்கின்ற்னர் ..உடல் நடிப்புக்கும் மன நடிப்புக்கும் சரியான உதாரணமாக மூன்றாம் பிறையின் இறுதிகாட்சியை எடுத்துக்கொள்ளலாம்

மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவியின் நடிப்புதான் சிரமாமானது .அது முழுமையாக தன்னை மன பிறழ்வாக நம்பி நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உள்ளடக்கியது. மற்ற காட்சிகளீல் உடல் நடிப்பும் மிகை நடிப்பும் சேர்ந்திருந்தாலும் இறுதிகாட்சியில் அவர் ரயிலினுள் அமர்ந்தபடி இதுவரையான நிகழ்வுக்கும் தனக்கும் எதுவுமே தெரியாதவாறு தன்னை வெளிப்படுத்திய முகபாவனை மிகச்சிறந்த மன நடிப்புக்கு உதாரணம்.   அதே சமயம் கமல்ஹாசனின் அதுவரையான் உடல் நடிப்பு என்பது பெரிதும் கதையின் மைய ஓட்டத்தொடு சார்ந்திருப்பதால் அவர் நாம் எதிர்பார்ப்பதை நிகழ்த்துபவராக மட்டுமே உடலை வெளிப்படுத்துகிறார். இது கமலின் தவறல்ல அது பாத்திரத்தின் தன்மை . அவர் அப்படி வெளிபடுத்தாவிட்டால் பார்வையாளர்கள் கண்ணீர்சிந்த வாய்ப்பில்லை . மக்கள் தங்களுக்குள் கண்ணிரை வரவழைக்க காரணமாக அல்லது ஏதுவாக இருந்த காரணத்தால் பலரும் அதைத்தான் சிறந்த நடிப்பாக கருதினர். ஆனால் எனக்கு தெரிந்து கதாசிரியர் அல்லது இயக்குனர் பாத்திரத்தை சிருஷ்டித்த இடத்திலிருந்து தன்னில் இன்னும் அதிகமாக பயனித்து அதன் மவுனங்களை அல்லது பாத்திரத்தின் அதுவரையான் வாழ்வையும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்துவதுதான் சிறந்த நடிப்பு

.நாயகனில் கமலிடம் அத்தகைய உன்னத நடிப்பை பார்க்க முடிந்தது. உடலையும் தேவைக்கேற்ப அளவாக பயன்படுத்தியிருந்தார்.தோற்றம் பாதி நடிப்பு பாதி என அளவு கச்சிதமாக இருந்தது.
அதற்கடுத்து வந்த பல படங்களில் அவர் தோற்றத்திற்கு முக்கியத்துவம்  கொடுத்து  நடித்திருப்பினும்  நாயகனில் அவர் காண்பித்த பாத்திரத்தின் ஆழம் இதர பாத்திரங்களில் காணாமல் போனது. அன்பே சிவம் படத்தில் ஓரளவு மவுன நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இன்னும் சற்று அவரிடம் இறுக்கம் கூடியிருந்திருக்கலாம் என்றே தொன்றியது. சேது பிதாமகனில்  விக்ரமிடமும் ,பிதாமகனில் சூர்யாவிடம் சில உச்சங்களை தரிசிக்க முடிந்த்து . சூர்யா சிறந்த நடிப்புத்திறமை இருந்தும் அவர் வெகுஜன பிம்பத்துக்கு கூடுதல் முக்கியத்தும் கொடுத்து தனக்குள் இருக்கும் கலைஞனை நிராகரிப்பது வருத்தமானதொன்றே இந்நிலையில்தான் மரியானில் தனுஷ் தன் மவுன நடிப்பின் மூலம் ஆச்சர்யபட வைத்தார்

ஆடுகளம் படத்திற்கு பிறகு அவர் பாத்திரத்தை இயக்குனரிடமிருந்து பிடுங்கி முழுமையாக கற்பனையால் தனக்குள் செதுக்கி அதை அளவாக வெளிப்படுத்துகிறார். இந்த அவரது வெளிப்பாட்டுக்கு. இயல்பாக அவரது முக அமைப்பு பெரிதும் உதவுகிறது.. மரியானின் பல இடங்களீல் குறிப்பாக நாயகியோடு அவர் சண்டை போடும் முற்பகுதி காட்சிகள் இரண்டாவது பகுதியில் தப்பிப்பதற்கு முன்பான காட்சிகளில் தனுஷின் நடிப்பு இயக்குனரை கடப்பதை அல்லது பாத்திரத்தின் மன ஓட்டத்தை துல்லியமாக சித்தரிப்பதை  நம்மால் உணரமுடியும் .. அதே சமயம் பார்வதியின் நடிப்பில் சற்று மிகை இருப்பதையும் காணலாம .. மேக் அப் இல்லமல் அவர்   பனிமலராக நடிப்பதை கற்பனை பார்க்கும்போது அவர் பார்வதியாகவே இருப்பார் ஆனால் தனுஷ் இயல்பான தோற்றத்திலும் பாத்திரத்தை வெளிப்படுத்தக்கூடியவர் .. படத்தில் இயல்பாகவே பார்வதியின் பாத்திரம் கதையில் இருந்த ஆழத்தை திரைக்கதையில் காண்பிக்கவில்லை ..பட்ட படிப்பு படித்த அல்லது உலக விஷயங்க்ளை உள்வாங்கிய மீனவ பெண்ணாகவே அவர் தோற்றம் நமக்கு உணர்த்துகிறது. எதார்த்தம் தொலைத்த அவரது மிகை மேக் அப் ஒரு காரணமாக இருந்தாலும் அவர் பாத்திரத்தின் ஆழ் மனதுள் சஞ்சரிக்காமல் வெறுமனே காதல் மட்டுமே  அவரது உலகில் உள்ளதை பொல காட்டிக்கொண்டதும் வேறு கூடுதலாக பாத்திரத்தை கனமிழக்கசெய்துவிட்டது . இயக்குனர் சொன்ன இட்த்திலிருந்து அவர் இன்னமும் தனது அறிவு நிலை  சூழல் உப்புக்காற்றினை காலம் காலமாக உணர்ந்த  தோல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் அவரது நடிப்பில் இன்னும் மெருகு கூடியிருந்திருக்க்க்கூடும்   இத்தனைக்கும் பார்வதியின் பாத்திரம் தான் முழுமையான அகவயப்பட்டது. சற்று ஆன்மீக பலம் கொண்டதும்கூட

 ஆனால் அவரது நடிப்பில் அந்த பாத்திரம் முழுமையாக சித்தரிக்கப் படவில்லை .வெறும்  தனுஷை காதலிக்க மட்டுமெ பிறந்தவராக அவர் பாத்திரம் சித்தரிக்கப்பட்டதும் ஒரு காரணம். . மேலும் அவர் ரோஸ் நிற புடவையுடன்  டான்ஸ் ஆடி பாலைவனத்தில்  தன் உயிர்நிலையை  வெளிப்படுத்துவது   மிகவும் அபத்தமாக இருந்த்து . இந்த இடத்திற்கு தேவையான ஒரு  மிஸ்டிசிஸம் சுத்தமாக காட்சியில் நிராகரிக்கப்படு சினிமாத்தனம் ஒட்டிக்கொண்டது. பார்வதியின் முழு பாத்திரமும் வெளிப்படிருக்க வேண்டிய இடம் இது .. உயிரே படத்தில் மணீரத்னம் இதைசரியாக கையாண்டிருப்பார் ..ஒரு விதமான அதீதத்தை அதில் காட்சி படுத்தி பார்வையாளனை கனவு நிலைக்கு அழைத்து சென்றிருப்பார்.

வழக்கமான சினிமா நாயகியர்களை காட்டிலூம் கூடுதல் மன பிரயாசத்துடன் ஈடுபாட்டுடன் அவர் நடித்திருந்தாலும் அக நடிப்பின் அவசியத்தை சொல்லவே ஒரு விமர்சகனாக இருவரையும் வித்தியாசப்படுத்தி பார்த்திருக்கிறேன் .. ... பார்வதி ஒரு சிறந்த நடிகை அவர் இந்தியாவின் சிறந்த நடிகையாக அறியப்பட எல்லா தகுதியும் கொண்டவர் .. ஆனால் அதற்கு முதல் படி நடிப்பின் மீது இருக்கும் ஈடுபாட்டை குறைத்து பாத்திரத்தின் மவுனங்களை பழக ஆரம்பிக்கவேண்டும் .  .இந்த இடத்தில் முள்ளும் மலரும் படத்தில் வரும் ஷோபா வின் சில பாவங்களை நாம் நினைவு படுத்தி பார்க்கலாம் .. . இதில் இயக்குனரின் பங்கும் இருக்கிறது என்றாலும் நல்ல நடிகை எந்த சூழ்லையும் தனக்கேற்ப சாதகமக்கிக்கொள்ள முடியும். அப்படியான மாறுதல் .. பார்வதியை இன்னொரு ஷோபாவாக இன்னொரு ஸ்மிதா பட்டிலாக நமக்கு அறிமுகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை

அஜயன் பாலா
`2013 ஆகஸ்ட் மாத காட்சிபிழை இதழ்

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...